Wednesday, October 10, 2018

”நியுட்ரினோக்கள்” பற்றி ஒரு எளிய அறிமுகம்.




OMNIPRESENT  என்ற வார்த்தையை கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
இந்த அண்ட சராசரங்களான பிரபஞ்ச வெளி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது என்று தானே பொருள்.
உள்ளபடியே அவ்வாறு நிறைந்திருப்பது எதுவோ?
உண்டியல் ஆரம்பித்து அதன் எதிரே உள்ள சிசிடிவி கேமரா உட்பட இந்த வெளியெங்கிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் அன்றி வேறு யார்??
சரி அது ”ஆன்மீகம்“ வேற டிப்பார்ட்மண்ட்.
அறிவியலை பொறுத்தமட்டில் இந்த பிரபஞ்ச வெளியெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது “நியுட்ரினோக்கள்” எனப்படும் மிகவும் நுண்ணிய துகள் தான். நுண்ணிய என்றால் எவ்வளவு சின்னது?
ஒரு நானோ மீட்டரில் எட்டு ஹைட்ரஜன் அணுக்கள் கொள்ளுமாம். அந்த அணுவில் இருக்கும் எலக்ட்ரான் துகளின் எடையில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு எடை உள்ளது தான் இந்த நியுட்ரினோக்கள். ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 3 லட்சம் கிமீ ) பிரபஞ்ச வெளியில் பயணம் செய்தபடி உள்ளது.
ஆமாம், இது எங்கே உண்டாகிறது?
நியுட்ரினோக்களின் ஊற்றுக்கண்ணானது கருந்துளைகளின் மோதல்,சூப்பர் நோவாக்களில் நடக்கும் பெருங்கிளர்ச்சி மற்றும் கதிரியக்க சிதைவுகள். இதற்கு மின்சுமை இல்லை ஆதலால் மின் புலங்களாலோ காந்த புலங்களாலோ பாதிக்கப் படாமல் “இருக்கிற இடம் தெரியாமல்“ பயணிக்கிறது.
உங்களுக்கு ஒன்று தெரியுமா இந்த துகள்கள் எதையும் ஊடுருவிச் செல்ல வல்லது. புவியின் இந்த பக்கத்தில் இருந்து துளைத்துக் கொண்டு அந்தப் பக்கத்திற்கு சென்றுவிடும். அதுவும் ஒளியின் வேகத்தில்.அதாவது ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் புவியை எக்ஸ்-ரே எடுத்து படம் காட்டிவிட்டு சென்றுவிடும்.
நீங்கள் இதை படிக்கும் இந்த நேரத்தில் லட்சக்கணக்கான நியுட்ரினோக்கள் உங்கள் உடலை ஊடுருவியபடி உள்ளது. இந்த துகள் எதனுடனும் அவ்வளவு எளிதில் வினைபுரியாது. ஆகவே நம்மை துளைத்துக் கொண்டு செல்வதால் எந்த பாதிப்பும் இல்லை.
சரி இந்த நியுட்ரினோக்களை பிடித்து ஆய்வு செய்து படம் வரைந்து பாகங்களை குறிக்கலாம் என்றால் இது அவ்வளவு எளிதாக கையில் தனியாக சிக்காது. விண்வெளியில் இருந்து எப்படி நியுட்ரினோக்கள் மழையெனப் பொழிகிறதோ அதே மாதிரி காஸ்மிக் கதிர்களும் வந்த வண்ணம் உள்ளன. அதிவேகத்தில் கும்பலில் கலந்து செல்வதால் நியுட்ரினோக்கள் எளிதில் பிடிபடுவதில்லை.
அப்படியும் விட்டுவிட முடியாதில்லையா? அதனால நம்ம விஞ்ஞானிகள் எல்லாம் ஆராய்ச்சி செய்து காஸ்மிக் கதிர்களை நைசா கழட்டி விட்டு நியுட்ரினோக்களை தனித்து பிடித்து ஆய்வு செய்யும் நியுட்ரினோ டிடெக்டர்கள்  புவிக்கடியில் 1கி.மீ ல் அமைக்கப் படுகின்றன. இப்போது ஜப்பான், கனடா, மெக்சிகோ, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் அண்டார்டிகா வில் இந்த நியுட்ரினோ டிடெக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.

சரி பிடிச்சி ஆய்வு பண்ணி அப்படி என்னத்த கண்டுபிடிச்சாங்க?
ஐஸ்கிரீம்ல பல ஃபிளேவர்கள் வருகிற மாதிரி இந்த நியுட்ரினோக்கள் 3 ஃபிளேவர்கள்ல வருதாம் 1. எலக்ட்ரான் நியுட்ரினோ, 2. மியுவான் நியுட்ரினோ, 3. டௌ நியுட்ரினோ.
சரி விடுங்க ரொம்பவம் சயின்டிஃபிக்கா போற மாதிரி இருக்கு, இதனால எதாவது பயன் உண்டா அத மட்டும் சொல்லுங்க!!
அணுக்கழிவுகளில் இருந்து நியுட்ரினோக்கள் வெளியே வருவதால் இரகசியமாக அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு ஆயுதபூஜை கொண்டாடும் நாடுகளை உளவு பார்க்க இயலும் .
பூமியை ஊடுருவ வல்ல துகளாக இருப்பதால் அப்படியே ஒரு எக்ஸ்-ரே எடுத்து கொடு என்று உரிமையாக கேட்டுக் கொள்ளலாம். மினரல்ஸ் மற்றும் ஆயில் டெப்பாசிட் எங்குள்ளது என்பதை துள்ளியமாக கணிக்க இயலும்.
நியுட்ரினோ துகள் மீது தகவல்களை ஏற்றி பரிமாற்றம் செய்ய இயலும் என்று ஆய்வின் மூலம் நிறுவப்பட்டுள்ளது. எனவே நியுட்ரினோக்களை கேரியர் வேவ்ஸாக பயன்படுத்தி தகவல் தொடர்பை சாத்தியமாக்கினால் கடலுக்கடியில் கூட டவர் பிராப்ளம் இருக்காது. இன்டர் பிளானிடரி இன்டர் ஸ்டெல்லார் தகவல் தொடர்புகள் கூட எதிர்காலத்தில் சாத்தியப்படும்.



No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...