வீழ்ந்து விடாத
வீரமும் மண்டியிடாத மானமும்
எங்கள் ஊரான சுத்தமல்லியில்
எங்கள் தெருவில் வருடா வருடம் கரிநாள் அன்று நடக்கும் ஜல்லிக் கட்டு எங்களைப் போன்ற
சிறார்கள் (இது ஃப்ளாஷ் பேக், அப்போது நானும் சிறுவன் தான் என்ற அறிக) மத்தியில் வெகு
பிரபலம்.
வீட்டில் கட்டப்
பட்டிருக்கும் காளை மாடு பசுமாடு ஏன் கன்று குட்டி என்று எதையும் விட்டு வைக்காமல்
வீட்டுக் காரர்களைக் கேட்காமலேயே “வாலன்டியர்ஸ்“ அவிழ்த்து வந்து ஜல்லிக் கட்டு நடத்துவார்கள்.
( மாட்டின் சொந்தக் காரர்கள் அப்புறமாக வந்து “செந்தமிழில்“ அர்ச்சனை செய்வது தனிக்
கதை)
ஊரில் இருக்கும்
இளம் வயதுப் பெண்களைக் கவரவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் கட்டிளம் “காளை“யர்கள்
வீரமாக களமாடுவார்கள். இவர்களைப் பார்த்து பயந்து வாடிவாசலில் வராமல் புறவாசல் வழியாக
புறமுதுகு காட்டியே பாதி காளைகள் ஓடிவிடும்.
ஒரு முறை ஜல்லிக்
கட்டில் கயிற்றோடு வந்தக் காளையை மாமா ஒருவர் இலகுவாகப் பிடித்துவிட எண்ணி கயிற்றை
பற்றி விட்டார் கயிற்றோடு அவரையும் சேர்த்து மாடு சிட்டாக பறந்தது. அவரும் கயிற்றை
விடுவதாக இல்லை. தரையில் உருண்டு புரண்டு மாட்டின் கயிற்றோடு சென்று ஒரு கட்டத்தில்
மாடு சோர்ந்து நிற்கவும் அதனை இவர் பிடித்ததாக பறைசாற்றிக் கொண்டார். அவர் மாட்டைப்
பிடித்ததைக் காட்டிலும் தரையில் உருண்டு புரண்டு ’விழு’ப்புண்ணோடு வந்தது என்னை வெகுவாக
கவர்ந்ததால் என் மனதில் அவர்தான் ”முரட்டுக் காளை”.
லால்குடியில் பதினோறாம்
வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது இது நடந்தது. சிவன் கோவில் தெரு லால்குடிப் பூங்காவனம்
எல்லாம் தாண்டி உள்ள்ள்ளே ரொம்ப தொலைவில் இருக்கும் தெரு. அது தான் ஜல்லிக் கட்டு நடக்கும்
தெரு. செவ்வக வடிவிலான நேர்த்தியாக திட்டமிடப்பட்ட தெரு. அதன் ஒரு வரிசையில் தான் மாட்டை
அவிழ்த்து விடுவார்கள்.
அன்று நிறைய எழுத்து
வேலை இருந்ததால் ஜல்லிக் கட்டுக்கு சென்ற முதல் “பேட்ச்“ல் என்னால் இணைய முடியவில்லை.
நான் ராஜவேல் மற்றும் செல்வம் மூவரும் சற்று தாமதமாக சென்றோம்.
எங்கள் ஊரில் நடக்கும்
அதே ஜல்லிக் கட்டு போலதானே இதில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டு
அலட்சியமாக சென்றேன்.
நல்லா பெருசு பெருசா
கொழு கொழு வென்று உயரமான காளைகளை நான் அதற்குமுன் கண்டதில்லை. அதன் திமிள் மட்டுமே
முதுகில் அமர்ந்து இருக்கும் கன்றுக் குட்டி போல இருக்கும் என்றெல்லாம் சத்தியமா தெரியாதுங்க.
எங்கள் ஊர் ஜல்லிக்
கட்டில் புறமுதுகு காட்டும் காளைகள் தவிர்த்து மற்ற காளைகள் அனைத்தும் பிடிக்கப் பட்டு
விடும். என்பதால் உண்மையான ஜல்லிக் கட்டின் மகத்துவம் தெரியவில்லை.
போக்கிரிப் படத்தில்
நெப்போலியனின் வசனம் போல “உண்மையான ஜல்லிக் கட்டு காளையை பார்த்த மாத்திரித்தில் ஒன்றுக்கு(இடக்கர்
அடக்கல்) போயிடுவ தெரியுமா?” என்ற சூழலை எதிர் கொள்ள நேர்ந்தது.
ஜல்லிக்கட்டில்
பிடிபடா காளை ஒன்று வெறிச்சோடி இருந்த தெரு வழியாக ஓடி வந்து கொண்டு இருந்தது. எதிரே
காளை இந்தப் பக்கம் நாங்கள். அது ஜல்லிக் கட்டில் கண்ட கும்பலின் மிரட்சி குறையாமல்
அதே வெறியோடும் வேகத்தோடும் எங்களை நோக்கி ஓடிவந்து கொண்டு இருந்தது.
அந்த தெருவின்
பெயர் அக்கிரஹாரத் தெரு என்ற ஞாபகம். ஒரு சந்து பொந்து இல்லாமல் சேர்த்து சேர்த்து
கட்டியிருக்கும் வீடுகள். ஆத்திர அவசரத்திற்கு ஒளிந்து கொள்ள ஒரு சந்து பொந்து இல்லாமல்
என்னய்யா தெரு இது?. முதல் முறையாக ஒரு தெருவின் வடிவியல் அமைப்பின் மீது முதல் முறையாக
ஒரு வெறித்தனமான கோபம் வந்தது.
காளைக்கும் எங்களுக்கும்
இடையில் ஒரு நூறு மீட்டர் இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியை அந்தக் காளை கடப்பதற்கு
ஆகும் நேரம் தான் எங்கள் உயிரைக் காத்துக் கொள்ள எங்களுக்கு கிடைத்திருக்கும் நேரம்.
சந்து பொந்து தான்
இல்லை என்றால் இண்டு இடுக்கும் கூட இல்லை. ஏதாவது ஒரு வீட்டிற்குள் நுழைந்து கொள்ளலாம்
என்றால் எல்லா வீடும் இறுகப் பூட்டியிருந்தன.
காளை மெல்ல நெருங்கியது.
நாங்கள் தெருவின் இடது மூலையை நோக்கி நகர்ந்தோம். சாலை விதிகள் தெரியாத அந்த மட மாடு
அதனுடைய வலது மூலையை நோக்கி அதாவது எங்களை நோக்கி வந்தது.
ஒரு வீட்டின் சுவர்
இடையில் சிமெண்ட்டால் கட்டப் பட்ட கழிவு நீர் வாய்க்கால். நாங்கள் சுவரை நெருங்கவும்
மாடும் எங்களை நோக்கியே வந்தது.
சாக்கடை வாய்க்காலை
அலேக்காக ஜம்ப் பண்ணி ஒரு கரண்ட் கம்பத்தை கேடயமாக கொண்டு சுவற்றில் பல்லி போல ஒட்டிக்
கொண்டேன். செல்வம் ஆபத்திற்குப் பாவமில்லை என்று கழிவு நீர் வாய்க்காலில் இறங்கி விட்டான்.
மிச்சமுள்ள ராஜவேல் தரையோடு தரையாக படுத்து விட்டான். மாடு அவனை முகர்ந்து பார்த்து
விட்டு புலிகேசி படத்தில் புறமுதுகிட்ட கரடியாய் போய்விட்டது.
சுவற்றில் ஒட்டியிருந்த
நானும் சாக்கடையில் இறங்கிய செல்வமும் ராஜவேல் தரையில் படுத்ததை பயந்தாங் கொள்ளித்தனம்
என்று பிரகடனப் படுத்தியது தான் பெரிய ஜோக்.
இப்படித்தான் நான்
லால்குடியில் அந்த ஜல்லிக்கட்டை பார்க்கச் சென்றேன். ஜல்லிக் கட்டு நடக்கும் தெருவில்
இருந்த நல்ல உயரமான மாடி வீட்டில் குழுமி இருந்த கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாகி பார்த்து
விட்டு திரும்பினோம்.
அந்த சம்பவத்தை
விடுதியில் யார் கேட்டாலும் சொல்வதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்டுதான் திரும்பினோம்.
அதன் பிறகு இப்போது
தான் அந்த சம்பவத்தை நினைவு கூர்கிறேன்.
கீழே கிடக்கும்
பத்து ரூபாயை எடுக்க குனியும் போது பையில் இருக்கும் பத்து லட்ச ரூபாயை பரிகொடுக்கும்
ஏமாளி போல ஜல்லிக் கட்டுக்காக பெரும் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று களித்த போது நமது
கல்வி உரிமையை மத்திய அரசிடம் பரிகொடுத்தோம்.
ஜல்லிக் கட்டும்
தேவைதான் வீட்டில் இருக்கும் தொலைக் காட்சி பெட்டி போல. ஆனால் கல்வி குடியிருக்கும்
வீடு போன்றதல்லவா?!
No comments:
Post a Comment