Sunday, October 1, 2017

மரண ஓட்டம்


மணி காலை 9.30
வானம் மேக மூட்டத்துடன் காலை 6.30க்கான ஒளியை மட்டுமே அனுமதித்து இருந்தது.
அலுவலக பரபரப்பு நிறைந்த ஒரு வேலை நாள் ஆதலால் சென்னையின் கடற்கரை சாலை வழக்கமான பரபரப்பான வாகன சீறல்களுடன் இருந்தது.
அங்கே யாரோ ஓடி வந்து கொண்டு இருக்கிறார்கள். வாங்க யார்னு பார்ப்போம்.
அட அவருக்கு பின்னால் முதுகில் அரிவாள் கைப்பிடி தெரிந்த வண்ணம் ரவுடிகளுக்கான பிரத்தியேக சீருடையிலும் சிகையலங்காரத்தோடும் ஒரு மூன்று ரவுடிகள் துரத்தியபடி ஓடி வருகிறார்கள்.
அந்த பரபரப்பையும் மறந்து மக்கள் ஸ்தம்பித்துப் போய் அந்த சம்பவத்தை பதட்டத்தோடு பார்க்கிறார்கள்.
துரத்தப்படுபவர்தான் நம்ம கதையின் ஹீரோ. அப்போ துரத்துபவர்கள் தானே வில்லன்கள்.
சரி வாங்க நம்ம ஹீரோவே மீதிய சொல்வார்.
லைட்ஹவுஸ் எதிர்ல இருக்கிற ரேடியோ ஸ்டேஷன் ஒட்டி நடந்து வந்து கொண்டு இருந்தபோது என் பின்னாடியே என்னை ஃபாலோ பண்ணி மூன்று பேர் நடந்து வருவது போன்ற ஒரு உணர்வு. அதனால் நடையை சற்று எட்டிப்போட்டேன். அவர்களும் எட்டி எட்டி வேகமாக நடந்தார்கள்.
’என்னடாது என்னை ஏண்டா ஃபாலோ பண்றீங்க’
’பாத்தா ரவுடிங்க மாதிரி டெர்ரரா இருக்காய்ங்களே’
’அடேய் முதுகுக்கு பின்னாடி என்னடா கைப்பிடி நீட்டிக்கிட்டு இருக்கு’
’அது நிச்சயமாக அரிவாள் கைப்பிடி தான்’
பெர்முடாஸ் கலர் கலரா கன்னா பின்னா கலர் சட்டை நீள நீளமான முடி ஷேவ் பண்ணாத முகம். கண்டிப்பா அக்மார்க், ஹால்மார்க், ஐஎஸ்ஐ முத்திரையெல்லாம் குத்தின ரவுடிப் பயலுவ தான்.
நாம யார்கிட்டயும் வம்பு தும்புக்கு போவாத ஆளாச்சே. ஆகா, ஒரு நாள் ஃபேஸ்புக் மெஸஞ்சரில் ஒரு ஆன்டி கிட்ட கடலை போட்டேன் அவளோட புருசனா இருப்பானோ?
யாரா இருந்தா என்ன உயிர காப்பாத்திக்கணும்னா ஓடித்தான் ஆக வேண்டும்.
சற்று லேசாக நடையில் வேகம் கூட்டினேன். அப்படியே அதை மெல்லிய ஓட்டமாக மாற்றினேன்.
அவர்களும் அப்படியே செய்தார்கள். உறுதியாக நம்மள வெட்டத்தான் துரத்துகிறார்கள். இப்போது தான் உயிர் பயம் எட்டிப் பார்த்தது. இந்த ஒரு தருணத்தில் துரத்தும் மரணத்தை வெல்ல வேண்டியது முக்கியம்.
அடுத்த மாதம் புரமோஷன். ஒரு லட்ச ரூபாய் சம்பளம்.
அடுத்த ஆண்டில் அமெரிக்காவில் இரண்டாண்டு தங்கி வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு.
ஆறுமாதங்களாக கனியாமல் ஊடாடிக் கொண்டிருந்த தமிழரசியுடனான காதல் இப்போது மெல்லக் கனிந்து வருகிறது.
வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைக்க கயில் அரிவாளோடு வருகிறார்களே பாவிகள்.
எப்படியாவது மரணத்தை இன்று வென்றே ஆக வேண்டும்.
’இன்னும் வேகமாக ஓடு’
இந்த ஓட்டத்தின் முடிவு எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.
வழியில் போலீஸ் நின்றால் அவர்களிடம் தஞ்சம் அடைந்து விடலாம்.
போக்கு காட்டி ஓட முடியாது. அவர்கள் அனேகமாக ஒரு 100 அடி இடைவெளிக்குள் தான் துரத்துகிறார்கள்.
மணி 9.32
இரண்டு நிமிட லேசான ஓட்டம் உடலின் ஆக்ஸிஜன் சமநிலையை பாதிக்க வில்லை. வேகத்தை கூட்டினால் நிச்சயம் அதிக பிராண வாயு தேவை.
வேகம் கூடியவுடன் பின்னால் வருபவர்கள் அதிகமாக மூச்சிரைத்துக் கொண்டு ஓடி வருகிறார்கள்.
அவர்களை கலைப்படைய செய்தால் கூட போதுமானது.
’பள்ளி நாட்களில் ஓட்டப் பந்தயங்களில் பரிசு பெற்ற வீரன் நீ அது மாதிரி யோசி. ஓட்ட நுணுக்கங்களை சிந்தித்துப் பார்’
’உடலின் அதிகமான பிராண வாயுத் தேவையை சரிகட்ட மூக்கினால் மட்டும் காற்றை உள்ளிழுத்து வெளியே விட்டால் போதாது வாயாலும் உள்ளே இழுத்து விட வேண்டும்’
இருவருக்குமான இடைவெளி அதே நூறடியாக நீடித்து வருகிறது.
’அது என்னடா அவ்வப்போது கையில் செல்போனை எடுத்துப் பார்க்குறீங்க? வேற எந்த ரூட்டிலாவது ஆளுங்களை கூப்பிட்டு மடக்கப் போகிறார்களா?’
வருவது வரட்டும்.
அடேய் பின்னாடி ஒருத்தன் நான்காவது ஆளாக செல்போனில் போட்டோ எடுத்தபடி ஓடிவருகிறான்.
’அவனும் அடியாள் தானோ?’
’இல்லையே பார்த்தால் ஐடி ஊழியன் போல இருக்கானே!’
மணி காலை 9.33
’என்னது மெசேஜ் சவுண்டு?’
சரி என்னன்னு பார்ப்போம்
நண்பன் கதிர் வாட்சப் அனுப்பியிருக்கான்.
”டேய் மச்சி இந்த லிங்க்க க்ளிக் பண்ணுடா ஃபேஸ் புக் லைவ் வீடியோ இருக்கு இந்த நிமிடத்தில் உன்னோட லைவ் வீடியோதான்டா டிரெண்டிங்”
பயபுள்ள நம்ம ஓட்டத்தை ஃபேஸ் புக் லைவ் வீடியோ எடுத்து லைக்ஸ் கமெண்ட் ஷேர் என்று குவித்துத் தள்ளுகிறானே அதற்காகத்தான் பின்னாடி ஓடிவந்து கிட்டு இருக்கானா?
’ஆத்தாடி ஒன்றரை லட்சம் ஷேரா?’
’வெட்டு படுவானா தப்பிச்சுடுவானா பெட்டிங் செய்ய இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் னு கமெண்ட் வேற’
’மரண இடைவெளி ஐம்பது அடியாக குறைந்து விட்டது இன்னும் கொஞ்சம் எட்டிப் போட வேண்டும். மூச்சை உள்ளே இழுக்கையில் மூன்று ஸ்டெப் மூச்சை வெளியே விடுகையில் மூன்று ஸ்டெப் என்கிற மூன்றுக்கு மூன்று என்கிற ரிதத்தை அமைத்துக் கொண்டேன். நிமிடத்திற்கு 30 முறை மூச்சு விடுவது என்பது கலைப்படையாமலும் அதிக ஸ்டேமினாவுடனும் ஓடவைக்கும்.’
மணி காலை 9.34
இன்னும் சற்று வேகத்தை கூட்டினேன்.
துரத்துபவர்களில் ஒருவனுக்கு நாக்கு தள்ள ஆரம்பித்து விட்டது. நின்று விட்டான்.
பின்னாடி ஒரு கண்ணும் முன்னாடி ஒரு கண்ணும் இருந்தால் நன்றாக இருக்குமே. பத்து விநாடிகளுக்கு ஒரு முறை திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடுவது கழுத்து வேறு வலிக்கிறது. என்றாலும் உயிர் வலி மிக அதிகம்.
எதிரே ஒரு நூறு மீட்டர் தொலைவில் ஒரு நான்கு ரோடு ஜங்ஷன் வருகிறது. அதில் திரும்பலாமா இல்லை நேராகவே ஓடலாமா?
பின்னால் துரத்துபவர்களில் ஒருவன் இடது புறம் பார்த்து ஆச்சரியப் பட்ட அதே வேளையில் மற்றொருவன் வலது பக்கம் பார்த்து ஆச்சரியப் பட்டான்.
மணி காலை 9.35
’ஏன் போலீஸ் ஏதும் வந்து விட்டதா’ என்று நிம்மதியுடன் முன்னாள் பார்த்தேன்.
பீச்சிலிருந்து ஒரு இருநூறு பேர் கொண்ட கும்பல் கையில் போனுடன் எங்கள் பாதையை கிராஸ் செய்யும் தொனியில் ஓடி வந்தார்கள்.
இடதுபுற சாலையில் இருந்து நாற்சந்தியை நோக்கி ஒரு இருபது பேர் கொண்ட போலீஸ் படை வழி மறிக்க ஓடி வந்தது.
எனது இடது புறம் உயிர் காக்க வந்த போலீஸ் படை வலது பக்கம் என்னை வெட்டுவதை ரத்தம் சொட்ட சொட்ட வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்ற அலையும் நவீன வலைதள அடிமைகள் கூட்டம்.
போலீஸ் என்னை சுற்றி வலைத்துக் காப்பாற்றி வந்த இரண்டு பேரை மடக்கிப் பிடித்தது.
“சார் ஏன் சார் என்னைப் பிடிக்கிறீங்க?“
“டேய் ஏண்டா அவன வெட்றதுக்கு துரத்துறீங்க?”
அதற்குள் அவர்களிடம் இருந்த வெப்பனை சீஸ் செய்யும் முனைப்பில் முதுகில் இருந்து ஆயுதத்தை உருவினார்கள்.
“என்னடா இது ஹாக்கி ஸ்டிக்க முதுகில் அருவா மாதிரி வச்சிருக்கீங்க?“
“அந்த பையன ஏண்டா துரத்துனீங்க?“
“சார் நாங்களும் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் தான் சார்!“
“சரி அவன ஏன் துரத்துனீங்க? நீங்க கொலை பண்றதுக்காக  அவனை துரத்துறீங்கன்னு லைவ் வீடியோவ ஃபேஸ்புக்ல ஒருத்தன் போட்டுட்டான்டா, அது ஃபேஸ்புக்ல டிரெண்டிங் ஆகி ஒரு கூட்டமே அதை நேரில் பார்க்க வெறியோட கூடிடுச்சி பாருங்க. எங்களுக்கும் தகவல் வந்து நாங்க அவன காப்பாத்த வந்துட்டோம். ஒரு ஐந்து நிமிடத்தில் நீங்க பண்ணின இந்த கலாட்டா நியூஸ் சேனல் காரங்க “பிக் பிரேக்கிங் நியூஸ்“ போடுற அளவுக்கு ஆகிப் போச்சு”
“சார் நாங்க ஏன் சார் அவர கொலபண்ணப் போறோம்?!”
”பின்ன ஏன்டா துரத்துனீங்க?”
“சார் தம்பி போன்ல ஹாட்ஸ்பாட் ஆன்ல வச்சிக்கிட்டு இருந்தாப்ல. நாங்க வைஃபை மூலமா கனெக்ட் ஆகி ப்ரௌசிங் பண்ணிக்கிட்டு இருந்தோம்”
“தம்பி திடீர்னு மூவ் பண்ண ஆரம்பிச்சப்ப சிக்னல் கட்டாக ஆரம்பிச்சுது, அப்போ சோர்ஸ் நெட்வொர்க் இவர்தான் தெரிஞ்சி ஃபாலோ பண்ண ஆரம்பித்தோம். தம்பி என்ன அவசர வேலையா போறாப்லயோ திடீர்னு ஓட ஆரம்பிச்சிட்டாரு“
“அப்போ நாங்க தமிழ்ராக்கர்ஸ்ல ஆளுக்கொரு புதுப்படம் முக்காவாசி டவுண்லோட் பண்ணிட்டோம். சரி ஆபத்துக்கு கூச்சமில்லன்னு பின்னாடியே லொங்கு லொங்குண்ணு ஓட ஆரம்பிச்சிட்டோம்“
“தம்பி என்ன நெட்ஒர்க் தம்பி? ஃபோர் ஜி ஸ்பீட் சும்மா அள்ளுது”
“என்னது, அள்ளுதா உன்ன கொள்ளப்போறேன் பாத்துக்கோ“ என்று போலீஸ் காரர் முறைத்தார்.
“சே சப்புன்னு ஆகிப் போச்சே” என்று வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் மறுபடியும் தலைகுனிந்தபடி (மொபைல் ஸ்கிரீன் பார்த்தபடி) பீச்சுக்கு திரும்பியது.
“மரண பயத்த காட்டிட்டாங்கடா பரமா” என்று மனதுக்குள் கூறியபடி நம்ம ஹீரோ தன் அலுவலகத்திற்கு கிளம்பினார்.
சுபம் என்று கூறும் இந்த நேரம் மணி காலை 9.36.



No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...