Wednesday, October 31, 2018

கசந்த பவன்


கசந்தபவன்
இதுவும் கூட 96 படக்கதை போல தான் ஆனா வேற ஃபிளேவர்.
1994-1997 காலகட்டத்தில் நான் திருச்சி தேசியக் கல்லூரியில் கணித இளங்கலை பயின்று வந்தேன்.  அம்பேத்கர் அரசு கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன்.
விடுதியில் தங்கியிருக்கும் இன்மேட்ஸ் 150 பேர் ஆனால் கெஸ்ட் ஒரு 200 பேர் என சுமார் 350 பேர் தங்கியிருக்கும் விடுதி அது. முதலாம் ஆண்டு படித்தபோது மெஸ்ஸில் சாப்பாடு வாங்க தட்டோட வந்து இன்மேட்ஸ்க்கு சாப்பாடு இல்லாமல் செய்து விடுவார்கள். இந்த போட்டியில் ஜெயிக்கும் அளவுக்கு அப்போது மனதளவிலும் சரி உடலளவிலும் சரி திறமையில்லாமல் இருந்தேன் ( ஒன்லி 47 கிலோ வெயிட் தாங்க) பல நாட்கள் காலை உணவு ஜமால் முகமது கல்லூரி வாயில் அருகே இருக்கும் தேவி ஹோட்டலில் தான். 10 ரூபாய்க்கு பூரி சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு சைக்கிளை விடுவேன்.
இரண்டாம் ஆண்டு வந்தபோது அனைத்து அறை மாணவர்களும் கலந்து பேசி அவரவர் அறைக்கு உரிய உணவினை பாத்திரங்களில் பெற்று சென்று கெஸ்ட் மற்றும் இன்மேட்ஸ் பகிர்ந்து உண்ணுவது என்கிற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின்னர் இந்த உணவு பிரச்சினை தீர்க்கப்பட்டது.

இவ்வளவு தூரம் சாப்பாட்டு விஷயத்தில் கவனம் எடுத்துக் கொள்ளும் நான் ஓட்டலில் சாப்பிடும் விஷயத்தில் கொடுக்கப்படும் ஒவ்வொரு பைசாவையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்வது என்பதில் கவனமாக இருப்பேன். எனது நண்பன் ஒருவன் என்னைக் காட்டிலும் ஒருபடி மேல். இலையை பாலீஷ் போட்டமாதிரி வழித்து எடுத்துவிடுவான்.
ஒரு முறை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புஷ்பம் ஓட்டலில் சென்று குழுவாக மதிய உணவு சாப்பிட்டோம். அது ஃபுல் மீல்ஸ் தான் வேண்டுமளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். நண்பன் சாப்பிட்டு இலையில் மல்லி கருவேப்பிலை உள்ளிட்ட அனைத்தையும் பல்லால் அரைத்து இரைப்பையில் அடைத்து விட்டான். சர்வர் ஓருவர் பார்த்துவிட்டு இப்போது தான் வந்தமர்ந்திருக்கிறார் எனக் கருதி அப்பளமும் பொறியலும் வைத்து விட்டார் என்றால் பாருங்கள்.
ஐஸ் கிரீம் என்றால் ”மைக்கில்ஸ்” தான். சிங்காரத்தோப்பு தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸ் என்று அருகருகே இரண்டு கிளைகள். பத்து ரூபாய்க்கு நான்கு ஃபிளேவர்கள் சாப்பிடுவது என்பது அங்கே மட்டுமே சாத்தியம். எனவே ஷாப்பிங் போகும் போது முதல் செலவு “மைக்கில்ஸ்” தான். அதே நினைப்பில் சமீபத்தில் குடும்பத்தோடு சென்று நன்றாக வாங்கி கட்டிக் கொண்டேன்.( உங்கப்பாவோட சிக்கனத்துக்கு (கஞ்சத்தனம் இடக்கரடக்கல்) அளவே இல்லடா)
இரவு நேர ஷாப்பிங் எனில் கேரளா மெஸ்ஸில் “கோமாதா” வறுவலுடன் பரோட்டா. அவ்வளவு சுவையாக இருக்கும். பரோட்டாவின் சுவையைக் காட்டிலும் எனது அண்ணன் அறிவழகன் அந்த பரோட்டா+வறுவல் பற்றி சொல்லக் கேட்பது இன்னும் சுவையாக இருக்கும். அங்கேயே தரைதளத்தில் ஒரு ஸ்வீட் பீடாக்கடை அவ்வளவு சுவையாக வாய்நிறைய இனிப்பான பீடா நன்றாக இருக்கும்.
நடுப்பகல் வேளை உச்சிவெயில் நேர உலா என்றால் 25 ரூபாய் பேண்ட் பாக்கெட்டில் வசந்தபவனுக்காக தனியே எடுத்து வைத்துவிடுவோம். சும்மா ஜில்லுன்னு ஏசி.  ஒரு பெரிய தட்டுக்குள் அழகழகாய் குட்டி குட்டி கிண்ணங்களில் பொறியல் வகைகள். பெரிய அப்பளம் என பார்க்கும் போதே வாயில் உமிழ் நீர் ஊற்றெடுக்கும். உணவின் சுவை என்றால் அவ்வளவு சுவை.
25 ரூபாய் 35 ஆனது பிறகு 50 ஆனது. அப்புறம் பெரிய இடைவெளிக்கு பிறகு ஒரு முறை சென்றபோது 120 என அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.  விலை ஏறிய போதெல்லாம் தரம் குறைந்த வண்ணமே வந்தது. இரண்டு நாட்களுக்கு முன் ஷாப்பிங் முடிந்து கலைத்து போய் சாப்பிடலாம் என்று மக்கள் கடலால் வசந்தபவனில் கரை ஒதுங்கினோம். சாப்பாடு அடடே ஆச்சரியக்குறி 80 ரூபாய் தான். ஆனால் சுவை சுத்த மோசம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் மாறவே இல்லை. 90களில் டிசைன் செய்த இன்டீரியர் சேர் டேபிள் எதுவும் மாற்றவே இல்லை. எல்லாம் பெயர்ந்து போய் இருந்தது. ஏசியும் தான்( அப்போது போலவே உச்சி வெயிலிலும் வெடவெடக்கும் குளிர் அடிக்கும் ஏசி). வாஷ்பேசினுக்கு கீழே உள்ள ஷெல்ஃப் மூடப்படாமல் ஒரே அழுக்காக தட்டு முட்டு ஜாமான் போட்டு ஒரே ”கலீஜா” இருந்தது. ஒரு காலத்தில் நினைத்தாலே இனிக்கும் என்று இருந்த வசந்தபவன் இன்று கசந்த பவன் ஆகிப்போனது.


Wednesday, October 17, 2018

அறிவியல் கட்டுரையாளர் திரு என்.இராமதுரை அவர்கள் மறைவு



கொல்லிமலை ஹில் டேல் பள்ளியில் வேலை பார்த்தபோது ஒரு முறை புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த பீரோ வை திறந்து ரகம் வாரியாக புத்தகங்களை அடுக்கிக் கொண்டு இருந்த போது விண்வெளி சார்ந்த புத்தகம் (செய்தித் தாளில் வந்ததை கத்தறித்து பைண்டிங் செய்யப்பட்டது) ஒன்று கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்தால் வேலை மற்றும் சாப்பாட்டு நேரம் நீங்கலாக மற்ற எல்லா நேரமும் அந்த புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன். அது அப்பல்லோவின் தோல்வியடைந்த விண்வெளித் திட்டம் பற்றியது. புத்தகத்தின் எழுத்து நடை அவ்வளவு எளிமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.
அந்த காலகட்டத்தில் இராமதுரை அவர்கள் தினமணியில் அவ்வப்போது எழுதுவார். அவரது கட்டுரைகளுக்காகவே கொஞ்சநாள் தினமணி வாங்கினேன். பிறகு “அறிவியல்புரம்” என்ற வலைப்பூ (www.ariviyal.in) வில் எழுதி வந்தார் .
“அறிவியலில் கடினமான கருத்துக்கள் என்று எதுவும் இல்லை, ஆனால் அதை எளிமையாக எடுத்தியம்ப வல்ல ஆட்களுக்குத்தான் பற்றாக்குறை” என்று கூறுவார்கள். இராமதுரை அவர்களின் கட்டுரைகள் எனக்கு விண்வெளி, அணுவிஞ்ஞானம் மற்றும் சில இயற்பியல் சார்ந்த விஷயங்களில் பேரார்வத்தை ஏற்படுத்தித் தந்தது என்றால் மிகையில்லை.
அவரது இறப்பு அறிவியல் ஆர்வலர்களுக்கு பேரிழப்பு. அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, October 10, 2018

”நியுட்ரினோக்கள்” பற்றி ஒரு எளிய அறிமுகம்.




OMNIPRESENT  என்ற வார்த்தையை கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
இந்த அண்ட சராசரங்களான பிரபஞ்ச வெளி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது என்று தானே பொருள்.
உள்ளபடியே அவ்வாறு நிறைந்திருப்பது எதுவோ?
உண்டியல் ஆரம்பித்து அதன் எதிரே உள்ள சிசிடிவி கேமரா உட்பட இந்த வெளியெங்கிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் அன்றி வேறு யார்??
சரி அது ”ஆன்மீகம்“ வேற டிப்பார்ட்மண்ட்.
அறிவியலை பொறுத்தமட்டில் இந்த பிரபஞ்ச வெளியெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது “நியுட்ரினோக்கள்” எனப்படும் மிகவும் நுண்ணிய துகள் தான். நுண்ணிய என்றால் எவ்வளவு சின்னது?
ஒரு நானோ மீட்டரில் எட்டு ஹைட்ரஜன் அணுக்கள் கொள்ளுமாம். அந்த அணுவில் இருக்கும் எலக்ட்ரான் துகளின் எடையில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு எடை உள்ளது தான் இந்த நியுட்ரினோக்கள். ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 3 லட்சம் கிமீ ) பிரபஞ்ச வெளியில் பயணம் செய்தபடி உள்ளது.
ஆமாம், இது எங்கே உண்டாகிறது?
நியுட்ரினோக்களின் ஊற்றுக்கண்ணானது கருந்துளைகளின் மோதல்,சூப்பர் நோவாக்களில் நடக்கும் பெருங்கிளர்ச்சி மற்றும் கதிரியக்க சிதைவுகள். இதற்கு மின்சுமை இல்லை ஆதலால் மின் புலங்களாலோ காந்த புலங்களாலோ பாதிக்கப் படாமல் “இருக்கிற இடம் தெரியாமல்“ பயணிக்கிறது.
உங்களுக்கு ஒன்று தெரியுமா இந்த துகள்கள் எதையும் ஊடுருவிச் செல்ல வல்லது. புவியின் இந்த பக்கத்தில் இருந்து துளைத்துக் கொண்டு அந்தப் பக்கத்திற்கு சென்றுவிடும். அதுவும் ஒளியின் வேகத்தில்.அதாவது ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் புவியை எக்ஸ்-ரே எடுத்து படம் காட்டிவிட்டு சென்றுவிடும்.
நீங்கள் இதை படிக்கும் இந்த நேரத்தில் லட்சக்கணக்கான நியுட்ரினோக்கள் உங்கள் உடலை ஊடுருவியபடி உள்ளது. இந்த துகள் எதனுடனும் அவ்வளவு எளிதில் வினைபுரியாது. ஆகவே நம்மை துளைத்துக் கொண்டு செல்வதால் எந்த பாதிப்பும் இல்லை.
சரி இந்த நியுட்ரினோக்களை பிடித்து ஆய்வு செய்து படம் வரைந்து பாகங்களை குறிக்கலாம் என்றால் இது அவ்வளவு எளிதாக கையில் தனியாக சிக்காது. விண்வெளியில் இருந்து எப்படி நியுட்ரினோக்கள் மழையெனப் பொழிகிறதோ அதே மாதிரி காஸ்மிக் கதிர்களும் வந்த வண்ணம் உள்ளன. அதிவேகத்தில் கும்பலில் கலந்து செல்வதால் நியுட்ரினோக்கள் எளிதில் பிடிபடுவதில்லை.
அப்படியும் விட்டுவிட முடியாதில்லையா? அதனால நம்ம விஞ்ஞானிகள் எல்லாம் ஆராய்ச்சி செய்து காஸ்மிக் கதிர்களை நைசா கழட்டி விட்டு நியுட்ரினோக்களை தனித்து பிடித்து ஆய்வு செய்யும் நியுட்ரினோ டிடெக்டர்கள்  புவிக்கடியில் 1கி.மீ ல் அமைக்கப் படுகின்றன. இப்போது ஜப்பான், கனடா, மெக்சிகோ, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் அண்டார்டிகா வில் இந்த நியுட்ரினோ டிடெக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.

சரி பிடிச்சி ஆய்வு பண்ணி அப்படி என்னத்த கண்டுபிடிச்சாங்க?
ஐஸ்கிரீம்ல பல ஃபிளேவர்கள் வருகிற மாதிரி இந்த நியுட்ரினோக்கள் 3 ஃபிளேவர்கள்ல வருதாம் 1. எலக்ட்ரான் நியுட்ரினோ, 2. மியுவான் நியுட்ரினோ, 3. டௌ நியுட்ரினோ.
சரி விடுங்க ரொம்பவம் சயின்டிஃபிக்கா போற மாதிரி இருக்கு, இதனால எதாவது பயன் உண்டா அத மட்டும் சொல்லுங்க!!
அணுக்கழிவுகளில் இருந்து நியுட்ரினோக்கள் வெளியே வருவதால் இரகசியமாக அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு ஆயுதபூஜை கொண்டாடும் நாடுகளை உளவு பார்க்க இயலும் .
பூமியை ஊடுருவ வல்ல துகளாக இருப்பதால் அப்படியே ஒரு எக்ஸ்-ரே எடுத்து கொடு என்று உரிமையாக கேட்டுக் கொள்ளலாம். மினரல்ஸ் மற்றும் ஆயில் டெப்பாசிட் எங்குள்ளது என்பதை துள்ளியமாக கணிக்க இயலும்.
நியுட்ரினோ துகள் மீது தகவல்களை ஏற்றி பரிமாற்றம் செய்ய இயலும் என்று ஆய்வின் மூலம் நிறுவப்பட்டுள்ளது. எனவே நியுட்ரினோக்களை கேரியர் வேவ்ஸாக பயன்படுத்தி தகவல் தொடர்பை சாத்தியமாக்கினால் கடலுக்கடியில் கூட டவர் பிராப்ளம் இருக்காது. இன்டர் பிளானிடரி இன்டர் ஸ்டெல்லார் தகவல் தொடர்புகள் கூட எதிர்காலத்தில் சாத்தியப்படும்.



மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...