லால்குடி
பேருந்து நிலையக் கடைகளில் ஒரு கடை 90 களில் பக்கோடாவுக்கு பெயர் போனது. வெங்காயத்தை வட்டவட்டமாய் மெலிதாக அரிந்து அப்படியே கடலை மாவில் தோய்த்து கொதிக்கும் எண்ணையில் குளிப்பாட்டுவார்கள். அதனை வெந்த பிறகு கரண்டியால் வாரும் போது தங்க வளையல்களாய் ஜொலிக்கும். அதைப் பார்த்த உடனேயே நாவில் ஜலம் ஊற்றெடுக்கும்.
ஊருக்குச்
செல்லும் போதெல்லாம் அந்தக் கடைக்குத் தவறாமல் சென்று அட்டெண்டன்ஸ் போட்டு விடுவோம். வெங்காயப் பக்கோடாவின் சுவை அலாதியாக இருக்கும். மென்மையான மொருமொருப்பு நம் காதுக்கே கேட்காது. ஊருக்குப் போவதற்கு பட்ஜெட்போடும் போதெல்லாம் பக்கோடாவுக்கும் சேர்த்து தான் பட்ஜெட் போடுவேன்.
என்னுடன்
லால்குடி விடுதியில் பயின்ற ஒன்பதாம் வகுப்பு பையன் சுவாமிநாதன். ஆள் பார்ப்பதற்கு என்னைவிட பெரியவன் போல இருப்பான். பேச்சு கூட சற்று பெரிய மனித தோரணையுடன் இருக்கும். எப்போதும் வேகமாக போகும் பேருந்துகள் பற்றி ஒரு கேட்டலாக் போட்டு வைத்து இருப்பான். மேலும் அந்த பேருந்துகளின் டிரைவர்கள் பேருந்தினை ஓட்டும் லாவகத்தை சிலாகித்து பேசுவான். அப்படி பேசும் போதெல்லாம் வெறும் கையால் பேருந்தை இயக்கியே காண்பித்து விடுவான்.
“அண்ணே இந்த வாட்டி உங்களை திருமுருகன் பஸ்ல கூட்டிட்டு போறேன் வந்து பாருங்க. சும்மா நெருப்பு மாரி ஓட்டுவார்ணே“
“நெருப்பு மாதிரியா, அய்யோ!”
“ஆமாண்ணே, டிரைவர் சும்மா ஸ்டைலா இருப்பார்ணே. சட்டை பட்டன் போடாம திறந்து விட்டுருப்பார். முடிலாம் ரஜினி ஸ்டைல்ல இருக்கும். வந்து பாருங்க எப்படி ஓட்டுறார்னு” என்றான் சுவாமிநாதன். விட்டா அந்த டிரைவர்க்கு ஒரு ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவான் போலிருந்தது.
விட்டா
கேக்கவா போறான். திருமுருகன் பேருந்துக்கே போவது என்று தீர்மானம் செய்தோம்.
காலை
11.30க்கு பேருந்து என்று அட்டவணை காண்பித்தது. அவனும் அதையே சொல்லி இருந்தான். நாங்கள் விடுதியில் இருந்து 11.00 மணிக்கெல்லாம் கிளம்பி 11.15க்கு பேருந்து நிலையம் வந்து விட்டோம்.
பேருந்து
நிலையத்தில் உள்ளே நுழையும் வலது மூலையில் இருக்கும் பக்கோடா கடை நோக்கி என்கால்கள் தானே திரும்பி விட்டது.
“அண்ணே பஸ் வந்துடப் போவுதுண்ணே“
“டேய் 11.30க்குத் தானே பஸ்“ என்றபடி ஒரு பொட்டலம் வாங்கி பெஞ்சில் உக்காந்து பிரிக்க ஆரம்பித்து விட்டேன்.
சாமிநாதன்
உட்கார மனமின்றி பரபரப்பாக பேருந்தை எதிர் நோக்கி நின்று கொண்டு இருந்தான்.
பொன்னிற
வளையல்களாக மின்னிய வெங்காய பக்கோடாவை எடுத்து வாயில் போட்டு அதன் சுவையை கண் மூடி அனுபவித்துக் கொண்டு இருந்தேன். கடலை மாவின் மொறு மொறுப்பு சிறு காரம் சரியான உப்பு வெங்காயத்தின் இனம்புரியா சுவை எல்லாம் சரியான புள்ளியில் சங்கமித்து மாயாஜாலம் செய்து ஒரு அருமையான சுவையை நாவிற்கு நல்கியது.
கையில்
இருந்த பக்கோடாப் பொட்டலத்தை யாரோ “வெடுக்“ என்று பிடுங்கிக் கொண்டு ஓடியது போல இருந்தது. கண் விழித்துப் பார்த்தால் சாமி நாதன் பொட்டலத்தோடு ஓடிக் கொண்டு இருந்தான்.
அடப்பாவி
அவனுக்கும் கொடுத்துட்டு தானே சாப்பிட்டேன் இதென்னடா கூத்து என்று நொந்து கொண்டேன். பக்கோடா பாசத்துல நம்மல மிஞ்சுனவனா இருப்பான் போலிருக்கே.
“அண்ணே வாண்ணே பஸ் இங்கே முன்னால நிக்குது”
நடந்தது
இது தான். நான் கண்மூடி பக்கோடா சுவையில் கிறங்கி இருந்த போது பஸ் உள்ளே நுழைந்து நேராக வலது மூலைக்கு சென்று விட்டது. அதை கவனித்து விட்டு பேருந்து மேல் இருந்த தீரா காதலால் ஏற்பட்டக் குழப்பத்தில் அவனது பையை எடுப்பதற்குப் பதிலாக பக்கோடா பொட்டலத்தை பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டான்.
அவனது
பையும் இப்போது என்னிடம்.
பேருந்து
கிளம்பி விட்டது. லால்குடிப் பேருந்து நிலையத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். மேம்பாலம் கட்டுவதற்கு முன் உள்ளே நுழையும் வாயிலில் இருந்து ஆரம்பித்து ஒரு வட்டம் அடித்து சுற்றிக் கொண்டு திரும்பவும் அந்த நுழைவாயில் வழியாகத்தான் செல்லும்.
எனவே
நான் ஷார்ட் கட்டில் நுழைவு வாயில் நோக்கி ஓடினேன். இரண்டு பையையும் தூக்கிக் கொண்டு ஓடும் பேருந்தில் ஏறுவது கடினம். டிரைவர் என்னை நிறுத்தி ஏற்றிக் கொண்டார்.
பெரும்பாலான தனியார்
பேருந்துகளில் டிரைவர் சீட்டுக்கு அருகில் டிரைவரை பார்த்தவண்ணம் ஒரு நீளமான சீட் இருக்கும்
அல்லவா அதற்கு அடுத்த சீட் கிடைத்தது.
சாமிநாதன் சொன்னது
சரிதான். லால்குடி பெட்ரோல் பங்க் தாண்டியதும் பேருந்துக்கு ரெக்கை முளைத்து விட்டது.
சும்மா பறந்து தான் சென்றது. அப்போது சற்று குறுகலான சாலைதான்.
முன்னாடி ஒரு டவுன்
பஸ் சென்றுகொண்டு இருந்தது. டிரைவர் ஹாரனை அடித்தார். முன்னாடி பஸ் பிடி கொடுக்காமல்
சென்றது.
நம்மாளு கையை மடக்கி
துடையில் குத்திக் கொண்டு வந்தான். டிரைவர் சாதாரணமாத்தான் ஓட்டினார் ஆனால் இவனோ பரபரப்பின்
உச்சத்தில் இருந்தான்.
டவுன்பஸ்ஸை நெருங்கி
வலது புறம் சற்று ஒடித்து ஆக்ஸிலேட்டரை மிதித்து வேகம் கூட்டியபடி ஹாரனை டிரைவர் அடித்தார்.
அதே வேளை என் பக்கத்தில் சாமிநாதன் சீட்டில் இருந்து மெல்ல எழும்பியபடி கைகளை வட்டமாக
சுழற்றிக் கொண்டே டிரைவராக மாறினான்.
முன்னாடி இடம்
அளிக்க வாய்ப்பில்லாமல் டவுன் பஸ் டிரைவரின் கோரிக்கையை நிராகரித்தது. சாமிநாதன் நூலறுந்த
காற்றாடியாய் பொத்தென சீட்டில் ஏமாற்றத்துடன் அமர்ந்தான்.
“என்னண்ணே ஒரு
டவுன் பஸ் உங்களுக்கே சைடு கொடுக்காமல் போறான்?”என்று டிரைவரை உசுப்பேற்றினான்.
“ஏய் சும்மா இருடா!”
என்று அவனை அடக்கினேன். டிரைவர் அவனை பார்த்து புன்னகைத்தார்.
கூழையாற்றுப் பாலம்
தாண்டி பூவாளூர் திருப்பம் நெருங்கியது. டவுன் பஸ் வேகத்தை குறைத்தது போல் தோன்றியது.
சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த எண்ணிய டிரைவர் மறுபடி ஆக்ஸிலேட்டரை ஈவு இரக்கமில்லாமல்
மிதித்தபடி வலது புறம் ஒடித்தார். அதே வேளை எதிர் புறத்தில் இருந்து சண்முகம் பேருந்து
(இது வேகத்திற்கும் நல்ல பாடல்களுக்கும் பேர் போனது) வேகமாக வந்து கொண்டு இருந்தது.
எனக்கு சப்தநாடியும்
அடங்கி விட்டது. பயத்தில் உறைந்து போனேன். நம்மாளு எழுந்து நின்று டிரைவரோடு தோளோடு
தோள் நின்று பேருந்து ஓட்டுவதாக எண்ணி காற்றில் கைகளை வட்டமடித்துக் கொண்டு இருந்தான்.
எதிரே வந்த சண்முகம்
பஸ் இரண்டு பேருந்துகள் சாலையை அடைத்தபடி வந்ததை பற்றி கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல்
வேகம் குறைக்காமலே வந்து கொண்டு இருந்தது.
டவுன் பஸ் முன்னால்
கொஞ்சம் இடைவெளிதான் இருந்தது மீதி இடத்தை சண்முகம் பஸ் ஆக்கிரமித்து விடும் நோக்கில்
வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவர் க்ளட்சில் கால்வைத்து அழுத்திக் கொண்டே ஆக்ஸிலேட்டரை
நன்றாக மிதித்தார் வேகம் குறைவது போல இருந்தது.
சண்முகம் பஸ் முட்டுவது
போலவந்தது. பயத்தில் எனக்கோ ஒன்றுக்கே முட்டுவது போல ஆகிவிட்டது. டவுன் பஸ்க்கும் எதிரே
வந்த சண்முகத்திற்கும் இடையே ஒரு பஸ் இடைவெளிதான் இருந்தது. அந்த நேரத்தில் டிரைவர்
க்ளட்சை அழுத்திய காலை விடுவித்தபடி முழுவதுமாக இடது புறம் ஒடித்தார். கேரம் போர்டில்
துளையில் சென்று விழும் காயின் போல எதிரே இடையில் இருந்த அந்த இடைவெளியில் துல்லியமாக
பாய்ந்து சென்று விழுந்தது.
மரணத்தை சமீபத்தில்
தரிசித்து விட்டு திரும்பிய நிம்மதியில் நான் சீட்டில் ஆசுவாசமாய் அமர்ந்த அதே வேளை
சாமிநாதன் “அண்ணே பார்த்தியாண்ணே டிரைவர் அண்ணன் எப்படி சூப்பரா ஓட்டுறார்ணு”
ஏற்கனவே பிடுங்கிச்
சென்றோடிய பக்கோடாவை அப்படியே மடித்து டிரவுசர் பாக்கெட்டில் சொருகிக் கொண்டானே என்கிற
கடுப்பில் இருந்த நான் அவனை முறைத்தபடி இனியும் மரணத்தின் வாயிலை எட்டிப் பார்க்க விருப்பமில்லாமல்
பின் சீட்டில் மாறி அமர்ந்து கொண்டேன்.
அவன் இறங்க வேண்டிய
இடம் மேலப்பழூர் வந்தவுடன் மனமில்லாமல் டிரைவரிடம் சொல்லிக் கொண்டு இறங்கினான். ஜன்னல்
வழியே என்னிடம் விடை பெற்றான். நான் அவன் டிரவுசர் பாக்கெட்டில் முடப்பாக இருந்த என்
பக்கோடா பொட்டலத்தை வருத்தத்துடன் பார்த்தபடி விடை கொடுத்தேன்.
andha pakkodavukku ankiya kalam porkalam
ReplyDeleteவெங்காய பக்கோடாவை வர்ணிச்சது சூப்பர் சார்.
ReplyDeleteபொன்னிற வளையல்களாக மின்னிய வெங்காய பக்கோடா - எனக்கு தெரிஞ்சு வெங்காய பக்கோடாவை (இந்த உலகத்திலேயே) வர்ணிச்ச ஒரே ஆளு நீங்களா தான் இருப்பீங்க Sir. Good enjoyment.
Delete