Thursday, October 26, 2017

அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது.


“ஆம் உங்கள் ஊகம் சரிதான், இது ஒரு கவிதைப் புத்தகம் பற்றிய பதிவுதான்”
எங்கள் பள்ளியின் வேதியியல் ஆசிரியர் பரிந்துரை செய்த கவிதைப் புத்தகம் பற்றிய பதிவு இது.
கவிஞர் ”மௌனன் யாத்ரீகா” அவர்களின் மூன்றாவது பிரசவம் இந்த நூல். கவிஞர் தனது மந்திரப் பேனாவில் மரபுச் சொல் ஊற்றி புதுக் கவிதையை பிரசவித்திருக்கிறார்.

சித்திரத்தில் மரபு ஓவியங்கள் புரிந்து கொள்ளுதல் எளிது. மாடர்ன் ஆர்ட் எனும் நவீன வகை சித்திரங்களுக்குத் தான் கோனார் நோட்ஸ் தேவைப்படும். கவிஞரின் மரபுச் சொல் எடுத்து புதுக் கவிதை புனையும் பாணி எல்லோரையும் வசீகரிக்கும் வண்ணம் இருப்பது வி“சித்திரம்“.
கவிஞர் எதைப் பாடியிருக்கிறார்?
சுகத்தைப் பாடியிருக்கிறார் சோகத்தையும் பாடியிருக்கிறார்.
இசையைப் பாடியிருக்கிறார் இல்லறத்தையும் பாடியிருக்கிறார்.
இருளைப் பாடியிருக்கிறார் இயற்கையையும் பாடியிருக்கிறார்.
மலையழகைப் பாடியிருக்கிறார் மழையழகையும் பாடியிருக்கிறார்
காட்டினைப் பாடியிருக்கிறார் பறவைக் கூட்டினையும் பாடியிருக்கிறார்
கோடையைப் பாடியிருக்கிறார் பாதகத்தி ஆடையையும் பாடியிருக்கிறார்
நெல்வயலைப் பாடியிருக்கிறார் அது “கல்“வயலாகிப் போனதையும் பாடியிருக்கிறார்
காதல் மயக்கத்தைப் பாடியிருக்கிறார் காம முயக்கத்தையும் பாடியிருக்கிறார்
பூக்களைப் பாடியிருக்கிறார் அதன் வாசம் திருடியதையும் பாடியிருக்கிறார்
பாடல் தோறும் விசிறியடிக்கும் மழை, காரிருள், தனிமை மற்றும் தொட்டுத் தொடரும் மென் சோகம் என நமது இதயத்தை மயிலிறகால் வருடியபடி செல்கிறது இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு தாளும். மென்னுடல் உடையவர்கள் கைவசம் சில மாத்திரைகளை வைத்துக் கொண்டு படியுங்கள் ”அந்த நாடோடியின் நனைந்து போன பாடல்“ உங்கள் அகத்தையும் புறத்தையும் சேர்த்தே நனைத்து விடும்.
என்னை சற்று ஆழமாக சென்று நனைத்த சில திவலைகளை இங்கே உலர்த்தி பாதுகாக்க முனைகிறேன்.
“இந்த உலகின் வியப்பை
வாசித்துவிட அலைகிற நாடோடி நான்.“ வாசிப்பின் மீது தீறா காதல் உற்ற அனைவருமே இவர் குறிப்பிட்ட நாடோடி வகையினர் தானே?
இரவென்றால் மையிருட்டு என்றல்லவா இதுகாரும் நினைத்து இருந்தேன் இது என்ன இரவிற்கும் பசியும் ருசியும் உண்டென்கிறார் கவிஞர்?
”இரையைக் கவ்விச் செல்லும்
மிருகம் போல் என்னைக்
கவ்விக்கொண்டு போகிறது இரவு”
இரவின் மீது அனைவருக்கும் இருக்கும் அச்சம் ஒருவகை என்றால் இவரது அச்சம் வேறு வகை,
”தனிமையில் இருப்பவர்களை
ருசி பார்த்துவிடும் இரவுகளை
காண அச்சம் கொள்கிறேன்”
என்கிறார். உண்மைதான் தனிமையில் இருப்பவர்களை இந்த இரவு ருசி பார்க்கவும் செய்கிறது தான்.
“உதட்டுச் சுழிப்புக்கு
ஊடல் உடைதல்“
என்கிறார். உதட்டுச் சுழிப்பு என்னும் சுழலில் சிக்கி நமது கோபம் எல்லாம் காணாமல் போய்விடுகிறது. ஊடல் உடையாமல் கூடல் எங்ஙனம் நிகழும்?
இரவு முடிந்து பொழுது புலர்வதை இவ்வளவு அழகாக எவரும் கூறியதில்லை என்று சவால் விடுகிறேன்
“வண்ணங்களில் நனையும் தூரிகை
ஒரு சித்திரத்தை அருந்தக் கொடுக்கும்
அனுபவத்தை ஒத்ததாய்
அமைந்தது அந்த இரவு”
“தகுதியொத்தவர்“ இந்தக் கவிதை நல்லதொரு உளவியல் ஆய்வு.
“தகுதியொத்தவர் வாய்த்த பிறகே
சுமை இறக்கி மெதுவாய்
இயல்படைய முடிகிறது”
ஆம் நம்மைப் போல ஒரு fellow sufferer ஐக் காணும் வரை நம் துன்பம் மலையெனக் கனக்கிறது. கண்டபின்பு அப்பாடா I am not alone என்கிற ஆசுவாசம் பிறக்கிறது.
நெல்வயல்கள் எல்லாம் கல்வயல்களாய் மாற்றம் அடைவதை ஆற்றாமையுடன் இப்படி பதிவு செய்கிறார்,
“அறுத்துக் கூறு போடப்படும் ஒன்றை
நிலம் என்று சொல்வதற்கில்லை”
தீராப் பெருங் கோபங் கொண்ட ஒரு கவிஞனின் வார்த்தையின் வலிமையை “பைத்தியக்காரனின் இலக்கியம்“ என்கிற தலைப்பிட்டு எழுதுகிறார்.
“குரூரமான மிருகத்தின்
நஞ்சேறிய பற்களைப் போன்றிருக்கும்
அவன் எழுத்துக்கள்”  Yes, his pen is mightier than the sword!
“நேரத்திலே ஊர் செல்ல வேண்டும்” இதில் சேது படத்தில் இளையராஜாவின் குரலில் ஒலித்த காதல் சோகத்தை அவர் எழுதியதை படித்தபின்பு அந்தப் பாடலை இணையத்தில் எடுத்து ஒலிக்க விட்டு தூக்கம் தொலைத்து புரண்டேன்.
என்ன கவிஞரே இரவின் மீது அத்தனைக் காதல்?
”இரவைப் பருகத் தொடங்கியவர் எவரும்
கோப்பையைக் கீழே வைப்பதில்லை”
இது நாம் பெரும்பாலானோர் வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் செய்யும் திருட்டு தான்
“அடுத்த நிறுத்தத்தில்
இறங்கிப் போய்விடப் போகிற
பூக்காரியிடமிருந்து
வாசனையை அள்ளிக்கொண்டேன்”

நான் இங்கே காட்டியது வெறும் பனிப்பாறை நுனி( Tip of an iceberg) மட்டுமே!

நனைய விரும்பும் கவிநேசர்களுக்கு தேவைப் படும் விபரங்களைக் கீழே கொடுத்துள்ளேன்.



No comments:

Post a Comment

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...