Monday, November 13, 2017

லால்குடி டேஸ்-15 தண்டனைகள்

தண்டனைகள்
சம்பவம் 1

மாடி வகுப்பறையில் இருந்து நானும் கெய்சரும் ப்ரேயருக்காக இறங்கி வந்து கொண்டு இருந்தோம். மாடிப் படியை ஒட்டி இருந்த தூங்கு மூஞ்சி மர இலைகளை ஒரு கை நிறைய உருவினான் கெய்சர்.
“ஏய் ஜெயராஜ் ஒரு சேலஞ்ச், உன்னால செய்ய முடியுமா?”
”என்ன ன்னு சொல்லு?”
“இந்த இலை ஒன்றை எடுத்து நாக்கின் மேலண்ணத்தில் ஒட்டிக் காண்பிக்க வேண்டும். விழாமல் ஒட்டியிருக்க வேண்டும்”
“இதென்ன பிரமாதம் கொடு செய்து காண்பிக்கிறேன்” வாயின் ஈரப்பதத்தில் இலகுவாக ஒட்டிக் கொள்ளும் என்பதால் வாங்கி நாவின் மேல் கொண்டு போய் ஒட்டிக் காண்பித்தேன்.
“எங்க காமி ஒட்டிக்கிச்சா?” என்றான்.
நானும் சூதுவாது தெரியாத பச்ச மண்ணு என்பதால் வாயை இரண்டு இட்லி ஒரே நேரத்தில் நுழையும் வண்ணம் அகலமாக திறந்தேன்.
கையில் உருவி வைத்திருந்த அனைத்து இலைகளையும் வாயில் கொட்டிவிட்டான். இதுதான் அந்த சேலஞ்ச்சின் நோக்கம்.
இந்த மொத்த சம்பவத்தையம் ஒரு ஜோடிக் கண்கள் நோட்டமிட்டுக் கொண்டு இருந்தன.
ப்ரேயர் முடிந்து வகுப்புக்குச் செல்ல முனைந்த போது அற்புதம் சார்(ஆங்கில ஆசிரியர் “திருவோடு சார்”) மெல்ல நெருங்கி தன் கையில் இருந்த பிரம்பால் வரிசையில் இருந்து எங்களை அப்புறப் படுத்தினார்.
“அந்த மரம் உன்னை என்ன செஞ்சிது?“
“சார்….”என நடுங்கினான் கெய்சர்.
“ஏன் தேவையில்லாமல் அதன் இலைகளை உருவினாய்?” என்று கையில் இருந்த பிரம்பால் முதுகிலும் கையிலும் பின்புறமும் விளாசித் தள்ளி விட்டார்.
’வாத்தியார் பையனுக்கே இவ்வளவு அடியா?’
”அவன் வாயத் திறக்க சொன்னா  ஏன் எதுக்குன்னு கேக்காம ஆ ன்னு திறப்பியா?” என்றார் அந்த சவால் பற்றி தெரியாமல்.
சம்பவம் 2
எங்கள் கணித ஆசிரியை மதிமலர் சுகுமாறன் அவர்கள். முத்துக் கிருஷ்ணன் சார் மற்றொரு க்ருப்புக்கான கணித ஆசிரியர்.
திரிகோணமிதி பாடம் அப்போது எங்களுக்கெல்லாம் ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தது. (என்பிள்ளைகளுக்கு அப்படி இருக்க விடுவதில்லை)
நான் அந்த பாடங்களை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டதே ஆசிரியர் ஆன பிறகுதான். என் புரிதலை அப்படியே என் பிள்ளைகளுக்கு சேதாரம் இல்லாமல் கடத்தி விடுவதில் பெரும்பாலும் வெற்றி கண்டு விடுவேன். இன்று வரை அந்தப் பாடம் நடத்துவதற்கான முறைகளை மாற்றி மாற்றி இம்ப்ருவைஸ் செய்து கொண்டு வந்திருக்கிறேன்.
அப்பேர் பட்ட பாடத்தை மதிமலர் சுகுமாறன் அவர்கள் நடத்தாமல் அப்போது பயிற்சிக்கு வந்த “பி.எட்“ டிரெயினியிடம் கொடுத்து நடத்தச் சொன்னார்.
அதுவும் எங்கள் வகுப்பும் தொழிற்கல்விப் பிரிவையும் ஒன்றாக வேதியியல் ஆய்வகத்தில் அமர வைத்து நடத்தி முடித்து விடுவதென ஏற்பாடு.
காற்று வேகமாக வீசினால் வீட்டினுள் பத்திரமாக இருந்தே ஆக வேண்டிய அளவிற்கு மெல்லிய ஒல்லியான ஆசிரியை அவர்.
நாங்கள் ஏறக் குறைய 80 பேர் கொண்ட வகுப்பு.
அவர் மிக சத்தமாக பேசுவதாக எண்ணிக் கொண்டு சக்தியெல்லாம் திரட்டி பேசுவார் அதன் அதிர்வலைகள் நான்காவது வரிசையுடன் தேய்ந்து மறைந்து விடும்.
கடைசி இரண்டு பெஞ்ச் கார மாணவர்களுக்கு ஊமைப் படமாகத் தான் வகுப்பு செல்லும்.
லேசான தூரலாக ஆரம்பித்து “சட சட“ வென தூரும் மழையை போல மாணவர்களின் பேச்சு மெல்ல பெருகி வகுப்பில் அவர்கள் நடத்துவது அவருக்கே கேட்காத அளவிற்கு இடையூறாகப் போய் விட்டது.
“பேசாதிங்கப்பா ப்ளீஸ்” இந்த சத்தம் மட்டும் முணு முணுப்பாக கடைசி பெஞ்சை எட்டியது ஆனால் யாரும் காதில் தான் போட்டுக் கொள்ளவில்லை.
’பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரி’ என்று நேராக எங்கள் டீச்சரிடம் போய் புகார் கூறிவிட்டார்.
சும்மா சொன்னாலே கொந்தளித்து விடும் அவரோ இந்த டீச்சர் அழுது கொண்டே சொன்னதால் கோபத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்.
நல்ல பிரம்பு ஒன்றை உடற்கல்வி ஆசிரியரிடம் கடனாக வாங்கிக் கொண்டு புவி அதிரும் வண்ணம் வேக வேகமாக வந்தார்.
சுனாமியைக் காண கடற்கரைக்கு போன ஏதுமறியாதவர்கள் போல மூன்றாம் பெஞ்ச் மற்றும் நான்காம் பெஞ்ச் மாணவர்கள் முதல் வரிசைக்கு இடம் பெயர்ந்தனர். முதல் இரண்டு இடத்தில் உள்ள மகேஸ்வரன் மற்றும் சண்முகம் அருகில் சென்றால் அடியில் இருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் சென்றனர்.
மாறாக நானோ கடைசி வரிசையில் வலது மூலைக்குத் தாவினேன்.
அவங்களுக்கு இருந்த கோபத்தில் யாரையும் விடுவதாக இல்லை. பாரபட்சம் இல்லாமல் எல்லோருக்கும் நான்கு பிரம்படிகள். கை சும்மா கோவைப் பழமாக சிவந்து விட்டது.
முதல் வரிசையில் நான்கு அடிகள் என்பது இரண்டாம் வரிசைக்கு மூன்று எனவும் மூன்றாம் வரிசைக்கு இரண்டு எனவும் தேய்ந்தது.
கைகள் சோர்ந்து போனதால் கடைசி வரிசையை எல்லாம் சம்பிரதாயத்திற்கு ஒரே ஒரு அடி மட்டும் அடித்தார்.
என்னுடைய உளவியல் ரீதியான கணிப்பை பாராட்டிக் கொண்டேன். முதலாம் வரிசைக்குத் தாவிய கடைசி வரிசை மாணவர்களை பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.
இந்த மொத்த சம்பவத்தையும் போர்டுக்கு அருகே நின்றபடி அழுது கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார் பயிற்சி ஆசிரியை. ரொம்ப கில்டியாக ஃபீல் பண்ணி கும்பிட்டுக் கொண்டே “சாரிப்பா சாரிப்பா” என்றபடி அவர்கள் நின்றக் கோலத்தை கண்டதாலோ என்னவோ அந்த சம்பவத்திற்கு பிறகு அவரின் வகுப்பு அமைதியாக சென்றது.
சம்பவம் 3&4
இயற்பியல் ஆசிரியர் புத்தகத்தை வைத்துக் கொண்டு பாடம் எடுத்ததை நான் அறியேன். மிக அற்புதமாக நடத்துவார். எங்களோடு அவரது சர்வீஸ் முடிந்து ஓய்வு பெற்றார்.
சில சமயங்களில் கடுமையாக கோபப்படுவார்.
இயற்பியல் தராசில் எடை போடுவது தொடர்பான செய்முறை வகுப்பு. (அப்போதெல்லாம் எல்லா செய்முறையும் செய்து எங்களுக்கு வரும் ரீடிங்கை அப்சர்வேஷனில் கணக்கிட்டு பிறகுதான் ரெக்கார்ட் எழுதுவோம் என்று இந்த தலைமுறைக்கு தெரிவிக்க வேண்டியுள்ளது.)
ஒரு பத்து கிராம் எடையுள்ள தக்கையை கொடுத்து ஒரு மாணவனிடம் எடை போடச் சொல்லுகிறார்.
அவனும் எடையெல்லாம் நல்ல விதமாகத் தான் போட்டான். அதன் பின் அந்த கணக்குகளில் தசமப் பெருக்கல் ஒன்று வரும் அதற்கு லாகரிதமிக் டேபிள் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பெருக்கி புள்ளி வைக்கும் போது ஏதோ கோளாறு செய்து விட்டான். விளைவு பத்து கிராம் நூறு கிராமாக ஆகிப் போனது.
“முண்டம் முண்டம் இந்த தக்கை நூறு கிராமா சிந்திக்க வேண்டாம்?” என்று அப்சர்வேஷன் நோட்டாலேயே தலையில் போட்டார்.
திரும்ப வந்து முதலில் இருந்து புள்ளி வைத்து மற்றொரு கோலம். போட்டான். அதுவும் அலங்கோலம் தான்.
“என்னது 0.1 கிராமா?“ என்று கோபத்தின் உச்சிக்கே சென்றவர் அந்த தக்கையை எடுத்து அவன் தலையை குறிபார்த்து வீசவும் அவன் குனிந்து கொண்டான். பின் வரிசையில் இருந்தவன் அதனை கேட்ச் பிடித்து விட்டான்.
பனிரெண்டாம் வகுப்பில் பப்ளிக் பரிட்சைக்கான பிராக்டிக்கல்ஸ் நடைபெறும் நேரம். ரெக்கார்ட் நோட் சைன் வாங்க வேண்டும். வரிசையில் நின்றோம். நான் நான்காவது ஆளாக நின்றேன். முன்னால் இருந்தவன் அட்டவணைகளில் அடித்தல் திருத்தல் ஏராளமாக இருந்தது நோட்டை அப்படியே தூக்கி விசிரியடித்தார். நோட்டும் அட்டையுமாக பிரிந்து போய் விழுந்தது. ஓடிப் போய் எடுத்துக் கொண்டு ஒட்டு வதற்காக சென்றான்.
நான் அப்படியே நான்கிலிருந்து ஐந்து ஆறு ஏழு எட்டாவது ஆளாக பின் வாங்கினேன்.
ஆனால் இவரோட கோபம் குறையவில்லை. அத்தனை பேரிடமும் அதே வீச்சோடு இருந்தது.
என் முறை வந்தது. நோட்டை புரட்டினார் ஒன்று இரண்டு மூன்று… என அட்டவணையில் நான் செய்த பேட்ச் ஒர்க்கை எண்ணினார்.
“நோட்டு என்ன மஞ்சள் தேய்ச்சு குளிச்சுதா?” என்ற படி என்னுடைய நோட்டும் பறந்து செல்ல வாய்ப்பளித்தார்.
நடந்தது இது தான் அட்டவணையில் நிறைய அடித்தல் திருத்தலாகி விட்டது. என்னுடைய கையெழுத்தில் அது இன்னும் கேவலமாகி விட்டது. எனவே பதினோறாம் வகுப்பு ரெக்கார்ட் நோட்டில் இருந்து தாள் கிழித்து அட்டவணை போட்டு அழகாக ஒட்டி விட்டேன். ஆனால் ஒட்ட பயன்படுத்திய “கம் தான் கல்பிரிட்” மதிய சோற்றினை பயன் படுத்தி இருந்தால் தப்பி இருக்கலாம். காலையில் போட்ட கிளறிய சாதத்தை பயன் படுத்தியதால் புளிசாதத்தில் இருந்த மஞ்சல் நோட்டில் பரவி அட்டவணை எல்லாம் மஞ்சள் தேய்த்து குளித்தது போலாகி விட்டது.
இவ்வாறாக லால்குடிப் பள்ளியில் நிறைய தண்டனைகள் இருந்தாலும் நான் என்னவோ ஒரு முறை (அதாங்க சம்பவம் 1) தான் அடி வாங்கியதாக ஞாபகம்.
”ஆனா நீங்க இப்போ…..?” என்று எனது மாணவர்கள் மைண்ட் வாய்ஸில் திட்டுவது கேட்கிறது.


No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...