Friday, September 28, 2018

இளம் பருவத்துத் தோழி- பால்யகால சகி(மலையாள நாவல்)



நூலகத்தில் புத்தகங்கள் எடுக்கும் போதெல்லாம் ஒரு மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றையோ அல்லது சிறுகதை தொகுப்பு ஒன்றையோ தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த முறை மலையாள இலக்கியத்தின் மாபெரும் எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் அவர்கள் எழுதிய பால்யகால சகி நாவலின் தமிழ் வடிவம் “இளம் பருவத்துத் தோழி” என்கிற பெயரில் சுரா அவர்களால் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது.
மஜித் ,சுஹரா ஆகியோரின் இளம் பிராயத்தில் கதை தொடங்குகிறது. வசந்தபாலனின் வெயில் படத்து கதை போல ஒரு தோல்வியுற்றவனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை.
மஜித் சற்ற பணக்கார குடும்பத்தில் பிறந்தவன். படிப்பில் பின் தங்கி இருந்தாலும் கூட உயர்நிலைப் பள்ளி படிப்பிற்காக வெளியுர் சென்று படிக்கும் அளவு வசதி படைத்த இஸ்லாமிய குடும்பத்து பிள்ளை.
சுஹரா அதே ஊரில் உள்ள ஏழைக் குடும்பத்து பெண்பிள்ளை. தந்தை இறந்து போகிறார். ஆகையால் நன்றாக படித்தும் கூட ஐந்தாம் வகுப்போடு வசதியின்மையினால் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள்.
இருவரும் மோதலில் தொடங்கி இணைபிரியா சிறுபிராய விளையாட்டுத் தோழர்கள் ஆகின்றனர். சுஹராவையும் நாமே படிக்க வைக்கலாமே என்று தந்தையிடம் கோரிக்கை வைக்கும் அளவிற்கு சுஹரா மேல் அக்கரையும் பாசமும் கொண்டவன் மஜித். அந்த பாசமே வளர்ந்தபின்பு காதலாக பரிணாம வளர்ச்சி அடைகிறது.
தந்தையுடன் கோபித்துக் கொண்டு நாடோடியாக ஓடிப்போய் ஊருடன் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருந்துவிட்டு மஜித் 10 ஆண்டுகள் கழித்து ஊர் திரும்புகிறான்.
அந்த பத்து ஆண்டுகளில் சுஹரா ஒரு குடிகாரனுக்கு இரண்டாம் தாரமாக திருமணமாகி சென்றிருக்கிறாள். மஜித்தின் தந்தையின் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு ஏழையிலும் ஏழையான குடும்பமாக ஆகிவிடுகிறது.
சுஹராவுக்கு புணர்வாழ்வு அளிப்பது, மணமாகாத இரண்டு தங்கைகளை மணமுடிப்பது போன்ற நோக்கங்களோடு மறுபடி வெளியூருக்கு சம்பாதிக்க போகிறான். அங்கே விபத்தில் சிக்கி ஒரு காலை இழக்கிறான். பின்பு ஒர ஓட்டலில் பாத்திரங்கள் கழுவும் வேலை செய்கிறான். ஆண்டுகள் உருண்டு ஓடுகின்றன. சுஹரா நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறாள் என்று முடிகிறது கதை.
வெறும் 65 பக்கங்களுக்குள் காவியமாய் வார்த்தைகளால் நெசவு செய்திருக்கிறார் பஷீர். இளம் பருவத்து குறும்புகள் கற்பனைகள் என அற்புதமான இரண்டு அத்தியாயங்கள். கண்டிப்பாக நாம் நமது இளம் பருவத்துடன் பொருத்திப் பார்க்க இயலும். மஜித்தின் சுன்னத் கல்யாணம் சுஹராவின் காது குத்து என இஸ்லாமிய குடும்ப வழக்கங்கள் மற்றும் அது சார்ந்த மூடப் பழக்கங்களை சாடியிருப்பார்.


2014ம் ஆண்டில் மம்மூட்டி நடிப்பில் இந்த நாவல் படமாக எடுக்கப் பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...