Sunday, October 22, 2017

”குலோப் ஜாமூனும் குளோபல் வார்மிங்கும்”


தீபாவளிக்கு குலோப்ஜாமூன் செய்வது என்று எங்கள் வீட்டில் பொதுக்குழு கூடி தீர்மானித்தோம். தீர்மானத்தை எனது மனைவி முன்மொழிந்தார் நான் வழக்கம் போல் வழிமொழிந்தேன்.
எனது மகனை அழைத்துக் கொண்டு நேஷனல் ஷாப்பிங் மால் சென்றேன். எந்த கம்பெனி குலோப் ஜாமூன் மிக்ஸ் ஆனாலும் ஒன்று வாங்கினால் ஒன்று ஃப்ரீ. நான் எனது மனைவி தீர்மானத்தில் அடிகோடிட்டு தெரிவித்து இருந்த ஆச்சி குலோப் ஜாமூன் மிக்ஸ் வாங்கினேன். நன்றாக பார்த்து நேர்த்தியான பாக்கெட்டாக தேர்வு செய்தேன்.
முதல் முறை குளோப் ஜாமூன் செய்தபோது நடந்த “ருசி“கரமான சம்பவம் ஒன்று. எல்லோருக்கும் போன் போட்டு “இந்தா பாத்துக்கோங்க நானும் குளோப்ஜாமூன் செய்யப்போறேன்“ என்று அறிவிப்பு விடுத்து விட்டு ஜோராக ஆரம்பித்தார். மாவு பிசைந்ததிலோ உருட்டியதிலோ ஏதோ தவறு செய்துவிட்டார் எனது இல்லத்தரசி. ஆகையால் எண்ணையில் போட்டதும் கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனி என்று பெர்லின் சுவரோடு பிரிந்து விழுந்தது. அவரின் மெல்லிய மனம் அந்த பிரிவினையை தாங்க இயலவில்லை. உடனே எல்லோருக்கும் போன் செய்து “அவர் சக்கரையை மாற்றி வாங்கி வந்து விட்டதால் குலோப் ஜாமூன் சொதப்பி விட்டது“ என்று பிரகடனம் செய்து விட்டார். இதற்கு மறுப்பு அறிக்கை வெளியிட்டால் போர் மூளும் அபாயம் உண்டு எனவே சற்று இராஜதந்திரத்தோடு அமைதியை கடைபிடித்தேன்.
எனவே இரண்டு முறை போர் மூளுவதற்கான வாய்ப்பை நாமளே ஏற்படுத்தி தரக்கூடாது என்று ஒரு பாக்கெட் மட்டும் எடுத்துக் கொண்டேன். பலமுறை பூஸ்ட் வாங்கும் போது ஃப்ரீ வாங்கி பழகிய அருண் எந்த பாக்கெட்டில் ஃப்ரீன்னு போட்டிருந்தாலும் உடனே பில் போடும் இடத்தில் ஞாபகப் படுத்தி வாங்கி விடுவான். எனவே நான் ஒரு பாக்கெட்டோடு சென்றதைப் பார்த்ததும் “குடு குடு“ என்று ஓடி மற்றொரு பாக்கெட்டோடு வந்தான். “விதி வலியது“ என்று நொந்து கொண்டேன்.
“அம்மா அம்மா, அப்பா ஆச்சி குளோப் ஜாமூன் மிக்ஸ் வாங்கும் போது ஃப்ரீ பாக்கெட் வாங்க மறந்துட்டார்மா நான் தான் ஞாபகப் படுத்தி வாங்கிட்டு வந்தேன்“ என்று பீற்றிக் கொண்டான்.
“ம்க்கும், என்னத்த தான் எம்.எஸ்ஸி லாம் படிச்சாரோ ஒரு பொருள் கூட சரியா பாத்து வாங்க தெரியல”
சினிமாவுக்கு பிறகு அதிக லாஜிக் மீறல்கள் நடக்கும் இடம் மனைவிமார்களின் வசவுகள் தான். யுனிவர்சிட்டி சிலபஸ்ல “கடையில் ஜாமான் வாங்குது எப்படி“ என்றெல்லாமா வருது. திட்டறதுலயும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா?
“டேய் தம்பி உன் வேகம் எனக்கு ரொம்ப சோகம்!” என்று அருணை கடிந்து கொண்டேன்.
இரண்டாம் முறை குளோப் ஜாமூன் செய்த போது முதல் முறை ஏற்பட்ட பிரிவினை மாதிரி ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்று மாவை பிசைந்து உருட்டும் வேலையை எனக்கு இட்டு விட்டு  டிவி நெடுந்தொடரில் மூழ்கி விட்டார்.
இரண்டு சொட்டு விளக்கெண்ணை எடுத்து கண்ணில் விட்டுக் கொண்டு ஜாமூன் பாக்கெட்டில் போட்டிருந்த பொடிப்பொடி எழுத்துக்களால் செயல் முறையை கவனமாக படித்துக் கொண்டேன்.
ஒரு பங்கு மாவுக்கு கால் பங்கு தண்ணீர் என்று போட்டிருந்தான். மாவு கொட்டியபோது அளக்கவில்லை. இரண்டு டம்ளர் மாவு இருக்கும் என்று எடுத்துக் கொண்டு ஒரு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றினேன். கையை விட்டு பிசைந்தால் மழைக்கால களிமண் வயலில் கால் வைத்த கதையாய் கை விரல்கள் நன்றாக சிக்கிக் கொண்டன.
மெல்ல எட்டிப் பார்த்தேன். மனைவி டி.வி சீரியலில் மூழ்கி இருந்தார். கண்களில் நீர் தாரை தாரையாய் வடிந்து தரையெல்லாம் ஈரமாகி இருந்தது. அவர் சகஜ நிலைமைக்கு திரும்புவதற்குள் இதை சரி செய்ய வேண்டுமே என்று பதட்டமாகி விட்டது. இல்லை என்றால் நான் படித்த பி.எட் பட்டமும் கூட கேள்விக்கு உள்ளாகும் அபாயம் இருந்தது.
பாக்கெட்டை எடுத்து மறுபடியும் இரண்டு சொட்டு விளக்கெண்ணை கண்ணில் விட்டுக் கொண்டு “இன்கிரிடியன்ட்“ பார்த்தேன். பால் பவுடரும் கோதுமை மாவும் தான் கலந்துருக்கான் என்று தெரிந்தது. எனவே கோதுமை மாவு சிறிது எடுத்து தூவி சரி செய்து விரல்களை விடுதலை செய்தேன்.
அந்த முறை குளோப் ஜாமூன் ஏதோ வித்தியாசமான சுவையில் உள்ளது என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த ரகசியம் “பாபநாசம்“ பட ரகசியத்தை போல எனக்குள்ளே புதைக்கப்பட்டு விட்டது.
ஃப்ளாஷ் பேக் முடிந்தது. சரி தீபாவளி சம்பவத்திற்கு வருவோம். குளோப் ஜாமூன் பிசைந்து உருட்டுவது நான் தான் என்று முடிவாயிற்று. இந்த முறை எந்த “சிக்கலிலும்” மாட்டிக் கொள்ளக் கூடாது என்று மாவில் சிறிது சிறிதாக நீர் சேர்த்து நல்ல பதத்தில் பிசைந்தேன். உருண்டையும் நல்ல வடிவாக பிடித்தேன். கண்டிப்பாக அனைத்தும்  சமமான கன அளவு உடைய கோளங்கள் தான்.
எனது மனைவி பாகு காய்ச்ச ஆரம்பித்தார். சர்க்கரையில் தண்ணீர் கலந்து “ஒரு சாராயம் காய்ச்சுபவனின்” நேர்த்தியோடு அடுப்பருகில் நின்று கொண்டு பக்குவமாக காய்ச்சினார். சற்று நேரம் சென்றதும் ஒரு சொட்டு எடுத்து விரல்களுக்கிடையில் வைத்து நசுக்கிப் பார்த்தார். சிறிது நேரம் சென்றதும் கரண்டியால் பாகினை ஒரு முப்பது சென்டி மீட்டர் உயரத்திற்கு உயர்த்தி அங்கிருந்து சொட்டினார். மேலும் சிறிது நேரம் சென்றதும் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டுப் பாகினை விட்டார்.
’உன்னோட இந்த ஆராய்ச்சி மனப்பான்மை நம்மள எங்கேயோ கொண்டு போகப் போகுது’ பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்தேன்.
அடுத்ததாக மாவு உருண்டைகளை எண்ணையில் பொறித்தார். இங்கு உள்ள அறிவியல் நுட்பத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கோதுமை மாவு மற்றும் பால் பவுடர் கலவையில் பால் பவுடர் சுவைக்காகவும் கோதுமை மாவு பூரி போல காற்றறையை ஏற்படுத்துவதற்காகவும் சேர்க்கப்படுகிறது. அதனை சர்க்கரைப் பாகில் போடும் போடு அந்த காற்றறைகளில் பாகு புகுந்து அடைத்துக் கொள்வதால் அதன் இனிப்பு சுவை அலாதியாக உள்ளது.
முதல் முறை பொறித்த உருண்டைகள் பாகில் போடப்பட்டன. அவரின் ஆராய்ச்சி மனப்பான்மை “எங்கேயோ கொண்டு போகப் போகுது” என்று வியந்தேன் அல்லவா. உண்மைதான் அண்டார்டிக்காவுக்கே கொண்டு போய்விட்டது.
ஆம் கொஞ்சம் ஓவரா சூடாக்கியதால் சர்க்கரை கோபித்துக் கொண்டு இறுகி விட்டது. மொத்த பாகும் அண்டார்டிக்கா பனிப்பாறைகளாக காட்சி அளித்தது. உறைபனியில் சிக்கிய கப்பல்களாக ஐந்து குளோப் ஜாமூன்கள் வேறு. உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினேன். லாவகமாக எடுத்த காரணத்தால் சேதாரம் 0 பர்சென்ட்.
இறுகிய பாகு என்ன சர்க்கரை படிமங்கள் தானே? எனவே மீண்டும் நீர் சேர்த்தால் கரையும் சுடவைத்தால் பாகு தயார் என்று எனது யோசனையை கூறினேன். மேலும் இதில் உன்தவறு ஏதும் இல்லை. “குளோபல் வார்மிங்“ ஆல் பூமியில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது அல்லவா, அதில் இதுவும் ஒன்று. எனக்கு முடி நரைப்பது கூட “குளோபல் வார்மிங்“ ஆல் தான் என்று சமாதானப் படுத்தினேன். எனது மகன் பொங்கி வந்த சிரிப்புக்கு உதட்டால் அணை போட்டுக் கொண்டே ஆட்காட்டி விரலை துறுத்திக் காண்பித்தான். கண்ஜாடை செய்து அவனை அப்புறப் படுத்தினேன்.
இறுதிக் கட்டப் போரானது எனது இராஜதந்திர நடவடிக்கையால் தவிர்க்கப் பட்டு குளோப் ஜாமூன் நல்ல நிலைமையில் வந்து விட்டது.
“அக்கா உங்க வீட்டில் ஜீரா ஒழுங்கா வந்ததா அக்கா? இந்த “குளோபல் வார்மிங்“ ஆல் ஜீரா ஒழுங்கா வரமாட்டேங்குது அப்புறம் சரிபண்ணிட்டேன்” என்று போனில் கதைத்துக் கொண்டிருந்தார்.


1 comment:

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...