Saturday, April 15, 2023

மணல்கடிகாரம் முதல் அணுகடிகாரம் வரை (ரஃபேல் கிடையாது)

 இந்த வாட்ச் கதையை பற்றி கொஞ்சம் விலாவாரியாக பாக்கலாமா?



இந்த நேரத்தை கண்டு பிடித்தாலும் பிடித்தார்கள் யாரைக் கேட்டாலும் நேரம் இல்லை நேரம் இல்லைன்னு ஒரே புலம்பல் தான். மணிக்கணக்கில் படங்களையும் இன்ஸ்டாவில் ரீல்களையும் பார்த்தாலும் “புக் படிக்கலாம் எங்க சார் நேரம் இருக்கு?”, ”காலையில வாக் போறத்துக்கலாம் நேரம் இல்லை சார்”, யோகா, எக்சைஸ்லாம் பண்ணலாம் தான் ஆனா எங்க சார் டைம் இருக்குன்னு அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

நேரம் எல்லோருக்கும் பொதுவானது தான், ஆனால் அதனை வெற்றிகரமாக கையாளுவது எல்லோருக்கும் கை வரப் பெறுவது இல்லை.


பண்டைய காலங்களில் வானில் உள்ள நட்சத்திரங்களை அடையாளம் கண்டு தான் வருடக் கணக்கில் காலங்களை கணக்கிட்டனர், பிறகு நிலா, சூரியனின் இருப்பைக் கொண்டு மாதங்கள் வரை கணக்கிட்டனர் பிறகு நிழல் கடிகாரம் வந்த போது மணிக்கணக்கு என நெருங்கி வந்தது. பிறகு பெண்டுலம் கடிகாரம் வந்த போது நிமிடங்கள் வினாடிகள் என்று முன்னேறினோம்.


 தற்போது அணு கடிகாரம் வந்த பிறகு ஒரு வினாடியைக் கூட லட்சக் கணக்கில் கூறு போட முடிகிறது.


ஆம், இந்த கட்டுரையின் நோக்கம் “காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்“ தான். ஹாக்கிங் அளவுக்கு எல்லாம் டீப்பா போகல, ஆனால் காலக்கிரமமாக காலக் கணக்கீடு பற்றிய ஒரு மீள் பார்வை தான் இது.


முதன் முதலில் சன் டயல் என்கிற சூரிய கடிகாரத்தை எகிப்தியர்கள் கண்டறிந்து பிறகு அது கிரேக்கத்திற்கும் ரோமிற்கும் பயணித்துள்ளது.


அடுத்ததாக மணல் கடிகாரத்தை எட்டாம் நூற்றாண்டில் ஃபிரென்ச் துறவி லியுட்பிராங்க் என்பவர் கண்டறிந்துள்ளார். 


மணல் கடிகாரம் போன்ற தொழில்நுட்பத்தில் மணலுக்கு பதிலாக நீரை நிரப்பி நீர் திவலைகள் விழும் கால அளவைக் கொண்டு நீர்க் கடிகாரம் கண்டறியப் பட்டுள்ளது. 


ஆனால் இது மிகப் பழமையானது. இது கிமு 16 ம் நூற்றாண்டிலேயே கண்டறியப் பட்டுள்ளது.


நான் எங்கள் ஊரான சுத்தமல்லியில் துவக்கப் பள்ளியில் படித்தபோது எங்கள் பள்ளியில் சாவி கொடுத்து ஓடக்கூடிய ஒரு பெண்டுலம் கடிகாரம் இருந்தது. அது நின்று விட்ட போதெல்லாம் தலைமையாசிரியரோ அல்லது வேறு யாராவது ஒருவரோ அதற்கு சாவி கொடுப்பார்கள். அந்த சாவி கொடுக்கும் சத்தமே அவ்வளவு இனிமையாக இருக்கும். சாவி கொடுத்த பிறகு அந்த பெண்டுலத்தை லைட்டாக ஒரு பக்கம் இழுத்து விடுவார்கள் அதற்கு பிறகு அது இரண்டு பக்கமும் அசைந்தாடும்.


 கடிகாரத்தை பீட்டர் ஹென்லைன் என்கிற ஜெர்மானியர்   1510 ல் செய்து கொடுத்துள்ளார். கடிகாரம் தயார் செய்யும் நுட்பம் இவரிடம் இருந்து தான் தொடங்கியுள்ளது எனலாம். 


நவீன கடிகாரத்தின் தந்தை என்றும் ஹென்லைன் அழைக்கப் படுகிறார்.


இந்த கதை தெரியுமா, ஒரு பூட்டு செய்பவர் தான் கடிகாரம் செய்ய பயன்படும் மிக முக்கியமான பாகமான சுருள்வில்லை கண்டறிந்துள்ளார். ஆமாம், 1490 பீட்டர் ஹேல் என்கிற ஜெர்மானியர் தான் அது. 


அது என்ன சுருள்வில், அது ஒன்றும் இல்லை சாவி கொடுக்கும் கடிகாரங்களில் இந்த சுருள்வில்லை முருக்கேற்றி வைப்போம், அது மெல்ல மெல்ல ரிலீஸ்ஆகி பல் சக்கரங்களை சுழற்றி கடிகாரத்தை ஓட வைக்கும். ஆக நம்ம “முறுக்கு” சக்தி இயந்திர சக்தியாக மாறுகிறது.


கை கடிகாரங்களில் எப்போதும் புகழ்பெற்று விளங்குவது சுவிஸ் நாட்டு கை கடிகாரங்கள் தான். ரோலக்ஸ் போன்ற வாட்சுகளின் விலைகள் லட்சங்களைத் தாண்டுகிறது என்பதை கேட்டபோது வாயடைத்துப் போனேன்.


சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பேடக் ஃபிலிப் என்பவர் தான் 1868 ல் முதல் கை கடிகாரத்தை தயார் செய்து ஹங்கேரியைச் சேர்ந்த பணக்கார கோமாட்டி கோஸ்கோவிக்ஸ் (Countess Koscowics of Hungary) என்பவருக்கு வழங்கினார். 


அது தான் கையில் அணியப் பட்ட முதல் கடிகாரம். அந்த கோமாட்டியார் அதையும்  ஒரு ஆபரணமாக கருதி தான் கையில் அணிந்தாராம்.


துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் டவுசர் பாண்டி உபயத்தால் ஐஸ் அவுஸ் மணிக்கூண்டு நமக்கு தெரியும். ஆனால் முதன் முதலில் மணிக்கூண்டு என்ற ஒன்றை நிறுவி ஊருக்கெல்லாம் நேரம் காட்டியவர்கள் இங்கிலாந்து காரர்கள் தான். ஆமாம் ஹாம்ப்டன் கோர்ட்டில் 1541 ல் தான் இது முதலில் நிறுவப்பட்டதாம்.


ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேனே 1577 வரைக்கும் கடிகாரம் என்றால் மணியைத்தான் காமிக்கும். நிமிட முள்ளோ, வினாடி முள்ளோ இல்லாததால் மணி காண்பிக்கும் கை மட்டும் செறுப்பு அணியாமல் ஹாயாக சுற்றி வந்து கொண்டிருந்தது.


1577 ல் ஜோஸ்ட் புர்கி என்பவர் தான் நிமிட முள்ளை கண்டறிந்துள்ளார். ஆனாலும் கூட பதினாறாம் நூற்றாண்டில் கடிகாரங்கள் அவ்வளவு துல்லியமாக நேரத்தை காட்டவில்லையாம்.


1581 லேயே இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ பெண்டுலத்தின் பண்புகள் குறித்து ஆய்வு செய்து முடிவுகளை கூறியிருந்தார். ஆனாலும் கடிகாரத்தில் பெண்டுலத்தை பயன்படுத்துவது 1657 ல் தான் டச்சு நாட்டு இயற்பியலாளர் கிரிஸ்டியான் ஹியுஜன் அவர்களால் சாத்தியமாகி உள்ளது.


1840 ல் தான் மின்சாரத்தில் இயங்கும் கடிகாரம் அலெக்சாண்டர் பெயின் என்பவரால் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.


பூமி தன்னைத் தானே சுற்றி வருவதால் காலை மாலை என நேரங்கள் மாறுகின்றன என்பது தெரியும். உலகம் முழுவதுமாக ஒரே நேரம் இருக்க இயலாது அல்லவா. 


 டைம் சோன் என்னும் நாடு வாரியான நேர பகுதிகளை புவிமேல் வரையப்பட்ட கற்பனைக் கோடுகளை கொண்டு வரையறுக்கும் முறை 1880 முதல் 1884 வரை விஸ்தரிக்கப் பட்டது. அப்போது தான் கிரீன்விச் என்பதை புவி மைய நேரக்கோடு என்று வரையறை செய்தார்கள். ரஷியா நல்ல விஸ்தாரமான அகலமான நாடு என்பதால் ஒன்பது மெரிடியன்கள் அங்கே உண்டு. நமக்கான டைம் மெரிடியன் கொல்கத்தா வழியாக செல்கிறது.


1900 ல் தான் கடிகாரங்களும் வாட்ச் களும் ஏராளமாக தயார் செய்யப் பட்டு வெகு மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளது.


இந்த டிஜிட்டல் வாட்ச் கதை தெரியுமா? 1972 ல் சுவிட்சர்லாந்து நாட்டின் பாரம்பரியமான வாட்ச் கம்பெனியான ஹாமில்டன் கம்பெனி (1972 ல் அது அமெரிக்க கம்பெனியாகிவிட்டது) ”பல்சார் டைம் கம்ப்யுட்டர்” என்கிற டிஜிட்டல் வாட்சை அறிமுகப் படுத்தியது. ஒரு காரின் விலையை விட அதன் விலை அதிகமாக இருந்துள்ளது. 2100 டாலர் விலை.

ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஜப்பான் காரன் கையில் கிடைத்தவுடன் இந்த டிஜிட்டல் வாட்ச் என்ன கதிக்கு ஆளானது தெரியுமா? நான் கடைசியாக 90 களில் வாங்கிய டிஜிட்டல் வாட்ச் விலை ஐம்பது ரூபாய் மட்டுமே. 


இப்போ ஸ்மார்ட் வாட்ச் என்று கையடக்க கணினியையே மணிக்கட்டில் அணிந்தபடி செல்கிறோம். 


அணுக்கருவில் இருந்து வரும் ரேடியோ அலைகளின் அதிர்வெண்களை மையப்படுத்தி மிக மிக துல்லியமான கடிகாரங்களை உருவாக்கலாம் என்று இசிடர் ஐசக் ரபி என்கிற இஸ்ரேலில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி அனுமானித்தார். 


அவரது அனுமானத்தை “Cosmic Pendulum for Clock Planned“ என்கிற தலைப்பில் கட்டுரையாக ஒரு பத்திரிக்கையாளர் 1945 ல் வெளியிட்டுள்ளார்.


1949 ல் தான் முதலாவது அணுகடிகாரம் அமெரிக்காவில் உள்ள National Institute of Standards and Technology (NITS) ஆல் உருவாக்கப் படுகிறது.


1967 ல் நடைபெற்ற எடைகளும் அளவுகளும் என்கிற 13 வது பொது மாநாட்டில் ஒரு வினாடி நேரம் என்பதை “சீசியம் -133 என்கிற ஐசோட்டோப் இரு ஆற்றல் மட்டங்களுக்கு இடையே 9192631770 (தொள்ளாயிரத்து பத்தொன்பது கோடியே இருபத்தி ஆறு லட்சத்து முப்பத்தி ஓராயிரத்து எழுநூற்று எழுபது) சுற்று கதிர்வீச்சை வெளியிட ஆகும் நேரம் என்று வரையறுத்தது. 


ஆக, ஒரு வினாடியை கிட்டதட்ட ஆயிரம் கோடியாக பிரிக்க இயலுகின்ற துல்லியம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


கொஞ்சம் விளக்கமாக…

நம்ம தாத்தா காலத்து கடிகாரத்தில் பெண்டுலம் ஒரு விநாடிக்கு ஒரு ஆட்டம் ஆடும். ஆனால் அணுக்களோ ஒரு விநாடி நேரத்தில் பலநூறு கோடி முறை ஆடுகின்றன . 


விஷயம் என்ன ன்னா அந்த ஆட்டம் நிலையானது. வெவ்வேறு கால இடைவெளியை குறுக்குவெட்டில் எடுத்து சோதித்தாலும் ஒரே எண்ணிக்கையிலான முறை ஆடித் தீர்த்திருக்கின்றன.


அது செயல்படும் விவரத்தை இந்த அளவில் புரிந்து கொள்வது நல்லது. இன்னும் டீப்பாக சென்றால் பயந்து போய் வாசிப்பை பாதியில் கைவிட வாய்ப்புள்ளது.


அணுகடிகாரத்தின் துல்லியத்தன்மை எவ்வளவு தெரியுமா? பத்து கோடி ஆண்டுகள் கழிந்தால் ஒரு விநாடி குறையுமாம். 


அணுகடிகாரம் மிக துல்லியமாக இருப்பதால் விண்வெளி ஆய்வுகள், ஜிபிஎஸ் ஏற்பிகள், மற்றும் பல இயற்பியல் வேதியியல் ஆய்வுகளில் பயன்படுத்தப் படுகின்றன.


பின்குறிப்பு: தலைப்பை பார்த்து நான் ஏதோ ஒரு விசயத்தை சொல்லப் போறேன் என்று நீங்க நினைத்திருந்தால் “சாரி பாஸ் அந்த படத்தை ஏற்கனவே சோசியல் மீடியாவில் ரீல் தேய தேய ஓட்டிக் கொண்டு இருக்காங்க, நமக்கேன் வம்பு”

No comments:

Post a Comment

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...