Sunday, September 30, 2018

”பரியேறும் பெருமாள் பிஏ பிஎல் மேல ஒரு கோடு”


பின்னாடி வேகத்தோடு வரும் இரயில், தண்டவாளத்தில் துண்டால்  பிணைக்கப் பட்டிருக்கும்  கருப்பி என்கிற நாய், காப்பாற்ற ஓடிவரும் நாயகன் பரியன். இரயில் வந்து நாயை சிதைத்து சின்னாபின்னமாக்கி செல்கிறது. இப்படி முதல் காட்சியிலேயே இறந்து போகும் கருப்பி படம் நெடுக மட்டுமல்ல படம் பார்த்த பின்பும் மனதை விட்டு அகல மறுக்கிறாள். நாய் வளர்ப்போர் அந்த காட்சியில் கதறுவது நிச்சயம்.
தோழி அன்போடு அக்கா திருமணத்திற்கு கூப்பிடுகிறாள். பரியனை மட்டுமே கூப்பிடுகிறாள். ஆசையோடு சட்டை பேண்ட் ஓசி வாங்கி உடுத்திக் கொண்டு கையில் அன்பளிப்போடு போகிறான். அங்கே நைச்சியமாக பேசி ஒரு தனியறைக்குள் ஆனந்தியின் அப்பா அழைத்துச் செல்கிறார். பின்பு ஒரு நான்கைந்து பேர் திடுமென உள்ளே வந்து இவனை புரட்டி எடுக்கிறார்கள். முத்தாய்ப்பாக முகத்தில் மூத்திரம் பெய்கிறார்கள். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்றெல்லாம் எண்ணாதீர்கள், வாயில் மலம் கரைத்து ஊற்றப்பட்ட சம்பவமெல்லாம் நடந்தது தான் இந்த தமிழ்நாடு.
“எல்லோராலயும் நெனச்சத நெனச்ச மாதிரி இங்கே பேசமுடியாது சார், நான் ஒரு தடவ பேச முயற்சி பண்ணப்பவே முகமெல்லாம் பேந்து போச்சு” என்று வலியோடு சொல்லும் பரியன்.
“நீங்க நீங்களாவே இருக்கிற வரைக்கும், நான் நாயாவே இருக்கணும்னு நீங்க நினைக்கிற வரைக்கும் இங்கே எதுவுமே மாறாது சார்” என்று இறுதியாக தீர்க்கமாக சொல்கிறான் பரியன்.
அப்பப்பா இந்த ஆங்கிலம் நம்ம பசங்கள இந்த பாடு படுத்துகிறதே. என்று தெளிவாக கூறுகிறார் இயக்குனர். இத்தோடு இந்தியும் திணித்து இருந்தா “ஆணியே புடுங்க வேண்டாம்” னுட்டு ஒரு பயலும் படிக்க போயிருக்க மாட்டான். இங்கே ஆங்கிலம் ஒரு மொழி என்பதைத் தாண்டி அறிவாக பார்க்கப் படுகிறது என்பதையும் தெளிவாகவே சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
பேருந்து புறப்படுகிறது, அறுபது வயதுக்கு மேல் மதிக்கத் தக்க ஒருவர் ஓடி வந்து பேருந்தில் ஏற முனைகிறார். படியில் இருக்கும் இளைஞன் கைத் தூக்கி விட்டு அவரை காப்பாற்றி ஏற்றுகிறான். படியில் ஒற்றைக்கால் பிடிக்க ஒற்றைக் கை என தொங்கியபடி வரும் அந்த இளைஞனின் கையை வெடுக்கென்று இழுத்து விட்டு கீழே விழுந்து சாகும் படி செய்கிறார் அந்த முதியவர். அந்த களேபரத்தில் எல்லோரும் கீழே இறங்கி ஓடிவிட பேருந்துக்குள் ஒருத்தி கதறுகிறாள். இதற்கு மேல் ஒன்றுமில்லை எல்லாம் புரிந்து போனது. அந்த தாத்தா அதே டெக்னிக்கோடு பல சம்பவங்கள் செய்கிறார். அது ஆத்தாளுக்கு கொடுக்கும் பலி என்றே எண்ணி செய்வதாக வேறு கூறுகிறார். அவரை திரையில் காட்டும் போதெல்லாம் அடிவயிறு கலங்குகிறது. அவ்வளவு மிரட்டலான ஆனால் பார்க்க எளிமையான கதாப் பாத்திரம்.
பரியனின் தந்தை அனேகமாக எந்த சினிமாவிலும் கதாநாயகனின் தந்தையாக இப்படி ஒரு பாத்திரம் படைக் கப்பட்டது இல்லை. நடைமுறை வாழ்க்கையில் நாம் கடந்து சென்ற பாத்திரம் தான். ஆனால் அவர்தம் பின்னணி குறித்தெல்லாம் நாம் யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டோம். அந்த கதாப்பாத்திரம் குறித்த விஷயம் சஸ்பென்ஸாகவே இருக்கட்டும். திரையில் பார்த்து அதிருங்கள்.
கதாநாயகி ஆனந்தி “கயல்“ படத்திற்கு பின்பு இந்தப் படத்தில் தான் தேவதையாக தெரிகிறார். வெகுளித்தனமாக பேசும் கருணையுள்ளம் கொண்ட கல்லூரி மாணவியாக அருமையாக நடித்திருக்கிறார். அரசு மருத்துவமனைக்கு வெளியே பரியனோடு பேசும் அந்த ஒருக்காட்சி போதும்.

யோகி பாபுவுக்கு ஆண்டவன் கட்டளை படத்திற்கு பிறகு படம் நெடுக வரும் நண்பன் பாத்திரம். உருவம் சார்ந்த பகடியேதும் இன்றி ஆரோக்கியமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடம். அருமையாக நடித்துள்ளார்.

“கருப்பி என் கருப்பி நகத்தடமே என் பாத…” அருமையான பாடல். அப்புறம் கதாநாயகன் தந்தையின் அறிமுகக் காட்சி பாடலான “எங்கும் புகழ் துவங்க …” என்கிற கிராமியப் பாடலை அப்படியே திருவிழாக்காலத்தில் தரையில் உட்கார்ந்து பார்த்த அதே மணத்தில் கொடுத்திருக்கிறார். படத்தின் நேட்டிவிட்டியின் நம்பகத்தன்மையை தூக்கிப் பிடிப்பதில் ஒளிப்பதிவோடு பின்னணி இசையும் இணைந்து நிற்கிறது. தாராளமாக டவுன்லோட் செய்யுங்கள். ஆல்பத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது.

அப்புறம் பரியனாக நடித்த கதிரை பற்றி சொல்லவே இல்லையே?!
அவர்தான் படம் முழுவதும் தெறிக்க விட்டுருக்காரே. அவரோட கெரியர் கிராஃப் சும்மா சர்ர்ருன்னு மேல போகப் போகுது பாருங்க.



No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...