டியுசனுக்கு
போகாமல் கற்றுக் கொண்ட கணக்கு
பதினோறாம்
வகுப்பு படிக்கும் போது பள்ளியில் கற்ற கணிதம் போதுமானதாக இருந்தது. பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண் தேவை ஆதலால் கணிதப் பாடத்திற்கு டியுசன் சேர்ந்தேன்.
“பாரத் டியுசன் சென்டர்” இது தான் டியுசன் சென்டர் பெயர். லால்குடி பூங்காவனம் தியேட்டருக்கு போகும் வழியில் அந்த தியேட்டருக்கு முந்திய சந்தில் இருந்தது. விடுதியில் இருந்து ஒரு ஐந்து பேர் மட்டும் டியுசன் சென்றோம்.
டியுசனில்
பார்த்தால் நாங்கள் விடுதி மாணவர்கள் ஒரு ஐந்து பேர் தான் ஆண்கள் மற்றும் தமிழ் மீடியம். மீதி 15 பேர் பெண்கள் மற்றும் ஆங்கில மீடியம்.
டியுசன்
ஆசிரியர் மோகன் அவர்கள் எங்களை விட ஒல்லியான உடல் வாகு உடையவர். பூவாளுரிலிருந்து சைக்கிளில் வருவார். மிக இனிமையானவர். கணக்கினை தமிழ் ஆங்கிலம்
என இருவருக்கும் பேலன்ஸ் செய்து நடத்துவார். அவரின் தயவால் தான் எனக்கு கல்லூரியல் ஆங்கில
வழியில் படித்தபோது ஆங்கில சொல்லாடல்கள் மிரட்சியைத் தரவில்லை.
நாங்கள் ஆண்கள் பள்ளியை சேர்ந்தவர்கள் ஆதலால் பெண்களிடம் இயல்பாக
பேசும் வாய்ப்பு அமைந்தது இல்லை. எனவே டியுசனில் பெண்கள் “ஹலோ“ என்றால் கூட கூச்சத்தில் வியர்த்து நெளிவோம்.
எங்களில் சற்று துணிச்சலானவன் இரவிச்சந்திரன் அவன் தான் பேசுவான்.
பள்ளியில் இருந்து திரும்பியதும் மற்ற நண்பர்கள் எல்லாம் ஓய்வெடுக்கும்
போது நாங்கள் டியுசன் செல்வோர் மட்டும் ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் மோடில் இருப்போம்.
அந்த மாதிரியான ஒரு மாலை வேளையில் நண்பன் அசோக் என்னை தடுத்தாற்
கொண்டான். “டேய் ஜெயராஜ் ஒரு கணக்கு கொடுக்கிறேன் போடுறியா?“
“எதுவா இருந்தாலும் டியுசன் போய்ட்டு வந்த அப்புறம் பார்க்கலாம்.
உனக்கென்ன ஜாலி டியுசன் போக வேண்டியதில்லை!“
“இல்லடா நீ இந்த கணக்கு போட்டின்னா ஒரு விஷயம் இருக்கு“ என்று ஒரு பொடி வைத்தான்.
நானும் தும்மிக் கொண்டே “என்ன விஷயம்டா?”
என்று சற்று வேகம் குறைத்தேன்.
“உனக்கு மனைவியா வரப்போறவங்க பேர கணக்குப் போட்டே கண்டு பிடிச்சுடுவேன்“
“ஏய் அதெப்படி முடியும்?”
“நான் கேக்குற தகவல்கள் எல்லாம் சரியாச் சொன்னா என்னால் சொல்ல முடியும்”
கணக்குல இல்லாத புதிர்களா? அல்லது கணிதம் செய்யாத
அற்புதங்களா? சொன்னாலும் சொல்லிடுவான். என்று எண்ணியபடி சுவாரசியமானேன். மெல்ல அமிர்தலிங்கத்தின்
இரும்பு பெட்டியில் அமர்ந்தேன்.
அசோக்கும் அருகில் அமர்ந்து கொண்டு. ”இந்தா
கேக்குறேன்” என்று ஒரு நோட்டை எடுத்துக் கொண்டான். ”நீயும் ஒரு ரஃப் நோட்டு எடுத்துக்கோ”
“என்னடா நோட்டெல்லாம் எடுக்க சொல்ற நான் டியுசன் போகணும்டா!”
“இல்லடா சின்னக் கணக்குதான். போட்டீன்னா உன்
மனைவி பேர சரியா சொல்லிடுவேன்.”
அவன் இவ்வளவு திண்ணமாக சொன்னதால் ’டியுசன்
கிடக்கட்டும் கழுத நாளைக்கு பாத்துக்கலாம். இன்னைக்கே என் மனைவி
யார்னு பாத்துட்டுத் தான் மறுவேளை’ என்று எண்ணியபடி தயாரானேன்.
“உன் பேர் ஜெயராஜ், உன் அப்பா பேர் சொல்லு“
“முத்துவேல்“
“அம்மா பேர்?“
“கண்ணம்மாள்“
“ஊர்?“
“சுத்தமல்லி“
“பிறந்த தேதி?“
“11-06-1977“
சொன்னவற்றை எல்லாம் தனது நோட்டில் குறித்துக் கொண்டான். பின்னர்
நோட்டின் குறிப்பிட்ட பக்கத்தை புரட்டி பார்த்து ஏதோ முணுமுணுத்தான். பின்னர் விரல்களை விட்டு ஏதோ எண்ணினான்.
“ஜெயராஜ் இந்தா 11061977 இந்த நம்பர
81 ஆல் பெருக்கு”
“என்னடா சின்னக் கணக்குன்ன இம்மாம் பெருசா இருக்கு”
“ஏய் உன்னாலேயே முடியாதுன்னா எப்படி?” என்று
எனது தன்மானத்தை தூண்டிவிட்டான்.
“இதோ இப்போ சொல்றேன்”
உக்காந்து கொண்டு சிறிது நேரம் படுத்துக் கொண்டு என்று போட்டு
முடித்து விட்டேன்.
“இந்தாடா“ என்று கொடுத்து விட்டேன்
“ஏய் ஒரு நிமிஷம்“ என்று மறுபடியும் பிடுங்கிக்
கொண்டேன். கணக்கு சரியாக உள்ளதா என்று செக் பண்ணிடலாம்.
கணக்கு தவறாகப் போய் “கொல்லங்குடி கருப்பாயி“
ன்னு ஆன்சர் வந்தா என் மனது தாங்காது.
“ம் இந்தா சரியாக இருக்கு”
வாங்கிப் பார்த்தான். மறுபடியும் நோட்டில் அந்த ரகசியப் பக்கத்தை
புரட்டினான். கடைசி இரண்டு இலக்கங்களை மாற்றி எழுதினான்.
நான் கொடுத்த 10 இலக்க எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்களை
மட்டும் மாற்றி எழுதி “இந்த நம்பரை இதே நம்பரால் பெருக்கி சொன்னீன்னா
போதும் பெயரை கண்டுபிடிச்சிடலாம்”
“என்னாது பத்து இலக்க எண்ணின் ஸ்கொயரா? என்னடா
சொல்ற?“
“இதாண்டா லாஸ்ட் ஸ்டெப். உன்னால கூடயா முடியாது?“
என்ற பிரம்மாஸ்திரத்தால் மறுபடியும் வீழ்த்தி விட்டான்.
நானும் படுத்து உருண்டு புரண்டு என்று ஒரு 25 நிமிடங்கள் செலவு செய்து விடை கண்டேன். மீண்டும் ஒரு
பதினைந்து நிமிடங்கள் செலவு செய்து அதனை செக் செய்தேன்.
அதனை அவனிடம் கொடுத்தவுடன் மீண்டும் அந்த குறிப்பேட்டின் இரகசிய
பக்கத்தை புரட்டினான். அப்புறம் நோட்டில் இரகசியமாக சில கோடுகள் போட்டான்.
அப்புறம் ஏதோ ஒவ்வொரு எழுத்தாக எழுதினான். ’என்ன
ரொம்ப நீளமான பேரா இருக்குமோ?’
“இந்தாடா என்று ஒரு பேப்பரை நான்காக மடித்து தந்தான்”
அதில் அழகாக எழுதி இருந்தான் “திருமதி ஜெயராஜ்“
என்று.
அவன் மீது கொலை வெறித் தாக்குதலில் இறங்கி விடுவேன் என்று தெரிந்து
ஓடத் தயாரானான்.
அவனுடைய நோட்டு கீழே விழுந்தது. அதில்
ஒன்றும் இல்லை.
“நீ திருமதி ஜெயராஜ்னு எழுதினத கூட மன்னிச்சுடுவேன்டா ஆனா ஒரு பத்து டிஜிட் நம்பர
ஸ்கொயர் பண்ண வச்சியே அத மட்டும் என்னால மன்னிக்க முடியாதுடா” என்று அவன் மீது பாய்ந்தேன்.
No comments:
Post a Comment