Wednesday, April 12, 2017

இட ஒதுக்கீடு தவிர்த்த அம்பேத்கரின் மற்ற சாதனைகள் தீண்டத் தகாதவையோ?.

அம்பேத்கர் வானுயர்ந்து நிற்கிறார்.
இரண்டு பையன்களுக்கிடையே நடந்த உரையாடல்.
முதலாமவன்டேய் அது என்ன புத்தகம்டா?”
அம்பேத்கர் வரலாறுடாஎன்கிறான் மற்றவன்.
அதற்குஜாதி வெறி பிடித்த ஒருவரின் புத்தகத்தை ஏன் படிக்கிறாய்என்கிற பொருள்பட அநாகரிகமான வார்த்தையை பிரயோகிக்கிறான்.
இருவரும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். நமது பாடத்திட்டத்திலும் சரி செயலாக்கத்திலும் சரி அம்பேத்கரின் சாதனைகள் எவ்வளவு மோசமாக இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளது என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் இருக்க இயலுமா என்ன.
தலித் மக்களின் மேன்மைக்கு மட்டுமே அன்றி வேறு எதற்கும் அவர் தன் பங்களிப்பை செய்யவில்லை என்பது போல தலித் மற்றும் தலித் அல்லாதோர் மத்தியில் அம்பேத்கர் பற்றி ஒரு பிம்பம் வலிந்து திணிக்கப் பட்டு வந்துள்ளது.
எங்கள் அறிவியல் ஆசிரியை அவர். இனப்பெருக்க மண்டலம் பற்றிய பாடம் வரும்போது மிகவும் அருவருப்போடு இதெல்லாம் நீங்களே படித்துக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாக கடந்து போய்விடுவார். நானறிந்தவரை பள்ளி அளவில் அம்பேத்கர் பற்றிய தகவல் தலித் அல்லாத பல ஆசிரிய பெருமக்களால் இப்படித்தான் அலட்சியப் படுத்தப் படுகிறது.
பள்ளிக் காலத்தில் கேள்விப் பட்ட மற்றும் ஒரு சம்பவத்தை இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.
அப்போதெல்லாம் படிப்பு முடித்து வெளியே செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு நினைவு பரிசாக கடிகாரமோ அல்லது தலைவர்கள் படமோ வழங்குவது வழக்கம். வகுப்பறையில் மாட்டிவைக்க அம்பேத்கர் படத்தை பரிசளிக்க விரும்பினான் ஒரு மாணவன். கேட்ட மாத்திரத்தில் என்னவோ விஷ ஜந்துவை பார்த்தது போல பதறி விட்டார் அந்த தலித் ஆசிரியர். அவனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் அது தன்னை சாதி வெறி பிடித்தவன் என்று மற்றவர் நினைக்க ஏதுவாகும் என்கிற பயத்தில்தான் விருப்பமில்லாமல் அவர் மறுத்தார்.
இன்னுமொரு நிதர்சனமான உண்மை. “அம்பேத்கர்படம் பார்த்தோர் எத்தனை பேர் இருக்கிறோம் நம்மில். மம்மூட்டி அவர்கள் அந்த மாபெரும் தலைவர் வேடத்தில் அழகாக நடித்திருப்பார். சுதந்திர மற்றும் குடியரசு தினவிழாக்களில் சிடி தேய தேய காந்தி படம் போடப் படுகிறதே ஒழிய அம்பேத்கர் படத்தை ஒளிபரப்ப சேனல்களும் தயங்குவது ஏன். பள்ளிகளில் கூட சிறப்புக் காட்சியாக பல்வேறு விழிப்புணர்வு படங்கள் காட்டப் படுகின்றன ஆனால் அம்பேத்கர் படம் காட்டுவதில் என்ன தயக்கம்?
சரி அம்பேத்கர் புகைப்படத்தையாவது வீடுகளில் மாட்டலாம் என்றால் மாட்டினால் ஜாதி தெரிந்து போகும் பிறகு நூதனமாக பல்வேறு வகைகளில் மட்டந் தட்டப் படுவோம் என்கிற மாதிரியான பயம் நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்க தலித் மக்களிடம் உள்ளது என்பதை மறுக்க இயலுமா?
பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சாதித் தலைவர்கள் சிலைகள் எல்லாம் சாலை சந்திப்புகளில்  கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த நாட்டில் தான் சில இடங்களில் அம்பேத்கர் சிலையினை கூண்டுக்குள் கைதிபோல வைத்துள்ளோம்.
பெரும்பான்மை மக்களுக்கு அம்பேத்கர் என்பவர் தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியவர் என்றும் அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர் என்றும் தான் தெரிகிறது.
தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்கள்தான் பெண்ணுரிமைக் குரலின் முன்னோடி. சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மதம் சார்ந்த பழமையான மூட நம்பிக்கைகள் தான் பெண்ணடிமைத் தனத்திற்கு காரணம் என்று ஆராய்ச்சி செய்து சொற்பொழிவாற்றியும் எழுதியும் வந்தார். இதே குரலை இந்திய அளவில் சட்டமியற்றும் மன்றங்களில் ஒலித்து பல சட்டங்கள் இயற்றப் படுவதற்கு காரணமாக இருந்தார் என்கிற செய்தி உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்.
பெண் ஊழியர்கள் அனுபவிக்கும் மகப்பேறு விடுப்புக்கு வித்திட்டார்மத்திய மாநில அரசுப்பணிகளில் பணிபுரியும் பெண் 
அலுவலர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு 9 மாத காலத்திற்கு மகப்பேறு விடுப்பு தற்போது நடைமுறையில் உள்ளது .
இந்தியாவில் எந்த பெண் ஊழியருக்கும் 1942 வரை இவ்விடுப்பு கிடையாது .
அப்போது ஒரு பெண் ஊழியர் கருவுற்றால் தானாகவே முன்வந்து பதவி விலகி விடவேண்டும் .
அப்படி தானாகவே முன்வந்து பதவி விலகிய ஒருவர் 
குழந்தை பிறந்தபிறகு தங்கள் வசதிக்கேற்ப சிலகாலம் கழித்து மீண்டும் வேலைக்கு விண்ணப்பித்து நியமனம் பெறலாம் .மகப்பேற்றிற்காக பதவி விலகியவர்களுக்கு முன்னுரிமை உண்டு .
மகப்பேற்றிற்காக தானே பதவி விலகாதவர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் .அவர்களுக்கு மீண்டும் வேலைகிடைக்காது.
பாலின பாகுபாடில்லாமல் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற சட்டம் இயற்றவும் காரணமாக இருந்தார்.
இன்னும் ஒரு விஷயம் தெரியுமா? .  டாக்டர் அம்பேத்கர் வரையறுத்த வரைமுறைகள், சட்ட திட்டங்கள் மற்றும் நிர்வாக அமைப்பு படிதான் இந்திய ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி 01 ஏப்ரல் 1935 அன்று நிறுவப்பட்டது.
கல்வியில்லா பெண்கள் களர்நிலம்
அங்கே புல் விளைந்திடலாம்
நல்ல புதல்வர்கள் விளைவதில்லை என்று பெரியாரின் பெருந்தொண்டர் பாரதிதாசன் பாடுவதற்கெல்லாம் முன்னோடி அம்பேத்கர் அவர்கள்.
ஆணாதிக்க செறுக்கோடும் மதத்தின் பெயராலும் பல்வேறு கொடுமைகளை பெண்களின் மீது கட்டவிழ்த்துவிடும் சமூக அமைப்பில் பெண்களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் சொத்து உரிமைகள்தான் அவர்களை மீட்டு கரைசேர்க்கும் தோணி என்று அம்பேத்கர் அவர்கள் கருதியதால் தான் பெண்களுக்கு கல்வி உரிமையும் சொத்துரிமையும்  வழங்க வேண்டும் என்று தொடர்ந்து முழங்கினார்.
ஒரே வேலையை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே ஊதிய ஏற்றத் தாழ்வு நிலவியது கண்டு ’சம வேலைக்கு சம ஊதியம்’ என்கிற சட்டம் இயற்ற பாடுபட்டார்.
ஒரு சமூகம் என்பது எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை நான் அச்சமூகத்தில் பெண்கள் எந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதை வைத்து தான் தீர்மானிப்பேன் என்றார்.

தான் ஆற்றிய பணிக்கு உரிய அங்கீகாரத்தை அம்பேத்கருக்கு இந்த சமூகம் வழங்கியிருக்கிறதா?

3 comments:

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...