Sunday, September 13, 2020

பிக் பேங்க் 2.0

 

பிக் பேங்க் 2.0


ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இருந்த அமெரிக்க ஜனாதிபதியிடம் அவரது காரியதரிசி ஒரு தொலைபேசியை கொடுத்தார்.

“என்னாது, உண்மையா, அப்படியா சொல்றீங்க இந்தா உடனே வரேன்” என்று தொலைபேசியை அணைக்காமல் கூட தூக்கியடித்துவிட்டு உடனே ஓடினார்.

“சார்…. மீட்டிங்….”

“அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் போங்கய்யா!! யோவ் சம்முவம் வண்டிய உடனே பெண்டகனுக்கு உடுய்யா” என்று மூச்சிரைக்க ஓடியவரின் உடல் முழுக்க வேர்வையில் நனைந்திருந்தது.

*****

அதே வேளையில் சாப்பாட்டில் கை வைக்கப் போன இந்தியப் பிரதமரிடம் அவரது காரியதரிசி “சார் “ரா” வில் இருந்து அவசர அழைப்பு”

“சாப்பிட்டுவிட்டு பேசலாமா?”

“இல்ல சார் ஏதோ ரொம்ப அவசரமாம்”

“சரி கொடு”

“என்னாது, அப்படியா, என்னய்யா சொல்றீங்க அப்படியெல்லாம் செய்ய முடியுமா? சரி உடனே போறேன்”

“எலேய் சம்முவம் சவுத்ப்ளாக்குக்கு வண்டிய விடுடா”

உலகில் உள்ள அனைத்து நாட்டு ராணுவ தலைமையகங்களிலும் தொலைபேசி இடைவிடாது அலறியபடி இருந்தது.

*****

ரஷ்ய அதிபருக்கு பல இடங்களில் இருந்து தொலைபேசி வந்தவண்ணம் இருந்தது.

“சரிப்பா லொகேஷன் எங்க நாட்டுக்கு பக்கமாத்தான் இருக்கு, ஆனா இந்த வேலையை வெற்றிகரமா எங்களால் மட்டுமே முடிச்சிட முடியும்னு தோணல. இன்னும் ஐந்து நிமிடத்தில் இரண்டு ஜெட் விமானங்கள லொகேஷனுக்கு அனுப்பிடுறேன். நாட்டுலயே பெஸ்ட் மெடிக்கல் டீம் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் வல்லுநர் டீம் போறாங்க“

“என்னது நானா இல்ல நான் பதுங்கு குழிக்குள்ள போகப் போறேன்”

*****

சியோல் நகரில் தென்கொரிய ராணுவ தலைமையகத்தில் உயர்மட்ட பாதுகாப்பு வல்லுநர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

“இது 100 விழுக்காடு நம்பகமான தகவல். ஆனா விஷயம் அவங்க பார்டர் செக்யுரிட்டிக்கு கூட தெரியல. நாம வெளிப்படையா உள்ள போக முடியாது. எமர்ஜென்சிக்கு வழக்கமா கடத்தல்காரங்க பயன்படுத்துற சுரங்கம் வழியா வேணும்னா போகலாம்“

“சார் எங்க கமாண்டோ ஃபோர்ஸ சுரங்கப் பாதை வழியா உடனடியா கூட்டிப் போகட்டுமா சார்“

“ஆனா யூனிஃபார்ம்ல போகாதீங்க. நேரா நான் சொல்ற இடத்திற்கு போய் பார்டர ஓப்பன் பண்ண சொல்லுங்க. எல்லா நாட்டில் இருந்தும் வல்லுநர் குழு வந்துகிட்டு இருக்காங்க. ரஷ்யா முதல்ல வந்துடுவாங்கன்னு இன்ஃபார்ம் பண்ணுங்க“

“ஒகே சார்“ என்று விரைப்பாக சல்யுட் வைத்து விட்டு தனது குழுவுடன் பரபரப்பாக ஆலோசனை நடத்தி விட்டு இரண்டு ஜீப்களில் வடகொரிய எல்லைக்கு அருகில் இருக்கும் காட்டுப் பகுதிக்கு சென்றார்கள்.

*****

“சார் பேஷண்டுக்கு மயக்க மருந்து கொடுத்துட்டேன் சார். கருவிகள் எல்லாம் பொருத்தியாச்சு. எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சு. ஆபரேஷன ஆரம்பிச்சிடலாம் சார்” என்றார் சென்னையின் பிரபல மருத்துவமனையின் நர்ஸ்.

“ஏம்மா இது என்னோட வெற்றிகரமான ஐநூறாவது ஆபரேஷன். அதனால முடிஞ்சதும் நியூஸ் பேப்பருக்கு செய்தி கொடுத்துடுங்க“ என்றபடி ஆபரேஷனுக்கான பிரத்தியேக உடையில் ஓப்பன் ஹார்ட் பைபாஸ் சர்ஜரிக்கு தயாரானார் இந்தியாவின் நம்பர் ஒன் ஹார்ட் சர்ஜன் கபாலி.

நெஞ்சுப்பகுதியின் மேல் தோல் கிழிக்கப்பட்டு இதயத்தின் இருப்பிடம் பிளக்கப்பட்ட சமயம் ஆபரேஷன் தியேட்டர் கதவு மடார் என திறந்து கொண்டது. திபு திபு வென கமாண்டோக்கள் படை கபாலியை கபால் என அள்ளிக் கொண்டு போனது.

மருத்துவமனையே ஸ்தம்பித்து போனது. சற்று நேரத்தில் கபாலியை ஏற்றிக் கொண்டு விஸ்க் விஸ்க் என்று காற்றினை வெட்டிய படி காற்றாடி சுழல மேலே எழும்பி போனது ஹெலிகாப்டர்.

*****

பெண்டகனில் வடகொரியாவில் இருந்து வரும் செய்திக்காக காத்துக் கிடந்தார் அமெரிக்க ஜனாதிபதி. போன் அடித்தவுடன் பாய்ந்து சென்று எடுத்தார்.

“சீக்கிரம் உங்க அதிபர்கிட்ட குடுய்யா”

”நான்சென்ஸ் நான் தான் பேசுறேன் சொல்லு”

”பார்டர் ஓப்பன் பண்ணியாச்சு. ஏர்ஸ்பேஸ் கிளியரன்ஸ் பண்ணியாச்சு சார். ரஷ்யன் டீம் ஆன் தி வே. சவுத் கொரியன் டாக்டர்ஸ் ஆய்வு பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீங்க உங்க டீமை உடனே அனுப்பலாம் சார்”

“தயாராத்தான் இருக்காங்க, சரியா இரண்டு மணிநேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க”

*****

சென்னையில் உள்ள ஏர்ஃபோர்ஸ் மைதானத்தில் இருந்து பேசஞ்சர் ஜெட் விமானம் தயாராகிக் கொண்டு இருந்தது “கமான் கமான் க்விக் க்விக் என இந்தியக் குழுவின் தலைவர் ஆனந்தன் துரிதப் படுத்திக் கொண்டு இருந்தார்.

“ஹார்ட் சர்ஜன் கபாலியும் மிலிட்டரி எலக்ட்ரானிக் ஸ்பெஷலிஸ்ட் மிஸ் போதும்பொண்ணுவும் ஏறிட்டாங்களா?“

“யெஸ் சார்“

“எலே சம்முவம் உட்றா போவட்டும்” என்ற ராணுவ பாஷையில் சொன்னார்.

*****

உலகில் உள்ள அனைத்து செய்தித் தொலைக்காட்சிகளும் ஏக காலத்தில் அலறியடித்தபடி பிரேக்கிங் நியுஸ் போட்டன.

தமிழகத்தின் பிரபல செய்திச் சேனலான நியுஸ்19 ல் “மொத்த பூமியையும் பொசுக்கும் அணுகுண்டுகள் வெடிக்கப் போகின்றனவா?”

 ”மனித இனம் தப்பிப் பிழைக்குமா?“

“உலகத் தலைவர்கள் அனைவரும் கலக்கம்“

“மனித இனத்தின் அழிவு ஒரே நேரத்தில் நடக்கப் போகிறதா“

நம்முடன் சற்று நேரத்தில் பூச்சி மசாலா வழங்கும் நேரலை விவாத நிகழ்ச்சியில் இணைகிறார்கள் அணு விஞ்ஞானி அப்பாதுரையும் இதய நோய் மருத்துவர் இளங்கோவனும்.

தமிழக மக்கள் வயிற்றில் புளியை கரைத்தன அனைத்து தமிழ் செய்தி தொலைக்காட்சிகளும்.

*****

வடகொரியாவின் ஒற்றை விமான நிலையத்திற்கு வரிசையாக ஏராளமான நாடுகளில் இருந்து விமானங்கள் வந்த வண்ணம் இருந்தன. ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் ரூமில் யாருக்கு லேண்டிங் ரூட் கிளியர் செய்வது என்று தலையை பிய்த்துக் கொண்டனர்.

“ஹலோ கபாலி எப்படி இருக்கீங்க. போன வருடம் நியுயார்க்ல ஒரு மெடிக்கல் கான்ஃபரன்ஸ்ல பாத்தோம் ஞாபகம் இருக்கா”

“ஓ ஹலோ ஜான் மேத்யுஸ் எப்படி இருக்கீங்க. என்ன பிரச்சனைன்னு உங்க கிட்டயாவது சொன்னாங்களா?”

“ஏதோ வடகொரிய அதிபருக்கு சீரியஸா இருக்காம். இதயத்துடிப்பு வேகம் குறைந்து கொண்டே வருகிறதாம் இன்னும் நான்கு மணிநேரம் கூட தாங்காது என்கிறார்கள்”

“என்ன திடீர்னு அவர் மேல உலக தலைவருக்கு பாசம் பொத்துக்கிட்டு வந்துடுச்சி? என்னோட ஐநூறாவது ஆபரேஷன்ல இருக்கும் போது பாதியில தூக்கிக் கொண்டு வந்து விட்டார்கள்”

“வாங்க, ஸ்பாட்டுக்கு போனாதான் தெரியும்”

*****

வெள்ளை மாளிகையில் அணுக்கதிர் வீச்சுத் தாக்காத வகையில் வடிவமைக்கப் பட்ட நிலவறையில் சிறிதும் பெரிதுமான எல்.இ.டி திரைகள் முன்னால் கவலை தோய்ந்த முகத்துடன் அமெரிக்க அதிபர் அமர்ந்திருந்தார்.

“ஹலோ மிஸ்டர் பிரெசிடென்ட், சேஃபா இருக்கீங்களா?”

“ஓ இன்டியன் ப்ரைம் மினிஸ்டரா? நீங்களும் நிலவறையில் தான் இருக்கீங்க போல. சரி உங்க டீம் இறங்கிடுச்சா?”

“நம்ம ரெண்டு பேரு டீமும் ஒரே நேரத்தில் தான் பியாங்யாங் போய் சேர்ந்திருக்காங்க”

“இவ்வளவு நாளா அவன் எப்போ போய் சேருவான்னு நெனச்சிக் கிட்டு இருந்துட்டு ஒரே நாள்ள அவன் சாக க்கூடாதுன்னு உலக மக்கள் அனைவரையும் ப்ரே பண்ண வச்சிட்டானே நாதாரிப் பய”

*****

பூமிப்பந்து சுருங்கி சுருங்கி இதயம் போல துடித்து துடித்து அடங்கியது. அதன் நடுவே 4 மணி நேரத்தில் இருந்து கவுண்ட் டவுன் குறைந்த படி இருந்தது. உலகமே செத்தாலும் கிராஃபிக் மொதக்கொண்டு உலகத்தரத்துல இருக்கணும் இவனுங்களுக்கு.

“யோவ் என்னய்யா டாக்டர் இன்னும் வரல?! உன்னோட ஃபிரண்டுன்னு ரெக்கமண்ட் பண்ணின இவ்வளவு லேட் பண்றாரு!! மற்ற சேனல்ல எல்லாம் டாக்டரையும் அணு விஞ்ஞானியையும் வச்சி நேரலை கலந்துரையாடல் ஆரம்பிச்சுட்டாங்கய்யா” என்று சீறினார் நியுஸ் 19 ன் சீஃப் எடிட்டர்.

“சார், வந்துகிட்டே இருக்காரு சார். அதுவரையில் வடகொரியா பற்றி எதாவது டாக்குமெண்டரி இருந்தா வாய்ஸ் ஓவர் கொடுத்து போடலாம் சார்” இது நியுஸ் ரீடர் சங்கர்.

“சார், சார், எக்ஸ்க்ளூசிவ் படங்களே வந்துடுச்சி, நியுஸ் 19 எக்ஸ்க்ளூசிவ் படங்கள் என்று வாட்டர் மார்க்கோடு போட்டுடலாம் சார்”

“தற்போது நமது பியாங்யாங் சிறப்பு நிருபரிடம் இருந்து வந்த எக்ஸ்க்ளுசிவ் படங்கள்” என்ற பில்டப்போடு செய்தியை வாசித்தார்.

“நமது சிறப்பு நிருபர் எடுத்து அனுப்பிய படங்களில் பியாங்யாங் விமான நிலையத்தில் பல நாடுகளில் இருந்து மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு வந்து இறங்கும் படங்களைப் பார்க்கிறோம். இந்த படத்தில் இருப்பது நமது இந்தியாவின் நம்பர் ஒன் இதய அறுவைசிகிச்சை மருத்துவர் கபாலி மற்றும் ராணுவ மின்னணுத்துறை பொறியாளர் மிஸ் போதும்பொண்ணு” என்று மிடுக்காக ஏற்ற இறக்கங்களோடு வாசித்தார் சங்கர்.

“யோவ் நமக்குத் தெரியாம யாருய்யா அந்த சிறப்பு நிருபர்?” என்று கிசுகிசுத்தார் சீஃப் எடிட்டர்.

“வேற யாரு சார் நம்ம பேசஞ்ர் ஜெட்டோட கோபைலட் தமிழரசன் தான் சார். அவர் என்னோட நண்பர். பியங்யாங்ல சும்மா தானே இருக்க போற அவ்வப்போது போட்டோ வீடியோ என எடுத்து அனுப்புன்னு சொல்லி அனுப்பி இருக்கேன்னு சொல்லு”

“வாவ் கைய்ய கொடுய்யா, அப்ப வடகொரியா கவரேஜ்ல நம்ம சேனல்தான் டிஆர்பி ல எகிற போகுது” உலகமே வெடிச்சி செத்தாலும் சேனல்காரனுக்கு டிஆர்பி ரேட் கவலை போகாது போல.

*****

அமெரிக்காவின் ச்சீட்டா ஃபோர்ஸ் தங்களது இரண்டு ஆண்டுகால நீண்ட மிஷனின் மிகப்பெரிய மைல்கல்லை எட்டினார்கள்.

“கேப்டன் நாளைக்கு சுரங்கம் தோண்டுற வேலை முடிஞ்சிடும். ஜிபிஎஸ் காட்டுற சிக்னல் படி பாத்தா நாம இன்னும் 30 அடி தோண்டிக் கொண்டு போனால் இந்த மேப்பில் தெரியும் ஆற்றங்கரையை அடையலாம். அப்புறம் நம்ம கிட்ட இருக்கிற ஏர் போட்ல காத்தடிச்சிக்கிட்டு டார்கெட்ட நெருங்கிடலாம்”

“ஏற்கனவே ப்ளான் பண்ணிய திட்டம் தான். ஆனா குறித்த நேரத்தை விட ஒரு மாதம் முன்னாலேயே மிஷன சக்சஸ் பண்ணிட்டு பிரெசிடெண்ட் கிட்ட சொல்லிடலாம்”

“எஸ் கேப்டன். எனக்கு ஒரு யோசனை”

“என்ன சொல்லு”

“நாம டார்கெட்ட டெஸ்ட்ராய் பண்றத பிரசிடெண்ட்டுக்கு லைவா டெலிகாஸ்ட் பண்ணிடலாமா?”

“நல்ல யோசனை அப்படியே பண்ணிடலாம்“

“ஒரு மாசமா சுரங்கத்துக்குள்ளேயே இருக்கிறோம். வெளியில் போன உடனே டார்கெட்டோட லொகேஷன பாத்துட்டு அதப் பத்தி ப்ளான் பண்ணலாம். சீக்கிரம் தோண்டுங்க“

*****

“என்னய்யா ஜான் மேத்யுஸ் நான் இந்தியாவிலேயே பெரிய இதய நோய் மருத்துவர். ஒரு ப்ரஸ் காரனும் என்னைய கண்டுக்க மாட்டேங்கிறான். மொத்த ப்ரஸ் காரனுங்களும் எங்க ஊர் மிலிட்டரி இஞ்சினியர சூழ்ந்துகிட்டானுங்க”

“மிஸ்டர் கபாலி, அவங்கள பாருங்க கூலிங் கிளாஸ், அடர் வண்ண லிப்ஸ்டிக் போட்ட பெரிய உதடுன்னு செம்ம ஸ்டைலா ஏஞ்செலினா ஜூலி மாதிரி இருக்காங்க“

“அது சரிதான் அப்புறம் எப்படி நம்மகிட்ட வருவாங்க”

அதற்குள் இந்திய குழுவின் தலைவர் ஆனந்தன் அனைவரையும் அழைத்து குறிப்புகள் வழங்கினார்.

“மிஸ் போதும்பொண்ணு, நீங்க உடனே இவர் கூட ஜீப்ல மிஸ்ஸைல் இருக்குற லொகேஷனுக்கு போய்டுங்க. அங்க போய் செக்யுரிட்டிய ப்ரீச் பண்ணி  மொத்த சிஸ்டத்தையும் ஷட் டவுன் பண்ண முடியுமான்னு பாருங்க. டாக்டர் கபாலி, நீங்க உடனடியா பியாங்யாங் ஜெனரல் ஆஸ்பிட்டலுக்கு போய் ப்ரசிடெண்ட் கண்டிஷன் எப்படி இருக்கு? கவுண்ட் டவுன எக்ஸ்டன்ட் பண்ண என்னவெல்லாம் வாய்ப்பு இருக்குன்னு ஆய்வு பண்ணி நம்ம பி.எம் முக்கு அப்டேட்ஸ் கொடுத்துக் கிட்டே இருங்க. இந்த மிஷன நம்ம டீம் வெற்றிகரமா முடிச்சா நம்ம நாட்டுக்கே நல்ல பேரு”

“நிச்சயமா முடிச்சிடலாம் சார்” என்றனர் கபாலியும் போதும்பொண்ணுவும் கோரஸாக.

*****

“தற்போது பூச்சி மசாலா நேரலை விவாத நிகழ்ச்சியில் நம்முடன் இணைந்து இருப்பவர்கள் அணுவிஞ்ஞானி அப்பாதுரையும் இதயநோய் மருத்துவர் இளங்கோவனும். நியுஸ்19 ன் சார்பாக உங்களை வரவேற்கிறோம்”

“வணக்கம்“

“ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த கவனமும் வடகொரியா மேல் திரும்பி இருக்கிறது. நம்முடைய இதய நோய் நிபுணர் கபாலியும் ராணுவ மின்னணு விஞ்ஞானி போதும்பொண்ணுவும் பிரதமரின் உத்தரவுக்கு இணங்க வடகொரியா விரைந்துள்ளார்கள். என்ன தான் சார் பிரச்சனை?“

இவ்வளவு நேரம் தமிழ்நாடே அறிய தவித்துக் கொண்டு இருந்த சஸ்பென்ஸை ஓப்பன் பண்ணினார் அப்பாதுரை.

“வடகொரிய அதிபருக்கு இதயத் துடிப்பு ரேட் குறைந்து வருகிறது. ஆபரேஷன் செய்யும் நிலையில் அவரது உடல்நிலை இல்லை. அதிகபட்சம் நான்கு மணிநேரத்திற்கு மேல் தாங்காது என்கிறார்கள்“

“அதற்கும் உலகநாடுகள் அஞ்சி நடுங்குவதற்கும் என்ன சம்மந்தம் உள்ளது சார்“ என்றார் நிருபர் சங்கர்.

“அவரது இதயத் துடிப்பைத் தூண்டும் பேஸ்மேக்கரின் துடிப்போடு அந்த நாட்டில் உலகநாடுகளை நோக்கி நிறுவப்பட்டு நிற்கும் அணுஆயுதங்களின் புறப்பாட்டு பொத்தான் இணைக்கப் பட்டுள்ளது. அவரது துடிப்பு அடங்கும் அடுத்த வினாடி அணுஆயுதங்களுக்கு சமிக்கை போய் அது தன்னாலேயே மேலெழுந்து அதற்கு என்ற வகுக்கப்பட்டுள்ள பாதையில் சென்று அணுகுண்டினை வீசும். அதனை செயலிழக்கச் செய்யவும், அதிபரின் இதயத்துடிப்பை நீடித்திருக்கச் செய்யவும் தான் எல்லோரும் பியாங்யாங்கில் முகாமிட்டு இருக்கிறார்கள்“

இந்த செய்தி வெளியிடப்பட்ட அடுத்த வினாடி ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ச்சியில் உறைந்து போனது. பயத்தோடு தொலைக்காட்சித் திரையில் தெரியும் கவுண்ட் டவுன் கிளாக்கை பார்த்தார்கள். சிலர் உடனடியாக பிரார்த்தனையில் அமர்ந்தார்கள்.

*****

பியாங்யாங் ஜெனரல் ஆஸ்பிட்டலில் முழுக்க முழுக்க பல நாட்டு மருத்துவர்கள் குழு கூடிக் கூடி பேசிக் கொண்டு இருந்தனர். எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் குறைந்து வரும் பல்ஸ்ரேட்டை நார்மல் சைனஸ் ரிதமுக்கு கொண்டுவந்து நிலைநிறுத்துவது குறித்து ஆய்வு செய்தபடி இருந்தார்கள்.

இந்திய மருத்துவர் கபாலி அதிபரின் உடலை பரிசோதித்துக் கொண்டு இருந்தார். அவரது முகத்தில் அவநம்பிக்கை ரேகைகள் படர்ந்திருந்தது.

“நர்ஸ், அதிபருக்கு பேஸ்மேக்கர் ஆப்பரேஷன் செய்த மருத்துவர் யார்?“

“சார், டாக்டர் கிம் டுக் தான் ஆபரேஷன் செய்தார்”

“அவரை அழைத்து வாருங்கள்”

“சார் அவர்…“

“என்னம்மா, சொல்லுங்க?“

“அவர் இரண்டு வருடங்களாக கோமாவில் உள்ளார்”

“என்னம்மா சொல்றீங்க? அவர் எழுதிய அதிபரின் மெடிக்கல் ஹிஸ்டரியாவது இருக்கா?“

“அதுதான் சார் பிரச்சனை, ரகசியத் தன்மை பாதுகாப்பு காரணங்களால் அது மருத்துவரின் பிரத்தியேக கணினியில் உள்ளது. கடவுச் சொல் அவருக்குத் தான் தெரியும்”

கபாலி உடனே தமிழரசனை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தார்.

*****

இந்தியக் குழுவின் தலைவர் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டார். இந்தியாவில் இருந்து பிரதமரின் அழைப்பு, பாதுகாப்புத் துறை அமைச்சரின் அழைப்பு இவற்றுக்கு பதில் சொல்லிவிட்டு மின்னணு பொறியாளர் போதும் பொண்ணுவுக்கு அழைப்பு விடுத்தார்.

“சார் கெடுவாய்ப்பாக உங்களுக்கு சொல்வதற்கு என்னிடம் எந்த நல்ல செய்தியும் இல்லை. அதிபரின் பேஸ்மேக்கரில் இருந்து பல்ஸ் சிக்னல் ரிலே செய்யப் பட்டு இங்கே ரிசீவ் ஆகுது. மேலும் அது தடைபட்டால் மிசைல் கிளம்புவதற்கான சர்க்யுட் செயல்படும் வகையில் செட் செய்திருக்காங்க. மொத்த வளாகத்தையும் லேசர் பீம் மூலமாக பாதுகாக்கிறாங்க. கட்டுப்பாட்டு மையத்தை மேனுவலா அணுகினாவே மிசைல் சர்க்யுட் ஆன் ஆகிடும் போல தெரியுது. அதனால் இதனை செட் செய்த விஞ்ஞானியுடன் பேசணும்”

“அந்த விஞ்ஞானி இறந்து விட்டாராம். அவரது லேப்டாப்பில் எதாவது விஷயம் கிடைக்குதான்னு அத ஹேக் பண்ண சொல்லி இருக்கேன். நீங்க உடனே ஜெனரல் ஆஸ்பிட்டல் வாங்க இங்கே வேலை இருக்கு”

போதும்பொண்ணு ஜெனரல் ஆஸ்பிட்டல் விரைந்தார். அங்கே அவரது ஆய்வுக்காக மறைந்த அணுவிஞ்ஞானியின் பிரத்தியேகக் கணினி காத்திருந்தது.

*****

”பியாங்யாங்கில் இருந்து தற்போது கிடைத்த தகவல்“ என்று அடுத்த சரவெடியை வீசத் தயாரானார் சங்கர்.

“நமது பியாங்யாங் சிறப்பு நிருபர் அனுப்பிய தகவல். உலகைக் காக்கும் முயற்சியில் மற்றொரு பின்னடைவாக வடகொரிய அதிபருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்திய மருத்துவர் கிம் டுக் இரண்டு ஆண்டுகளாக கோமாவில் உள்ளார். அதுபோல அணு ஆயுதங்களை பொருத்திய விஞ்ஞானி ஆறுமாதங்களுக்கு முன் மர்மமான முறையில் இறந்துபோய் இருக்கிறார்“

“தற்போது கிம்டுக்கை கோமாவில் இருந்து மீட்க மருத்துவர்கள் குழு போராடி வருகிறது. மறுபுறம் நமது மருத்துவர் கபாலி அதிபரின் இதயத் துடிப்பு நிற்காமல் இருப்பதற்கு கடுமையாக முயற்சி செய்து வருகிறார்“

”வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டு புவியை அழிக்குமா? மனித இனம் தப்பிப் பிழைக்குமா? அறிந்து கொள்ள நியுஸ்19 உடன் இணைந்திருங்கள்”

உலக அழிவு குறித்த செய்தியினால் அதிர்ச்சியில் இறந்து போனவர்கள் விவரம் என்று மாவட்ட வாரியான எண்ணிக்கை ஸ்குரோலிங்கில் ஓடிக்கொண்டு இருந்தது.

*****

“வணக்கம் சார், நான் ச்சீட்டா ஃபோர்ஸ் கேப்டன் பேசுறேன் சார்”

“எந்த பிராஞ்ச் ஆப்கானிஸ்தானா?“

“நோ சார் நான் வடகொரியா”

“என்ன விஷயம்?”

“சார் மிஷன் சக்சஸ் ஆ முடியப் போகுது டார்கெட் லொகேஷன் பியாங்யாங் ஜெனரல் ஆஸ்பிட்டல். நாங்கள் நேர் எதிர் கட்டிடத்தில் இருக்கிறோம்.“

“என்னய்யா சொல்றீங்க“ என்று பதட்டத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார் அமெரிக்க அதிபர்.

“நம்ம ஸ்னைப்பர் ட்ரிக்கர்ல கை வைத்துக் கொண்டு தயாராக இருக்கிறார். பக்கத்தில் ராக்கெட் லாஞ்சரும் தயார். அதான் மிஷனோட வெற்றிய நீங்க லைவா பாத்தா சந்தோஷப் படுவீங்கன்னு வீடியோ கால் கனெக்ட் பண்ணினேன்”

“மிஷனும் வேண்டாம் ஒரு கூந்தலும் வேண்டாம் உடனே கேன்சல் பண்ணிட்டு ரிட்டர்ன் வாங்க”

“சார் இதுக்காக நாங்க ஒரு வருசமா கஷ்டப்பட்டிருக்கோம்”

“இப்போ நீங்க சுட்டா உலகம் முழுக்க அணுகுண்டு வெடிக்கும் பரவால்லையா? அந்த ஆளு செத்தா அணுகுண்டு உலகம் முழுக்க கிளம்பி போய் வெடிக்கிற மாதிரி செட் பண்ணிருக்கான்யா சுட்டுக் கிட்டு புடாதீங்க, இங்க உலகம் முழுக்க அவன் பொழைக்க சர்வமத பிரார்த்தனை போய்கிட்டு இருக்கு உடனே மொபைல்ல நியுஸ் பாருங்க”

“ஓகே சார்” நல்வாய்ப்பாக போன் பண்ணி பேசியதால் உலகம் தப்பியது.

*****

உலகம் முழுவதும் பொங்கல் விழா கொண்டாட்டம் போல மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. இனிப்பு பரிமாறி மகிழ்ந்தார்கள். காதலர்கள் முத்தமிட்டு மகிழ்ந்தார்கள். பக்திமான்கள் சாமிகும்பிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். நியுஸ் சேனல் உரையாடல் அறையில் இருந்த கவலை மறைந்து மகிழ்ச்சித் துள்ளல்களும் நிம்மதியும் ஏற்பட்டது.

சரி என்னதான் நடந்தது?

சரியாக இரண்டு மணிநேரத்தில் அதிபரின் இதயத்துடிப்பு அடங்கியது. பேஸ்மேக்கர் கருவியும் முற்றிலும் செயலிழந்தது. சரியாக அதே நேரத்தில் மருத்துவர் கிம்டுக் கண் விழித்தார்.

“எங்கள் தேசம் பொருளாதாரத் தடைகளால் முற்றிலும் நிர்மூலமானது. நீங்கள் சாதாரணமாக பெறும் மருந்துகளோ, உணவுப் பொருட்களோ, சாக்லேட்களோ அல்லது மின்னணு சாதனங்களோ எங்களுக்கு அரியவகைப் பொருட்கள் தான். வசதியும் அதிகாரமும் படைத்த மக்கள் எப்படியாவது சில பொருட்களை தென் கொரியாவில் இருந்து கடத்தல் நடைபெறும் சுரங்கம் வழியாக பெற்றுக் கொள்வார்கள். அதனால் தான் உலகநாடுகளுடன் தொடர்புகளை புணரமைக்க எங்கள் அதிபர் விரும்பினார். அதற்காக எங்கள் நாட்டுக்கு வெளியே பயணம் கிளம்பினார். ஒரு வேளை தான் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படலாம் என்று எண்ணினார். உலகநாடுகள் மீதான அவநம்பிக்கை காரணமாக ஒரு ஏற்பாட்டை செய்தார். அது தான் இது. கைதானால் மட்டும் இதைச் சொல்லி தப்பிக்க எண்ணினார். மற்றபடி தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று இந்த தகவலை ரகசியமாக வைத்திருந்தோம். அவர் நாடு திரும்பிய பிறகு அந்த பேஸ் மேக்கர் கருவியில் உள்ள ரகசிய சிப்பை நீக்க இயலவில்லை. அதனால் அதிபர் என்னை தாடையில் சுட்டுவிட்டார் அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை”

“அதற்கு பிறகு என்ன ஆனது என்பதை நான் சொல்கிறேன்“ என்று ஆரம்பித்தார் போதும்பொண்ணு.

“அணு விஞ்ஞானி ச்சங் ஹோ வின் கணினியில் இருந்த முக்கிய ஃபைல் ஒன்றில் அவர் அத்தனை விஷயத்தையும் தெளிவாக சொல்லி உள்ளார். அதிபர் கேட்டபடி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க சம்மதித்தாலும்கூட ஒட்டு மொத்தமாக அத்தனை அணுகுண்டுகளை ஆக்டிவாக வைப்பதில் விஞ்ஞானிக்கு விருப்பம் இல்லை. எனவே அணுகுண்டுகளை எடுத்துச் செல்லும் அனைத்து ராக்கெட்களிலும் எரிபொருள் நிரப்பாமல் விட்டுவிட்டார். மேலும் அணுகுண்டுகளும் டம்மியானவைதான். ஒன்றிலும் யுரேனியம் எரிபொருள் நிரப்ப வில்லை. அணு உலைக் கழிவுகள் இந்த வளாகத்தில் இருப்பதால் ஏற்பட்ட வழக்கமான கதிர்வீச்சே இங்கே அணுகுண்டுகள் ஆக்டிவாக உள்ளது என்பதை நம்ப வைக்க போதுமானதாக இருந்திருக்கிறது. இது அதிபருக்கும், டாக்டருக்கும் விஞ்ஞானிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியத் திட்டம் என்பதால் விஞ்ஞானி சாமர்த்தியமாக இதை சாதித்து விட்டார். எப்படியோ உலகம் தப்பிப் பிழைத்தது“

“ஆனா இந்த விஷயம் எப்படி வெளியானது?”

“யாரோ ஒரு தென்கொரிய உளவாளியின் மூலமாக மருத்துவமனையில் இருந்து தான் கசிந்துள்ளது”

“அதிபருக்கு எப்போது இறுதிச் சடங்கு?”

“இறுதிச் சடங்கிற்கு அவசியம் இல்லை. இதயத்துடிப்பு நின்ற பிறகு அவருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து துடிப்பை கொண்டு வந்து விட்டோம். கபாலியின் கைங்கரியத்தில் அவரது ஆயுள் நீட்டிக்கப் பட்டுவிட்டது“

எப்போதும் இப்படி தப்பிவிட முடியாது. மொத்த உலகத்தையும் அழிக்கும் ஒற்றைப் பொத்தானை அணு ஆயுத வடிவில் யார் வேண்டுமானாலும் உருவாக்கும் ஒரு வாய்ப்பு திறந்தே கிடக்கிறது. யாரும் யாரையும் அடக்கி ஆளாமல், ஒன்று பட்டு ஒற்றுமையோடு அன்பைப் பறிமாறும் ஒரு நிலை நோக்கிய உலக சமுதாய முன்னேற்றம் ஒன்றே நமது அனைவருக்கும் நல்லது. ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்குவோம்.

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...