Monday, October 16, 2017

லால்குடி டேஸ்-11 புதுப் புனலில் பாய்ந்த சர்ப்பம்



அது ஒரு மழைக் காலம். குளிப்பதற்கு பம்பு செட்டுக்கு செல்ல இயலாது. கூழை ஆற்றில் கும்மாளமிட்டு குளிக்கலாம். ஆனால் துணை துவைக்கும் கல் எல்லாம் மூழ்கிப் போய் கிடக்கும்.
காலை நேரத்தில் பசுமை போர்த்திய வயல்வெளியின் மீது மெல்லிய வெள்ளைத்துணியை போர்த்தியது போன்ற பனிப் பொழிவு. அது பனித்துளியா அல்லது சிறு மழைத்துளியா என இனம் பிரிக்க இயலா நிலை.
இப்போவெல்லாம் சிறு தூரல் போட்டாலே பசங்கள் எல்லாம் அதிகாலை முதல் செய்திச்சேனல் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். ’அட அவ்வளவு சமூக அக்கரையா?’ என கேட்காதீர்கள், விடுமுறை அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருப்பர். இதில் என்ன சோகம் என்றால் அரியலூர் மாவட்டத்தைப் பொருத்தவரையில் மழைக்காக விடுமுறை என்று அறிவித்த பத்தாவது நிமிடம் பகலவன் கலெக்டரைப் பார்த்து பல்லிலிப்பான். மாணவர்களும் வெயிலில் விளையாட கிளம்பி விடுவார்கள்.
90 களில் எல்லாம் மழைக்காக லீவு விடுவார்கள் என்கிற நினைப்பே எங்களுக்கு வந்தது இல்லை.
மறுநாள் திங்கள் கிழமை பள்ளிக்குச் சீருடையில் செல்ல வேண்டும். (அப்போதெல்லாம் வாரத்தில் திங்கள் புதன் வெள்ளியில் மட்டும் சீருடை மற்ற நாட்களில் கலர் டிரெஸ்) ஆனால் துவைக்காமல் கிடக்கு. இன்றைக்கு மழையில் நனைந்து கொண்டேவாவது துவைத்தாக வேண்டும்.
எங்கே செல்லலாம் என்று யோசனையில் இருந்த போது ஒரு இடம் ஞாபத்துக்கு வந்தது. கூழையாறு செல்லும் வழியில் சாலையோரம் ஒரு பெரிய தூங்கு மூஞ்சி மரம் இப்போதும் உள்ளது. அந்த இடம் வழியே ஒரு பாசன வாய்க்கால் செல்லும். அங்கு சாலையோரப் படித்துறையும் உண்டு. குளிப்பதற்கு அஞ்சும் ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பு சிறுவர்கள் அந்த படித்துறையில் துண்டை நனைத்து உடலைத் துடைத்து குளித்ததாக பேர் பண்ணிக் கொண்டு வருவார்கள் எமகாதகப் பயல்கள்.
கரை மீறிப சீறிய வெள்ளத்தால் படித்துறை சேறு படிந்து கிடந்தது. ஆனால் வயல்களில் நீரை வழிமறித்து மேலேற்றிப் பாய்ச்ச ஆங்காங்கு சிமெண்ட் கட்டைகள் கட்டி ப வடிவ பிளவுகள் வைத்து இருப்பார்கள். அந்த மாதிரி ஒரு சிமெண்ட் கட்டைக்கு சென்று விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.
மழைக் காலங்களில் வரப்புகளில் செழித்து வளர்ந்து கிடக்கும் புல்களில் ஈரம் அப்பிக் கிடக்கும். அதில் கால் வைத்து நடப்பது என்பது எண்ணைக் கொட்டிக் கிடக்கும் கிரானைட் தரையில் நடப்பதற்கு இணையானது. மிகுந்த கவனத்தோடு நடக்க வேண்டும். இல்லையென்றால் வயல்களில் வழுக்கி இறங்கி விடுவோம். அதில் முழங்கால் சேறு இருக்கும். உங்கள் கால்களைப் பிடுங்கி எடுக்க ’கிரேன்’ தேவைப் படலாம்.
வரப்பில் நடந்து சென்று அந்த சிமெண்ட் கட்டைக்கு சென்று விட்டேன். லேசான பசுமை கலந்த பால் போன்ற நிறத்தில் தண்ணீர் சுழித்துக் கொண்டு ஓடியது. ப வடிவ சிமெண்ட் தளத்தில் நீரோடும் பள்ளத்தில் நின்று கொண்டு கட்டைகளில் துணி துவைப்பது வசதியாக இருக்கும்.
மெல்ல பேலன்ஸ் செய்து கொண்டு கால்களை இறக்கி அங்கே கட்டை என்று உள்ளதா அல்லது சேறாக உள்ளதா என்று பரிசோதனை செய்தேன். நல்ல சிமெண்ட் கட்டை உள்ளது. அப்புறம் என்ன துவைக்க வேண்டியது தானே?
பாற்கடலில் குளிக்கிற அனுபவம் யாருக்கு கிட்டும்?! எனக்கு பாற்கடலில் துணிதுவைக்கவே வாய்ப்பு அமைந்துள்ளதே!!
வெள்ளைத் தண்ணீரில் வெள்ளைச் சட்டையை முதலில் துவைக்கலாம் என்று சீருடையை எடுத்தேன். முதலில் சட்டை முழுவதையும் வாய்க்காலில் ஒரு முக்கு முக்கி எடுத்து ஈரமாக்கிக் கொண்டேன். பிறகு சோப்பினை தேய்த்து கும்மினேன். கால்களில் மீன்கள் வழவழப்பாக உரசியபடியும் காலினை முட்டி மோந்த படியும் சென்று கொண்டு இருந்தன.
’அட என்னுடைய வெள்ளை சட்டையில் கரையா கூடாது. எடுடா மறுபடி அந்த சோப்பை’ என்று சம்பவ இடத்தில் சோப்பினை தேய்த்து கசக்கினேன். அதை ஈரமாக்கி மறுபடி தேய்க்க கையால் நீரினை சேந்தினேன்.

’ஆத்தாடி பாம்பு!!’ ஆங்கில எழுத்தான ’யு’ வை கவிழ்த்து வைத்தது போல ஒரு பாம்பு கையில் தொங்கிக் கொண்டு நெலிந்தது.
சப்த நாடியும் ஒடுங்கிப் போய் பாம்பை நீரில் வீசிவிட்டு ஒரே பாய்ச்சலில் கட்டையில் ஏரிக் கொண்டேன். நடுக்கம் குறைய சில நிமிடங்கள் ஆயின.
கொஞ்ச நேரம் சென்ற பின்பு மெல்ல இறங்கினேன். கால்களை சிமெண்ட் கட்டை சுவற்றில் தேய்த்தபடி மெல்ல இறங்கினேன். கால்களில் ஏதோ வழவழப்பாய் தட்டுபட்டது. நான் மிதித்த அடுத்த நிமிடம் நீருக்கு மேல் வரை பாய்ந்து ஓடியது ஒரு பாம்பு. இது பழசா புதுசான்னு தெரியலயே. ’அப்போ இவ்வளவு நேரம் என் கால்களை வழவழப்பாய் உரசிச் சென்றது மீன் இல்லையா’ என்று நினைக்கும் போதே ஒரு நடுக்கம் பரவியது.
”ஆணியே புடுங்க வேண்டாம்” என்று துணிகளை வாரி சுருட்டிக்கொண்டு கிளம்பி விட்டேன். வரப்பில் இருந்த புல் பூண்டுகள் கூட பச்சை பாம்புகளாய் எனக்கு தெரிய ஆரம்பித்தது. எனவே பின்னங்கால் பிடறியில் பட விடுதிக்கு எடுத்தேன் ஓட்டம்.
பாம்பினை கையால் பிடித்த பராக்கிரமன் என்று வரலாறு என்னை பதிவு செய்ய வேண்டும் அல்லவா அதனால் தான் இந்த பதிவு.
டெய்ல் பீஸ்: அந்த வாய்க்கால் மூலமாக நீர் பாய்ச்சிய வயல் வெளியில் தான் இப்போது ஜெயங்கொண்டம் சாலையில் கல்யாண மண்டபம் உள்ளது. மண்டபத்திற்கு செல்பவர்கள் சற்று கவனமாக செல்லுங்கள் அந்த பாம்பு அங்கே சுற்றிக் கொண்டு இருக்கலாம்.


No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...