Sunday, April 17, 2022

சமூகநீதியில் முன்னணியில் உள்ள மாநிலத்தில் பாலின சமத்துவம் உள்ளதா?

 


NO SAFE HAVEN FOR WOMEN AT HOME என்றொரு கட்டுரை இன்றை தி இந்து ஞாயிறு ஸ்பெஷலில் வந்திருந்தது. அதில் கண்ட சில புள்ளி விவரங்கள்.


80 விழுக்காட்டினர் மனைவி எதிர்த்து பேசும் போது அடிப்பது நியாயம் தான் என்று எண்ணுகிறார்கள். எதிர்த்து பேசினால் அடிப்பது அல்லது கட்டிலில் குப்புற படுத்துக் கொள்வது என்கிற யுத்தியை பெரும்பான்மையானோர் கடை பிடிக்கிறார்களாம்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப் படும் பெண்கள் 45 விழுக்காடு என்கிற நிலையில் நமது தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து கர்நாடகாவுக்கு அடுத்த நிலையில் உள்ளது.


குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் 80 விழுக்காட்டினர் உதவி கோருவதோ அல்லது அது பற்றி வெளிப்படையாக பேசுவதோ கிடையாதாம்.


 அரசு உயர்நிலைப் பள்ளி சுத்தமல்லியில் 1989 ல் நான் எட்டாம் வகுப்பு படித்தபோது (உடனே கணக்கு போடவேண்டாம் எனது வயது 46 ஹா ஹா…) பத்தாம் வகுப்பில் 35 மாணவர்களும் ஒரே ஒரு மாணவியுமே படித்தார்கள். அந்த ஒரு மாணவி ஆசிரியர் மேசைக்கு அருகே தனியே ஸ்டூலில் அமர்ந்திருப்பார். அதற்கு முந்தைய ஆண்டுகளில் எங்க அக்கா படித்த போது 30 க்கு 10 என்கிற அளவில் பெண்கள் படித்தார்கள்.


 நான் பத்தாம் வகுப்பு படித்தபோது கூட பெண்கள் எண்ணிக்கை பாதி என்கிற அளவினை எட்டவே இல்லை. வயதுக்கு வந்த பெண்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு வயிற்றில் ”நெருப்பைக்” கட்டிக் கொண்டிருக்க பெற்றோர் தயாராக இல்லை. ஒருத்தன் கையில ”புடிச்சி கொடுக்கும்” வரையில் பெற்றோர் மனம் அமைதி கொள்வதில்லை.


 நான் வேலைக்கு வந்த ஆண்டான 2002 ல் இந்த விகிதம் ரிவர்சில் இருந்தது. “ஆகா, பாலின சமத்துவத்தை தாண்டி எங்கேயோ போய்ட்டோம் போல” என்று வியந்து போனேன். பையன்களை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு பெண் பிள்ளைகளை “உங்களை எல்லாம் படிக்க அனுப்புவதே பெரிய விஷயம்“ என்கிற ரீதியில் அரசுப் பள்ளிக்கு பெற்றோர் அனுப்பி உள்ளனர் என்பதை பின்னர் புரிந்து கொண்டேன்.


 எண்ணிக்கையை விடுங்க, பெண் பிள்ளைகள் என்ன தான் சிறப்பாக படிப்பு, பாட இணை செயல் பாடுகள் என அனைத்திலும் சிறப்பாக கோலேச்சினாலும் பெற்றோர் சொல்வது என்னவோ “சாருக்கு ஒரு ஊத்தாப்போம்“ என்பது போல கல்யாண பல்லவியைப் பாடி படிப்புக்கு மங்களம் பாடிவிடுகிறார்கள்.


 நான் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஒரு பத்தாம் வகுப்பு மாணவி மிகச்சிறப்பாக படிப்பார். எழுத்தெல்லாம் கணினியில் தட்டச்சு செய்து பிரிண்ட் செய்தது போல இருக்கும். 460 க்கு மேல் மதிப்பெண் வாங்கினார். அடுத்த கல்வியாண்டில் டிசி வாங்க வந்திருந்தார். ஒரு ஃபைல் ஒன்றை கழுத்துக்கு கீழே அண்டை கொடுத்துக் கொண்டே நின்றார். எதையோ மறைக்க பிரயத்தனம் செய்கிறார் என்பதை உணர்ந்தே ஒரு கியுரியாசிட்டியில் கழுத்தின் பின் புறத்தை கவனித்தால் புத்தம் புதிய மஞ்சள் கயிறு. எனக்கு தூக்கி வாரிப் போட்டுவிட்டது. விசாரித்த போது அந்த பெண்ணை கட்டிக் கொள்ள சொந்தத்தில் ஒரே போட்டா போட்டியாம். வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளை ஒருவர் கிட்டியதும் கட்டி போட்டுவிட்டனர்.

 

 பனிரெண்டாம் வகுப்பு கணிதப் பாடம் எடுத்தபோது ஒரு உயரம் குறைவான மாணவி நித்யா என வைத்துக் கொள்வோம். உயரம் குறைவானவர்கள் தன்னம்பிக்கை கொள்வதற்கு காலை பிரார்த்தனையின் போது ஒரு கதையும் கருத்தும் கூறினேன். அந்த மாணவி ரொம்ப இம்ப்ரஸ் ஆகிவிட்டார். எப்படியாவது தேர்ச்சி அடைந்து பதிலுக்கு என்னை இம்ப்ரஸ் செய்வது என்கிற உத்வேகத்தோடு படிக்கத் துவங்கினார். கற்று வைத்திருந்த மொத்த வித்தைகளையும் மொத்தமாக இறக்கி வைத்து அவரை 71 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வைத்தேன். “ஸ்ஸ்…அப்பாடா, அந்த மாணவியை கல்லூரிக்கு அனுப்பியாச்சு“ என நினைத்து காலரை தூக்கி விட்டுக் கொண்டேன். ஆனால் அதற்கடுத்த வருடத்திலேயே அரியலூர் பேருந்து நிலையத்தில் “சார், சார்… “ என அழைத்துக் கொண்டே வேகமாக புடவை உடுத்திய ஒரு பெண் வந்தார். யாரேனும் உட்கோட்டை கால மாணவியாக இருக்கும் என பார்த்தால், சென்ற ஆண்டு படித்த நித்யா. நிறைமாத கர்ப்பிணியாக நின்று கொண்டு இருந்தார். பதட்டத்தோடு ஓடி வந்ததற்காக கடிந்து கொண்டு நலம் விசாரித்தேன். ஆனால் மனதில் ஒரே ஏமாற்றம். நாமொன்று நினைத்தால் பெற்றோர் ஒன்று நினைத்து விடுகிறார்கள்.


 மற்றொரு முறை (காலக்கோடு வேண்டாம்) ஒரு டிஜிட்டல் பேனரில் திருமண விளம்பரம். பெண் மாப்பிள்ளை படத்தோடு பேருந்து செல்லும் சாலையோரம் வைத்திருந்தார்கள். பெண்ணை பார்த்தால் முந்தைய ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவி. சட்டப்படி குற்றம் என்பது கூட உரைக்காமல் விளம்பரம் வைத்து கொண்டாடுகிறார்களே என தலையில் அடித்துக் கொண்டேன்.


 அந்தப் பெண்ணுக்கு பெற்றோர் இல்லை. மாமா வீட்டில் தங்கிப் பயில்கிறார். நன்றாக படிக்கும் சுட்டியான பிள்ளை. ஒன்பதாம் வகுப்பில் படித்தபோதே “நல்ல“ மாப்பிள்ளை என்று கூறி திருமண ஏற்பாட்டினை முன்னெடுத்துள்ளார்கள். ஆசிரியர்கள் கேள்விப் பட்டு அந்த பெண்ணை அழைத்துப் பேசி பாதுகாவலர்களிடமும் பேசி தடுத்து விட்டார்கள் என்று 

கேள்விப் பட்டு மகிழ்ச்சியடைந்தேன்.


 கொரானா பேரிடர் காலம் கல்வியை பல கோணங்களில் வெகுவாக பாதிப்படையச் செய்துள்ளது. வசதி குறைவான பெற்றோரது குழந்தைகள் குழந்தை தொழிலாளராக சென்றிருக்கிறார்கள். வேறு சில குழந்தைகள் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி உள்ளனர்.


 எங்கள் பள்ளி மாணவி ஒருவரது வங்கிக் கணக்கு எண் கிடைக்காமல் பெற்றோரை தொடர்பு கொள்ள முயன்று கொண்டே இருந்தோம். அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்றபோது நேரில் சென்று விசாரித்த போது தான் தெரிந்தது, அந்த சிறுமி திருப்பூருக்கு ப்ரீ பெய்டு குழந்தை தொழிலாளராக அனுப்பப் பட்டுள்ளார். அந்த சிறுமியின் அம்மா ஒற்றை பெற்றோர். ஒரு மாதம் முன்பு ரெண்டுல ஒண்ணு பாத்துடுவோம் என்கிற ரீதியில் வீட்டுக்கு ஆசிரியர் சென்றிருந்தார். அந்தச் சிறுமி சக்கையாக பிழியப்பட்டு நாராக வந்து சேர்ந்திருந்தார். அந்த சிறுமிக்கும் பெற்றோருக்கும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொல்லி இன்னும் ஒரு மாதமே பொதுத் தேர்வு இருக்கும் நிலையில் தேர்ச்சி விழுக்காடு பற்றியெல்லாம் கவலைப்படாமல் பள்ளியில் சேர்த்துக் கொண்டோம். ரிசல்ட்டாவது ஒண்ணாவது “படிப்பு முக்கியம் பிகிலு” என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.


 என்னதான் நாம் பெரியார் மண் சமூக நீதி முன்னோடி என்று பீற்றிக் கொண்டாலும், பாலின சமத்துவத்தின் உண்மையான அர்த்தத்தை இன்னும் சாமானிய மக்களுக்கு உணர்த்தவே இல்லை என்பது தான் கசப்பான உண்மை.


 என்னதான் நாம் சமத்துவம் பேசிக்கொண்டாலும் 

பெண்களின் உரிமைகளை மதிக்கும் விஷயத்தில் ஒரு ஆணியையும் ப்ளக் பண்ண தயாராக இல்லை. தி கிரேட் இண்டியன் கிச்சன் என்ற மலையாளப் படத்தில் உள்ளது போல ஒட்டு மொத்த குடும்ப பொறுப்புகளையும் பெண்கள் தலையில் சுமத்திவிட்டு ஹாயாக கை வீசிக் கொண்டு நடந்து பழகிய நாம் இப்போது அந்த பொறுப்புகளை ஏற்பது என்றால் கசக்கத்தானே செய்யும். 


 அப்படியே யாராவது எதிர் கேள்வி கேட்டு பொங்கல் வைத்தால் கலாச்சாரம் கடவுள் நம்பிக்கை என்றெல்லாம் பயமுறுத்தி விடுகிறோம்.


 குடும்ப வன்முறை காரணமாக என்னதான் தினசரி வாழ்க்கை பெண்களுக்கு சிரமமாகிப் போனாலும் “கல்லானாலும் கணவன் புள்ளானாலும் புருசன்” என்று கூறி சகித்துக் கொள்ள வேண்டும் என்றே பெண் வீட்டார் நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை கணவன் வீட்டில் தினசரி ரத்தம் சிந்தி அவதி பட்டாலும் “வாழாவெட்டி“ என்கிற பெயர் குடும்ப அவமானம்.


 பெண்பிள்ளைகளை படிக்க வைக்கிறோம், வேலைக்கு அனுப்புகிறோம் அவ்வளவு தான் மற்றபடி திருமணமாகி வேலைக்குச் செல்லும் பெண்பிள்ளைகளின் சிரமங்களை உணர்வதோ பகிர்வதோ கிடையாது. நீ எங்க வேணா போ, ஆனா சோறு ஆக்கி வச்சிட்டு போ, குழந்தை பராமரிப்பு முழுக்க முழுக்க உன்னுடைய கடமை மட்டுமே. இதில் ஏதாவது சுருதி பேதம் ஏற்பட்டால் திருமண உறவில் விரிசல் விழுகிறது.


 திருமணத்திற்கு வெளியேயான உறவு என்பதை ஆண்களுடையது என்றால் சகஜமாக எடுத்துக் கொள்ளும் சமூகம் பெண்களுடையது என்றால் பொங்கிவிடுகிறார்கள். 


 தனிமனித ஒழுக்கம் என்பது இருபாலருக்கும் பொதுவானது தானே? ஆண்கள் மது அருந்தும் புகை பிடிக்கும் படங்களை ஆண்மையின் அடையாளம் என பீற்றிக் கொண்டு அவர்களே பகிர்ந்து மகிழுகிறார்கள். ஆனால் பெண்கள் செய்வது என்றால் ஓவர் நைட்டில் வைரல் ஆகிவிடுகிறது. “காலம் கெட்டுடுத்து கலி முத்திடுத்து“ என்கிற ஓலமிடுகிறார்கள்.


 நமது குடும்பங்களிலேயே குடும்ப அமைப்பு நடைமுறைகள் போன்றவற்றை நாம் கற்றுக் கொள்கிறோம். அப்பா என்றால் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும் அம்மா என்றால் சமையல், குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டு பராமரிப்பு. இதையே அடுத்த தலைமுறை மகன் மற்றும் மகள் கற்றுக் கொள்கிறார்கள். பெண்கள் வேலைக்குச் செல்லும் வீடுகளில் ஆண்கள் சமையல் வேலை வீட்டுப் பராமரிப்பு என்று இருந்தால் அது கேலிக்குறியது ஆகிவிடுகிறது. “நான் ஒரு ஆம்பள இவ்வளவு செய்யறதே பெரிது“ என்கிற மனப்பான்மையோடோ அல்லது பொருமலோடோ தான் பெரும்பாலான ஆண்கள் வேலையை செய்கிறார்கள்.


 சமூக பொறுப்புகளில் பெண்களுக்கான இடங்களை இட ஒதுக்கீடு மூலம் வழங்கினாலும் உண்மையில் அவர்களில் 90 விழுக்காட்டினர் ரப்பர் ஸ்டாம்பாகத்தான் உள்ளார்கள். 

 

ஆக, பாலின அசமத்துவத்தை குடும்பங்களில் இருந்து வாழையடி வாழை பழக்க வழக்கம் மூலமாக நம்மை அறியாமலேயே கற்றுக் கொள்கிறோம். பாலின சமத்துவம் காண்பது என்பது நமது பள்ளிக் கலை திட்டத்திலேயே கூட இருப்பதாக தெரியவில்லை. 


 ஆனால் பள்ளிகளில் துவக்க நிலை வகுப்புகளில் இருந்தே பாலின சமத்துவத்திற்கு வேட்டு வைக்கும் வேலைகளை செய்கிறோம். “இந்தாம்மா, அந்த வௌக்குமாத்த எடுத்து கூட்டிவிடு, டேய் அந்த பெஞ்சை தூக்கி போடுடா” குறைந்த பட்சம் இந்த டயலாக்கையாவது மாற்றிப் பேசி வேலைகள் அனைவருக்கும் பொதுவானது. இங்கே ஆண்களுக்கான வேலை பெண்களுக்கான வேலை என்று எதுவும் இல்லை என்பதை உணர்த்த தலைபடுவோம்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...