Sunday, November 26, 2017

லால்குடி டேஸ்-17 அறிவு இருக்கு ஆனா பகுத்தறிவு? பாகம்-1

லால்குடி டேஸ்-17 அறிவு இருக்கு ஆனா பகுத்தறிவு? பாகம்-1

பனிக்காலம் போய் மெல்ல வெயில் காலம் தலைகாட்ட ஆரம்பிக்கும் பிப்ரவரி இறுதியில் இருந்தே இரவு நேரங்களில் விடுதியில் எல்லோரும் மொட்டை மாடியில் துண்டு போட்டு இடம் பிடிக்க ஆரம்பித்து விடுவோம்.
சிறுவர்கள் கூட்டம் அதிகமாக இருந்து ரொம்பவும் தொந்தரவாக இருக்கிறது என்றால் யாரேனும், “டேய் அன்னைக்கு ஒரு நாள் இராத்திரி பன்னெண்டு மணி இருக்கும், அதோ அந்த கட்டை சுவற்றில் வெள்ள டிரெஸ் கொலுசு எல்லாம் போட்டுக்கிட்டு சும்மாஜலக் ஜலக்“ ….” என்று ஆரம்பித்த உடனேயே மெல்ல மெல்ல சிறார் கூட்டம், “அண்ணே என்னண்ணே பேய்க்கத சொல்றீங்க?” என்று புலம்பிக் கொண்டே கீழே போய்விடுவார்கள்.
அப்புறம் ஆரம்பித்தக் கதையின் விட்டக் குறை தொட்டக் குறை எல்லாம் தொடர ஆரம்பிக்கும்.
அருள் அன்றைக்கு ஒரு கதை ஆரம்பித்தான்.
எங்க ஊர்ல கந்தசாமின்னு ஒரு ஆளு இருந்தார். அன்னைக்கு வீட்ல யாரும் இல்ல அந்த ஆளு தனியாதான் படுத்து இருந்தார்
ம் சொல்லு
நைட் மணி ரெண்டு இருக்கும், அவங்க அப்பா வந்து அவர எழுப்பி இருக்கார்
அவர் எங்கேருந்து வந்தார்?”
அவர் செத்து பத்து வருஷம் ஆச்சு
திகில் எல்லோரையும் லேசாக கவ்வ ஆரம்பிக்கவே படுக்கையில் இடைவெளி குறைந்தது.
அப்போ பேயா?” என்ற இராஜவேலுவின் குரலில் அந்தயாபிசிரடித்தது.
ஆமா, அவர எழுப்பிடேய் மோட்டார போட்டுட்டு வந்து இப்படி தூங்குறியே அங்கே வாய்க்கால் ஒடச்சிக் கிட்டு தண்ணி வீணா போகுதுன்னு சொல்லி இருக்கார்
அந்தாளு பயப்படலையா?”
தூக்க கலக்கத்தில என்ன நெனச்சானோ தெரியல அவம் பாட்டுக்கு மம்பட்டிய எடுத்துக் கிட்டு டார்ச் லைட்டையும் எடுத்துக் கிட்டு பின்னாடியே போனான்
அங்க வயல்ல தண்ணிய அடைச்சானா?”
அவன்தான் வயலுக்கு போகலையே, அவங்க அப்பா போன பாதையிலேயே மந்திரிச்சி உட்டவன் மாதிரி நடந்து போனான்
எங்க?”
சுடுகாட்டுக்கு!”
என்னது சுடுகாட்டுக்கா?” அத்தனை பேரும்வீல்என்று அலறினர்.
சுடுகாட்டுக்கு அழைச்சிக் கிட்டு போய் அங்கேருந்து அவனோட செத்துப் போன தாத்தா பாட்டி அவனோட அண்ணன்அவனோட அண்ணன் பிறந்த மூன்று மாதத்தில் இறந்து போனவன்- எல்லோரும் இவன கையை பிடிச்சிக்கிட்டு திரும்பவும் வயக்காட்டுக்கு போனாங்க
ஏண்டா எனக்கு பொங்கலுக்கு டிரெஸ் எடுத்து படைக்கலன்னு முதல்ல அப்பன் காரன் மம்பட்டியால அடிச்சான்
ஐயோ” ’கத ரொம்ப டெர்ரரா போகும் போல இருக்கே?’ என்று இரண்டு பேர் மெல்ல நழுவினர்  
ஏண்டா எனக்கு தீவாளிக்கு சாராயம் வச்சி படைக்கல? ன்னு தாத்தா அதே மம்பட்டிய வாங்கி மண்டையில ஒரே போடு போட்டான்
எனக்கு ஏண்டா பாலு வச்சி படைக்கலன்னுபொறந்து மூணு மாசத்துல செத்து போனவனும் அவன் பங்குக்கு கொரவலைய கடிச்சி துப்பிட்டான்.
காலையில பாத்தா அவங்க வீட்டு வயல் வரப்புல செத்து கிடக்கான்என்று அந்த டெர்ரர் ஸ்டோரிய முடிச்சான் அருள்.
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்!” என்று மெல்ல நான் எழுந்தேன்மே கம் இன்
என்னடா சந்தேகம்?”
அந்த ஆளு வீட்டுல தனியா இருந்துருக்கான். வயலுக்கு போய் தனியா செத்துக் கிடந்துருக்கான். இடையில நீ சொன்ன விஷயத்த எல்லாம் யாருப்பா பக்கத்தில் இருந்து பார்த்தது?”
ம்ம்..அது வந்து.. எங்க அப்பாதான் சொன்னாரு
யாரு வேண்ணா சொல்லி இருக்கட்டும். அந்த ஆள சுடுகாட்டுக்கும் பின்பு வயக்காட்டுக்கும் அழைச்சிக் கிட்டு போய் பேய் அடிச்சி கொன்னத பாத்தது யாரு?”
அது வந்து
ஏண்டா கதை சொல்றதுலயும் ஒரு லாஜிக் வேண்டாமாடா? ஒரு சினிமா படம் மாதிரி இவ்வளவு நேரம் ஓட்டுனியே ஒரு ரீலு அதுக்கு சாட்சி யாரு? ஆக ஒருத்தன் செத்தத வச்சி சும்மா சிலந்தி வலை மாதிரி இம்மாம் பெரிய கதை பின்னிட்டீங்களேடா
நீ நம்புனா நம்பு நம்பாட்டி போடா?”
டேய் நான் என்னடா கேட்டன் இப்படி கோவிச்சிக்கிற? தனியா இருந்தவன் தனியா போனான், தனியா செத்துக் கிடக்கான். இதுக்கு இடையில அவன அவன் அப்பா கூப்பிட்டது, தாத்தா, பிஞ்சுல செத்த குழந்தை எல்லாரும் அவன அடிச்சு கொன்னத பாத்து யாரு ஊரார் கிட்டயோ இல்ல உங்க அப்பா கிட்டயோ சொன்னது யாரு? அத சொல்லு நான் நம்புறேன்
நீ போடா நான் தூங்குறேன் என்று போர்வையை தலைவரை இழுத்து விட்டுக் கொண்டான்
பேய்க் கதைகள் யாவும் இந்த மாதிரி இட்டு நிரப்ப படாத லாஜிக் ஓட்டைகளுடனேயே உலா வரும்.
நாம கேள்வி கேட்காமல் சரி போவட்டும் விடு என்று விடும் போது அதுக்கு கண் காது மூக்கு எல்லாம் முளைத்து நடமாடும்.
விடுதிகளில் பேய்க் கதை சொல்வதற்கென்றே பிரத்தியேகமாக கதை தயார் செய்கிறவர்களும் உண்டு. மேற்படி கதை கூட அருளுடைய சொந்த சரக்காக இருக்கக் கூடும்.

-தொடரும்.

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...