Tuesday, August 9, 2011

நேனோ டெக்னாலஜி- ஓர் அறிமுகம்

இது ஒரு புதுவிஞ்ஞானம். எப்படின்னா, எந்த வஸ்துக்களையுமே, அணு அளவில அனுகிபார்த்தீங்கன்னா, அதிலருந்து உண்டாகிற பொருட்கள், அது ஆர்கானிக்காவோ இல்ல இனார்கானிக்காவோ எப்படி பட்ட வஸ்துவையும் அதன் அணு அமைப்பில போயி மடக்கி புடிச்சாச்சினா, அதான் இந்த நேனோ டெக்னாலஜி. மிகச்சிறிய குட்டி சாமன்கள், நம்ம பேசற செல்போன்லருந்து, ரேடியோ, கம்ப்யூட்டர், இத்யாதிகள் எல்லாம் நம் கையடக்கத்துக்குள் வரும் சமாச்சாரம்.

முதல்ல இந்த நேனோன்னா என்னா அப்படின்னு நீங்க கேட்கிறது புரியுது. அதாவது அளக்கிற சமாச்சாரம். ஒரு மீட்டர் நீளத்தை எவ்வளவு சின்ன சின்னதா கூறு போடமுடியுமோ அவ்வளவு கூறு போடுங்க, அதாவது ஒரு பில்லியன் கூறு, என்ன மில்லியன் பில்லியன்னு அமெரிக்கா காரன் மாதிரி பேசறேன்னு பார்க்கிறீங்களா, பில்லியன்னா, ஒன்னுக்கு அப்புறம் ஒரு ஒன்பது சைபர் போட்டு வரும் தொகை தான் அது, அவ்வளவு கூறு , அதாவது நம்ம ஊரு கணக்குக்கு 100 கோடி. ஆக ஒரு மீட்டர் நீளத்தை 100 கோடியால வகுத்தா, அதாவது 100 கோடி பாகத்தில ஒரு பங்குத்தான் நேனோன்னு சொல்றது. அந்த நீளத்திலதான் இனி எல்லாம். இந்த நீளத்தில தான் அணுக்கள் இருக்குது. அதாவது ஒரு 10 ஹைட்ரஜன் அணுக்களை வரிசையா அடுக்கினா வரக்கூடிய நீளம் தான் அந்த நேனோ நீளம். ம்.. இப்ப புரிஞ்சுதா, எங்கப்பாரு சொலறமாதிரி ஒரு படி பாலு குடிக்குனும் போல, இத்த விளக்கிறதுக்குள்ள!

ஆக இனி வரும் செய்பொருட்கள் எல்லாம் இந்த நீள அகலத்தில வரபோகுது. அந்த மாதிரி கொண்டுவர தொழில்நுட்பம் தான் இந்த நேனோ டெக்னாலஜி. இந்த டெக்னாலஜியால வரக்கூடிய புரட்சி, அந்த காலத்தில நடந்த தொழில் புரட்சிக்கு சமமா வரப்போவதா எல்லாரும் பேசிக்கிறாங்க! 'இனி ஜகம் அகம் எல்லாம் நம் உள்ளங்கை அளவில்' ன்னு நம்மாளுங்க மாதிரி கவிதை எழுத வேண்டியதுதான். இந்த தொழில் புரட்சி, எப்படி இன்னய தேதிக்கு எல்லா துறைகளிலும் வரபோகுதுங்கிறதை கொஞ்சம் விளக்கமா பார்க்கலாமா?

முதல்ல, நமக்கு பூமியிலருந்து கிடைக்கிற இந்த கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு, அவ்வளவு சுலபமா வெளியில கொண்டுவரமுடியற சமாச்சாரமில்ல. பூமி குள்ள எல்லாம் மண்ணுடேயும், தண்ணியோடயும் தான் இந்த எண்ணைய் வளங்க கலந்து கிடக்கு. அத சாமார்த்தியமா பிரிச்சு, தனியா எண்ணெய்ய பிரிச்சு பிறகு சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுப்ப ஏகப்பட்ட செலவு. அதத்தான் நம்ம ஊரு ONGC, OIL ங்கிற கம்பெனிங்க செஞ்சுக்கிட்டுருக்கு. ஆனா இந்த நேனோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த எண்ணெய்களை பிரிச்செடுக்கிற வித்தை வந்திருச்சு, இதுனால என்ன புண்ணியம்னு கேட்கிறீங்களா, இன்னெக்கு கச்சா எண்ணெய் ஒரு பேரல் 60 டாலருக்கு மேலே விக்குது, இந்த தொழில்நுட்ப புண்ணியத்தால, இந்த எண்ணெய் உற்பத்தி பண்ணக்கூடிய விலை குறைஞ்சு, நாலைக்கு நீங்க பெட்ரோல் ஸ்கூட்டருக்கு போட லிட்டர் 25-30 ரூவா குள்ள வர வாய்ப்பிருக்கு. ஏன்னா, அணு அளவில தண்ணி, மண்ணு எல்லாம் சமம்மா பிரிக்க கூடிய சாமான்கள் இந்த நேனோ டெக்னாலாஜியால கண்டுபிடிக்கபட்ட பொருட்களால செய்யப்பட்டு, அதை சுலுவா பிரிச்சி போட உதவபோவது. இதுக்கு மேலே இதை பத்தி தெரிஞ்சுக்குணும்னா, இணையத்தில நிறைய ஞான சுரங்கமே இருக்கு! போய் கூகளை உட்டு ஒரு தட்டு தட்டுங்க, வந்து கொட்டும்!

அடுத்தது மருத்துவத்தில எப்படி உபயோகம்னு பார்க்கலாமா! நீங்க சயின்ஸ் ஃபிக்ஸன் மூவி பார்க்கிற ஆளா இருந்தா, அந்த காலத்தில படம் பார்த்திருப்பீங்க, சிலபல டாக்டருங்க, தங்களை சின்ன உருவமாக்கிக்கிட்டு, வியாதியஸ்தன் உடம்புல ஒடற ரத்தக்குழாய்குள்ள புகுந்து, ரத்த தேங்கி அடச்சிருக்கிறதை திறந்துவிட்டு, அவனை குணமாக்கி, அவங்க வெளியில வந்து பழயபடி தங்க உருவத்துக்கு வந்துடுவாங்க. என்ன, எஸ்ஜே சூர்யா மாதிரி நியூ படக்கதை சொல்றேன்னு நினைக்காதீங்க. இது இப்ப உண்மையாலுமே நடக்க போகுது. இந்த நேனோ டெக்னாலஜியால செய்யப்பட்ட சின்ன ரோபோட்டுகளை உடம்புகுள்ள புகுத்தி, அது எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்துடும், வெளியில இருந்து நம்ம ரிமோட் கன்ட்ரோல்ல இயங்கி, அத்தனையும் கச்சிதமா முடிச்சிடும். இந்த ஓபன் ஹார்ட் சர்ஜரின்னு சொல்றாங்கள்ள, அதெல்லாம், நிமிஷத்தில, நெஞ்ச கிழிக்காம இதயத்தில அடைப்பு எல்லாம் நீக்கவும், அப்புறம் இந்த கேன்சர் வந்தா, அந்த கேசர் செள்ளுங்களை மட்டும் அழிச்சிட்டு வரத்துக்கும் இது பயன்பட போகுது, அப்படியே புல்லரிக்கிதில்லை! இதுதான் அந்த நேனோ டெக்னாலஜியின் மகிமை! இப்ப உடனடியா, 'LabNow Inc'ங்கிற கம்பெனி ஒன்னை கண்டுபிடிச்சிருக்காங்க இந்த தொழில் நுட்பத்தை உபயோகிச்சு, அது என்னான்னா, சும்மா விஷிட்டிங் கார்ட் மாதிரி இருக்கிற சென்சர்ல ஒரு துளி ரத்ததை வச்சிட்டா, அது ரீடர்ல போட்டு எடுத்த ஒரு நிமிஷத்தில உங்க ரத்ததில இருக்கிற வெள்ளை அணுக்கள் அளவை கரக்டா சொல்லிடும் . அதவச்சு மேற்கொண்டு மத்த ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க டாக்டர்ங்களுக்கு உதவும் ஒரு டெஸ்ட் இது. இப்ப வழக்கமா செய்ற மாதிரி லேப்ல கொடுத்து செய்ய குறைஞ்சது பல வாரங்கள் ஆகலாம். (டாக்டர் அம்மா, அய்யாங்க யாராவது, இதெ கன்ஃபார்ம் பண்ணி பின்னோட்டம் போடுங்க!, ம்.. அப்படியாவது இத்த படிச்சு பின்னோட்டம் போடறாகளான்னு பார்ப்போம்!)

அடுத்து இந்த தொழில்நுட்பத்தால செய்யப்பட்ட ஸ்ட்ரக்சரல் பொருட்கள், அதாவது மூல பொருட்கள். இந்த மூல பொருட்களை வச்ச இனி செய்ய போற காருங்க, ஆட்டோமொபைல், லேப்டாப் கம்ப்யூட்ருங்க எல்லாம், கனம் கம்மியாவும் அதிக சக்திவாயந்ததாகவும் இருக்கும், அதுனால இந்த கார், மற்றும் ஆட்டோமொபைல் தொழில்ல ஒரு புது புரட்சியே வரப்போகுது.

அடுத்தது நம்ம அன்றாடம் உபயோகபடுத்த போற எலெக்ட்ரானிக்ஸ்ல எப்படின்னு பார்ப்போம். மொத்த எலெக்ட்ரானிக்ஸ்க்கும் மூலப் பொருள், செமிகண்டக்டர்னு, அந்த பொருளை இந்த நேனோ டெக்னாலாஜியில உருவாக்கப்பட்ட பொருட்களால செஞ்சு, அதிசியக்ககூடிய சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர், மற்றும் கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் எல்லாத்திலயும் புரட்சி வரப்போகுது. எப்படின்னா, இப்ப உள்ள பொருட்கள் எல்லாம் எலக்ட்ரான்களை அதிவேகமா அனுப்புனாலும் அந்த வேகம் ஒளியின் வேகம், அதாவது வேகத்தின் எல்லை 'wavelength of light' வரத்தான். ஆனா இந்த எல்லையை உடச்சிக்கிட்டு, வேகமா போகக்கூடிய 'quantum mechanics'ல வர 'quantum dots' கணக்கான பொருட்களால செஞ்சு போடறதால, வேகம் அதிகமாகும். இந்த வேகம் கூடினா, இப்ப இருக்கிற கம்ப்யூட்டரை விட பல மடங்கு அதி வேகம் செயல்படக்கூடியது, ஆனா உருவம் சிறுத்திருக்கும்.( எப்பா, கணணி படிச்ச புண்ணியவான்களா, கொஞ்சம் உதவிக்கு வந்து, மில்லியன், ட்ரில்லியன் இன்ஸ்ட்ரக்ஸன் பர் செகண்டு, கணக்கில, பொதுஜனங்களுக்கு இத பத்தி விளக்குங்கப்பா, உங்க பின்னோட்டத்தை போட்டு! இல்லேன்னா, கவுண்டமணிகனக்கா, அய்யா இப்ப என்ன சொல்றர்னு கேட்க, உச்சி வெயில் மண்டையை பொளக்குதுங்கிறாருங்கிற கதையா போயிடும்!)


இந்த தொழில்நுட்பத்தை உபயோகிச்சு, 'சாம்சங்'கிற கொரிய நாட்டு கம்பெனி, 2006ல ஒரு டிவி ஒன்னு தயாரிச்சு வெளியில வர இருக்கு. அது இந்த நேனோ ட்யூப்ல செஞ்சது. அதல பார்த்தா, சிம்ரனும், ஜோதிகாவும் சும்மா பளிச்னு தெரிவாங்க! அப்படி. இப்பவே, எல்சிடி, பிளாஸ்மான்னு, ஹை டெபனிஷன் டிவின்னு, கண்ணை கவரும் கலர்கள்ல பெரிய பெரிய டிவி வந்து கலக்குது. ஆனா இந்த டிவி வந்த அவ்வளவு தான்.. எல்லாமே கண்ணை பறிக்கும்!

ஆக இந்த நேனோ டெக்னாலஜி இது வரை ஆராய்ச்சிக்கூடத்தில தான் இருந்து வந்தது. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வெளி வரத்தொடங்கிருக்கு. இது ஒரு பெரிய விஸ்வரூபம் எடுத்து, புது உலகத்தை நமக்கு காண்பிக்க போகுது. அதை பார்க்கும் தூராம் நமக்கு வெகு தொலைவில்லை!
மன்னிக்கவும் இது என்னுடைய பதிவு அல்ல நேனோ டெக்னாலஜி பற்றி ஓரளவு புரியும் வகையில் எழுதப்பட்ட வலைப் பதிவு. http://ukumar.blogspot.com/2006/04/blog-post_06.html

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...