Sunday, April 23, 2017

சர்வதேச புத்தக தின வாழ்த்துக்கள்.



சர்வதேச புத்தக தினமான இன்று நான் நூலகத்தில் எடுத்த இந்த வார புத்தகங்களை பற்றி கொஞ்சம் குறிப்பிடலாம் என நினைக்கிறேன்(இந்த முறை மூன்று புத்தகங்களையும் படித்து விட்டேனாக்கும்). இதனால் உங்களில் யாருக்கேனும் வாசிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டால் நல்லது தானே?
முதலாவது
     கல்கி அவர்கள் எழுதிய ”பொய்மான் கரடு” என்கிற சிறு நாவல். வழக்கமாவே ஒரு பாகத்திற்கு 500 பக்கங்கள் என்று 3 லிருந்து 5 பாகங்கள் வரை எழுதுபவருக்கு 150 பக்க நாவல் நிச்சயமாக சிறு நாவல் தானே?
     மலைகளை கரடென்றும் கயிற்றினை சரடென்றும் கூறுபவர்கள் நாமக்கல் ஏரியா காரர்கள். எனவே தலைப்பை பார்த்தவுடன் கதைக்களம் நாமக்கல் பகுதி என்பதை ஊகித்து விட்டேன். ஒரு எளிய கருமித்தனம் மிக்க விவசாயி அவனது காதலி. அவர்களுக்கு ஏற்படும் சிக்கல் அதிலிருந்து அவர்கள் வெளியே வந்து எப்படி ஒன்றிணைகிறார்கள் என்று அவருக்கே உரிய பாணியில் மர்மங்கள் பொதித்து எழுதியிருந்தார். இருந்தாலும் எனக்கு திருப்தியில்லை. பனானா லீஃப் உணவகத்தில் வெஜிடபில் சூப் சாப்பிட்ட மாதிரி கல்கி அவர்களால் எழுதப்பட்ட மிக மிக எளிய கதை.
இரண்டாவது.
     ஒரு காலத்தில் துப்பறியும் நாவல்கள் மீது அதீத ஈடுபாடு. அனேகமாக இளமைப் பருவத்தில் எல்லோரும் தங்களது வாசிப்பை இங்கிருந்து தான் தொடங்கி இருப்பார்களோ என்று அவதானிக்கிறேன். எனவே ஒரு துப்பறியும் நாவல்தான் படிப்போமே என்று ராஜேந்திரக்குமார் அவர்கள் எழுதிய தீ தீ..சினேகிதி என்கிற இராணுவ பிண்ணனியில் எழுதப்பட்ட நாவல் எடுத்து வந்தேன். சுத்த மோசம். எதிர் நாட்டு தீவிரவாத முகாமில் வேலை செய்கிறாள் நாயகி. தலைமைப் பதவி வரை முன்னேறிச் சென்று அங்கிருக்கும் தீவிர வாத தலைவனை போட்டுத் தள்ளுகிறாள் இந்திய ராணுவ உதவியுடன். தீவிர வாத குழுவில் வலுக்கட்டாயமாக சேர்க்கப் பட்டு பின்னர் இந்தியாவுக்கு தப்பி வந்தவர்களை திரும்பவும் எதிரி நாட்டுக்கே கடத்திச் சென்று பெரிய சாகசம் செய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்புகிறாள். (நீயா எப்படி தப்பிக்கலாம் நான் தான் தப்பிக்க வைப்பேன்). ஒரு வேலை எனது இளம் பிராயத்தில் படித்திருந்தால் கொண்டாடி இருப்பேனோ என்னவோ!
மூன்றாவது.
     எப்போது புத்தகங்கள் எடுத்தாலும் மூன்றில் ஒன்று மொழிபெயர்ப்பு நூலாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். Stefan Zweig என்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் எழுதிய Letter from an Unknown women என்கிற நூல். ராஜ்ஜா என்பவர் “யாரோ ஒருத்தியின் கடிதம்“ என மொழி பெயர்த்திருந்தார்.
மொத்த நாவலும் ஒரு கடிதம் தான். ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். அவரை அருகில் இருந்து பார்த்து வியந்து வளர்ந்த ஒரு பதின் பருவ பெண் அவரை தன் காதலனாக வரித்துக் கொள்கிறாள். சதா அவன் நினைவாகவே வாழ்கிறாள். எழுத்தாளரோ தினம் ஒரு பெண்ணுடன் படுக்கையை பகிர்பவர். ஒருமுறை இந்தப் பெண்ணுடன் மூன்று தினங்களை கழிக்கிறார். அந்த பெண் அதனை தான் பெற்ற பாக்கியமாக கருதுகிறாள். காற்றில் அலையும் இறகு போல காலத்தினால் அவள் எங்கெங்கோ அடித்துச் செல்லப் படுகிறாள். அவள் கர்ப்பமுற்று ஒரு மகனைப் பெறுகிறாள். மகன் இறந்து போகிறான். அவளும் கூட மகனுக்கு தாக்கிய அதே நோய் தாக்கி மரணப் படுக்கையில் இருக்கிறாள். அந்த எழுத்தாளனையே உலகம் என்று எண்ணி அவனுடன் கலந்து ஒரு மகனை பெற்று அந்த மகனும் அவளும் மறைந்த வரலாறு அவனுக்கு தெரியாமல் போய்விடக் கூடாதே என்று அவள் அவனுக்கு எழுதுகிறாள். கடிதத்தில் எந்த இடத்திலும் குற்றம் சொல்லும் தொணி இல்லை. முழு நாவலையும் இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் (அந்த சிறுவன் கதை முழுவதுமே ஒரு பிணமாகத்தான் அறியப்படுகிறான்) வாயிலாக ஒரு கடிதத்திலேயே முடித்திருப்பார்.
கதையை எங்கோ கேட்டமாதிரி உள்ளதா?
தங்கர் பச்சான் எழுதிய ”தென்றல்” படத்தின் கதையின் ஒரு பாதி இங்கே தான் துவங்குகிறது. மீதி பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்து “மானே தேனே பொன் மானே“ எல்லாம் போட்டு முடித்திருப்பார். அந்தப் படத்தில் எனக்கு பிடித்தமான பாடல் ஒன்று உள்ளது. “அடித்தோழி அடித்தோழி அடைகாக்கும் சிறு கோழி…”
புத்தகம் வாசிப்பது சேதாரமில்லாத பொழுதுபோக்கு.
நீங்களும் வாசியுஙகள் அவற்றில் பிடித்தவற்றை சமூக வலைதளங்களில் பகிருங்கள் மற்றவர்களும் வாசிப்பார்கள்.


No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...