Saturday, September 22, 2018

தடைக் கற்களே படிக்கற்களாய்…


தடைக் கற்களே படிக்கற்களாய்…


“சார் நீங்க கம்ப்யூட்டர் கோர்ஸ் எங்க படிச்சீங்க?”
“கம்ப்யுட்டர் கோர்ஸா நானா? எல்லாம் ஒரு குத்து மதிப்பா பயன்படுத்தறது தான் சார்!”
“சார் பொய் சொல்லாதீங்க!”
“உண்மையிலேயே முயன்று தவறி கற்றல்( Trial and Error method) முறை தான் சார்”
கொஞ்சம் யோசிச்சிப் பாத்து எனக்கு நானே கேட்டுக் கொண்டேன், ’ஆமா, நாம கம்ப்யுட்டர் எங்க எப்படி கத்துகிட்டோம்’
ஃப்ளாஷ் பேக்-1
நாங்க முதுகலை கணிதத்திற்கு ஃபீஸ் கட்டும் போது கம்ப்யுட்டர் கட்டணம் என்று ஒரு ஐநூறு தனியாக வாங்கினார்கள். அதற்காகவே மதியம் மூன்று மணிக்கு பிறகு எங்கள் டிப்பார்ட்மண்ட் அருகில் இருந்த கம்ப்யுட்டர் லேபிற்குள் அனுமதிக்கப் பட்டோம்.
புலிகேசி படத்தில் அந்தப்புரத்தில் இருந்து “யாரங்கே“ என்று குரல் கொடுத்தவுடன் படைவீரர்கள் ஓடிவந்து புலிகேசியை போட்டு அழுத்தி விடுவார்கள் அல்லவா? அது போல மணி மூன்று அடித்ததும் எல்லோரும் ஓட்டமாக ஓடி லேபில் உள்ள நாற்காலிகளை உருட்டியபடி போய் விழுந்து அங்கே லேப் இன்சார்ஜ் பத்மநாபனை தள்ளிவிடுவோம்.
“யப்பா பிஜி மேத்ஸ் கொஞ்சம் அமைதியாக இருங்கப்பா“ என்று கெஞ்சுவார்.ஏன் இந்த அக்கபோர்?? லேபில் இருக்கும் கம்ப்யுட்டர்களில் விண்டோஸ் மல்டிமீடியா உள்ள கணினி இரண்டுதான். மற்றவை எல்லாம் கருப்பு திரையில் பச்சை எழுத்துக்களாக தோன்றும் மோனோக்ரோம் வகைக் கணினி தான். அந்த விண்டோஸை பிடிக்கத்தான் அந்த போட்டா போட்டி.
இளங்கலை மூன்றாம் வருடம் படிக்கும் போது, ’நாம ஏன் டைப்பிங் கத்துக்க கூடாது என என் ஞானதிருஷ்டியில் உதித்தது’ அதனால் எங்கள் அம்பேத்கர் அரசு விடுதி இருந்த அண்ணா விளையாட்டரங்கம் பகுதியில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஒரு இன்ஸ்டிட்யுட்டில் சேர்ந்து லோயர் பாஸ் பண்ணிட்டேன். அதனால் கணினி விசைப் பலகையில் (key board) A,B,C,D கலைந்து கிடந்தபோது நான் ஆச்சரியப் படவில்லை.
“டேய் ஜெயராஜ் நல்லா வேகமா டைப் பண்றான்டா, அவனுக்கு டைப் தெரியுமாம்டா” என்றொரு சேதி காற்றலைகளில் பறந்து எங்கள் சீனியர் விச்சுவின் காதுகளை அடைந்தது.
ஃபிளாஷ்பேக்-2
பாரதிதாசன் பல்கலைக் கழக கணிதத்துறையில் முதுகலை கணிதம் படித்த காலம். எங்கள் சீனியர் விச்சு என்கிற விஸ்வநாதன் தன்னோட ப்ராஜக்ட் வொர்க் டைப் பண்ண கூப்பிட்டார். 1998ல் புத்தூரில் உள்ள பெரியார் மாளிகையின் உள்புறம் பெரியார் கம்ப்யுட்டர்ஸ் என்று ஒன்று இருந்தது. அங்கேதான் நம்ம சீனியர் விச்சு ப்ராஜக்ட் டைப் பண்ண கேட்டிருக்கிறார். பாடம் கணிதம் என்றவுடன் சென்டர் காரர் பின்னங்கால் பிடரியில் பட காம்பவுண்ட் சுவரேரி குதித்து ஓடியிருக்கிறார். (ஆமா பின்ன ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களும் பத்தாம கிரீக் லத்தீன் இன்னும் என்னவெல்லாமோ சிம்பல் என்கிற பெயரில் வந்து தொலையும். ’என்னய்யா இது ப்ராஜக்ட்ல ஏ,பி,சி,டி ய விட இந்த எழுத்து ஜாஸ்தியா இருக்கு’ பாதியிலேயே துரத்தப்பட்ட பரிதாப வரலாறு எல்லாம் கணித முதுகலை மாணவர்களுக்கு உண்டு.)
காம்பவுண்ட் தாண்டுவதற்குள்ளாக அவரை அல்லேக்கா பிடித்து மல்லாக்க தள்ளி ” நீ கம்ப்யுட்டர் மட்டும் கொடு டைப் பண்ண நம்ம கைவசம் ஒரு அடிமை சிக்கியிருக்கான் என்ன சொல்ற?” என்று கேட்க அந்த “டீலிங்” ரொம்ப பிடித்து போய் அவரும் ஒப்புக் கொண்டு விட்டார்.
அப்புறம் என்ன நான்கு பரோட்டா வாங்கி கொடுத்து நாற்பது பக்கங்களை டைப் பண்ண வச்சிட்டார் நம்ம அண்ணன் விச்சு. அப்போ MS Word 95  என்கிற அப்ளிகேஷன் தான். ஓப்பன் பண்ணியதும் அழகான ஒரு பேனா முனை தோன்றும். ஒவ்வொரு முறை சிம்பள் வரும் போதும் ஆப்ஷன்ஸ் க்குள்ள போய் சிம்பல் ஓப்பன் பண்ணி க்ளிக் பண்ணி எடுக்க வேண்டும். இப்போ எவ்வளவோ மாறிப் போச்சு.
ஃப்ளாஷ்பேக்-3
நான் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்தபோது எங்களது ப்ராஜெக்ட்டுக்கும் அதே பிரச்சனை தான். எங்கே சென்றாலும்“யப்பா உங்க ப்ராஜக்ட் ரெடி பண்ற நேரத்தில மற்ற சப்ஜக்ட்ல 4 ரெடி பண்ணிடுவேன். எவ்வளவு காசு கொடுத்தாலும் உங்க ப்ராஜெக்ட் வேணாம்பா, விட்ருங்கப்பா என்னைய” என்று கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் மல்க கெஞ்சினார்கள்.
அப்போது எங்க டிப்பார்ட்மெண்ட் ஆபீஸில் யுனிவர்சிட்டி ஸ்டாஃப் சொசைட்டி ஆபீஸ் இருந்தது. அதில் எழுத்தராக இருந்த அண்ணன் ஒருவர் “நம்ம வீட்டு பக்கத்தில் ஒரு சென்டர் இருக்கு நான் சொல்லிவிடுரேன்” என்று எங்க பரிதாப நிலை கண்டு இரங்கினார்.
அன்று மாலையே அவரோடு டாண்ணு சென்று அந்த சென்டரில் நின்றோம்.
பாலக்கரை காவேரி தியேட்டருக்கு எதிரில் உள்ள போலிஸ் ஸ்டேஷன் வழியே செல்லும் தெருவில் நான்காவது கடை தான் மேற்படி சென்டர்.
“வாங்க வாங்க உக்காருங்க. ப்ராஜக்டா பாஸ்? எத்தன? அஞ்சு பேருக்கா? சரி உக்காருங்க டீ சாப்புடுங்க” (அட அட என்ன ஒரு மரியாத என்ன ஒரு உபசரிப்பு )
“என்ன சப்ஜெக்ட்? மேத்ஸா??” அந்த கடைசி எழுத்தான ”ஸா” வை உச்சரிக்கும் போதே அவர் முகம் கோணிக்கொண்டது.
”மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
 நோக்கக் குழையும் விருந்து” என்ற திருக்குறள் எல்லாம் படிக்காதவர் போல. கடைசி வரை அவர் சொன்ன அந்த டீ வரவே இல்லை.
“வழக்கமா மேத்ஸ் ப்ராஜக்ட்லாம் பண்றதில்ல நீ சொல்றதால தாம்பா, நீங்களே நைட் ஒன்பது மணிக்கு மேல வந்து டைப் பண்ணி ரெடிப் பண்ணிக்கோங்க நான் வந்ததும் பிரிண்ட் எடுத்து தரேன் என்ன ஓகே வாப்பா?”
”சரிண்ணே நாங்களே டைப் பண்ணிடுறோம்” என்று சொன்னபடி டைப் பண்ணிட்டு அர்த்த ராத்திரியில் அந்த அண்ணன் வீட்டில் தங்கி ஒரு நான்கு நாட்களில் முடித்து விட்டோம்.
ஒரு ஐந்து ப்ராஜெக்ட் டைப் பண்ணியதில் எம்எஸ் வேர்ட் அத்துபடியானது. ஆக பைசா செலவு இல்லாம கம்ப்யுட்டர் கோர்ஸ் கத்துக்கிட்டேன். அவர்கள் பேசாமல் ப்ராஜக்ட் அடித்து தந்திருந்தால் எனக்கு கணினி கற்கும் எண்ணம் தோன்றியிருக்குமோ என்னவோ!!



No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...