Wednesday, October 4, 2017

லால்குடி டேஸ் -9 --பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்…

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்…

முகம் சலனமற்று நிசப்தமாய் இருக்கும்,
தாடைகள் அசையாது,
மெல்லும் ஓசை எனும் மெல்லிசையும் ஒலிக்காது,
இருப்பதோ கல்லென வீற்றிருக்கும் சிலை போல,
ஆனாலும் அரைக்கிலோ முறுக்கை அரைத்து
சுருக்காய் நிரப்பிடுவர் இரைப்பையிலே!!
மேலே கூறிய திறமை உங்களிடம் இருக்குமானால் உறுதியாக கூறலாம் ’நீங்கள் உங்கள் பள்ளிப் படிப்பை விடுதியில் தங்கி பயின்றுள்ளீர்கள்’ என்று.
விடுதி வாழ்க்கை பெரும்பான்மையானோருக்கு பகிர்ந்துண்ணும் பழக்கத்தை கற்றுத் தந்திருந்தாலும் கொஞ்சம் பேருக்கு நொறுக்குத் தீனியை யாருக்கும் தெரியாமல் இரகசியமாக தின்று தீர்க்கும் நுணுக்கத்தையும் கற்றுத் தந்துள்ளது.
இந்த இரகசிய தீனி உண்ணும் வழக்கம் பெண்கள் விடுதியில் நிறைய இருக்கும் என என்னுடைய அக்கா கூறக் கேட்டிருக்கிறேன்.
தீபாவளி அல்லது பொங்கல் விடுமுறை முடிந்து விடுதி திரும்பும் போது ஒவ்வொரு மாணவனும் பை நிறைய முறுக்கு,அதிரசம், கெட்டி உருண்டை, ஜாங்கிரி, மைசூர் பாகு (வீட்டில் செய்தது என்பதால் பெயர் கூறினால் ஒழிய ஒரு பயலாலும் அது மைசூர் பாகு என்பதை கண்டு பிடிக்க இயலாது) என நாலாவிதமான தீனிகள் பல்வேறு சுவைகளில் திண்ணக் கிடைக்கும்.
பகுத்துண்டு தீர்த்தோம் என்றால் இரண்டு நாட்களில் தீர்ந்து விடும். ஏனென்றால் எல்லோர் வீடுகளிலும் தீனி செய்வதில்லை. சிலர் வீடுகளில் பண்டிகைகளில் “கவிச்சு“ நனைப்பதே பெரிய விஷயமாய் போய்விடும் என்பதால் தீனி எல்லாம் கானல் நீர் தான்.
ஒரு சில எமகாதகர்கள் மட்டும் தீனியை பெட்டியில் வைத்துப் பூட்டிவிடுவார்கள். பள்ளியில் இருந்து திரும்பி பெரும்பாலானோர் விளையாடவோ அல்லது இரயில் பாதை ஓரத்திற்கோ சென்றிருக்கும் நேரம் பார்த்து பெட்டியை திறந்து கொஞ்சம் எடுத்து லுங்கிக்குள் மறைத்துக் கொண்டு மொட்டை மாடி ஏகுவார்கள்.
அங்கே போனால் தான் தெரியும் ’என் இனமடா நீ!!’ என ஆரத்தழுவி வரவேற்க ஒரு பத்து பதினைந்து பேர் இருப்பார்கள்.
புறநானூற்றில் ஆநிரைக் கவர்தல் பற்றிப் படித்திருப்போம். அந்த பாதிப்பில் சக நண்பர்கள் “தீனியைக் கவர்தலில்” (திருடித் திண்பது என்று டீசண்டாகவும் கூறலாம்) ஈடுபடுவது உண்டு.
முதல்படியாக உளவுத்துறை மூலம் தகவல் திரட்டுவது. மொட்டை மாடியில் கண்டு தீனி கேட்டபோது இல்லை என விரட்டியடிக்கப் பட்டவர்கள் தன்னிச்சையாக “ரா“ ஏஜென்டாக செயல்படுவார்கள்.
இரண்டாவதாக “ஏய் செந்தில் தீனி எதாவது இருக்காடா?” என நூல் விடுவது. அவன் கண்டிப்பாக இல்லை என்று தான் கூறுவான்.
மூன்றாவதாக நல்ல திறமை வாய்ந்த தொழில் நுட்ப வல்லுநர்களை அடையாளம் கண்டு பணியேற்கச் செய்வது.
சில தகர பெட்டிகளை நடுவில் பூட்டி விட்டு பாதுகாப்பாக உள்ளது என்று வாளாவிருக்கலாகாது. ஏனென்றால் இரண்டு முன்புற மேல் முனைகளை சற்று நெம்பினால் ஒரு கையை விடலாம். இன்னும் நெம்பினால் ஒரு ஆறாவது பையனையே உள்ளே அனுப்பும் அளவுக்கு இடமளிக்கும்.
மேலே கூறிய நுட்பம் சில இடங்களில் பலிக்காமல் போகலாம். அங்கே வேற வழியே இல்லை “கொண்டை ஊசி வளைவு“ தான். பசங்க போட்டிருக்கும் பூட்டுக்கள் எல்லாம் திண்டுக்கல் பூட்டின் “சைனா செட்“ மாடல் தான் என்பதால் வேலை முடிய சிரமம் எதுவும் இருக்காது.
“தப்பு பண்ணினாலும் தடயம் இல்லாமல் பண்ண வேண்டும்” என்பதற்கு இணங்க தீனி இருந்ததற்கான தடயமே இல்லாமல் பண்ணி விடுவது வழக்கம்.
தீனி கேட்டபோது “பெட்டிய வேணும்னா திறந்து காட்டுறேன் பாருடா சுத்தமா இல்லை” என்கிற ரேஞ்சுக்கு கதை அளந்திருப்பார்கள் ஆதலால் வெளியே சொல்ல இயலா கையறு நிலையில் கமுக்கமாக இருந்து விடுவார்கள்.
(மேலே கூறப்பட்ட “ஆநிரைக் கவர்தல்“ தீனியின் பொருட்டு மட்டுமே நடக்கும். மற்றபடி பணம் காணாமல் போனதாக நான் படித்த இரண்டாண்டுகளில் புகார் எதுவும் கேள்விப் பட்டதில்லை)
லால்குடி பற்றிய மிக முக்கியமான ஒன்றை இங்கே பதிவு செய்ய வேண்டியது அதிமுக்கியமானது. லால்குடி வட்டாரங்களில் காலை வேளைகளில் இது ஒரு அன்றாட காட்சியாகவே காணலாம்.

“குழாய் புட்டு”
பருத்த “மொந்தன்“ வாழைப் பழத்தை தோலுறித்து வரிசையாக கிடத்தி வைத்திருப்பது போல வாயகன்ற கூடையில் குழாய் புட்டுக் களை கிடத்தி ஈரத்துணியால் மூடி தலையில் வைத்துக் கொண்டு “கொழாப் புட்டேடேய்ய்ய்…” என்று கூவிக் கொண்டு வருவார்கள்.
முழுப்புட்டு ரூபாய் ஒன்று, அரைப்புட்டு ஐம்பது பைசா மற்றும் கால்புட்டு இருபத்தைந்து பைசா என்கிற விலைகளில் விற்பார்கள்.
நாம் கேட்கிறத் தொகைக்கு ஒரு பேப்பரில் புட்டை எடுத்து போட்டு அதன்மேலாக தேங்காய்த் துருவலை அள்ளிப் போட்டுத் தருவார்கள். அரைப்புட்டு வாங்கினால் இருவர் தாராளமாக சாப்பிடலாம். ஒவ்வொரு சீனியர் மாணவரும் (பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு) சிற்சிறு வேலைகளுக்கு என்று ஒரு சிறுவர் படை (ஒன்பதாம் வகுப்புக்கு கீழ்) ஒன்றை அமர்த்தியிருப்பார்கள். எனவே அண்ணன் மார்கள் தம்பிமார்கள் பொருட்டாவது நாள் தோறும் புட்டு வாங்குவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
“உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரம் தூரம் தெரியாது
உன்மேல் மற்றொரு பூ விழுந்தால் என்னால் தாங்க இயலாது”
என்ற வைரமுத்துவின் வரிகளில் கூறியது போல அவ்வளவு நேரமாக கட்டுக் கோப்பான வடிவோடு இருக்கும் புட்டின் மீது கை பட்டவுடனே அது மென் மாவாக உதிரும்.
அள்ளி வாயில் போட்ட உடனே நாவின் முன் புற சுவை அரும்புகளில் இனிப்பைத் தூவும். அடுத்ததாக இரண்டு ஓர சுவை அரும்புகளின் மேல் மாவோடு கூடிய உப்பு ருசியை பனிச் சாரலென மென்மையாக வீசும், இறுதியாக தொண்டைக்குள் இறங்கும் வேளையில் தேங்காய் துருவல் ருசியை “ஃபைனல் டச்“ ஆக “நச்சென்று“ நாவின் அடியில் நங்கூரமென பாய்ச்சி நிறுத்திச் சென்று விடும் பிறகு அடுத்து காலை உணவு உண்ணும் வரை புட்டின் சுவையோடு நாவின் அரும்புகள் கதை பேசிய வண்ணம் இருக்கும்.

அடுத்ததாக வறுத்த கடலை வண்டி. இரும்பு வாணலின் மேல் மணலோடு உப்பு நீர் விட்டு பிசறிய கடலைப் பயிரினை போட்டு “நங் நங்“ என்று ஓசை எழுப்பி வறுத்தபடி செல்வார்கள். வாடிக்கையாளரை அழைக்க அவர்கள் ஒன்றும் மெனக் கெடத் தேவையில்லை. அந்த ஓசையே அழைத்து வந்து சேர்க்கும். பேப்பரை  மெல்லிய கூம்பு வடிவில் சுருட்டி அதனுள் வறுத்த கடலைப் பயிரினைப் போட்டு தருவார்கள்.
ஒரு பொட்டலம் இருபத்தைந்து பைசா. வாங்கினால் எண்ணி இருபத்தைந்து கூட இருக்காது. அட் எ சிட்டிங்கில் வறுத்த கடலையை கிலோ கணக்கில் உரித்துத் தள்ளும் என் போன்றோருக்கெல்லாம் அந்தப் பொட்டலம் “யானைப் பசிக்குச் சோளப் பொறி” அது நல்ல சுவையாக இருந்தாலும் கடலை விளைச்சலுக்குப் பெயர் போன சுத்தமல்லிக் காரனான எனக்கு வாங்க நெஞ்சம் துணியவில்லை.
தீனி தலைப்பின் கீழ் பகிரத் தக்க ஒரு ருசிகரமான சம்பவம் ஒன்று.
விலங்கியல் பாட வேளைகளில் எலும்புக் கூட்டுக்கு பதிலாக கூப்பிட்டு நிறுத்த தோதான சர்வ லட்சணங்களும் பொருந்திய நண்பன் “ராஜா“ ( பெயர் மாற்றப் பட்டுள்ளது).
அவன்பால் அக்கரை கொண்ட யாரோ “கொண்டைக் கடலை“ சாப்பிட்டால் உடல் பெருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். உடனடியாக அரைக் கிலோ கொண்டைக் கடலையை வாங்கி பெட்டியில் பதுக்கி விட்டான்.
நாள் தோறும் காலை வேளைகளில் முன்தினம் ஊற வைத்த கொண்டைக் கடலையை தின்ன ஆரம்பித்து விட்டான். இரண்டு மூன்று தினங்களில் நல்ல பலன் தெரிந்தது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் அல்ல. அவனுக்கு பெருத்தது என்னவோ “விதைக் கொட்டைகள்“ தான்.
வெளியில் சொல்ல கூச்சப் பட்டுக் கொண்டு வெளியே சொல்லவில்லை. ஆனால் நடக்கும் போது உரசியதால் அசௌகரியம் அதிகமாகவே வெளியே சொல்லி விட்டான். அப்புறம் மெடிக்கலுக்கு போய் சம்பவத்தை எடுத்துக் கூறி மாத்திரை வாங்கிப் போட்டுக் கொண்டான். ஒரு மாத்திரையிலேயே சரியாகப் போய்விட்டது. பிறகென்ன அவனுக்கு அந்த மாத்திரையின் பெயரையே “பட்டப் பெயராக“ சூட்டியாயிற்று.
அதன் பிறகும் கூட அந்த மெடிக்கல் காரரே சலிப்படையும் விதமாக ஐந்து முறை அந்த மாத்திரையை தனியே சென்று ரகசியமாக வாங்கி இருக்கிறான்!!


































No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...