Tuesday, February 28, 2012

ஆசிரியர் மாணவர்கள் இடையே இருந்த நட்பு இழை அறுந்து வருகிறதா?

சென்னை பள்ளியில் நடைபெற்ற துயர சம்பவத்தின் பாதிப்பில் எழுதப்பட்டதே இந்த கட்டுரை.
மாணவர்களின் உணர்வெழுச்சியால் நடைபெறும் இம்மாதிரியான சம்பவங்கள் ஒன்றும் இக்காலத்தில் புதிதல்ல.
பொதுத்தேர்வில் அறை மேற்பார்வையின் போது கண்டிப்புடன் நடந்துகொண்ட ஆசிரியரின் சட்டையில் இங்க் அடித்தல் அல்லது அவரது இருசக்கர வாகனத்தை பஞ்சர் பண்ணுதல் அல்லது அவ்வாசிரியரை தாக்குதல் போன்றவை கேள்விப்பட்ட சம்பவங்களே.
எனக்குத்தெரிந்தே சில நகரப்பள்ளிகளில் ஆசிரியரை மாணவர்கள் அடித்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
ஆசிரியரை தெருவில் போகும்போது சத்தமாக கெட்ட வார்த்தைகளால் திட்டுதல் போன்றவையும் நடந்தேரியுள்ளன.
இம்மாதிரியான சம்பவங்கள் இப்போது பெருகிவர யார் காரணம்?
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கும் ஆசிரியர்களின் தவறான செய்கைகள் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்படுகின்றன. தொலைக்காட்சிகளும் அவற்றை தலைப்புச் செய்திகளில் போடத்தவறுவதில்லை. இதனால் ஆசிரியர் என்றாலே ஒழுக்கத்தின் பிறப்பிடம் என்ற அபிப்ராயம் போய்விட்டது.
ஆசிரியரின் தூய்மை மாசுபட ஆசிரியர்களின் பெரும்பாலானோரின் செய்கைகளும் காரணமாய் அமைந்துவிட்டன. அரசால் விற்கப்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மாலை நேரத்தில் கணக்கெடுத்தால் பத்தில் இரண்டு பேர் ஆசிரியர்களாக உள்ளனர். இதனை மாணவர்களே பார்க்க நேரும் சம்பவங்களும் நடந்தேரியுள்ளன. இவை எல்லாவற்றிலும் கொடுமை மாணவர்களையே மேற்படி கடைகளுக்கு அனுப்பி வாங்கி வரச் செய்து குடித்த சம்பவங்களைக் கூட பிறர் கூறக்கேட்டிருக்கிறேன்.
நுகர்வுக் கலாச்சாரத்தின் பிடியில் சிக்கித்தவிக்கும் சமூகத்தில் ஆசிரியர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற தன்மை எற்படுகிறது, எனவே எவ்வளவு தூரம் பணம் சேர்க்க முடியுமோ அவ்வளவு தூரம் சேர்க்க எண்ணி டியுசன் எடுத்தல் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குதல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.
இதனை பார்க்கும் அண்டை அயலார் மத்தியில் ஆசிரியரின் தூய்மை மீதான நம்பகத்தன்மை குறைகிறது. இவை சமூகம் முழுவதும் பொதுமைப்படுத்தப்பட்டு ஆசிரியர் என்பவர் அப்படியொன்றும் தூய்மையின் மறுஉருவம் இல்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது.
இது பெற்றோரிடம் இருந்து மாணவன் மனத்திலும் இறங்குகிறது. ஆசிரியர் என்றாலே பயம் பக்தி பாசம் என்ற அக்கால நிலை தலைகீழாக திரும்பிவிட்டது.

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...