Tuesday, August 8, 2023

நான் முதல்வன்" சாதித்ததும் சாதிக்கப்போவதும் என்ன?

 


இப்பொழுது பள்ளிக்கல்வித்துறை அரங்கேற்றி வரும் பல திட்டங்கள் இந்த மாதிரி தான் எல்லோரையும் பொறாமை கொள்ள செய்கிறது அடடா இந்த சமயத்தில் நாம படிச்சு இருந்திருக்கலாமே என்று தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை


" சார் ஒரு அவசர மெயில் வந்துள்ளது"

என்னவாம்

" துணைத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பை தகுதியாக கொண்ட  ஐ டி ஐ  பாடப் பிரிவுகளில் கூடுதல் இடம் எதுவும் தேவையா? அவ்வாறு தேவை எனில் எண்ணிக்கையை குறிப்பிட சொல்லியிருந்தார்கள்"


பசங்கள இன்னும் குண்டு கட்டா தூக்கி கொண்டு போய் தான் காலேஜ்ல சேர்க்கல கிட்டத்தட்ட அந்த அளவுக்கு எல்லா வேலையும் செஞ்சாச்சு.


சென்ற ஆண்டில் நான் முதல்வன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது அப்போது பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியிலோ அல்லது பாலிடெக்னிக்கில் சேராத மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை வரவழைத்து மேற்படிப்பு செல்வதற்கு தேவையான ஊக்கமூட்டி கல்லூரியில் சேர்த்து விட்டார்கள்.


 தற்போது பள்ளி அளவில் சேகரிக்கப்படும் தகவல்கள் என்பது மிகப் பெரிய ஒரு பெருங்கடல் போல ஏராளமான தகவல்களை உள்ளடக்கி இருக்கிறது. அதிலிருந்து யார் யார் எந்த விதமான சமூகப் பொருளாதார சூழலில் இருந்து வருகிறார்கள் அவர்கள் தேர்ச்சி பெற்றார்களா? கல்லூரியில் சேர்ந்தார்களா என்பதை எல்லாம் உட்கார்ந்து இருக்கும் இடத்திலிருந்து தனியாக பிரித்து எடுத்து விட முடிகிறது.


 சென்ற ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வாக்கில்  மாவட்ட வாரியாக கல்லூரியில் சேராத மாணவர்களை பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்து அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அமர வைத்து கல்லூரி சேராததற்கான காரணத்தையும் அவர்களுக்கான பொருளாதார சிக்கலையும் ஆய்வு செய்து எந்த சூழலிலும் அவர்கள் படிப்பை தொடர ஆதரவை நல்கினார்கள்.


இந்த வருடம் என்ன செய்கிறார்கள் பரிச்சை சமயத்தில் ஏராளமான மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என்கிற ஒரு பெரிய பூதாகரமான பிரச்சனை வெடித்தது.


 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எந்த படிப்பில் சேர்ந்துள்ளார்கள் என்பதை பள்ளியின் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய இருந்தது.


 மேலும் தேர்ச்சி பெறாத அல்லது தேர்வு எழுதாத மாணவர்களை அடையாளம் கண்டு பள்ளி மேலாண்மை குழு மூலமாக பள்ளிக்கு வரவழைத்து அவர்களை துணை தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டது.


 அவ்வாறு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்களா? தோல்வியுற்றார்களா என்பதை கண்காணித்து தேர்ச்சி பெற்றிருந்தால் அதற்கேற்ப மேற்படிப்பு அல்லது தோல்வியேற்று இருந்தால் அந்த தகுதிக்கு உரிய ஐடிஐ சார்ந்த தொழில்திறன் படிப்புகள் சேர ஊக்குவிக்கப்பட்டனர்.


 ஆக எந்த ஒரு மாணவனும் தேர்ச்சி அடைந்தானோ இல்லையோ வீட்டில் சும்மா அமர்ந்திருக்க அரசு அனுமதிக்கவில்லை.

. அவர்கள் ஏதாவது ஒரு வகையில் படித்தோ அல்லது தொழிலோ கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது "Idle mind devils workshop" என்பார்கள் அல்லவா தற்போது டெவில்ஸ் ஒர்க் ஷாப்பை இழுத்து மூடி சீல் வைத்தாயிற்று.


தொலைநோக்கு அடிப்படையில் இந்த திட்டத்தை பார்த்தோமானால் எதிர்காலத்தில் இந்த காலகட்டத்தில் படித்த மாணவர் எவரும் சும்மா ஊர் சுற்றி வருவதோ அல்லது பிரச்சனைகளை இழுத்துக் கொண்டு வருவதோ என்று இல்லாமல் தங்களால் இயன்ற அளவுக்கு குடும்பத்துக்கு பொருளாதார அனுகூலம் செய்யும் அளவுக்கு அவர்களை சொந்த காலில் நிற்க வைத்துள்ளோம்.


அது மட்டுமா சென்ற ஆண்டு நீட் ஜெஇஇ உள்ளிட்ட பல தேர்வுகளுக்கு மாணவர்களை விண்ணப்பிக்க ஆசிரியர்கள் ஊக்கமூட்டியதோடு அல்லாமல் அவர்களுக்கு அரசு சார்பில் நிதியளித்து  பள்ளி மூலமாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தார்கள்.


நான் முதல்வன் திட்டம் என்கிற திட்டத்தின் மூலம்தான் மேற்காணும் அனைத்து செயல்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.


 இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைத்தது போல ஒரு அருமையான திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அதாவது UPSC தேர்வு எழுதும் ஆர்வமுள்ள மீத்திறம் வாய்ந்த கிராமப்புற ஏழை  மாணவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இருப்பதில்லை.


 அதுபோன்ற மாணவர்கள் மாதம் 7500 உதவித் தொகையோடு பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பினை வழங்குகிறது இந்த திட்டம். உள்ளபடியே எனக்கு நான் படித்த போதெல்லாம் இந்த மாதிரி திட்டம் இல்லையே என்று பொறாமை கொள்ள வைத்தது இந்த திட்டம்.


ஆக அரசு தனது கட்டமைப்பை முழுவதுமாக பயன்படுத்தி வாய்ப்புகளை பரவலாக்கி அனைவருக்கும் வழங்குவதோடு அல்லாமல் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளிலும் முன் நின்று உதவி செய்து வருகிறது.


மேற்படிப்பு மற்றும் வேலை வழிகாட்டி ஆசிரியர் என்று அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தோறும் பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர்.


இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்கிற அளவுக்கு கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது


குறிப்பு:  நான் முதல்வன் என்கிற பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்கிற அளவுக்கு ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் கோடை விடுமுறை முழுவதும் அழுத்தத்தை கொடுத்தது இந்த திட்டம்.


என்றாலும் கூட அதனால் விளைகின்ற நன்மையை கருத்தில் கொண்டு  பார்த்தால் பெரிய அளவுக்கு மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் ஆறுதலாகவும் உள்ளது.

Jayaraj Muthuvel

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...