Monday, April 18, 2022

இரண்டு முத்தான படங்களைப் பற்றி....

 


"No one treats you like an ordinary person, just be extraordinary" தனது மாற்றுத் திறனாளி மகனை சமூகத்தினர் நடத்தும் விதத்தை பார்த்து அந்தத் தாய் பொறுமுகிறார்.


"மாற்றுத் திறனாளியாக இருப்பது கூட சுலபம் தான், ஆனால் மாற்றுத் திறன் குழந்தையின் தாயாக இருப்பதுதான் சிரமம்" தன்னிடம் புலம்பும் மகனிடம் அதே தாய்!!


"இந்தக் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு இவன் நடப்பது ரொம்ப கஸ்டம்தான்" என்றார் மருத்துவர். ஆனால் அந்தத் தாய் அவனை பாராலிம்பிக்கில் ஓடச் செய்து தகர்க்க இயலாத சாதனைகளை செய்வித்திருப்பார்.


Zero to Hero என்கிற ஹாங்காங் படத்தை இந்த விடுமுறையில் பார்த்தேன். அவ்வளவு goosebump moments!! உண்மைக் கதையின் திரை ஆக்கம். உரையாடல்கள் அவ்வளவு பிரமாதம். அம்மா புள்ள நடிப்பை பிச்சி ஒதறிட்டாங்க போங்க.


பாராலிம்பிக்கில் பதக்கம் பெற்றாலும்கூட அவர்களுக்கு அரசின் ஊக்கத்தொகை சொர்ப்பமாகவே கிடைக்கிறது. மற்ற வீரர்களுக்கு போல் இவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் படம் பேசி உள்ளது. இந்தப்படம் நெட்ஃபிளிக்ஸ் ல் உள்ளது.


அடுத்து Lunana:A Yak in the class room என்கிற பூடான் நாட்டுப் படம். எதேச்சையாக ப்ரைமில் இந்த பட போஸ்டரை காண நேர்ந்தது. பசுமையான மலைக் காட்சி என்றதுமே படக்குறிப்பை பார்த்தால் "வாகை சூட வா" வகை ஆசிரியர் பற்றிய படம்.


பாடகராக ஆஸ்திரேலியா சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற கனவில் வாழும் ஹீரோ வேண்டா வெறுப்பாக ஆசிரியர் பயிற்சியின் இறுதி ஆண்டில் இருக்கிறார். இவரது அலட்சிய மனப்பான்மையால் ரிமோட் ஏரியா மலை கிராமமன லுனானா வில் உள்ள ஓராசிரியர் பள்ளிக்கு போட்டுவிடுகிறார்கள்.


அங்கே போய் சேரவே பேருந்தில் ஒரு நாள் மலையேற்றம் ஐந்து நாள் என போகவேண்டி உள்ளது. லுனானா ஊரில் இருந்து ஆசிரியரை வரவேற்று கூட்டிச் செல்ல இரண்டு பேர் மூன்று குதிரைகளோடு வருகிறார்கள். குதிரை லக்கேஜ்க்காகத்தான்.


தீரன் பட கிழவன் தோ கிலோமீட்டர் என்பது போல புது வாத்யாரை நைசாக பேசி மலையேற்றிக் கூட்டிச் செல்கிறார்கள். அந்த மலைக் காட்சிகளை சிந்தாமல் சிதறாமல் கேமராவில் அள்ளி வந்து நமது கண்களுக்கு விருந்து படைத்துள்ள ஓளிப்பதிவாளருக்கு ஆஸ்கர் வழங்கலாம்.


ஊரே எல்லையில் நின்று வரவேற்று ஆசிரியரை அழைத்துச் செல்கிறது. ஊராரின் மரியாதை மற்றும் நம்பிக்கை, குழந்தைகளின் அன்பில் நெகிழ்ந்து வேண்டா வெறுப்பு வாத்யாரின் மனது நெகிழ்கிறது. பணியில் ஈடுபாட்டோடு குழந்தைகளுக்கு கற்பிக்கிறார். பனிக்கால விடுமுறையும் ஆஸ்திரேலியா வேலையும் ஒன்றாக வருகிறது, கனத்த மனதோடு ஊருக்கு பிரியா விடைகொடுத்து கிளம்புகிறார். 


58 பேரே மக்கள்தொகை உள்ள மலைகிராமத்தில் ஒரு பள்ளியை வைத்திருக்கும் பூடானை பாராட்டலாம். பேத்தியின் கல்வியின் பொருட்டு பக்கத்து மலையில் இருந்து லுனானாவுக்கு இடம் பெயர்ந்துள்ள பாட்டி கதாப்பாத்திரம், மக்கள் ஆசிரியரை நடத்தும் விதம் பூடானியர்கள் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.


இந்த ஷீட்டிங்குக்காக சோலார் பேட்டரியால் மட்டுமே மின்சாரம் பெறும் ஊரான லுனானாவுக்கு மொத்த படக்குழுவுமே மலையேறி உள்ளார்கள். ஆனால் அந்த ரிமோட் மலை கிராமம் அவ்வளவு அழகை தன்னகத்தே வைத்துள்ளது.


படத்தில் சொல்வதற்கு இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளது. அத்தனையையும் மொபைலில் டைப்ப கஷ்டமாக உள்ளது.


தவறாமல் படத்தை பாருங்கள். முக்கியமாக ஆசிரியர்கள் பார்க்க வேண்டும். இந்தப் படம் அமேசான் ப்ரைமில் உள்ளது.

Sunday, April 17, 2022

சமூகநீதியில் முன்னணியில் உள்ள மாநிலத்தில் பாலின சமத்துவம் உள்ளதா?

 


NO SAFE HAVEN FOR WOMEN AT HOME என்றொரு கட்டுரை இன்றை தி இந்து ஞாயிறு ஸ்பெஷலில் வந்திருந்தது. அதில் கண்ட சில புள்ளி விவரங்கள்.


80 விழுக்காட்டினர் மனைவி எதிர்த்து பேசும் போது அடிப்பது நியாயம் தான் என்று எண்ணுகிறார்கள். எதிர்த்து பேசினால் அடிப்பது அல்லது கட்டிலில் குப்புற படுத்துக் கொள்வது என்கிற யுத்தியை பெரும்பான்மையானோர் கடை பிடிக்கிறார்களாம்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப் படும் பெண்கள் 45 விழுக்காடு என்கிற நிலையில் நமது தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து கர்நாடகாவுக்கு அடுத்த நிலையில் உள்ளது.


குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் 80 விழுக்காட்டினர் உதவி கோருவதோ அல்லது அது பற்றி வெளிப்படையாக பேசுவதோ கிடையாதாம்.


 அரசு உயர்நிலைப் பள்ளி சுத்தமல்லியில் 1989 ல் நான் எட்டாம் வகுப்பு படித்தபோது (உடனே கணக்கு போடவேண்டாம் எனது வயது 46 ஹா ஹா…) பத்தாம் வகுப்பில் 35 மாணவர்களும் ஒரே ஒரு மாணவியுமே படித்தார்கள். அந்த ஒரு மாணவி ஆசிரியர் மேசைக்கு அருகே தனியே ஸ்டூலில் அமர்ந்திருப்பார். அதற்கு முந்தைய ஆண்டுகளில் எங்க அக்கா படித்த போது 30 க்கு 10 என்கிற அளவில் பெண்கள் படித்தார்கள்.


 நான் பத்தாம் வகுப்பு படித்தபோது கூட பெண்கள் எண்ணிக்கை பாதி என்கிற அளவினை எட்டவே இல்லை. வயதுக்கு வந்த பெண்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு வயிற்றில் ”நெருப்பைக்” கட்டிக் கொண்டிருக்க பெற்றோர் தயாராக இல்லை. ஒருத்தன் கையில ”புடிச்சி கொடுக்கும்” வரையில் பெற்றோர் மனம் அமைதி கொள்வதில்லை.


 நான் வேலைக்கு வந்த ஆண்டான 2002 ல் இந்த விகிதம் ரிவர்சில் இருந்தது. “ஆகா, பாலின சமத்துவத்தை தாண்டி எங்கேயோ போய்ட்டோம் போல” என்று வியந்து போனேன். பையன்களை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு பெண் பிள்ளைகளை “உங்களை எல்லாம் படிக்க அனுப்புவதே பெரிய விஷயம்“ என்கிற ரீதியில் அரசுப் பள்ளிக்கு பெற்றோர் அனுப்பி உள்ளனர் என்பதை பின்னர் புரிந்து கொண்டேன்.


 எண்ணிக்கையை விடுங்க, பெண் பிள்ளைகள் என்ன தான் சிறப்பாக படிப்பு, பாட இணை செயல் பாடுகள் என அனைத்திலும் சிறப்பாக கோலேச்சினாலும் பெற்றோர் சொல்வது என்னவோ “சாருக்கு ஒரு ஊத்தாப்போம்“ என்பது போல கல்யாண பல்லவியைப் பாடி படிப்புக்கு மங்களம் பாடிவிடுகிறார்கள்.


 நான் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஒரு பத்தாம் வகுப்பு மாணவி மிகச்சிறப்பாக படிப்பார். எழுத்தெல்லாம் கணினியில் தட்டச்சு செய்து பிரிண்ட் செய்தது போல இருக்கும். 460 க்கு மேல் மதிப்பெண் வாங்கினார். அடுத்த கல்வியாண்டில் டிசி வாங்க வந்திருந்தார். ஒரு ஃபைல் ஒன்றை கழுத்துக்கு கீழே அண்டை கொடுத்துக் கொண்டே நின்றார். எதையோ மறைக்க பிரயத்தனம் செய்கிறார் என்பதை உணர்ந்தே ஒரு கியுரியாசிட்டியில் கழுத்தின் பின் புறத்தை கவனித்தால் புத்தம் புதிய மஞ்சள் கயிறு. எனக்கு தூக்கி வாரிப் போட்டுவிட்டது. விசாரித்த போது அந்த பெண்ணை கட்டிக் கொள்ள சொந்தத்தில் ஒரே போட்டா போட்டியாம். வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளை ஒருவர் கிட்டியதும் கட்டி போட்டுவிட்டனர்.

 

 பனிரெண்டாம் வகுப்பு கணிதப் பாடம் எடுத்தபோது ஒரு உயரம் குறைவான மாணவி நித்யா என வைத்துக் கொள்வோம். உயரம் குறைவானவர்கள் தன்னம்பிக்கை கொள்வதற்கு காலை பிரார்த்தனையின் போது ஒரு கதையும் கருத்தும் கூறினேன். அந்த மாணவி ரொம்ப இம்ப்ரஸ் ஆகிவிட்டார். எப்படியாவது தேர்ச்சி அடைந்து பதிலுக்கு என்னை இம்ப்ரஸ் செய்வது என்கிற உத்வேகத்தோடு படிக்கத் துவங்கினார். கற்று வைத்திருந்த மொத்த வித்தைகளையும் மொத்தமாக இறக்கி வைத்து அவரை 71 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வைத்தேன். “ஸ்ஸ்…அப்பாடா, அந்த மாணவியை கல்லூரிக்கு அனுப்பியாச்சு“ என நினைத்து காலரை தூக்கி விட்டுக் கொண்டேன். ஆனால் அதற்கடுத்த வருடத்திலேயே அரியலூர் பேருந்து நிலையத்தில் “சார், சார்… “ என அழைத்துக் கொண்டே வேகமாக புடவை உடுத்திய ஒரு பெண் வந்தார். யாரேனும் உட்கோட்டை கால மாணவியாக இருக்கும் என பார்த்தால், சென்ற ஆண்டு படித்த நித்யா. நிறைமாத கர்ப்பிணியாக நின்று கொண்டு இருந்தார். பதட்டத்தோடு ஓடி வந்ததற்காக கடிந்து கொண்டு நலம் விசாரித்தேன். ஆனால் மனதில் ஒரே ஏமாற்றம். நாமொன்று நினைத்தால் பெற்றோர் ஒன்று நினைத்து விடுகிறார்கள்.


 மற்றொரு முறை (காலக்கோடு வேண்டாம்) ஒரு டிஜிட்டல் பேனரில் திருமண விளம்பரம். பெண் மாப்பிள்ளை படத்தோடு பேருந்து செல்லும் சாலையோரம் வைத்திருந்தார்கள். பெண்ணை பார்த்தால் முந்தைய ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவி. சட்டப்படி குற்றம் என்பது கூட உரைக்காமல் விளம்பரம் வைத்து கொண்டாடுகிறார்களே என தலையில் அடித்துக் கொண்டேன்.


 அந்தப் பெண்ணுக்கு பெற்றோர் இல்லை. மாமா வீட்டில் தங்கிப் பயில்கிறார். நன்றாக படிக்கும் சுட்டியான பிள்ளை. ஒன்பதாம் வகுப்பில் படித்தபோதே “நல்ல“ மாப்பிள்ளை என்று கூறி திருமண ஏற்பாட்டினை முன்னெடுத்துள்ளார்கள். ஆசிரியர்கள் கேள்விப் பட்டு அந்த பெண்ணை அழைத்துப் பேசி பாதுகாவலர்களிடமும் பேசி தடுத்து விட்டார்கள் என்று 

கேள்விப் பட்டு மகிழ்ச்சியடைந்தேன்.


 கொரானா பேரிடர் காலம் கல்வியை பல கோணங்களில் வெகுவாக பாதிப்படையச் செய்துள்ளது. வசதி குறைவான பெற்றோரது குழந்தைகள் குழந்தை தொழிலாளராக சென்றிருக்கிறார்கள். வேறு சில குழந்தைகள் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி உள்ளனர்.


 எங்கள் பள்ளி மாணவி ஒருவரது வங்கிக் கணக்கு எண் கிடைக்காமல் பெற்றோரை தொடர்பு கொள்ள முயன்று கொண்டே இருந்தோம். அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்றபோது நேரில் சென்று விசாரித்த போது தான் தெரிந்தது, அந்த சிறுமி திருப்பூருக்கு ப்ரீ பெய்டு குழந்தை தொழிலாளராக அனுப்பப் பட்டுள்ளார். அந்த சிறுமியின் அம்மா ஒற்றை பெற்றோர். ஒரு மாதம் முன்பு ரெண்டுல ஒண்ணு பாத்துடுவோம் என்கிற ரீதியில் வீட்டுக்கு ஆசிரியர் சென்றிருந்தார். அந்தச் சிறுமி சக்கையாக பிழியப்பட்டு நாராக வந்து சேர்ந்திருந்தார். அந்த சிறுமிக்கும் பெற்றோருக்கும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொல்லி இன்னும் ஒரு மாதமே பொதுத் தேர்வு இருக்கும் நிலையில் தேர்ச்சி விழுக்காடு பற்றியெல்லாம் கவலைப்படாமல் பள்ளியில் சேர்த்துக் கொண்டோம். ரிசல்ட்டாவது ஒண்ணாவது “படிப்பு முக்கியம் பிகிலு” என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.


 என்னதான் நாம் பெரியார் மண் சமூக நீதி முன்னோடி என்று பீற்றிக் கொண்டாலும், பாலின சமத்துவத்தின் உண்மையான அர்த்தத்தை இன்னும் சாமானிய மக்களுக்கு உணர்த்தவே இல்லை என்பது தான் கசப்பான உண்மை.


 என்னதான் நாம் சமத்துவம் பேசிக்கொண்டாலும் 

பெண்களின் உரிமைகளை மதிக்கும் விஷயத்தில் ஒரு ஆணியையும் ப்ளக் பண்ண தயாராக இல்லை. தி கிரேட் இண்டியன் கிச்சன் என்ற மலையாளப் படத்தில் உள்ளது போல ஒட்டு மொத்த குடும்ப பொறுப்புகளையும் பெண்கள் தலையில் சுமத்திவிட்டு ஹாயாக கை வீசிக் கொண்டு நடந்து பழகிய நாம் இப்போது அந்த பொறுப்புகளை ஏற்பது என்றால் கசக்கத்தானே செய்யும். 


 அப்படியே யாராவது எதிர் கேள்வி கேட்டு பொங்கல் வைத்தால் கலாச்சாரம் கடவுள் நம்பிக்கை என்றெல்லாம் பயமுறுத்தி விடுகிறோம்.


 குடும்ப வன்முறை காரணமாக என்னதான் தினசரி வாழ்க்கை பெண்களுக்கு சிரமமாகிப் போனாலும் “கல்லானாலும் கணவன் புள்ளானாலும் புருசன்” என்று கூறி சகித்துக் கொள்ள வேண்டும் என்றே பெண் வீட்டார் நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை கணவன் வீட்டில் தினசரி ரத்தம் சிந்தி அவதி பட்டாலும் “வாழாவெட்டி“ என்கிற பெயர் குடும்ப அவமானம்.


 பெண்பிள்ளைகளை படிக்க வைக்கிறோம், வேலைக்கு அனுப்புகிறோம் அவ்வளவு தான் மற்றபடி திருமணமாகி வேலைக்குச் செல்லும் பெண்பிள்ளைகளின் சிரமங்களை உணர்வதோ பகிர்வதோ கிடையாது. நீ எங்க வேணா போ, ஆனா சோறு ஆக்கி வச்சிட்டு போ, குழந்தை பராமரிப்பு முழுக்க முழுக்க உன்னுடைய கடமை மட்டுமே. இதில் ஏதாவது சுருதி பேதம் ஏற்பட்டால் திருமண உறவில் விரிசல் விழுகிறது.


 திருமணத்திற்கு வெளியேயான உறவு என்பதை ஆண்களுடையது என்றால் சகஜமாக எடுத்துக் கொள்ளும் சமூகம் பெண்களுடையது என்றால் பொங்கிவிடுகிறார்கள். 


 தனிமனித ஒழுக்கம் என்பது இருபாலருக்கும் பொதுவானது தானே? ஆண்கள் மது அருந்தும் புகை பிடிக்கும் படங்களை ஆண்மையின் அடையாளம் என பீற்றிக் கொண்டு அவர்களே பகிர்ந்து மகிழுகிறார்கள். ஆனால் பெண்கள் செய்வது என்றால் ஓவர் நைட்டில் வைரல் ஆகிவிடுகிறது. “காலம் கெட்டுடுத்து கலி முத்திடுத்து“ என்கிற ஓலமிடுகிறார்கள்.


 நமது குடும்பங்களிலேயே குடும்ப அமைப்பு நடைமுறைகள் போன்றவற்றை நாம் கற்றுக் கொள்கிறோம். அப்பா என்றால் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும் அம்மா என்றால் சமையல், குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டு பராமரிப்பு. இதையே அடுத்த தலைமுறை மகன் மற்றும் மகள் கற்றுக் கொள்கிறார்கள். பெண்கள் வேலைக்குச் செல்லும் வீடுகளில் ஆண்கள் சமையல் வேலை வீட்டுப் பராமரிப்பு என்று இருந்தால் அது கேலிக்குறியது ஆகிவிடுகிறது. “நான் ஒரு ஆம்பள இவ்வளவு செய்யறதே பெரிது“ என்கிற மனப்பான்மையோடோ அல்லது பொருமலோடோ தான் பெரும்பாலான ஆண்கள் வேலையை செய்கிறார்கள்.


 சமூக பொறுப்புகளில் பெண்களுக்கான இடங்களை இட ஒதுக்கீடு மூலம் வழங்கினாலும் உண்மையில் அவர்களில் 90 விழுக்காட்டினர் ரப்பர் ஸ்டாம்பாகத்தான் உள்ளார்கள். 

 

ஆக, பாலின அசமத்துவத்தை குடும்பங்களில் இருந்து வாழையடி வாழை பழக்க வழக்கம் மூலமாக நம்மை அறியாமலேயே கற்றுக் கொள்கிறோம். பாலின சமத்துவம் காண்பது என்பது நமது பள்ளிக் கலை திட்டத்திலேயே கூட இருப்பதாக தெரியவில்லை. 


 ஆனால் பள்ளிகளில் துவக்க நிலை வகுப்புகளில் இருந்தே பாலின சமத்துவத்திற்கு வேட்டு வைக்கும் வேலைகளை செய்கிறோம். “இந்தாம்மா, அந்த வௌக்குமாத்த எடுத்து கூட்டிவிடு, டேய் அந்த பெஞ்சை தூக்கி போடுடா” குறைந்த பட்சம் இந்த டயலாக்கையாவது மாற்றிப் பேசி வேலைகள் அனைவருக்கும் பொதுவானது. இங்கே ஆண்களுக்கான வேலை பெண்களுக்கான வேலை என்று எதுவும் இல்லை என்பதை உணர்த்த தலைபடுவோம்.

Friday, April 8, 2022

ரேடியேஷன் என்கிற கதிர்வீச்சு அபாயம்





ரேடியேஷன் என்றால் என்ன?
ஒரு மூலத்தில் இருந்து வெளியேறும் சக்தி, வெளியில் ஒளியின் வேகத்தில் பயணம் செய்ய வல்லது கதிர்வீச்சு என்கிற ரேடியேஷன் என்பார்கள்.
எங்கே இருந்தெல்லாம் இந்த கதிர்வீச்சு வெளிப்படுகிறது?
எங்கே இருந்தெல்லாமா? கதிர் வீச்சு இந்த வெளியெங்கிலும் நீக்கமற நிறைந்து இருக்கு. தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் துருபிடிக்காத இரும்பிலும் கூட இருக்கும். கதிர் வீச்சு இல்லாத இடம் ஏது?
அய்யய்யோ அப்படியா?
ஆமாம், இருப்பதிலேயே மேஜர் சோர்ஸ் ஆஃப் ரேடியேஷன் இந்த சூரியன் தான். அதில் இருந்து தான் அளவில்லா காஸ்மிக் கதிர்வீச்சுகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. காஸ்மிக் கதிர்வீச்சில் ஆபத்தானவைகள் புவியின் வளி மண்டலத்தில் வடிகட்டப் படுகின்றன.
ஆனால் இந்த நியுட்ரினோ துகள்கள் இந்த வெளியெங்கும் நீக்கமற நிறைந்தபடி ஒளியின் வேகத்தில் பாய்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நொடி உங்கள் உடம்பை கோடிக்கணக்கான நியுட்ரினோ கதிர்கள் ஊடுருவிய வண்ணம் இருக்கும் என்பது தெரியுமா?
அப்படின்னா ஒண்ணும் பிரச்சனை இல்லையா?
கதிர்வீச்சில் இரண்டு வகை உண்டு. அயனியாக்க கதிர்வீச்சு அயனியாக்கா கதிர்வீச்சு. செல்போன் கதிர்வீச்சுகள், நியுட்ரினோ கதிர்வீச்சுகள் போன்றவை அயனியாக்கா கதிர்வீச்சு வகைப்பட்டது. இந்த கதிர்வீச்சு எந்த தடமும் காட்டாமல் கமுக்கமாக நல்லபிள்ளையாக ஊடுருவும் வகை. இதனால் தீங்கு ஒன்றும் இல்லை.
இந்த செல்ஃபோன் ரேடியேஷன்…
செல்ஃபோன் ரேடியேஷன் நேரடியாக இந்தவகையிலான பாதிப்புகளை எல்லாம் ஏற்படுத்துகிறது என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவ எந்த தரவுகளும் இல்லை என்று நான் தேடிய பல நம்பகமான தளங்களில் கூறியுள்ளார்கள்.
அயனியாக்க கதிர்வீச்சு என்றால் என்ன?
ஒரு அணுவில் நேர்மின்சுமை கொண்ட புரோட்டான்களும் எதிர்மின்சுமை கொண்ட எலக்ட்ரான்களும் ஒரே எண்ணிக்கையில் இருப்பதால் அவை நடுநிலையோடு இருக்கின்றன.
அந்த அணுவில் ஒரு எலக்ட்ரானை எக்ஸ்ட்ராவாக போட்டால் எதிர்மின்சுமை மெஜாரிட்டி ஆகிவிடும். அந்த நடுநிலை அணு இப்போது எதிர்மின் அயனி ஆகிறது.
அந்த அணுவில் இருந்து ஒரு எலக்ட்ரானை கழட்டி விட்டால் நேர்மின்சுமை மெஜாரிட்டி ஆகிவிடுகிறது. அந்த நடுநிலை அணு இப்போது நேர்மின் அயனி ஆகிறது.
அயனியாக்கா கதிர்வீச்சுகள் எந்த தொந்தரவும் செய்யாமல் பொட்டாட்டம் பயணிக்கும் அதே வேளை அயனியாக்க கதிர்வீச்சுகள் சற்று கிருத்துவம் பிடித்தவை. ஆமாம், போகிற போக்கில் நடுநிலை அணுவில் ஒரு எலக்ட்ரானை கழட்டிவிட்டோ, எலக்ட்ரானை சேர்த்து விட்டோ அயனியாக மாற்றிச் சென்று விடுகிறது.
இந்த அயனியாக்க கதிர்வீச்சுகள் என்பவை ஆல்ஃபா, பீட்டா, காமா கதிர்வீச்சுகள், எக்ஸ் ரே கதிர்வீச்சுகள், நியுட்ரான் கதிர்வீச்சுகள் போன்றவையாகும்.
இவை சக்தி வாய்ந்தவை. இவற்றின் அலைநீளங்கள் குறைய குறைய ஊடுறுவும் திறன் அதிகமாகிறது.
எனவே கதிர்வீச்சின் தன்மைக்கேற்ப இவை தடைகளை ஊடுருவிச் சென்று நடுநிலை அணுக்களை அயனியாக மாற்றிவிடுகின்றன. மூலக்கூறுகளுக்கிடையே உள்ள பிணைப்பை உடைக்கவல்லவை.
உடற்செல்களில் புகுந்து ஜீன் திடீர் மாற்றங்களை தூண்டி புற்று செல்கள் உருவாக காரணமாகின்றன.
ரேடியேஷன எப்படி அளப்பாங்க?
ரேடியேஷனின் அலகுகள் நான்கு விதமாக கையாளப்படுகின்றன.
1. கதிர்வீச்சு செயல்பாடுகளில் உமிழப்படும் அளவுகள்.
இது பெக்கொரல் (Bq) என்கிற அலகு கொண்டு அளக்கப் படுகிறது. ஒரு மூலத்தில் இருந்து ஒரு வினாடிக்கு உமிழப்படும் ஃபோட்டான் துகல்களின் எண்ணிக்கையை பெக்கொரல் என்பார்கள். இதனை கெய்கர் எண்ணி (Geiger Counter) கொண்டு அளவிடுகிறார்கள்.
2. ரேடியேஷன அளப்பதன் இரண்டாம் வகை.
ரேடியேஷன் காரணமாக ஒரு கிலோகிராம் பொருளில் செலுத்தப் படும் ஆற்றலை கிரே (Gy) என்கிற SI Unit மூலமாக குறிக்கிறார்கள்.
இது நேனோ கிரே (One billionth of a Gray 1/1000,000,000)
மைக்ரோ கிரே (One Millionth of a Gray 1/1000,000)
மில்லி கிரே (Milli Gray 1/1000) என்றெல்லாம் வகைப்படுத்தி தேவைக்கேற்றவாறு பயன்படுத்துவார்கள்.
3. ரேடியேஷன் திசுக்களில் ஏற்படுத்தும் அழிவின் ஒப்பீட்டளவு.
நமக்கு எப்போதும் இந்த ரேடியேஷன் நமது உயிரி திசுக்களில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிற ஒப்பீட்டு அளவு தான் தற்காப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லவா?
வெவ்வேறு வகை ரேடியேஷன்கள் உடற்திசுவில் வெவ்வேறு அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும். உடற்திசுவிலேயே வெவ்வேறு உடல் பாகங்கள் வெவ்வேறு அளவிலான பாதிப்புகளுக்கு உள்ளாகும். எனவே திசுக்களை முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் அளவிலான கதிர்வீச்சு சீவர்ட் (Sievert – Sv) என்கிற அலகினால் குறிப்பிடப்படுகிறது.
இதிலும் மேலே குறிப்பிட்ட நேனோ, மைக்ரோ மற்றும் மில்லி போன்ற அடைமொழியுடனான பயன்பாடுகள் உண்டு.
கதிர்வீச்சு என்றாலே அது அணுஉலையோடு சம்மந்தப் பட்ட மேட்டரா?
அப்படி எல்லாம் ஒரேயடியாக குற்றம் சாட்டிவிட இயலாது. ஒரு இடத்தில் இருக்கும் கனிமப் படிவுகள் கூட கதிர்வீச்சை உமிழ்ந்த வண்ணம் இருக்கும்.
அணு உலை அன்றியே ஒரு சராசரி ஆஸ்திரேலியன் மீது 1500-2000 மில்லி சீவர்ட் கதிர்வீச்சு படிகிறது.
இதுவே பிரிட்டனில் 7800 மில்லி சீவர்ட் ஆகும்.
வீட்டில் கிரானைட் தரை போட்டு இருக்கிறீர்களா? கையை கொடுங்க உங்களுக்கு 1000 மில்லி சீவர்ட் இலவசம்.
எக்ஸ் ரே அல்லது சிடி ஸ்கேன் டெஸ்ட் எடுக்குறீங்களா அப்படின்னா தடவைக்கு 2600 மில்லி சீவர்ட் கதிர்வீச்சை வாங்கி உடலில் போட்டுக் கொள்கிறீர்கள்.
கேன்சர் நோயாளிகளுக்கு ரேடியேஷன் தெரப்பி கொடுப்பார்கள் அல்லவா? அந்த மருந்துகளிலும் கனிசமான அளவுக்கு ரேடியேஷன் உண்டு. அந்த மருந்துகளை மிகுந்த பாதுகாப்பான முறையில் தான் கையாளுவார்கள்.
கஞ்சி முதல் கம்பங் கூழ் வரை பீங்கான் எனப்படும் செராமிக் மெட்டீரியலில் தான் குடிக்கிறீர்களா. அப்படின்னா உங்களுக்கும் கதிர்வீச்சு உண்டு.
அட அதெல்லாம் விடுங்கப்பா, வாழைப்பழம் சாப்பிட்டால் கூட அதில் இருக்கும் பொட்டாசியம் 40 என்கிற ஐசோட்டோப் மூலமாக கதிர்வீச்சு கிடைக்கிறது.
ஆக, அணு உலை அன்றி பிற வகைகளிலும் இயற்கையாகவே நாம் குறிப்பிட்ட அளவிலான கதிர்வீச்சுக்கு உள்ளாகிறோம். ஆனால் அவையெல்லாம் திசுக்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதிக அளவிலானவை அல்ல. எனவே அஞ்சற்க.
4. இந்த நான்காவது அலகு எஃபக்டிவ் டோஸ் என்கிற முறையில் அளவிடப்படுகிறது. அதாவது rem – Roentgen Equivalent man.
இதிலும் நானோ, மைக்ரோ, மில்லி என்கிற வகையில் அளவிடப்படுகிறது.
1 மில்லி ரெம் எனப்படுவது ஓரு வருடம் முழுவதுமாக நாம் டிவி பார்ப்பதால் கிடைக்கும் அளவு.
அல்லது ஒரு ஆண்டு செயல்படும் அணு உலை அருகே வசிப்பதால் கிடைப்பது.
அல்லது மூன்று நாட்கள் அட்லாண்டாவில் வாழ்வதால் கிடைப்பது. (அய்ய்யயோ ஏன்? அங்கே படிந்திருக்கும் ரேடியோ ஆக்டிவ் கனிம படிவுகள் தான்)
செல்ஃபோன் ரேடியேஷன் ஆபத்தானதா?
நூறு ஆண்டுகள் பணக்காரர்கள் வீடுகளில் மட்டுமே கோலேச்சிய டெலிஃபோன்கள் அவர்களின் வீடுகளைத் தாண்டி வெளியே வரவே இல்லை. ஆனால் செல்ஃபோன்கள் இருபது ஆண்டுகளுக்குள் ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பு மக்கள் கைகளிலும் வந்து விட்டது. நிச்சயமாக இது புரட்சிகரமான தகவல் புரட்சி தான்.
தற்போது உலகத்தில் 8 பில்லியன் செல்ஃபோன் வாடிக்கையாளர்கள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆகவே நியுட்ரினோ மற்றும் காஸ்மிக் ரேடியேஷன்களுக்கு அடுத்த லெவலில் புவி முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பது செல்போன் சிக்னல்களை தாங்கும் ரேடியோ அலைகள் தான்.
முதலில் செல்ஃபோன் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்ப்போம். செல்போன்களையும் செல்ஃபோன் டவர்களையும் இணைத்து உலகளாவிய ரேடியோ அலைகளால் ஆன ராஜபாட்டை போடப்பட்டு இருக்கிறது. அந்த ராஜப்பாட்டையில் மின் காந்த அலைகளாக மாற்றப் பட்ட நமது பேச்சு மற்றும் டேட்டா அடங்கிய டிஜிட்டல் தகவல்கள் கம்பீரமாக ஒளியின் வேகத்தில் பயணித்து தகவல் பரிமாற்றத்திற்கு வழி வகுக்கின்றன.
ரேடியோ அலைகளின் அலைக்கற்றையின் அகலத்தை பொறுத்து அது 2ஜி, 3ஜி,4ஜி மற்றும் வரவிருக்கும் 5ஜி என்று வரையறுக்கப் படுகிறது. அலைக் கற்றையின் அகலத்திற்கு ஏற்றவாறு ரேடியோ அலைவரிசை மாறுபடும். தற்போது நாம் பயன் படுத்தும் 4ஜி ரேடியோ அலைவரிசையானது 0.7 லிருந்து 2.7 ஜிகா ஹெர்ட்ஸ் ஆகும். இதுவே 5ஜிக்கு 80 ஜிகா ஹெர்ட்ஸ் வரை இருக்கும்.
செல்ஃபோன்களில் பயன்படுத்தப் படும் ரேடியோ அலைவரிசைகள் அயனியாக்கா கதிர்வீச்சு என்கிற வகையின் பால் படும். எனவே இதனால் ஆபத்து எதுவும் இல்லை.
ஆனாலும் இந்த செல்ஃபோன் கதிர்வீச்சு SAR என்கிற அலகினால் அளவிடப்படுகிறது. SAR- Specific Absorption Rate.
அனுமதிக்கப்பட்ட SAR லிமிட் என்பது 1.6 Watt/Kg.
நாம் பயன்படுத்தும் செல்போன்கள் அந்த எல்லைக்குள் வருமாறு தயாரிக்கப் படுகின்றன. என்னுடைய சாம்சங் எம்31 தலையில் 0.52 எனவும் உடலுக்கு 0.69 எனவும் SAR உள்ளது.
இந்த அளவீடுகள் தகவலுக்காக கொடுத்துள்ளேனே அன்றி செல்ஃபோன் ரேடியேஷன்களால் மனிதனுக்கோ பிற உயிர்களுக்கோ எந்தவிதமான ஆபத்தும் இருப்பதாக தகவல்கள் இணையத்தில் இல்லை.

இதன் மூலமாக நான் அணுஉலைகள் பாதுகாப்பானவை என்று கூற வரவில்லை. அணுஉலைக் கழிவுகளை எவ்வாறு பாதுகாப்பாக அழிப்பது என்பது தெரியாமல் உலகம் முழுவதும் பயன்படுத்தப் பட்ட அணுஉலை எரிபொருள்கள் மற்றும் பல தளவாடங்களை அப்படியே மூட்டை கட்டி வைத்துக் கொண்டு உள்ளன. வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருப்பது போல என்று கிராமத்தில் சொல்வார்கள் அல்லவா? உண்மையிலேயே புவியின் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பது அணுஉலைகள் தான். ஏனெனில் செர்னோபில் மற்றும் ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட விபத்துகளில் நாம் கற்காத பாடங்கள் ஏராளம் உள்ளன.

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...