Tuesday, April 25, 2017

தன் குருத்தணுவே(stem cell) தனக்குதவி


“அவனுக்கு ப்ளட் கேன்சர், இன்னும் 2 மாதங்களில் இறந்து போய் விடுவான்”
“அவர காப்பற்றவே முடியாதா டாக்டர்“
“இல்லம்மா முடியாது, காட் ஈஸ் க்ரேட்னு சொல்லி ஏதாவது  மெடிக்கல் மிராக்கில் நடந்தா தான் உண்டுன்னுதான் வழக்கமா சொல்வோம், இந்த கேஸ்ல கடவுளால கூட காப்பாற்ற முடியாதும்மா, ஐயாம் சாரி”
”டாக்டர்ர்ர்…..” மூர்ச்சையானாள் கதாநாயகி.
”என்னம்மா எல்லாரும் டிவியவே பாத்துக்கிட்டு இருக்கீங்க? திருடன் வந்து திருடிக்கிட்டு போனால் கூட தெரியாது போல இருக்கே” என்றபடி ஆபீஸ்ல இருந்து வந்த அறிவழகன் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான்.
எல்லோரும் கண்ணீரும் கம்பலையுமாக சோகமே வடிவாக காட்சி தந்தார்கள்.
“எப்படா வந்தே? டைனிங் டேபிள்ள காபி இருக்கு சூடு பண்ணி குடிச்சிக்க” என்றாள் அம்மா முந்தானையால் மூக்கை சிந்தியபடி. மறுபடியும் டிவியில் மூழ்கிப் போனாள்.
அப்பாவோ தன் கண்ணீரை யாரும் பாத்துடக் கூடாதேன்னு சுவர் பக்கமாக ஒருக்களித்து படுத்துக் கொண்டு டிவி பாத்துக் கொண்டு இருந்தார்.
தங்கையவள் கண்ணில் இரு கங்கையை கண்டான். துடைக்க கூட தோன்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கங்கா பொருத்தமான பெயர்தான்.
தம்பி கபிலன் ஒருத்தன் தான் எந்த வித சலனமும் இன்றி படத்தை படமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
நான் காபியை சூடு பண்ணி குடித்து முடிக்கவும் படம் முடியவும் சரியாக இருந்தது.
“எம்மா, இனிமே இந்த ப்ளட் கேன்சர் பேர சொல்லி ஹீரோவையோ ஹீரோயினையோ சாகடிச்சி சென்டிமென்ட் படம் எடுக்கற வேலை எல்லாம் ஆகாது”
“ஏண்ணா?“ என்றாள் கங்கா.
“இப்போ ப்ளட்கேன்சர் கம்ப்ளீட்லி க்யுரபில் டிசிஸ்“
“எப்படிண்ணா, எப்படி க்யுர் பண்ண முடியும்?“ என்றான் கபிலன் ஆர்வமாக.
“ஸ்டெம் செல் ட்ரீட்மெண்ட் மூலமா குணப்படுத்தலாம்”
“எப்படிண்ணா? கடவுளால கூட குணப்படுத்த முடியாதுன்னு டாக்டரே சொல்றாரே“
“அதெல்லாம் அந்தப் படம் எடுக்கும் போது இருந்த நிலைமை, இப்போ மெடிக்கல் சயின்ஸ் எவ்வளவோ முன்னேறியாச்சு”
“கேன்சர் செல் இரத்தம் பூராவும் பரவி போய்ட்டா சாவு உறுதி தானே, அத எப்படி குணப் படுத்த முடியும்?”
“கீமோ தெரப்பி அல்லது ரேடியேஷன் தெரப்பி மூலமா கேன்சர் பாதித்த செல்களை கொன்று புதிய செல்கள் பாதிக்காத வண்ணம் தொடர்ந்து கண்காணிச்சு ஆரம்ப நிலை கேன்சர் குணப் படுத்துறாங்க. இதுதான் இப்போதைய வழக்கம். முற்றிய கேஸ்கள்ல ஒன்றும் செய்ய இயலாது“
“ஆனா இப்போ முற்றிய கேஸ்கள்ல கீமோ கொடுத்துக் கிட்டே, இரத்த அணுக்களின் உற்பத்தி கேந்திரமான எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள செலுத்துவாங்க. அந்த ஸ்டெம் செல் எலும்பு மஜ்ஜையா மாறி விடும். ஏற்கனவே பாதிப்படைந்த மஜ்ஜைகளைக் கூட இந்த புதிய செல்கள் தாக்கி அழித்து விடும். முற்றிலும் புதிய ஆரோக்கியமான இரத்த செல்கள் உற்பத்தியாக ஆரம்பித்து விடும். நோய் முற்றிலும் குணமாகி விடும்”

“அட ரொம்ப ஆச்சரியமா இருக்கேண்ணா!”
“டேய் கபிலன் ஸ்டெம் செல் தெரப்பி மூலமா பாட்டியோட பொக்கை வாயில கூட முற்றிலும் புதிய வலிமையான பல்ல முளைக்க வச்சிடலாம்டா. அப்புறம் பாட்டி எலும்புக் கறி தான் கேக்க போறாங்க”
“டேய் அறிவு அப்படின்னா வாடா நாளைக்கே டாக்டர் கிட்ட போவோம்“ என்றாள் பாட்டி வெற்றிலை பாக்கை சிற்றுரலில் இடித்துக் கொண்டே.
“அப்பா உங்க தலையில கூட முடி முளைக்க வச்சிடலாம்பா. அப்புறம் நீங்க ரஜினி ஸ்டைல் கூட பண்ணலாம்”
“டேய் அயோக்கிய ராஸ்கல்“ என்று கையில் இருந்த விகடனால் விசிரியடித்தார் அப்பா.
“அம்மா உங்க அண்ணனுக்கு சுகர் கம்ப்ளைன்ட் கூட சரி பண்ணிடலாம். இனி மாத்திரையோ இன்சுலினோ தேவைப் படாது”
“ஏண்டா மாமான்னு சொல்ல வேண்டியது தானே“ என்று கோபித்துக் கொண்டே எந்த டாக்டர் கிட்ட போக வேணும் என்று கேட்டுக் கொண்டாள் பாசமலர் அண்ணனுக்காக.
“உனக்கு மூட்டு வலி கூட இனிமே வரவே வராதும்மா, பழச கழட்டி போட்டுட்டு புது மூட்டு வளத்து வச்சிக்கலாம்”
“என்னண்ணா சொல்ற? எப்படிண்ணா?“ என்றாள் கங்கா
“இன்னும் சொல்றேன் கேளு, பார்வை குறைபாடு உள்ளவங்களுக்கு புதிய விழித்திரை உருவாக்கி பார்வை வரச் செய்யலாம்.“
“மூளை பாதிப்பு அல்லது நரம்பு செல் பாதிப்பு சார்ந்த குணப்படுத்த இயலா வியாதிகளை அந்த செல் டேமேஜை சரி செய்து குணப்படுத்தலாம்“
“இரத்தம் தேவைப் படும் நோயாளிகளுக்காக இரத்தத்தையே லேபில் உற்பத்தி செய்து செலுத்திக் கொள்ளலாம்“
“உறுப்பு மாற்று சிகிச்சைக்காக மூளைச் சாவு அடைந்தோரின் உறுப்புகளுக்காக காத்திருக்க வேண்டாம். வேண்டிய உறுப்புகளை வளர்த்து பொருத்திக் கொள்ளலாம்“.
”ஏன் குழந்தையின்மை, தழும்பின்றி தீக்காயம் ஆற்றுதல் மற்றும் எயிட்ஸ் நோயை கூட குணப்படுத்தலாம்“
“அண்ணா, ஸ்டெம் செல் ன்னா என்னன்னு சொல்லுண்ணா“ என்றான் கபிலன் ஆர்வமாக.
“ம் அப்படிக் கேளு சொல்றேன், நம்ம உடலில் அடிப்படை அலகு செல் தான்னு பயாலஜில படிச்சிருப்பீங்க இல்லையா?“
“ஆமாண்ணே, அது ரொம்ப நுண்ணியது மைக்ரோஸ் கோப்ல வச்சிதான் பாக்கணும். பயாலஜி மேடம் காமிச்சிருக்காங்க“ என்றாள் கங்கா.
“நம்ம உடம்புல உள்ள செல்கள் தன்னைத் தானே புதுப்பிச்சிக்கும். பழையன கழிதலும் புதியன வருதலும் என. ஒவ்வொரு உறுப்புக்குறிய செல்லும் புதிதாக வந்தாலும் அந்த உறுப்புக்குறிய செல்லாகத்தான் வருமே ஒழிய வேறு ஒன்றாக வருவதில்லை இல்லையா”
“ஏன்டா வெத ஒண்ணு போட்டா சொர ஒண்ணா மொலைக்கும்“ இது அம்மா. அம்மாவும் சயின்ஸ்ல ஆர்வமாயிட்டாங்க.
“ஆனா குழந்தை உருவாகும் போது கரு முட்டை ஒன்றிலிருந்தே உடலின் அனைத்து உறுப்புகளுக்குரிய செல்களும் வளருதே“
“அட ஆமாண்டா, வெதைக்குள்ள ஒரு பெரிய விருட்சமே பொதிந்து கிடக்கறது போல“ என்றார் அப்பா.

“ஆமாம்பா விஞ்ஞானிகளுக்கு இந்த விஷயம் பெரிய விந்தையா இருந்துச்சு. அதுக்காக கருவை எல்லாம் எடுத்து ஆராய்ச்சி செய்ய முடியாதே. அதனால 1981ல ஒரு எலியொட கருவில் ஆராய்ச்சி செய்து பல்வகை உறுப்புகளா மாற வல்ல ஒரு புதுவகை செல்லை கண்டு பிடிச்சாங்க. அது தான் ஸ்டெம் செல் தமிழ்ல குருத்தணு என்று சொல்றாங்க”
“மனித கருவில் இருந்து குருத்தணுவ பிரிச்சி எடுத்துட்டாங்களா அண்ணா?“ என்றான் கபிலன்
“ஆனா அது அவ்வளவு சுலபமா கை கூடல. வழக்கம் போல மத நம்பிக்கைகள் அறிவியல் முன்னேற்றத்திற்கு குறுக்கே வந்துச்சு. இப்போ குருத்தணுக்கள பிரிச்சிட்டாங்க. அதுக்கு மனிதக் கரு முட்டை தேவை இல்லை”
“அப்படியா அப்புறம் எங்கேருந்து எடுப்பாங்கண்ணே” என்றாள் கங்கா.
“ஸ்டெம் செல்கள் கரு முட்டையில் மட்டும் இன்றி பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி இரத்தம் மற்றும் கருவை சுற்றி இருக்கும் பனிக்குட நீரில் கூட இருக்கும்”
“ஆமாண்ணா, “கார்ட் ப்ளட் பேங்க்“ பற்றி விளம்பரங்கள் பாத்திருக்கேன் அண்ணா. ஆனா எதுக்காக அந்த பேங்க் என்று தெரியலயே” என்றாள் கங்கா.
“ஏம்மா புதுசா எந்த விஷயம் கேட்டாலும் சரியா தெரியலேன்னா கூகுல் பண்ணி தெளிவா தெரிஞ்சிக்கணும்“
“எங்க அதெல்லாம் பண்றா. எனக்கு வேலைல கூட ஒத்தாச பண்ணாம இந்த டிவி கட்டிக் கிட்டே அழுவுறா. இதோ அவன் இருக்கானே அவன் பொழுதுக்கும் செல்ல நோண்டிக் கிட்டே இருக்கான்“ என்று ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடித்தார் அம்மா.
“ அம்மா இதான் சமயம் ன்னு போட்டு குடுக்காதே. அண்ணா நீ மேல சொல்லுண்ணா. ஸ்டெம் செல் பத்தி இன்னும் தெளிவா சொல்லுண்ணே”
“மற்ற செல்களில் இருந்து ஸ்டெம் செல் எப்படி வேறுபடுதுன்னா, தன்னைத் தானே மீள் உருவாக்கம் செய்து கொள்வதோடு வெவ்வேறு வகை உறுப்பு செல்களாக உருமாறிக் கொள்ள வல்லது.”
“நீண்ட நாட்கள் செயல்படா நிலையில் இருந்தாலும் தேவைப்படும் போது தன்னைத் தானே மீள் உருவாக்கம் செய்து கொள்ளும். சில குறிப்பிட்ட உடலியல் சூழல்களில் அந்த செல்களை தேவைப் படும் உறுப்புகளுக்குரிய திசுக்களாக மாறிக் கொள்ள தூண்ட இயலும்“
“செம்புலப் பெயல் நீர் போல சேரும் உறுப்புக்குரிய இயல்புக்கு மாறிக் கொள்கிறது இல்லையா”
“வாவ்! அழகா சொன்னீங்கப்பா“
“ஓ அதனால தான் இத சர்வ ரோக நிவாரணின்னு சொன்னியா“
“ஆமாம்மா, 1998 ல தான் மனிதக் கரு குருத்தணுவை தனியே பிரிக்கும் முறையை கண்டு பிடிச்சாங்க“
“தொப்புள் கொடி இரத்தம் கிடைச்சா மாமாவோட சுகர குணப்படுத்திடலாமாடா?“
“பாத்தீங்களாப்பா பாசமலர் தங்கச்சிய“ என்று வம்புக்கிழுத்தாள் கங்கா
“அதுக்கு அவரோட தொப்புள் கொடி இரத்தம் வேணுமேம்மா”
“டேய் அதுக்கு எங்கடா போறது“
“அதுக்குத்தான் இப்போ “தொப்புள் கொடி இரத்த சேமிப்பு வங்கி“(cord blood bank)னு ஆரம்பிச்சு பிறந்த குழந்தைகளோட தொப்புள் கொடி இரத்தம் சேமிக்க சொல்றாங்க. எதிர் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வியாதிகள குணப்படுத்த வசதியாக இருக்கும் இல்லையா?“
“அப்போ தொப்புள் கொடி இரத்தம் இல்லைன்னா இந்த ஸ்டெம் செல் தெரப்பி வேலை செய்யாதா?“ என்றான் கபிலன்.
“அதுக்கும் மாற்று ஏற்பாடு கண்டு பிடிச்சிட்டாங்க 2006ம் வருடம். சில குறிப்பிட்ட செல்களை மரபியல் ஆய்வுக்கு உட்படுத்தி ஸ்டெம் செல்லாக மாற்றியமைக்கலாம் என்று கண்டு பிடிச்சிருக்காங்கப்பா அதுக்கு பேர் தூண்டப்பட்ட ஸ்டெம் செல்கள்”
“இப்போ ஸ்டெம் செல் ட்ரீட்மெண்ட் செய்ய முடியுமா முடியாதா?“ என்றாள் கங்கா.
“இப்போதைக்கு கேன்சரை குணப்படுத்துவதற்குத் தான் இந்த வகை ட்ரீட்மெண்ட் பயன் படுத்தப்பட்டு வருகிறது. மற்றவை எல்லாம் ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது.“
”2004ல லண்டன் கிங்ஸ் காலேஜ்ல ஒரு எலியின் மொத்த பல் வரிசையையும் செயற்கையா அமைச்சு வெற்றி கண்டிருக்காங்க”
“நான் முதலில் சொன்ன அனைத்துமே சாத்தியங்கள் தான். அவை எல்லாம் இன்னும் ஆராய்ச்சி அளவில் தான் உள்ளன. அதிக செலவு பிடிக்கும் ஆராய்ச்சிகள். இதையெல்லாம் தாண்டி அகில உலக மருத்துவ மாஃபியாக்களின் லாபிய தாண்டி இவை நடைமுறைக்கு வரணும்”
“அடப் போடா” என்று எழுந்து போனார் அப்பா ஏமாற்றத்தோடு வழுக்கையை தடவிக் கொண்டே.
“ஏண்டா எனக்கு பல் முளைக்க வைக்கிறேன்னு சொன்னியேடா” இது பாட்டி
“பாட்டி பல் முளைச்சா நீ ராஜ்கிரண் மாதிரி நல்லி எலும்பு கடிக்கலாம்னு பாக்குறியா அது இப்போ நடக்காது” என்றான் கபிலன்.
“இப்போதைக்கு இயக்குனர்கள் யாரும் கேன்சர் கதைய வச்சி ஜல்லியடிக்க முடியாது அவ்வளவு தான்.





No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...