எங்கள் பள்ளியில்
காலாண்டுத் தேர்வுக்கு பிந்தைய பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு பத்து மற்றும் பனிரெண்டாம்
வகுப்பு மாணவர்களுக்கு நடந்தது. பெற்றோர்கள் குழுமி இருந்த அரங்கில் பேச வாய்ப்பு கிடைத்தது.
ஒரு சில படித்த பெற்றோரும் பெரும்பாலான படிப்பறிவு இல்லாத பெற்றோரும் நிறைந்த அரங்கு.
எனவே பதின்பருவ புரிதல் மற்றும் படிக்கும் முறை சார் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக
என்னுடைய உரையை அமைத்துக் கொண்டேன். சற்றே செழுமை படுத்தி எழுத்து வடிவமாக வழங்கி உள்ளேன்.
உலகத்திலேயே
கடினமான வேலை எது தெரியுமா? 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளை வளர்ப்பது தான்.
இவ்வளவு
நாள் நீங்கள் போகும் பாதையில் ஆட்டுக் குட்டி போல மண்டையை ஆட்டிக் கொண்டு வந்தவர்கள் இப்போது சற்று நின்று நிதானித்து பாதை மாற முயற்சிப்பார்கள்.
இதுநாள்
வரை எந்த பிரச்சினையிலும் உங்கள் கருத்து தான் அவர்கள் கருத்தாகவும் இருந்து வந்திருக்கும். ஆனால் இப்போது நீங்கள் எதைக் கூறினாலும் கேள்வி கேட்காமல் ஏற்பதில்லை.
உங்களைக்
கட்டிக் கொண்டு உறங்கிய பிள்ளைகள் பிரிந்து படுப்பதை விரும்புவார்கள்.
எப்போ
பார்த்தாலும் உங்கள் முந்தானையை பிடித்துக் கொண்டு அலைந்தவர்கள் இப்போது நண்பர்களுடன் நேரம் காலம் தெரியாமல் அரட்டையில் திளைப்பார்கள்.
தான்
எப்படிப் பட்ட ஆண் அல்லது பெண் பிள்ளையாக தன்னை சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்வது என்கிற குழப்பம் ஏற்படும். சினிமா நாயக நாயகி பிம்பங்களால் தாக்குண்டோ அல்லது பிடித்த விளையாட்டு வீரர்களின் தாக்கத்தாலோ அல்லது பிடித்த ஆசிரியர்களின் தாக்கத்தாலோ ஏன் தெருவில் ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும்
பொறுக்கிப் பசங்களின் ஆளுமை பாதிப்பில் கூட தங்களை கட்டமைக்க விரும்புவார்கள்.
தோற்றம்
பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பிடித்த ஹீரோ போல மாற்றிக் கொள்வார்கள். இதில் ஒத்த வயதுடைய நண்பர்களின் ஊக்கமோ அல்லது விமர்சனமோ அவர்களை இன்னும் பாதிக்கும்.
உங்களுக்கும்
பிள்ளைகளுக்கும்
இடையே இடைவெளி ஏற்படும். மெல்ல மெல்ல தங்களின் நடவடிக்கைகள் குறித்த ரகசியத்தன்மை காப்பார்கள்.
நான்
இதுகாரும் கூறியவை குறித்து அஞ்சத் தேவையில்லை. குழந்தைகளின் உடலின் வெளிப்புற மற்றும் உட்புற மாறுபாடு மற்றும் அதன் விளைவாக தோன்றும் உளவியல் மாறுபாடு போன்றவற்றால் 90 விழுக்காட்டுக்கு மேலான குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகள் தான் இவை.
இவற்றையெல்லாம் புரிந்து
கொண்டு நாம் பக்குவமாக அவர்களை வழிநடத்தினால் அவர்களை தடம் மாறாமலும் தடுமாறாமலும் காக்கலாம்.
பதின்
பருவ குழந்தைகளின் திறமையும் வலிமையும் காட்டாற்றைப் போல அபரிமிதமான ஆற்றல் உடையது. நாம் சரியாக நெறிபடுத்தி அந்த ஆற்றலை ஆக்கப் பூர்வமாக மாற்றிக் கொள்ள வேண்டும். தவறினோமானால் யாருக்கும் பயன் படாமல் கடலில் கலக்கும் காட்டாறு போல குழந்தைகள் சமுதாயத்திற்கு பயனில்லாமல் போய் விடுவார்கள்.
அவர்களைப்
பொருத்தவரை சந்தோஷத்தை தரும் எதுவுமே நல்லவைதான். துரதிஷ்டவசமாக கெட்ட விஷயங்கள் கவர்ச்சிகரமாகவும்
தற்காலிக பேரின்பத்தையும் தரக் கூடியது என்பதால் அதனை முயற்சித்துப் பார்க்கத் தலைபடுவார்கள். தனக்கென்று லட்சியம் வைத்துக் கொண்டு பொறுப்பாக அதனை நோக்கி முன்னேறிச் செல்லும் மாணவர்கள் கூட அந்த கவர்ச்சியாலும் ஒத்த வயதுடைய நண்பர்களின் ஆசை வார்த்தையாலும் மயங்கி தவறான பாதையில் செல்ல முயற்சிப்பார்கள். அது குறித்த குற்ற உணர்வும் பயமும் அவர்களின் அன்றாட செயல்பாடுகளை நிலைகுலையச் செய்து அதிக பதட்டமும் தடுமாற்றமும் உள்ளவர்களாக அவர்களை மாற்றிவிடும்.
எனவே
நல்ல பழக்க வழக்கங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களாகிய எங்களுக்கும் பெற்றோர்களாகிய உங்களுக்கும் பாதிப் பாதி உள்ளது.
மேற்கூறிய
விஷயங்களை எல்லாம் பதின் பருவ குழந்தைகளின் பெற்றோர் புரிந்து கொண்டிருப்பது அவசியம்.
தற்போது
படிப்புக்கு வருவோம்.
பிள்ளைகள்
எங்களிடம் இருப்பது ஏறக்குறைய ஒரு எட்டு மணிநேரங்கள். மிச்ச நேரம் உங்களிடம் தான் உள்ளனர். அதற்காக 24 மணி நேரங்களும் ஒரு குழந்தை
படித்துக் கொண்டிருப்பது சாத்தியமல்ல. வேண்டுமானால் கோழிப்பண்ணை விடுதிப் பள்ளிகளில்
இது சாத்தியப் படலாம்.
இரவில் ஏழு மணி
முதல் ஒன்பது மணி வரை மேலும் அதிகாலை மணி ஐந்து முதலாகவும் என அவர்களின் படிப்பு நேரத்தை
அமைத்துக் கொள்ளலாம். பரிட்சை காலங்களில் தேவைப்பட்டால் கூட்டிக் கொள்ளலாம். தினந்தோறும்
படிப்பதென்றால் இது போதுமானது. இரவு பனிரெண்டு வரை படி அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து
படி என்று கொடுமை பண்ணாதீர்கள். இந்த வயது பிள்ளைகளுக்கு நல்ல உணவும் நல்ல உறக்கமும்
அவசியம். அது அமைந்து விட்டால் விழித்திருக்கும் மற்ற நேரப் பணிகளில் தொய்வு ஏற்படாமல்
செய்து முடிப்பார்கள்.
அதிகாலை ஒரு மணி
நேரப் படிப்பை மட்டும் எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்காதீர்கள். இரவு நேர மனம் முழுவதும்
எழுதப்பட்ட கரும்பலகை போல கொச கொச என்று குழப்பம் நிறைந்ததாக இருக்கும். நமது சிந்தனைகளில்
அந்த நாட்களின் நிகழ்வுகளின் தாக்கம் இருக்கும். எனவே எந்த செயலிலும் கவனம் 100 விழுக்காடு
செலுத்த இயலாது.
ஆனால் அதிகாலை நேர
மனம் சிறு கீறல் கூட இல்லாத புத்தம் புது கரும்பலகை போன்றது. அந்த நேரத்தில் எதையும்
முழு கவனத்தோடு செய்து விரைந்து முடிக்க இயலும். கடினப் பாடங்களை அந்த நேரத்தில் படித்தோமானால்
கடினத்தன்மை கற்கண்டாக கரைந்து இனிமையாக மாறிவிடும்.
100க்கு 90 மதிப்பெண்ணுக்கு
மேல் எடுக்கும் எல்லா குழந்தைகளும் திறமையானவர்கள் தான். 100 க்கு 100 என்பது வினாத்தாளின்
கடினத்தன்மை, அந்த நேர சமயோசிதம் மற்றும் நேர்த்தியாக
விடை எழுதும் பாங்கு போன்ற இன்னும் பல காரணிகளை உள்ளடக்கியது. 100 க்கு 100 எடுத்தால்
சந்தோஷப் படுங்கள். எடுக்கச் சொல்லி உற்சாகப் படுத்துங்கள். மாறாக 95 எடுத்த குழந்தையிடம்
ஏன் 100 எடுக்க வில்லை என்று தண்டிப்பதோ அல்லது கோபிப்பதோ நிச்சயமாக வேண்டாம். சிரித்த
முகத்தோடு பாராட்டி விட்டு அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்யப்பா என்று கூறுங்கள்.
கடைசியாக ஒன்று
“ஒரு மீன் மரம் ஏற இயலாது மீறி அதனை மரம் ஏற வேண்டும் என எதிர் பார்த்தோமானால் வாழ்நாள்
முழுவதும் தன்னை அது ஒரு முட்டாள் என்று கருதியபடி வாழும்” என்று மேல்நாட்டு அறிவியல்
அறிஞர் ஐன்ஸ்டீன் கூறி இருக்கிறார். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை ஒன்று இயல்பாகவே
உண்டு. கணித அறிவு இல்லா குழந்தையிடம் இலக்கிய அறிவு இருக்கலாம். எந்தப் பாடத்திலும்
ஆர்வமில்லா குழந்தைக்கு ஓவியத்திலோ விளையாட்டிலோ ஆர்வம் இருக்கலாம். எனவே கணிதப் பாடம்
வராத குழந்தைகளை மேத்ஸ் குருப் படித்து இஞ்சினியரிங் சேர்ந்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்
படுத்தாதீர்கள். அவர்களுக்கு ஆர்வமுள்ள பாடங்களில் அவர்கள் “சச்சின் டெண்டுல்கர்” ஆகமுடியும்.
நன்றி.
அருமை
ReplyDelete