Friday, November 10, 2017

நான் எப்படி லெட்சுமியைப் பார்க்கிறேன்?!


நல்ல நேர்த்தியான முறையில் படம் பிடிக்கப் பட்ட குறும்படம் லெட்சுமி. அச்சகத்தில் வேலை பார்க்கும் லெட்சுமி, கணவன் ஒரு லேத் பட்டறையில் வேலை பார்க்கிறான். ஒரு குழந்தை. அழகிய சிறு குடும்பம்.
அதிகாலை எழுந்து சமையல் முடித்து பிள்ளையை பள்ளிக்கு கிளப்பி விட்டு சாப்பாட்டு டப்பாவோடு கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு குளித்து விட்டு தானும் மின்சார இரயிலில் வேலைக்குச் செல்கிறாள் அந்த டிபிக்கல் நடுத்தர குடும்பப் பெண் லெட்சுமி. கேட்கும் போதே புள்ளரிக்க வைக்கும் ஒரு இலட்சிய மனைவி என்று பாராட்டத் தோன்றுகிறது தானே?!
இடக்கர் அடக்கல் என்ற கருதி பேசாமல் விடுத்த பாலியல் புரிதல் குறித்து பேசுகிறது இந்த குறும் படம். கலாச்சாரம் பண்பாடு என்று கூறிக் கொண்டு பேசாமல் விடுத்த பாலியல் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் ஆண்களாலும் பெண்களாலும் தவறாக புரிந்து கொள்ளப் பட்டு கையாளப் படுவதன் எதிரொலிதான் ஏராளமான விவகாரத்துக்கள். கோர்ட்டில் தெரிவிக்கும் ஏனைய காரணங்கள் அனைத்தும் வெளிப் பூச்சே அன்றி வேறொன்றும் இல்லை.
தம்பதியர் இருவரும் பரஸ்பரம் தனது துணையின் பசியறிந்து பரிவோடு பரிமாறும் பட்சத்தில் இல்லறம் நல்லறமாக எல்லா விஷயங்களிலும் மிளிரும். ஆனால் இரவில் மீட்டும் இல்லற இசையில் சுருதி பேதம் ஏற்பட்டால் இல்லறம் நரகமாகும்.
இங்கே லெட்சுமி விஷயத்திலும் அது தான் நடக்கிறது. கணவன் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் தன்னுடைய தேவை ஒன்றையே பிரதானமாக கருதுகிறான்.(சாப்பாட்டு மேசை, வீட்டு வேலைகள் மற்றும் படுக்கை அறை)
இரயிலோ பேருந்தோ இல்லாத இரவில் கூட ஏதாகிலும் மாயம் செய்து அவள் வீடு திரும்பி அடுத்த நாள் காலைக்கான உணவை தயார் செய்ய வேண்டும் என்றே கருதுகிறான்.
இப்படி எல்லா வகையிலும் சுரண்டலை எதிர் கொள்ளும் மனைவி அவனை பழிவாங்குவதாக எண்ணி தன்னை தோழியாக கருதும் ஒரு ஆடவனுடன் அந்த மழைநாள் இரவை கழிக்கிறாள். அதை மேலும் தொடருவதில்லை என்ற தெளிவோடு அடுத்த நாளை எதிர் கொள்கிறாள்.
லெட்சுமியை விமர்சனம் செய்யும் எல்லோரும் கணவன் சரியில்லை என்றால் தேவடியாத்தனம் செய்வதா? என்று பொங்குவதை ஃபேஸ்புக், வாட்சப் மற்றும் ட்விட்டர் என இணைய வெளி எங்கும் காண இயலுகிறது.
என்னைப் பொருத்தவரை இது கணவன்மார்களுக்கான விழிப்புணர்வு குறும்படம் என்றே பார்க்கிறேன்.
சாப்பாடு எங்கிருந்து வந்தது சாப்பிட்டப் பின் அந்த தட்டு என்னவானது என்பது கூட அறியாமல் மனைவியரை விரட்டி விரட்டி வேலை வாங்கும் கணவன்மார்கள் சற்று மனைவி என்ன செய்கிறார் அவளின் வேலைகளை எப்படி இலகுவாக்கலாம் என்றெல்லாம் சிந்திக்கச் சொல்கிறது.
சாப்பாட்டு மேசையில் எனக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும், உனக்கு இது செய்யத்தெரியுமா அது செய்யத் தெரியுமா என்றெல்லாம் கேட்டு பிடித்ததை வாங்கி நாவுக்கு ருசி சேர்க்கும் எத்தனையோ பேர் உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்பதில்லை?
படுக்கையிலும் தனக்கு பிடித்ததை வலுவாக எடுத்துக் கொண்டு உறங்கி போகும் நிறைய பேருக்கு தனது துணையின் பசி தீர்ந்து போனதா என்று அவளது முகம் பார்த்து குறிப்பறிய கூட நேரம் இருப்பதில்லை.
இந்த மாதிரியான போக்கு ஒரு இனிய இல்லறத்தை சிதைக்கும் கோடறிக் காம்பு என்று சற்று துணிச்சலாக எடுத்து கூறி இருக்கிறார் இயக்குநர்.
தவிர்க்கவே முடியாத படுக்கையறைக் காட்சி அது சார்ந்த உளவியல் என கச்சிதமாக படமாக்கி இருக்கும் இயக்குநர் பாராட்டுக்குறியவர்.
நீராக இருந்து அரிசியோடு கொண்டிருந்த உறவின் வெம்மை தாளாமல் நீராவியாக வெடித்துக் கிளம்பும் “குக்கர்“ விசிலே படத்தின் கதையை கூறி விடுகிறது.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
இந்த குறளை எல்லாம் சிலாகித்துக் கூறி இனியும் பெண்களை ஏமாற்ற இயலாது.
இனியும் கற்பென்னும் முள்கிரீடத்தை சூடி கலாச்சார சிலுவையை சுமத்தி அதிகாரம் என்னும் சாட்டைக் கொண்டு பெண்களை கட்டுப் படுத்த இயலாது. ஏனென்றால் மேலே சொன்னக் குறளுக்கு பொருளை எல்லோரும் ’கணவன் சொல் கேட்கும் பெண் அருமையானவள் பெருமையானவள்’ என்றெல்லாம் ஜல்லியடித்துக் கொண்டு இருந்த போது கலைஞர் தனது உரையில், ’அது மாதிரிப் பெண் தன்னை அடிமையாக கருதும் போக்கு உடையவள்’ என்றே தெளிவாக கூறி இருக்கிறார்.
(கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.)
”அப்படின்னா பாதை தவறி நடப்பது பெண் விடுதலை என்று பிழையான பெண் விடுதலை பேசும் ஆளா நீ” என்று எரிச்சல் அடையாதீர்கள்.
வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய
கிளைகளை வெட்டிய
உங்களால்
வேலிக்கு அடியில்
நழுவும் அவள் வேர்களை
துவும் செய்ய இயலாது” (உங்கள் கவிதையை சற்றே மாற்றிப் போட்டு விட்டேன் மன்னியுங்கள் அப்துல் ரகுமான்)

நான் சொல்வதெல்லாம் “மனைவியை உங்கள் வாழ்வில் இணையராக பாருங்கள் உங்களுக்கு சேவகம் செய்வதே கடமையாக கொண்டவள் என்று பார்க்காதீர்கள்”
”இருவருமே பரஸ்பர புரிதலோடு பசியாறுங்கள்.”
நிச்சயம் லெட்சுமி பாதை மாற மாட்டாள்.
இன்னமும் கோபம் தீரவில்லை என்றால் இணையத்தில் “போர்ன் வீடியோ” தேடாத ஆண்கள் மட்டும் அவளை காரி உமிழுங்கள்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...