Tuesday, February 14, 2012

காஷ்மீர் : பிரச்சனையும் தீர்வும்.


காஷ்மீர் பிரச்சனை பிரிவினையில் உருவான பிரச்சனையோ அல்லது மத அடிப்படை கொண்ட பிரச்சனையோ அல்லவென்றும், அது ஓர் அரசியல் பிரச்சனைதான், அதற்கு அரசியல் ரீதியாக, சுய ஆட்சி வழங்குவதன் மூலம் தீர்வு காண முடியும் என்று கூறுகிறார் இரா. செழியன்.
1962 முதல் 25 ஆண்டுக்காலம் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இரா. செழியன், நமது நாடு கண்ட மிகச்சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவராவார்.
காஷ்மீர் பிரச்சனையை அறிந்தவர் என்பது மட்டுமல்ல, அப்பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் ஆழமாக விவாதித்தவர். காஷ்மீர் பிரச்சனை அதிகபட்ச கவனத்தை ஈர்த்துள்ள இந்த நேரத்தில் வெப்உலகம்.காமிற்கு விரிவான பேட்டியை அளித்தார் இரா. செழியன்.
கேள்வி : முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியாவும், பாகிஸ்தானும் தீவிரம் காட்டி வருகின்றன. காஷ்மீர் பிரச்சனை குறித்து மிக ஆழமாக அறிந்துள்ள தாங்கள், இந்த பேச்சுவார்த்தை குறித்து என்ன கூறுகிறீர்கள்?
இரா. செழியன் : 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு உருவாகியுள்ள மாறுபட்ட சூழ்நிலை, அமைதி வழியை நாட வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை சரியானதுதான். அதைவிட முக்கியம், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியின் இரு பக்கங்களிலும் உள்ள காஷ்மீரிகள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேச வழியேற்படுத்திட வேண்டும். அந்த விதத்தில், ஸ்ரீநகரில் இருந்து முசாஃபராபாத்திற்கு பேருந்து விடப்பட்டது ஒரு நல்ல முன்னேற்றமாகும்.
ஆனால், இந்த பேச்சுவார்த்தை எந்த அடிப்படையில் நடத்தப்படப் போகிறது என்பது முக்கியமானதாகும்.
கேள்வி : காஷ்மீர் மக்களின் ஏகோபித்த தலைவராக இருந்த ஷேக் அப்துல்லாவை நன்கு அறிந்தவர் நீங்கள். காஷ்மீர் பிரச்சனை என்பதுதான் என்ன?
இந்திய – பாகிஸ்தான் பிரிவினையில் உருவாகி இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ள ஒரு பிரச்சனையாகவே காஷ்மீர் சிக்கலை பலரும் பார்க்கின்றனர். அது உண்மையல்ல.
இந்திய விடுதலைப் போராட்டம் நடந்தபோது, காஷ்மீர் விடுதலைப் போராட்டமும் நடந்தது. வெள்ளையனை வெளியேற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சுதந்திரப் போராட்டம் நடந்த போது, நாட்டு விடுதலைக்காகவும், அதே நேரத்தில் மன்னர் ஆட்சியிலிருந்து விடுபட்டு மக்களாட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் காஷ்மீரில் போராட்டம் நடந்தது. அதற்கு தலைமையேற்றவர் ஷேக் அப்துல்லா.
1931 ஆம் ஆண்டு முஸ்லீம் மாநாடு என்கின்ற கட்சியைத் துவக்கி காஷ்மீரை ஆண்டு வந்த மன்னர் ஹரி சிங்கை எதிர்த்து போராடத் துவங்கினார் ஷேக் அப்துல்லா.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அன்று மக்கட்தொகையில் பெரும்பாலோர் முஸ்லீம்களே. ஆனால், அப்பகுதியை ஆண்டது டோக்ரா வம்சத்து இந்து அரசரான ஹரிசிங். எனவே அங்கு மக்களாட்சி ஏற்படவேண்டும் என்று போராடிய ஷேக் அப்துல்லா, இந்துக்களும் தனது மக்களாட்சிப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்கின்ற எண்ணத்தில், 1939ல் முஸ்லீம் மாநாடு இருந்த தனது கட்சியின் பெயரை தேசிய மாநாடு என்று மாற்றினார்.
ஷேக் அப்துல்லாவை மத ரீதியான அரசியல் நடத்தியவர் யாரும் கருத முடியாது. அதே போல, இந்தியாவில் இருந்து காஷ்மீரின் விடுதலைக்காக அவர் போராடியதாகவும் கருதுகின்றனர். சில அரசியல்வாதிகளும் அப்படிப்பட்ட பிரச்சாரங்களை செய்கின்றனர்.
தமது கட்சியின் பெயர் முஸ்லீம் மாநாடு என்று இருந்ததை, தேசிய மாநாடு என்று மாற்றினார். அவர் ஒரு மத ரீதியான அரசியல் நடத்தவில்லை என்பதற்கு இது அத்தாட்சியாகும். காஷ்மீரில் ஜனநாயக ஆட்சி ஏற்பட வேண்டும் என்றே விரும்பிய ஷேக் அப்துல்லா, அது மதச்சார்பற்ற அரசாக இருக்க வேண்டும் என்றும் விரும்பியவர்.
1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு என்று நடத்தப்பட்ட காங்கிரசின் போராட்டத்தை ஒட்டி காஷ்மீரில் தலைமையேற்று நடத்தியவர் ஷேக் அப்துல்லா. ஆனால் ஒரு வித்தியாசம். அவர் நடத்திய போராட்டம் வெள்ளையர் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியது மட்டுமின்றி, காஷ்மீரில் இருந்து மன்னர் ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் ஆட்சி ஏற்பட வேண்டும் என்ற இரண்டாவது இலக்கையும் முன்வைத்து நடத்தப்பட்டது.
பிரிவினைக்குப் பிறகு…
1947 ஆம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் தனித்தனி நாடுகளாக விடுதலை பெற்றபோது காஷ்மீரை ஆட்சி செய்த மன்னர் ஹரி சிங், உடனடியாக காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துவிடவில்லை. 1947 ஆம் ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தானிலிருந்து பழங்குடியினரை அந்நாட்டு அரசு தூண்டிவிட்டு அவர்கள் யூரி வரை ஆக்கிரமித்தவுடன், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஜம்முவிற்கு ஓடிவந்த மன்னர் ஹரி சிங், இந்திய அரசின் உதவியை நாடினார்.
(பழங்குடியினர் காஷ்மீருக்குள் புகுந்து கொள்ளையடித்துக் கொண்டு ஸ்ரீநகரை நெருங்கிவிட்ட போது, பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த காஷ்மீரிகள் மத்தியில் ஷேக் அப்துல்லா பேசியது)
மன்னர் ஹரி சிங்கின் கோரிக்கைக்கு செவிசாய்த்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதலில் ஜம்மு – காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறும், ஜம்மு – காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்தவுடன் அம்மாநிலத்தின் பிரதமராக ஷேக் அப்துல்லாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.
அதனை ஏற்றுக்கொண்டுதான் மன்னர் ஹரி சிங் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட, ஜம்மு – காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆனது. அதன் பிரதமராக ஷேக் அப்துல்லா பொறுப்பேற்றார்.
இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது எல்லைப் பகுதியில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆனால், காஷ்மீர் எல்லைப் பகுதியில் அப்படிப்பட்ட வன்முறை ஏதும் நிகழவில்லை. அதற்கு முக்கிய காரணம் ஷேக் அப்துல்லா.
எனவே, பிரிவினை ஷேக் அப்துல்லாவின் நோக்கம் அல்ல என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
ஜம்மு – காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதமர் நேரு, அந்த மாநிலத்திற்கு என்று தன்னாட்சி உரிமை வழங்க உறுதியளித்தார். இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு 370 உருவாக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது.
இணைப்பின் போது நேரு அளித்த அந்த உறுதிமொழிகள் காப்பாற்றப்பட்டிருந்தால், காஷ்மீர் ஒரு பிரச்சனையாக ஆகியிருக்காது.
ஆனால், ஐந்தாண்டு காலத்திற்குப் பிறகு, அதாவது 1952 பொதுத் தேர்தலை சந்தித்து காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மத்தியிலும், அனைத்து மாநிலங்களிலும் அதன் ஆட்சி ஏற்பட்டவுடன் ஷேக் அப்துல்லாவின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது.
1942 ஆகஸ்ட் 8 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லா, 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி நள்ளிரவு ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமின்றி, சிறையிலும் அடைக்கப்பட்டார்.
எதற்காக இந்த முடிவு? அவர் காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை கோரினார். தம்முடைய நிலையை நேரில் விளக்குவதாகவும் கூறினார். ஆனால், அவரிடம் விளக்கம் எதையும் கேட்காத நடுவன் அரசு சிறையில் அடைத்தது. 1953 முதல் 1968 வரை பெரும்பாலான காலங்களில் ஷேக் அப்துல்லா சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார்.
(காஷ்மீர் பிரச்சனையின் மீது 1975 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி மக்களவையில் இரா. செழியன் பேசியது)
1975 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கும், ஷேக் அப்துல்லாவிற்கும் ஒர் உடன்பாடு ஏற்பட்டு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றார். ஆனால், அந்த இடைப்பட்ட ஆண்டுகளில், தங்களுடைய தலைவர் சிறையில் அடைக்கப்பட்டதும், தாங்கள் எதிர்பார்த்த தன்னாட்சி உரிமை சுதந்திர இந்தியாவில் மறுக்கப்பட்டதும் காஷ்மீர் மக்களை அந்நியப்படுத்திவிட்டது.
நேருவின் காலத்திலேயே காஷ்மீர் பிரச்சனைக்கு சுலபமாக தீர்வு கண்டிருக்க முடியும். நேருவிற்கு அப்படிப்பட்ட ஆர்வம் இருந்தது என்றும், ஆனால் எதையும் கடினமான வழியில் தீர்க்க விரும்பும் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் அதற்கு இணங்காததால் ஷேக் அப்துல்லா சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் கூறப்படுவதுண்டு.
ஆக, காஷ்மீரில் ஜனநாயக, மதச்சார்பற்ற ஆட்சி ஏற்படவேண்டும் என்று ஷேக் அப்துல்லா கண்ட கனவை முழுமையாக புரிந்துகொண்டு மத்திய அரசு நடந்துகொண்டிருந்தால் இன்று வரை இப்பிரச்சனை நீடித்திருக்காது.
கேள்வி : காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவின் அரசியல் போக்கு பிரிவினையை நோக்கியதாகவே இருந்தது என்று கூறப்படுகிறதே?
செழியன் : அது உண்மையல்ல. 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்தபோது, ஷேக் அப்துல்லாவின் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியும் ஈடுபட்டது, இந்திய சுதந்திர வரலாறு அறிந்த அனைவருக்கும் தெரியும்.
காங்கிரஸ் நடத்திய வெள்ளையனே வெளியேறு போராட்டம் பொதுவாக இந்தியாவில் வெள்ளையர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளில்தான் விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. ஆனால், சமஸ்தானங்கள் என்றழைக்கப்பட்ட மன்னர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அந்த அளவிற்கு போராட்டங்களைக் காங்கிரஸ் கட்சி நடத்தவில்லை. லேசான எதிரொலி மட்டுமே இருந்தது.
காங்கிரஸ் கட்சி நடத்திய மாநாடுகள் கூட வெள்ளையரின் (கவர்னரின்) ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்தான் நடத்தப்பட்டதே தவிர, மன்னர் ஆட்சி நடந்த மைசூரிலோ, திருவதாங்கூரிலோ அல்லது ஹைதராபாத்திலோ நடத்தப்படவில்லை.

ஆனால், வெள்ளையனே வெளியேறு போரட்டம் நடந்தபோது அதில் பங்கேற்ற ஷேக் அப்துல்லா, காஷ்மீரில் இருந்து வெளியேறு (Quit Kashmir) என்று அன்றைக்கு ஜம்மு-காஷ்மீரை ஆண்ட மன்னர் ஹரிசிங்கை எதிர்த்து முழக்கம் வைத்தார் என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டேன்.
இந்து அரசருக்கு எதிரான போராட்டம் என்றாலும், அதனை மத அடிப்படையில் ஷேக் அப்துல்லா நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் அரசியல் ஜனநாயக உரிமையின் அடிப்படையிலேயே அந்தப் போராட்டத்தை நடத்தினார்.
எனவே, மத அடிப்படையில் காஷ்மீரை பிரிக்க வேண்டும் என்று ஷேக் அப்துல்லா நினைக்கவில்லை. மத உணர்வுடன் காஷ்மீர் பிரச்சனையை அவர் பார்த்திருந்தால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் நூற்றக்கு 90 விழுக்காடு இஸ்லாமியர்களைக் கொண்டிருந்த காஷ்மீர் பகுதி நாட்டுப் பிரிவினையின் போது பாகிஸ்தானுடன் இணைந்திருக்கக் கூடும். ஆனால், மதச்சார்பற்ற தன்மையைக் கொண்ட ஷேக் அப்துல்லாவும், தேசிய மாநாடும் 1947 ஆம் ஆண்டு பிரிவினையின் போது இரண்டு பகுதிகளில் ஒன்றில் இணைய வேண்டும் என்ற நிலை தோன்றியபோது, தீர்க்கமாகவும், தெளிவாகவும் இந்தியாவுடன் சேர்வதென்றே முடிவெடுத்தார். அவருடைய தலைமையை ஏற்ற காஷ்மீரி மக்களும் இந்தியாவுடனேயே நின்றனர்.
ஷேக் அப்துல்லா இவ்வாறு நினைத்ததற்கு காரணம், காஷ்மீரில் மக்கள் ஆட்சி ஏற்படவேண்டுமெனில் அதற்கு இந்தியாவே உகந்ததாக இருக்கும் என்று தெளிவாக அறிந்திருந்தார். அதனை நேருவிற்கு எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி : அவ்வாறெனில், காஷ்மீர் பிரச்சனையாகக் காரணம்?
செழியன் : 1947 அக்டோபரில் இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தபோது ஒப்புக்கொள்ளப்பட்டபடி, காஷ்மீருக்கு என்று தனி அந்தஸ்து அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டது மட்டுமின்றி, அதற்கென்று தனி அரசியல் சட்டமும் (Constitution) இருந்தது.
அந்த இரண்டு நிலையும், அதாவது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 370-ன் கீழ் சிறப்பு அந்தஸ்து, தங்களுடைய ஆட்சிமையை உறுதி செய்யக்கூடிய தனி அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றை அப்படியே நீடிக்கவிட்டிருந்தால், காஷ்மீர் பிரச்சனையும் தோன்றியிருக்காது. இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பும் (Federal Set up) பலப்பட்டிருக்கும். இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே ஜம்மு-காஷ்மீரும் நாட்டுடன் வலிமையாக ஒன்றிணைந்திருக்கும்.
ஆனால், நான் முன்பே கூறியபடி, 1952 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸின் ஆட்சி அமைந்தபிறகு அதன் போக்கு மாறியது.
கூட்டாட்சி அமைப்பை பலப்படுத்துவதில் காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை. மத்திய ஆட்சியின் வலிமையை அதிகரிக்கச் செய்வதிலேயே கவனம் செலுத்தியது. ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய தேவைகளுக்கு இணங்க, திட்டங்களைத் தீட்டி, அதன் பலன்கள் முழுமையாக மக்களைச் சென்றடைய மேற்கொண்ட நிர்வாக முயற்சிகளுக்கு மத்திய அரசு நிதி-அதிகார ரீதியாக ஆதரவு அளிக்கவில்லை.
இதனை ஒரு புதிய கோணத்திலும் பாருங்கள்…
1947 ஆம் ஆண்டு நாம் விடுதலை பெறும் வரை, நாட்டில் நிலவிய வறுமை, ஏழ்மை, பட்டினி ஆகியவற்றிற்கெல்லாம் வெள்ளையர் ஆட்சியையே காரணம் காட்டினோம். ஆனால், அதற்குப் பிறகும் ஏழ்மையும், பட்டினியும், இல்லாமையும் சற்றும் குறையாததால் மத்திய அரசிடம் குறிப்பாக காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியது.
மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கை நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. பொதுநலம், வேலை வாய்ப்பு, வாழ் நிலை ஆகியவற்றை மேம்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலன்களும் சாதாரண மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.
அதனால்தான், சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. 1962 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஏகபோக செல்வாக்கு குறைந்தது. மாநில உணர்வுகள் மேலோங்கத் தொடங்கின.
இந்த உணர்வு தேசிய உணர்விற்கு எதிரானதாக இருக்கவில்லை. அதனால்தான் 1962 ஆம் ஆண்டு சீனா படையெடுத்தபோது, அன்று பிரிவினையைக் கொள்கையாகக் கொண்ட தி.மு.. அதனை தள்ளிவைத்தது. எனவே, மாநிலங்களின் உரிமையும், தேசிய ஒருமைப்பாடும் ஒன்றுக்கு ஒன்று எதிரானதாக இருக்கவில்லை.
அதேபோல, மைனாரிட்டிகள் பிரச்சனையும் எழவில்லை. பல்வேறு மாநிலங்களில் எழுந்த உரிமைப் பிரச்சனைகள், உணர்வுகள் எல்லாம் பொருளாதார சுதந்திரமின்மையால் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாததால் எழுந்தவையே ஆகும். அத்தகையப் பிரச்சனைகளை, வேறுபாடுகளை, தகராறுகளை காங்கிரஸ் கட்சி தீர்க்கத் தவறியது.
எடுத்துக்காட்டாக, 1956ல் மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, பல இடங்களில் மாநில எல்லைப் பிரச்சனைகள் உருவானது. மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியான பெருபாரியைப் பிரித்து கிழக்கு பாகிஸ்தானுக்கு தந்தது பிரச்சனையானதை அடுத்து, அப்பொழுது அங்கு காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த டாக்டர் பி.சி. ராய், சுதந்திர நாளை கொண்டாட மாட்டோம் என்று அறிவித்தார்.
தமிழ்நாட்டிற்கும், கேரளத்திற்கும் இடையில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் பிரச்சனையாயின. இதேபோல, கர்நாடகத்திற்கும், மகராஷ்டிரத்திற்கும் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால், அப்பிரச்சனைகளுக்கு அன்றே நேரடியாக தீர்வு காண்பதை விட்டுவிட்டு, கட்சியியுனுடைய அமைப்புக்களின் வாயிலாக தீர்வு கண்டிட மத்திய அரசு முயன்றது. விளைவு : மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனைகள் பல இன்று வரை நீடிக்கின்றன.
கோவா பேர்ச்சுகீசிய ஆதிக்கத்தில் இருந்து மீட்கப்பட்டவுடன் அதனை மராட்டியத்துடன் இணைக்கும் முயற்சி நடந்தது. அதற்கு மராட்டிய கோமந்தக் கட்சி (MGP) போராட்டமும் நடத்தியது. ஆனால், அங்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தாங்கள் தனித்து, தனி மாநிலமாகவே இருக்க விரும்புவதாக அந்த மாநில மக்கள் வாக்களித்துவிட்டனர்.
இதேபோல, மைய, மாநில உறவுகளை காங்கிரஸ் ஆட்சி செம்மைபடுத்தியிருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கும். ஆனால், கூட்டாட்சித் தத்துவத்தில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை வைக்காததால், ஏக கட்சி ஏக ஆட்சி என்று அதன் அணுகுமுறை இருந்ததால் பிரச்சனைகள் பெரிதாகிவிட்டன.
காங்கிரஸ் ஆட்சியின் இந்த அணுகுமுறையின் எதிர் விளைவாகவே பல மாநிலங்களில் வலிமையான தலைமைகள் உருவாக ஆரம்பித்தன. மாநிலப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தோன்றிய கட்சிகள் செல்வாக்கு பெற ஆரம்பித்தன.
சிவ சேனையின் அடிப்படை என்ன? மாநில உரிமைகள்தானே?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எப்படி மைய அரசிற்கு அதிக அதிகாரம் உள்ளதோ, அதேபோல காங்கிரஸ் கட்சி அனைத்து அதிகாரத்தையும் தன் கையிலேயே வைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறது.
காங்கிரஸின் இப்படிப்பட்ட போக்கினால்தான், பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட நம்பிக்கையின்மையைப் போல, டெல்லி தங்களை புறக்கணிக்கிறது என்ற எண்ணம் ஷேக் அப்துல்லாவிற்கு வந்தது. தங்களுடைய மக்களின் நலன்களை காக்கும் உரிமையற்று ஆட்சியில் நீடிப்பது ஷேக் அப்துல்லாவிற்கு கசப்பைத் தந்தது. அதுவே அவர் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தத் தலைப்பட்டார்.
எனவே, கொள்கை ரீதியாக வலுவான கூட்டாட்சியின் தேவையை காங்கிரஸ் கட்சி உணரத் தவறியதால்தான் காஷ்மீர் பிரச்சனை வலிமை பெறக் காரணமானது.
கேள்வி : இன்றைய நிலையில் காஷ்மீர் பிரச்னையை மத ரீதியான விடுதலைப் பிரச்சனையாக பார்க்கப்படுவது எந்த அளவிற்கு சரி?
செழியன் : காஷ்மீர் பிரச்சனை ஒரு அரசியல் பிரச்சனையே. அதனை மதப் பிரச்சனையாகக் கருதக்கூடாது. அவ்வாறு பார்ப்பது தவறானது.
வளம் மிக்க இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்தும் அங்கு வறுமை தலைவிரித்தாடியது. வறுமையை ஒழித்து அவர்களின் வாழ் நிலையில் முன்னேற்றம் காண நாம் உதவவில்லை. விளைவு : அடிப்படை வாழ்க்கை பிரச்சனை வேறொரு வடிவத்தை தாங்கி வெளிப்படுகிறது. அவ்வளவுதான்.
விடுதலை பெறுவதற்கு முன்னர், 1946 ஆம் ஆண்டு அரசியல் சட்ட அவையில் பேசிய நேரு, எதிர்கால இந்தியாவில் இணையும் மாகாணங்கள் ஒவ்வொன்றும் அதன் வரலாற்று அடிப்படையில் அமையப் பெற்று தன்னாட்சிப் பெற்றதாகவும், இதர அதிகாரங்களைப் பெற்றதாகவுமே இருக்கும் என்று கூறினார் (Autonamous Units with Residual Powers).
ஆனால் நேருவின் உறுதிமொழி சுதந்திரத்திற்குப் பிறகு நிறைவேற்றப்படவில்லை. தன்னாட்சி என்று பேசினாலே பிரிவினைவாதம் என்று காங்கிரஸ் கூறிவிடுகிறது. கூட்டாட்சி தத்துவத்தை நடைமுறைப்படுத்வதில் நம்பிக்கையற்ற கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்தது.
ஆங்காங்குள்ள பிரதேசங்களில் உள்ள வாழ்க்கைத் தரம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஏழை-பணக்கார, நகர-கிராம வேறுபாடுகள் போன்றவற்றையெல்லாம் தீர்க்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. உருவான பலன்கள் மக்களைச் சென்று சேரவில்லை.
எனவே, மக்களுக்கு ஏற்படும் அவதிகளே கிளர்ச்சியாக வெடிக்கின்றது. கிளர்ச்சி ஏற்படுவதற்கு மதம் மட்டுமே காரணமாக முடியாது. அப்படிப் பார்த்தால் நமது நாட்டில் பல இடங்களில் அப்படிப்பட்ட கிளர்ச்சிகள் ஏற்பட்டிருக்க வேண்டுமே?
காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவிய கொடும் வறுமையே கிளர்ச்சியாக வெடித்துள்ளது. அது மதச் சாயத்துடன் தெரியலாம். ஆனால் கிளர்ச்சிக்கு காரணம் மதமல்ல. மக்களின் வறுமை, கல்வியின்மை ஆகியவையே. இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பகுதி மக்களின் பிரச்சனைகளுக்கும், அவர்களின் அருகில் இருக்கும் நிர்வாக அமைப்பின் மூலமே பரிகாரம் காண முடியும். மக்களுக்கு அருகில் உள்ள மாநில அரசுகளின் மூலம் மக்கள் தொடர்புள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம், அவர்களின் வாழ்வுத் தேவைகளை நிறைவு செய்ய மத்திய அரசு தவறியதே பல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிட்டது. அதில் முக்கியமானது காஷ்மீர் பிரச்சனை.
அதுமட்டுமல்ல, அவ்வாறு உருவாகும் மக்களின் எழுச்சிகளுக்கு அரசியல் ரீதயாக தீர்வு காண்பதை புறக்கணித்துவிட்டு, அப்படிப்பட்ட கிளர்ச்சிகளை வன்மையாக ஒடுக்க முற்பட்டதும் காஷ்மீர் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கிவிட்டது.
காஷ்மீர், அரசியல் பிரச்சனையாக இருந்த நிலை மாறி மத, விடுதலைப் பிரச்சனையாக உருவெடுத்ததற்கு மத்திய அரசின் இப்படிப்பட்ட தவறான அரசியல் அணுகுமுறை பெரும் காரணமாகும்.
மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் காரணமாக ஜனநாயக அமைப்பு வந்துவிட்டது. ஆனால், அந்த ஜனநாயக அமைப்பிற்கு மக்களை தயார்படுத்தியிருக்க வேண்டும். அதனைச் செய்யவில்லை. காஷ்மீர் பிரச்சனைக்கு இதுவும் ஒரு காரணம்.
கேள்வி : இதில் பாகிஸ்தான் அதீத அக்கறை காட்டுவது ஏன்?
செழியன் : பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி முறை அல்ல. அங்கு நடைபெறும் இராணுவ – எதேச்சதிகார ஆட்சியால் மக்களுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்களை மறைக்கவும், அவர்களின் கவனத்தை திசை திருப்பவுமே காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் அரசு பயன்படுத்துகிறது. அதை ஓர் மதச்சார்பான பிரச்சனையாகவும் காட்டிவருகிறது.
இந்தியாவின் நிலை அவ்வாறு அல்ல. மக்கட்தொகையில் இஸ்லாமியர்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா 2வது இடத்தை வகிக்கிறது. நமது அரசு மதச்சார்பற்றது.
மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தி ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முஷாரஃப் முயற்சிக்கிறார். பாகிஸ்தானில் ஜனநாயகத்தை கொடுக்க முடியாத அதிபர் பர்வேஸ் முஷாரஃப், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயக உரிமை அளிப்பாரா? அவர்களால் காஷ்மீர் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.
கேள்வி : காஷ்மீர் பிரச்சனைக்கு நீங்கள் கூறும் தீர்வுதான் என்ன?
செழியன் : தன்னாட்சிதான் தீர்வு. பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியிருப்பது சரி. அதை நான் ஏற்கிறேன். காஷ்மீர் பிரச்சனை என்பது அம்மக்களின் அன்றாட வாழ்வு, பொருளாதார நலனை உறுதி செய்யும் உரிமைப் பிரச்சனை. அதனை சரியாகப் புரிந்துகொண்டு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும்.
காஷ்மீருக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூட்டாட்சி முறையில் தேவைப்படும் தன்னாட்சி அதிகாரிகங்கள் அளிக்கப்படவேண்டும். அதுவே ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
அதிகாரங்களை மத்தியில் குவித்து வைத்திருப்பதால் எந்தப் பலனும் ஏற்படாது. ஒவ்வொரு ஆண்டும் தங்களின் நிதித் தேவைகளுக்காக மாநில அரசுகள் மத்திய அரசிடம் (திட்ட ஆணையத்திடம்) கையேந்தி நிற்கின்றன. இதுதான் கூட்டாட்சியா?
ஒரு மாநிலத்தின் மேம்பாட்டிற்கு யார் திட்டம் வகுப்பது. மாநில அரசா? அல்லது மத்திய அரசா? இதில் தெளிவு ஏற்படவேண்டும். இல்லையென்றால் இன்னும் பல பிரச்சனைகள் வெடிக்கும்.

மாவோயிஸ்ட் அச்சுறுத்தலை 3 ஆண்டுகளில் ஒழித்துவிடுவோம் என்று கூறியுள்ள உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மாவோயிஸ்ட்களுக்கு எதிரான காவல் நடவடிக்கை ஒரு புறமும், மறுபுறத்தில் அவர்களால் ‘பாதிக்கப்பட்ட’ பகுதிகளில் முன்னேற்றத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, மாவோயிட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலர் தலைமையிலான அதிகாரமிக்கக் குழுவை (Empowered Committee) அமைப்பது என்ற யோசனையை மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்று அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதி வழங்கி நிறைவேற்ற முடிவு செய்துள்ள முன்னேற்ற திட்டங்களை என்னென்ன என்பதையும் அமைச்சர் சிதம்பரம் விளக்கியுள்ளார். சாலைகள் போடுவது, அவைகளை பிரதான சாலைகளுடன் இணைப்பது, அடிப்படைக் கல்வி (பள்ளிகள் அமைத்து) கொடுப்பது, அடிப்படைச் சுகாதார மையங்களைத் திறப்பது, குடி நீர் வழங்குத் திட்டங்களை நிறைவேற்றுவது ஆகியனவாகும்.
கடந்த 28ஆம் தேதி உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சிதம்பரம் இவ்வாறு கூறியதை கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவோயிட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எப்படி ஒரே நேரத்தில் காவல் நடவடிக்கையும் (Police Action), முன்னேற்றத் திட்டங்களையும் நிறைவேற்றுவீர்கள் என்று கேட்டதாகத் தெரியவில்லை!
ஒரிசா, ஜார்க்கண்ட், பீகார், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் இணையும் பகுதியில் (தண்டகாரண்ய வனப்பகுதியில்) சற்றேறக்குறைய 40 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பு மாவோயிஸ்ட்டுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக மத்திய அரசு கூறிவருகிறது.
கனிம வளங்கள் நிறைந்துள்ள இந்தப் பகுதியைத்தான் மாவோயிஸ்ட்டுகளால் ‘பாதிக்கப்பட்ட’ (Maoist affected areas) பகுதிகள் என்று சிதம்பரம் கூறிவருகிறார். ஆக, மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டிலுள்ள, அதாவது அரசு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ள, இந்த பகுதியில் இருந்து மாவோயிஸ்ட்டுகளின் அச்சுறுத்தலை முடிவிற்கு கொண்டுவரவே 3 ஆண்டுகள் தேவை என்கிறார் அமைச்சர் சிதம்பரம்.
அப்படியானால், அவர்களை அந்தப் பகுதியில் இருந்து ஒடுக்கவதற்கு அல்லது ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் பசுமை நடவடிக்கை ஒரு பக்கம் நடந்துக்கொண்டிருக்க, அதே பகுதியில் எவ்வாறு முன்னேற்றத் திட்டங்களை நிறைவேற்ற முடியும்?
மாவோயிஸ்ட்டுகள் என்ன சாதாரண அச்சுறுத்தலா? இந்த நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் என்றல்லவா பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்? எனவே அப்படிப்பட்ட மிகப் பெரிய அச்சுறுத்தலை (Maoist menace) முழுமையாக ஒழிக்க வேண்டுமெனில் அந்தப் பகுதியையே முழுமையாக காவல் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் (அதுதானே இப்போது நடந்துகொண்டிருக்கிறது) கொண்டு வரவேண்டும்.
அப்படி கொண்டுவருவது என்பதன் பொருள், அந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள மாவோயிஸ்ட்டுகள் வெளியேற முடியாதபடி சுற்றி வளைக்கப்பட வேண்டும். 40 ஆயிரம் சதுர கி.மீ.பகுதி மத்திய கூடுதல் காவற்படைகள், மாநில காவல் படைகள், இராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப்படவுள்ள சிறப்பு படைகள் ஆகியவற்றால் சுற்றி வளைக்கப்படும் போது, அப்பகுதி முழுவதுமே முற்றுகைக்குள்ளாக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட பகுதியாகிவிடுமே? அப்படி ஒரு நிலையில் சுற்றி வளைக்கப்பட்ட பகுதியிலுள்ள எட்டரைக் கோடி பழங்குடியின மக்கள் எப்படி மாவோயிஸ்ட்டுகளின் பிடியில் இருந்து மீட்கப்படுவார்கள்? அதற்கான திட்டம் என்ன? ஏற்கனவே காவல் துறையினரும், தனியார் அடியாள் படையுமான சல்வா ஜூடும் ஆகியன நடத்திய தாக்குதலக்ளினால் தண்டகாரண்ய வனப்பகுதியில் இருந்து வெளியேறி, ஆந்திர மாநில எல்லையோர ‘முகாம்’களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரே, அதுபோல் காவல் படைகள் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கியதும் வெளியேரும் பழங்குடியின மக்கள் முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்படுவார்களா? அப்படிப்பட்ட நிலையில் முன்னேற்றத் திட்டங்களை எங்கேயிருந்து ஆரம்பிப்பது. எங்கே பள்ளிக் கூடங்களைக் கட்டுவீர்கள், சாலை போடுவீர்கள்?
மாவோயிஸ்ட்களைத் துரத்துகிறோம் என்றுக் கூறி்த்தான் சட்டீஸ்கரின் தாண்டிவாடா வனப்பகுதிய்ல் வாழ்ந்துவந்த பல இலட்சக்கணக்கான பழங்குடியின மக்கள் அடர்ந்த வனப் பகுதிகளுக்கு துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்ந்துவந்த இடங்களில் மீண்டும் குடியேற அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூட உத்தரவு பிறப்பித்தது, ஆனால் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதேபோல், இப்போது நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் காவல் நடவடிக்கைகளின் காரணமாக பழங்குடியின மக்களும் துரத்தப்பட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இதுநாள்வரை காவல் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களை மாவோயிஸ்ட்டுகள் என்றுதான் சொல்லி படங்களைக் காட்டுகிறீர்கள். அவர்கள் மாவோயிஸ்ட்டுகள்தான் என்பதை எதை வைத்து உறுதி செய்கிறீர்கள், யார் உறுதி செய்வது, இதனை யார் கண்காணிப்பது? ஒரு வருடத்தைக் கூடத் தாண்டாத குழந்தை ஒன்றின் கை விரல்களை துண்டித்து மிரட்டியுள்ளது காவல் துறை. அது கூட மாவோயிஸ்ட்டுதானா? புரியவில்லை.
ஏனென்றால் ஈழத்தில் நடந்தததுபோல, பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளவர்களெல்லாம் விடுதலைப் புலிகளே என்று கூறி, வானத்திலிருந்தும், கனரக பீரங்கிகளைக் கொண்டும் குண்டு வீசி அப்பாவித் தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்தனரே, அதேபோல் இங்கும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இப்படி ஒரு கேள்வி எழுப்புவதற்குக் காரணம், வன்னியில் கடைபிடிக்கப்பட்ட ‘அதே முறை’யில்தான் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கையிலும் கடைபிடிக்கப் போவதாக சட்டீஸ்கர் மாநிலத்து மாவட்ட காவல் அதிகாரி ஒருவர் பேட்டியே அளித்துள்ளார். அதாவது, பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் என்று எவரையும் காவல் வளையத்திற்கு உள்ளே வரவிடாமல் நடவடிக்கை எடுப்பது என்பதுதான் வன்னி முறை. எனவே கொல்லப்படுபவர்கள் மாவோயிஸ்ட்டுகளே என்று எதை வைத்து உறுதி செய்வது?
எனவே இந்த நாட்டை எதிர்நோக்கியுள்ள ஒரு மாபெரும் அச்சுறுத்தலை அழிக்கும் வேலையே இவ்வளவு பெரிதாக இருக்கும்போது, எங்கிருந்து நீங்கள் முன்னேற்றத் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்? முன் எப்போதாவது அப்படிப்பட்ட முன்னேற்றத் திட்டங்களை எங்காவது நிறைவேற்றியிருக்கிறீர்களா? Two pronged strategy என்று நீங்கள் இங்கிலீசில் சொன்னதுமே, அடடே அபாரம் என்று வாய் பிளக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நீங்கள் பேசிவிட்டு போய்விட்டீர்கள். இவ்வளவு கேள்விகள் எழுகிறதே, இதற்கு உங்களின் பதில் என்ன?
மாவோயிஸ்ட்டுகளின் கட்டுப்பாட்டிலிருந்து இந்தப் பகுதிகளை மீட்கும் ‘கடமை’யில் நீங்கள் உறுதியாய் நிற்பீர்கள் என்று உங்களின் வேதாந்தா பின்னணியை நன்கு அறிந்தவர்களுக்கு நிச்சயம் தெரியும், ஆனால் கனிம வளங்கள் நிறைந்த அந்த பூமியை மீட்க நீங்கள் மேற்கொள்ளப்போகும், மேற்கொண்டுவரும் நடவடிக்கை, அப்பாவி பழங்குடியின மக்களின் வாழ்வுரிமையை பறிக்காமல், பழங்குடியினப் பெண்களின் கற்பையும், தாலியையும் பறிக்காமல், தார்மீக நெறியோடு நடைபெறும் என்று நம்புவதற்கு ஒரு அடிப்படையும் கிடைக்கவில்லையே?
அதுவும் நீங்கள் சார்ந்துள்ள அரசு, விடுதலைக் கோரி போராடிய ஈழத்து மக்களை கொன்றெழிக்க முற்பட்ட ஒரு இனவெறி அரசுக்கு முழுவதுமாக உதவிய அரசல்லவா? இந்தியா இல்லையென்றால் இந்தப் போரில் நாங்கள் வென்றிருக்க முடியாது என்றும், இந்தியாவின் போரை அல்லவா நான் நடத்தினேன் என்று அந்த இனப்படுகொலை அரசின் தலைவர் நன்றியுடன் நினைவு கூர்ந்த டெல்லி அரசின் ஒரு அங்கமல்லவா நீங்கள்? அங்குதான் தடுக்க முடியவில்லை, தமிழர்களைக் படுகொலை செய்ய உதவுவதற்கு இறையாண்மை உங்கள் அரசிற்கு உரிமை தருகிறது. ஆனால் அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்று தமிழகம் கோரியபோது அந்த நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதாக ஆகிறதே என்று கவலையோடு பேசியவர் அல்லவா நீங்கள்?
வன்னியில் நடந்த ஈழத் தமிழினப் படுகொலையைத்தான் தடுக்க முடியவில்லை, தங்கள் உரிமை இன்னதென்று உணராத பழங்குடியின மக்கள் படுகொலை செய்யப்படாமல் காப்பாற்றாலாமே என்பதுதான் இந்த நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களின், பத்திரிக்கையாளர்களின் பதைப்பு. அப்படி பதைப்பவர்களைத் தான் நீங்களும் மிக வசதியாக மாவோயிஸ்ட்டுகளை ஆதரிப்பவர்கள் என்று பட்டம் சூட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
அப்படியெல்லாம் முத்திரை குத்தாமல் தண்டகாரண்யத்தை மீட்பது எப்படி? அந்த நிலங்களை மீட்டால் தானே அதனை வேதாந்தாவிலிருந்து டாட்டா வரையிலான பெரு நிறுவனங்களுக்கு அளித்து, அதன் மூலம் அவர்கள் அந்தக் கனிம வளங்களை எடுத்து இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும்? அதற்காகத்தான் நீங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறீர்கள் என்பது உங்களுடைய வார்த்தைகளில் இருந்து மட்டுமல்ல, தலைசிறந்த பொருளாதார மேதையாக இந்நாட்டு பிரதமர் மன்மோகன் சிங் வார்த்தைகளில் இருந்தும் புரிகிறது.
ஆனால், அந்த முன்னேற்றத்தை உறுதி செய்யும் உங்களின் நடவடிக்கைகள், அந்த முன்னேற்றத்தின் பலனை ‘அனுபவிக்க’ அந்தப் பாழும் நிலைத்தில் தொன்று தொட்டு வாழ்ந்த அந்தப் பழங்குடி மக்களில் எத்தனை பேர் உயிரோடு இருப்பார்கள் என்பதற்குத்தான் எந்த உத்தரவாதமும் இந்த காந்தி தேசத்தில் இல்லை.
இன்றைய அரசு மேற்கொள்ளப்போகும் காவல் நடவடிக்கையை எவராலும் தடுத்த நிறுத்த முடியாது. ஏனெனில் அந்தப் பகுதியில் புதைந்து கிடக்கும் கனிம வளங்களைப் போல மிகக் கடினமான மனதைக் கொண்ட ஆட்சியாளர்களாலும், மானுடத்தின் இரத்தத்திற்கு எள்ளளவு மரியாதையும் காட்டத் தெரியாத இலாப மோகிகளின் ஆதரவுடனும், அதைத்தான் பொருளாதார முன்னேற்றத்திற்கான பாதை என்று நம்பும் உயர் நடுத்தர நகர மக்களும் உள்ள நாட்டில் இப்படிப்பட்ட நாகரீக காட்டுமிராண்டித்தனத்தை தாண்டி வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
நமது நாட்டின் எத்தனையோ பகுதிகள் அன்றாட இரத்தக் குளியலிற்கு ஆளாகின்றன. மேலும் ஒரு பகுதி விரைவில் வெகு விமரிசையாக திறக்கப்படப்போகிறது. அங்கு சம்பளத்திற்காக நடவடிக்கையில் ஈடுபடப்போகும் காவலர்களும், வன்செயல் பாதையைத் தேர்ந்தெடுத்த கொள்கைக் கூட்டமும், அவர்களின் பாதுகாப்பிலும், அதற்கு அப்பாலும் வாழும் அப்பாவி பழங்குடி மக்களும் சிந்தப்போகும் வேறுபாடற்ற இரத்தங்கள்… வளப்படுத்தட்டும் இந்த நாட்டை.
This one is a Reproduced article to enable my blog readers to get a good insight into the KASHMIR ISSUE I do not have any personal opinion on it.

 

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...