Wednesday, November 8, 2017

லால்குடி டேஸ்-14 மற்றுமொரு பேருந்து பயணம்

பதினோறாம் வகுப்புக்கான கல்வி உதவித் தொகை ரூபாய் தொள்ளாயிரத்து சொச்சம் வழங்கினார்கள்.
அப்போதெல்லாம் செக்கோ அல்லது அக்கவுண்டில் போடுவதோ கிடையாது. மொத்த மாணவர்களின் உதவித் தொகையையும் என்கேஷ் பண்ணி அதற்கென்று உள்ள இன்சார்ஜ் ஆசிரியர் வழங்குவார்.
எனது நண்பன் கெய்சரின் தந்தையான நெசவு ஆசிரியர்தான் வழங்குவார்.
வெள்ளிக் கிழமை அன்று மதியம் தொகை வழங்கப் பட்டது. தொகையை வாங்கியவுடன் பதட்டமாகிவிட்டேன். அப்போது அது பெருந்தொகை. என்னைப் பொருத்தவரை அதெல்லாம் செலவே செய்ய இயலாத தொகை.
எனவே அதனை பத்திரமாக அப்பாவிடம் சேர்ப்பித்து விட வேண்டும் என்று அன்று மதியமே ஊருக்கு செல்ல முடிவெடுத்தேன். விடுதி மாணவர்களில் ஸ்காலர்ஷிப் வாங்கியவர்களை ஊருக்கு செல்லும் படி ஆசிரியர்களே பணித்தார்கள்.
இன்றைக்கு எந்த பஸ்ல போகலாம்?’
ஆனந்த கிருஷ்ணன்
இந்த பஸ் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் பேருந்து என்று மாணவர்கள் கூறுவார்கள். அரியலூருக்கு ஒன்று பொய்யூர் வழியே ஜெயங்கொண்டத்திற்கு ஒன்று என இரண்டு பேருந்துகள் ஓடின. அந்த ஆனந்த கிருஷ்ணன் பேருந்து தான் இப்போது ஓடிக்கொண்டு இருக்கும் நடேசன். வேகத்திற்கும் நல்ல பாடல்களுக்கும் பெயர் போன பேருந்து.
மதியம் 3.30க்கு நேரம். எனவே அந்த பேருந்தை பிடிப்பது என்று திட்டமிட்டு கிளம்பினேன்.
ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். கையில் 10 ரூபாய் இருக்கும் போதே 8 ரூபாயை பேருந்துக்கு வைத்துக் கொண்டு 2ரூபாய்க்கு பக்கோடா சாப்பிடுவேன். இப்போ கை நிறைய பணம் வைத்திருக்கும் போது சாப்பிடாமல் இருப்பேனா?’
நல்ல சூட்டோடு தட்டில் அப்போது தான் கொட்டினார் எனது பிரியத்திற்குரிய பக்கோடா மாஸ்டர். முதல் ஆளாக நான் தான் வாங்கினேன். பொட்டலத்தை பிரித்து வாயில் போடுவதற்குள் வெள்ளம் அணையை உடைத்துக் கொண்டுவிட்டது. கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டு மறுபடி எடுப்பதற்குள்பாம் பாம்என்று ஆரன் அடித்தபடி உள்ளே வந்து விட்டான் ஆனந்த கிருஷ்ணன்.
அப்படியே சுருட்டி பையில் திணித்துக் கொண்டே பேருந்தை பிடிக்க ஓடினேன். அடித்துப் பிடித்து பேருந்தில் ஏறி முன் வாசல்படியை ஒட்டி இருந்த சீட்டில் ஜன்னலோரம் கிடைத்தது. பேருந்தினுள் இளையராஜாவின் இசை ராஜாங்கம் நடந்து கொண்டு இருந்தது. பக்கத்து சீட்டில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார்.
பேருந்து எடுத்த போது ஒருவர் ஓட்டமாய் வந்து பேருந்தில் தொங்கியபடி ஓடி வந்து ஒரே ஜம்பில் தொத்திக் கொண்டார். எடுத்து வந்த பையை சரியாக நடைபாதையில் வேலி கட்டியது போல குறுக்கே வைத்துக் கொண்டார். படிக்கட்டை தடுத்திருக்கும் தடுப்பின் மீது எங்களுக்கு நேர் முன்னே அமர்ந்து கொண்டு வந்து கொண்டிருந்த மொத்த காற்றையும் அபகரித்துக் கொண்டார்.
“யோவ் யார்துயா இது பேக் குறுக்கால கெடக்கு?” என்றார் கண்டக்டர்.
முன்னாள் அமர்ந்திருந்தவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
“எவன்டா அது பேக நடுவால வச்சிருக்கிறது?” என கோபக் குன்றின் உச்சிக்கு ஏறினார்.
நான் கண்ஜாடையால் முன்னால் இருந்தவர காண்பித்தேன். ஆள் நல்ல உயரமாக சற்று சிவப்பாக வெள்ளை நிற சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து இருந்தார். எனவே கண்டக்டர் சற்று பவ்வியமாக
“சார் இந்த பேக எடுத்து மேல வச்சிடுறீங்களா?”
“வாட் மேன், என் பேக் எங்க வைக்கறதுன்னு எனக்கு தெரியும்” என்றார். சாராய வாடை பேருந்து எங்கும் வியாபித்து அனைவருக்கும் அவரை யார் என்று அறிமுகப் படுத்தியது.
இப்போ கண்டக்டர் உஷார் ஆகி விட்டார், “என்னய்யா போதையா முதல்ல அந்த எடத்து உட்டு ஏந்திரி கீழே விழுந்து செத்து தொலஞ்சின்னா நாங்க கை கட்டி நிக்கணும் இந்த பேக எடுத்து கிட்டு உள்ளே போ” என்று எரிந்து விழுந்தார்.
“ஏய் கூல் மேன், ஐ ஆம் ஸ்டடி. யூ டோண்ட் ஒர்ரி மேன்”
“என்னய்யா உள்ள போகச் சொன்னா இங்கிலீஷ்ல திட்டுற” என்றபடி கோபத்தை பையின் மீது காட்டலாம் என்று பையை காலால் நெம்பி தள்ளினார்.
பை சிப்பை போடாததால் இறங்கிய பிறகு போடுவதற்கு வைத்திருந்த ஒரு பாட்டிலும் லுங்கி மற்றும் ஒரு பேண்ட் சர்ட்டும் இருந்தது.
“பைய எங்க வேணா தள்ளு, ஐ வில் சிட் ஹியர் ஒன்லி” என்று கூறவும் இதற்கு மேல் இவனிடம் மல்லுகட்டினால் டிக்கட் போட இயலாது என்று தலையில் அடித்துக் கொண்டே சென்று விட்டார்.
எங்களுக்கு முதுகு காட்டிக் கொண்டு வாசற்படியை பார்த்த படி அமர்ந்து கொண்டு வந்தார். அவ்வப் போது ஓரமாக குனிந்து எச்சில் துப்பினார். ஜன்னல் சீட்டில் அமர்ந்த எனக்கோ அவ்வப் போது தலையை இறுக்கமாக பிடித்து கூவத்தில் முக்கி எடுத்தது போல இருந்தது. ’என்னா கப்பு?’
“ஏய் புஜ்ஜிம்மா, அம்முக் குட்டி, செல்லக் குட்டி” என்ற சத்தம் கேட்டது.
முன்னால் நின்று கொண்டு இருந்த நடுத்தர வயது பெண்மணியை ஈவ் டீசிங் செய்கிறாரோ என்று அதிர்ச்சி ஆகி விட்டேன். பார்த்தால் அந்த பெண்மணிக்கு முன்னால் ஒரு பெண்ணின் கையில் இருந்த குழந்தையை பார்த்து இவர் கொஞ்சிக் கொண்டு இருந்தார்.
இவரை பார்த்து அந்தக் குழந்தை முளைக்காத பற்களை காட்டி சிரித்தபடி வந்தது.
இவர் முகபாவத்தில் பல சேஷ்டைகளை செய்து கொண்டே வரவும் அந்த குழந்தை தேம்பித் தேம்பி சிரித்தபடி வந்தது.
“சார் என் சீட்டுல உக்காந்துக்கோங்க” என்று அவரின் முதுகைத் தட்டினேன். நாற்றத்தில் இருந்து தப்பிக்க வேறு வழி தெரியல.
“நோ பிரதர். ஐ யாம் ஸ்டடி நோ பிராப்ளம் அண்ட் தேங்ஸ் ஃபார் யுவர் ஆஃபர்” என்றார்.
’ஆஸ் அயாம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்…’ என்று ஆரம்பித்தாலே இவர் இங்கிலாந்து மகாராணியின் பேரனோ என்று உற்று நோக்கும் காலமாகையால் (அப்போவெல்லாம் கவுதம் மேனன் படங்கள் பண்ண ஆரம்பிக்க வில்லை) எல்லோரும் திரும்பி பார்த்தனர். அவர் என்னை மதித்து ஆங்கிலம் பேசியதில் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
“ஓ.கே சார்” என்று அவருக்கு ஆங்கிலத்தில் பதில் மரியாதை செய்து விட்டு எல்லோரையும் ஒரு முறை கம்பீரமாய் திரும்பிப் பார்த்து விட்டு அமர்ந்தேன்.
ஒரு வழியாக புள்ளம்பாடி தாண்டி விட்டது. புள்ளம்பாடி உள்ளே நுழைந்து விட்டு வந்த கேப்பில் ஒரு பேருந்து முந்தி சென்று விட்டது. டால்மியாவில் மூன்று நிறுத்தங்களிலும் ஏறும் டிக்கெட்டுகள் பறிபோய் விடக் கூடாதே என்ற பரபரப்பில் டிரைவர் ஆக்ஸிலேட்டரை மிதித்தார். வண்டி சீறியபடி சென்றது.
சாலையோரம் இருக்கும் டால்மியா மைன்ஸ் வரைக்குமே நல்ல சாலை என்பதால் டிரைவர் கவலைப் படாமல் வேகத்தை கூட்டியபடி பார்வையை முன்னே செல்லும் பேருந்தின் மீது செலுத்திய படி சென்றார்.
நல்ல சாலையில் ஒரு சுண்ணாம்புக்கல், லாரியில் இருந்து தவறி விழுந்ததாக இருக்கலாம். டிரைவர் வேகத்தில் அதை கவனிக்காமல் ஏற்றி இறக்கினார்.
“ஏ கொலகாரப் பாவி கொன்னுபுட்டியேடா” என்று பெரிய சத்தம். பார்த்தால் எனக்கு முன்னால் அமர்ந்திருந்தவரை காணோம். பேருந்து தரையை தேய்த்தபடி சடன் பிரேக் போட்டு நின்றது.
டயர் கல்லில் ஏறிய அந்தக் கணம் அந்த போதை மனிதர் நிலை தடுமாறி கீழே சரிந்து விடவும் கல்லில் ஏறிய டயர் அவர் மேலும் ஏறி இறங்கி விட்டது.
எல்லோரும் இறங்கி ஓடினோம். அவர் விழுந்த இடம் 200 அடி பின்னே போய் விட்டிருந்தது.
வயிற்றிலும் மார்பிலும் டயர் ஏறி இறங்கி இருந்ததால் முகம் சிதையவில்லை. குடல் சரிந்து விட்டிருந்தது.
நாங்கள் அருகே சென்ற போது கடைசி மூச்சை இழுத்து விட்டாரி. நிலைகுத்திய அந்த கண்களில் ஏக்கம் தவிப்பு துயரம் எல்லாமும் தெரிந்தது. ஒரு குடும்பம் அதன் தலைவனை இழந்து விட்டது.

அப்போது நான் உணர்ந்து கொண்டது “மது போதை கொடிது”. நான் ஒரு டீ டோட்டலராக இருக்க அந்த சம்பவமும் ஒரு காரணம்.

Saturday, November 4, 2017

லால்குடி டேஸ் -13 திருமுருகன் “ஜாக்கிரதை”







லால்குடி பேருந்து நிலையக் கடைகளில் ஒரு கடை 90 களில் பக்கோடாவுக்கு பெயர் போனது. வெங்காயத்தை வட்டவட்டமாய் மெலிதாக அரிந்து அப்படியே கடலை மாவில்  தோய்த்து கொதிக்கும் எண்ணையில் குளிப்பாட்டுவார்கள். அதனை வெந்த பிறகு கரண்டியால் வாரும் போது தங்க வளையல்களாய் ஜொலிக்கும். அதைப் பார்த்த உடனேயே நாவில் ஜலம் ஊற்றெடுக்கும்.
ஊருக்குச் செல்லும் போதெல்லாம் அந்தக் கடைக்குத் தவறாமல் சென்று அட்டெண்டன்ஸ் போட்டு விடுவோம். வெங்காயப் பக்கோடாவின் சுவை அலாதியாக இருக்கும். மென்மையான மொருமொருப்பு நம் காதுக்கே கேட்காது. ஊருக்குப் போவதற்கு பட்ஜெட்போடும் போதெல்லாம் பக்கோடாவுக்கும் சேர்த்து தான் பட்ஜெட் போடுவேன்.
என்னுடன் லால்குடி விடுதியில் பயின்ற ஒன்பதாம் வகுப்பு பையன் சுவாமிநாதன். ஆள் பார்ப்பதற்கு என்னைவிட பெரியவன் போல இருப்பான். பேச்சு கூட சற்று பெரிய மனித தோரணையுடன் இருக்கும். எப்போதும் வேகமாக போகும் பேருந்துகள் பற்றி ஒரு கேட்டலாக் போட்டு வைத்து இருப்பான். மேலும் அந்த பேருந்துகளின் டிரைவர்கள் பேருந்தினை ஓட்டும் லாவகத்தை சிலாகித்து பேசுவான். அப்படி பேசும் போதெல்லாம் வெறும் கையால் பேருந்தை இயக்கியே காண்பித்து விடுவான்.
அண்ணே இந்த வாட்டி உங்களை திருமுருகன் பஸ்ல கூட்டிட்டு போறேன் வந்து பாருங்க. சும்மா நெருப்பு மாரி ஓட்டுவார்ணே
நெருப்பு மாதிரியா, அய்யோ!”
ஆமாண்ணே, டிரைவர் சும்மா ஸ்டைலா இருப்பார்ணே. சட்டை பட்டன் போடாம திறந்து விட்டுருப்பார். முடிலாம் ரஜினி ஸ்டைல்ல இருக்கும். வந்து பாருங்க எப்படி ஓட்டுறார்னுஎன்றான் சுவாமிநாதன். விட்டா அந்த டிரைவர்க்கு ஒரு ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவான் போலிருந்தது.
விட்டா கேக்கவா போறான். திருமுருகன் பேருந்துக்கே போவது என்று தீர்மானம் செய்தோம்.
காலை 11.30க்கு பேருந்து என்று அட்டவணை காண்பித்தது. அவனும் அதையே சொல்லி இருந்தான். நாங்கள் விடுதியில் இருந்து 11.00 மணிக்கெல்லாம் கிளம்பி 11.15க்கு பேருந்து நிலையம் வந்து விட்டோம்.
பேருந்து நிலையத்தில் உள்ளே நுழையும் வலது மூலையில் இருக்கும் பக்கோடா கடை நோக்கி என்கால்கள் தானே திரும்பி விட்டது.
அண்ணே பஸ் வந்துடப் போவுதுண்ணே
டேய் 11.30க்குத் தானே பஸ்என்றபடி ஒரு பொட்டலம் வாங்கி பெஞ்சில் உக்காந்து பிரிக்க ஆரம்பித்து விட்டேன்.
சாமிநாதன் உட்கார மனமின்றி பரபரப்பாக பேருந்தை எதிர் நோக்கி நின்று கொண்டு இருந்தான்.
பொன்னிற வளையல்களாக மின்னிய வெங்காய பக்கோடாவை எடுத்து வாயில் போட்டு அதன் சுவையை கண் மூடி அனுபவித்துக் கொண்டு இருந்தேன். கடலை மாவின் மொறு மொறுப்பு சிறு காரம் சரியான உப்பு வெங்காயத்தின் இனம்புரியா சுவை எல்லாம் சரியான புள்ளியில் சங்கமித்து மாயாஜாலம் செய்து ஒரு அருமையான சுவையை நாவிற்கு நல்கியது.
கையில் இருந்த பக்கோடாப் பொட்டலத்தை யாரோவெடுக்என்று பிடுங்கிக் கொண்டு ஓடியது போல இருந்தது. கண் விழித்துப் பார்த்தால் சாமி நாதன் பொட்டலத்தோடு ஓடிக் கொண்டு இருந்தான்.
அடப்பாவி அவனுக்கும் கொடுத்துட்டு தானே சாப்பிட்டேன் இதென்னடா கூத்து என்று நொந்து கொண்டேன். பக்கோடா பாசத்துல நம்மல மிஞ்சுனவனா இருப்பான் போலிருக்கே.
அண்ணே வாண்ணே பஸ் இங்கே முன்னால நிக்குது
நடந்தது இது தான். நான் கண்மூடி பக்கோடா சுவையில் கிறங்கி இருந்த போது பஸ் உள்ளே நுழைந்து நேராக வலது மூலைக்கு சென்று விட்டது. அதை கவனித்து விட்டு பேருந்து மேல் இருந்த தீரா காதலால் ஏற்பட்டக் குழப்பத்தில் அவனது பையை எடுப்பதற்குப் பதிலாக பக்கோடா பொட்டலத்தை பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டான்.
அவனது பையும் இப்போது என்னிடம்.
பேருந்து கிளம்பி விட்டது. லால்குடிப் பேருந்து நிலையத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். மேம்பாலம் கட்டுவதற்கு முன் உள்ளே நுழையும் வாயிலில் இருந்து ஆரம்பித்து ஒரு வட்டம் அடித்து சுற்றிக் கொண்டு திரும்பவும் அந்த நுழைவாயில் வழியாகத்தான் செல்லும்.
எனவே நான் ஷார்ட் கட்டில் நுழைவு வாயில் நோக்கி ஓடினேன். இரண்டு பையையும் தூக்கிக் கொண்டு ஓடும் பேருந்தில் ஏறுவது கடினம். டிரைவர் என்னை நிறுத்தி ஏற்றிக் கொண்டார்.
பெரும்பாலான தனியார் பேருந்துகளில் டிரைவர் சீட்டுக்கு அருகில் டிரைவரை பார்த்தவண்ணம் ஒரு நீளமான சீட் இருக்கும் அல்லவா அதற்கு அடுத்த சீட் கிடைத்தது.
சாமிநாதன் சொன்னது சரிதான். லால்குடி பெட்ரோல் பங்க் தாண்டியதும் பேருந்துக்கு ரெக்கை முளைத்து விட்டது. சும்மா பறந்து தான் சென்றது. அப்போது சற்று குறுகலான சாலைதான்.
முன்னாடி ஒரு டவுன் பஸ் சென்றுகொண்டு இருந்தது. டிரைவர் ஹாரனை அடித்தார். முன்னாடி பஸ் பிடி கொடுக்காமல் சென்றது.
நம்மாளு கையை மடக்கி துடையில் குத்திக் கொண்டு வந்தான். டிரைவர் சாதாரணமாத்தான் ஓட்டினார் ஆனால் இவனோ பரபரப்பின் உச்சத்தில் இருந்தான்.
டவுன்பஸ்ஸை நெருங்கி வலது புறம் சற்று ஒடித்து ஆக்ஸிலேட்டரை மிதித்து வேகம் கூட்டியபடி ஹாரனை டிரைவர் அடித்தார். அதே வேளை என் பக்கத்தில் சாமிநாதன் சீட்டில் இருந்து மெல்ல எழும்பியபடி கைகளை வட்டமாக சுழற்றிக் கொண்டே டிரைவராக மாறினான்.
முன்னாடி இடம் அளிக்க வாய்ப்பில்லாமல் டவுன் பஸ் டிரைவரின் கோரிக்கையை நிராகரித்தது. சாமிநாதன் நூலறுந்த காற்றாடியாய் பொத்தென சீட்டில் ஏமாற்றத்துடன் அமர்ந்தான்.
“என்னண்ணே ஒரு டவுன் பஸ் உங்களுக்கே சைடு கொடுக்காமல் போறான்?”என்று டிரைவரை உசுப்பேற்றினான்.
“ஏய் சும்மா இருடா!” என்று அவனை அடக்கினேன். டிரைவர் அவனை பார்த்து புன்னகைத்தார்.
கூழையாற்றுப் பாலம் தாண்டி பூவாளூர் திருப்பம் நெருங்கியது. டவுன் பஸ் வேகத்தை குறைத்தது போல் தோன்றியது. சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த எண்ணிய டிரைவர் மறுபடி ஆக்ஸிலேட்டரை ஈவு இரக்கமில்லாமல் மிதித்தபடி வலது புறம் ஒடித்தார். அதே வேளை எதிர் புறத்தில் இருந்து சண்முகம் பேருந்து (இது வேகத்திற்கும் நல்ல பாடல்களுக்கும் பேர் போனது) வேகமாக வந்து கொண்டு இருந்தது.
எனக்கு சப்தநாடியும் அடங்கி விட்டது. பயத்தில் உறைந்து போனேன். நம்மாளு எழுந்து நின்று டிரைவரோடு தோளோடு தோள் நின்று பேருந்து ஓட்டுவதாக எண்ணி காற்றில் கைகளை வட்டமடித்துக் கொண்டு இருந்தான்.
எதிரே வந்த சண்முகம் பஸ் இரண்டு பேருந்துகள் சாலையை அடைத்தபடி வந்ததை பற்றி கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் வேகம் குறைக்காமலே வந்து கொண்டு இருந்தது.
டவுன் பஸ் முன்னால் கொஞ்சம் இடைவெளிதான் இருந்தது மீதி இடத்தை சண்முகம் பஸ் ஆக்கிரமித்து விடும் நோக்கில் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவர் க்ளட்சில் கால்வைத்து அழுத்திக் கொண்டே ஆக்ஸிலேட்டரை நன்றாக மிதித்தார் வேகம் குறைவது போல இருந்தது.
சண்முகம் பஸ் முட்டுவது போலவந்தது. பயத்தில் எனக்கோ ஒன்றுக்கே முட்டுவது போல ஆகிவிட்டது. டவுன் பஸ்க்கும் எதிரே வந்த சண்முகத்திற்கும் இடையே ஒரு பஸ் இடைவெளிதான் இருந்தது. அந்த நேரத்தில் டிரைவர் க்ளட்சை அழுத்திய காலை விடுவித்தபடி முழுவதுமாக இடது புறம் ஒடித்தார். கேரம் போர்டில் துளையில் சென்று விழும் காயின் போல எதிரே இடையில் இருந்த அந்த இடைவெளியில் துல்லியமாக பாய்ந்து சென்று விழுந்தது.
மரணத்தை சமீபத்தில் தரிசித்து விட்டு திரும்பிய நிம்மதியில் நான் சீட்டில் ஆசுவாசமாய் அமர்ந்த அதே வேளை சாமிநாதன் “அண்ணே பார்த்தியாண்ணே டிரைவர் அண்ணன் எப்படி சூப்பரா ஓட்டுறார்ணு”
ஏற்கனவே பிடுங்கிச் சென்றோடிய பக்கோடாவை அப்படியே மடித்து டிரவுசர் பாக்கெட்டில் சொருகிக் கொண்டானே என்கிற கடுப்பில் இருந்த நான் அவனை முறைத்தபடி இனியும் மரணத்தின் வாயிலை எட்டிப் பார்க்க விருப்பமில்லாமல் பின் சீட்டில் மாறி அமர்ந்து கொண்டேன்.

அவன் இறங்க வேண்டிய இடம் மேலப்பழூர் வந்தவுடன் மனமில்லாமல் டிரைவரிடம் சொல்லிக் கொண்டு இறங்கினான். ஜன்னல் வழியே என்னிடம் விடை பெற்றான். நான் அவன் டிரவுசர் பாக்கெட்டில் முடப்பாக இருந்த என் பக்கோடா பொட்டலத்தை வருத்தத்துடன் பார்த்தபடி விடை கொடுத்தேன்.

புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை

புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை - மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த நூலை வெளியிட்ட அன...