Sunday, September 16, 2018

மஜ்னு தந்து சென்ற அருமையான பாடல்கள்!!



ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த முதல் பாடம் மின்னலே, இயக்குநர் கௌதம் க்கும் அந்த படம் தான் முதல். கௌதம் தனக்கென பிரத்தியேகமான ஸ்டைல்(க்ளிஷே என்றும் சொல்லலாம்) வைத்துக்கொண்டது இரண்டாவது சூப்பர் டூப்பர் ஹிட் படமான காக்க காக்க வுக்கு பின்புதான்.
மின்னலே ஓரளவாவது தனது இருப்பை வெளிப்படுத்திக் கொண்டது என்றால் அதற்கு காரணம் கௌதம் அல்ல ஹாரிஸ் ஜெயராஜும் பாம்பே ஜெயஸ்ரீன் வசீகராவும் தான். அந்த படத்தில் அனைத்துப் பாடல்களும் புதுவிதமான ரஹ்மான் தனத்துடன் இளைஞர்களை வசீகரிக்கும் விதத்தில் இருந்தன.
நான் முன்பே ஒரு பதிவில்(இங்கே தான்) உழைத்து சம்பாதித்த முதல் மாத சம்பளத்தில் எனது வெகுநாளைய கனவான டேப்ரிக்கார்டர் வாங்கியது பற்றி கூறினேன் அல்லவா? முதலில் வாங்கிய கேஸட் “ரோஜாக்கூட்டம்” (முதல்பக்கம்) மற்றும் மஜ்னு(இரண்டாம் பக்கம்). மஜ்னு படப் பாடலை டிக் செய்யக் காரணம் ”மின்னல் வெட்டியது“ தான். எனது நினைப்பு வீண் போகவில்லை. காரணம் ஒவ்வொரு பாடலையும் தெவிட்டாத தேனமுதாக கொடுத்திருந்தார்கள் வைரமுத்துவும் ஹாரிஸ் ஜெயராஜும்.
1.   1.  முதல் பாடல் வசீகரிக்கும் தாலாட்டுப் பாடல் (காதலன் காதலியை தூங்க வைக்கும்- வைசிவெர்சா)
“பிஞ்சுத் தென்றலே என் பிஞ்சுத் தென்றலே
என் நெஞ்சில் அடங்கு ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு” பாடல்.
வைரமுத்து அவர்கள் வரிகளால் வசியம் செய்யும் வல்லவர். பாருங்கள்
விழித்து கொண்டேதான் முதலைகள் உறங்கும்
அது போல் உறங்காதே
ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு
அதை நீ மறவாதே
உறங்கும் வரை நான் இசைத்திருப்பேன்
நீ விழிக்கும் வரை நான் விழித்திருப்பேன்
உனது கனவில் நான் வீணை வாசிப்பேன்
முதல் வரி ஒரு பொது அறிவு வினா அடுத்து ஒரு திருக்குறள்(உறங்குவது போலும் சாக்காடு…)
உனது கனவில் நான் வீணை வாசிப்பேன் இந்த வரி முடியும் போது ஒரு சிறு வீணை “பிட்“ சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி.

2.   2.  இந்த மலர் எங்கேயாவது யாராவது பார்த்திருக்கிறீர்களா??
பார்த்திருப்போம் ஆனால் இதன் பெயர் குல்மொகர் என்பது தெரிந்திருக்காது.
”கொல்முகர் மலரே, கொல்முகர் மலரே,
கொல்ல பார்க்காதே,
உன் துப்பட்டாவில் என்னை கட்டி,
தூக்கில் போடாதே”

அழகால் தாக்குண்டு கொல்லப் படுதல் போல இன்ப அவஸ்தை ஒன்று இருக்க முடியுமா. வைரமுத்து அவர்கள் அந்த இன்ப வலியை இன்னும் மெருகேற்றி கூறுவதைப் பாருங்கள்,
”உயிரை திருகி,
உந்தன் கூந்தல் சூடிகொள்ளாதே,
என் உதிரம் கொண்டு,
உதட்டு சாயம் பூசிகொள்ளாதே,
விண்மீன் பறிக்க வழியில்லை என்று,
கண்களை பறிக்காதே,
என் இரவை எரித்து குழைத்து குழைத்து,
கண்மை பூசாதே,
என்னை விடவும் என்னை அறிந்தும்,
"யார் நீ?" என்று கேட்காதே,

முற்றும் அறிந்த பின்பு உரிமையோடு கோபிக்கையில் தான் அந்த “யார்நீ“ என்கிற வார்த்தை வரும்.
அடுத்த சரணத்தில் வரும் இந்த வரிகளை குறிப்பிடாமல் இருக்க இயலாது
”என் ரத்தகுழாயில் புகுந்துகொண்டு,
சத்தம் போடுகிறாய்,
கண்ணாடி நெஞ்சில்,
கல்லை எரிந்து,
கலகம் மூட்டுகிறாய்,”
3.     3. கவிஞர்களுக்கு மிகப் பிடித்தமான விஷயம் கனவுகளோடு கபடியாடுவது தான். அதுவும் காதல் கனவென்றால் கவிகளுக்கு கேட்கவா வேண்டும்.
“முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய்” பாடல் காதலன் காதலி உறையாடலாய் வரும் டூயட் பாடல்.
”ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையொடு நாதம் போல
உயிரிலே உயிரிலே கலந்து விடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே உறங்கிவிடு”
ஊடல் மற்றும் ஓடல் களுக்கு நேரம் இல்லை இரவு விரைவில் விடிந்து போனால் கனவும் முடிந்து போகும் அல்லவா? எனவே காதலன் அவசரப் படுத்துகிறான்.
ஆனால் காதலி,
”நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரசொல்லு தென்றலை”
எனக்கு ஊடல் எதுவும் இல்லை வியர்வைகள் துளிர்விட “வாய்ப்பு” உள்ளதால் அவள் தென்றலை வரச்சொல் என காதலனுக்கு ஆணையிடுகிறாள்.
பாம்பே ஜெயஸ்ரீயும் ஹரிஷ் ராகவேந்திராவும் இந்த டூயட்டை வேற லெவலுக்கு கொண்டு போயிருப்பார்கள்.
4.     4. அடுத்த ஒரு சின்ன பிட் பாடல் “ஹரிகோரே போன்சாயே சம்பா நெல்லாலே” பாடல் இந்தப் பாடலில் வரும் ஒரு அறிவுரை இதயம் முரளிக்காகவே சொல்லப் பட்ட ஒன்று “மௌனங்கள் அழகுதான் ஆனாலும் சொல்லிவிடு சொல்லிவிடு”
5.     5. இறுதியாக ஒரு “துல்லிசை“ பாடல். இப்போது கேட்டாலும் கால்கள் தாளம் போடுவதை கட்டுப் படுத்த இயலாது.
”மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம்
பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்”
 இந்தப் பாடல் முழுவதும் இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையில் அமையும் “நல்வாய்ப்புகள்(லக்கி)“ பற்றி எழுதியிருப்பார் வைரமுத்து.
”அப்பா தந்த ரூபாயில் ஒரு நூறை போல ஐந்நூறு
தப்பாய் வந்தால் நீயும் லக்கி தான்”
”நின்று போன லிப்ட்டுக்குள் இன்று பூத்த பூவொன்று
அட ஒன்றாய் நின்றால் லக்கோ லக்கி தான் தோடா”
இந்தப் பாடலின் பல்லவியிலேயே “வாஜ்பாய் வரட்டும் பாட்டெழுத ( அவர் கவிஞர் அல்லவா) பில் கிளின்டனை கூப்பிடு இசையமைக்க வந்து சதாம் உசேன் பாடல் பாடட்டும் ” எழுதியிருப்பார்.

ஒரு முறை அனைத்து பாடல்களையும் கேட்டுத்தான் பாருங்களேன். ஏஆர் ரகுமானுக்கு அடுத்த லெவல் இளமை இசைக்கு ஹாரிஸ் எவ்வளவு பொருத்தமாக இருந்தார் என்பது புலப்படும்.






No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...