Sunday, September 2, 2018

கோலமாவு கோகிலா


கோலமாவு கோகிலா
படத்திற்கு என்று கூறினாலே ஓடி ஒளிந்து கொள்கிறான் அருண். நானோ ஒரு காலத்தில் திருச்சி, குமாரபாளையம் மற்றும் ஜெயங்கொண்டம் என அனைத்து ஊர்களிலும் அனைத்து தியேட்டர்களிலும் படம் பார்த்தவன். அப்புறம் அவனை கெஞ்சி சில உத்தரவாதங்கள் கொடுத்து கூட்டிக்கொண்டு போனேன். இப்போ வரும் சினிமாக்களை விட “மோட்டுபட்லு” சுவாரசியமாக அவனுக்கு படுகிறது போல.



தமிழ் சினிமாவின் பரபரப்பான சுவாரசியமான திரைக்கதை சூத்திரங்களில் ஒன்று “சாதாரண இளைஞன் அசாதாரண சூழல்“ என்பதாகும். இந்த சூத்திரத்தில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை வெற்றிகரமாக பொருத்தியுள்ளார் இயக்குனர்.
தாயின் மருத்துவ செலவுக்கான அவசிய அவசரத் தேவைக்காக போதை மருந்து கடத்தும் கும்பலிடம் சரக்கு கைமாற்றி விடும் வேலைக்கு சேர்கிறார் நயன்தாரா. அந்த கும்பலை பிடிக்க பொறி வைத்து பிடிக்க காத்திருக்கும் இன்ஸ்பெக்டர் “செவ்வாழை“ சரவணன். தாயின் வியாதி குணமானதா? போதை மருந்து கும்பலின் பிடியில் இருந்து சேதாரமின்றி மீண்டாரா நயன்தாரா? என்பது தான் மீதிக்கதை.
”நானும் ரௌடிதான் “ படத்தில் வரும் பாத்திரத்தில் வரும் அதே நடை உடை ஒப்பனை மற்றும் இரங்கத்தக்க முகபாவம் என பேரழகு தேவதையாக வருகிறார் நயன்தாரா. கடத்தல் கும்பலுக்குள் நுழையும் போது பார்க்கவே பரிதாபமாக உள்ளது. ஆனால் பிறகு..?? இரண்டாவது சந்தேகத்துக்கு உரிய நபரையும் கொன்றால் தான் இடத்தை காலி செய்வேன் என்று அடம் பிடிப்பதாகட்டும், பாலியல் வன்முறை செய்ய முனையும் வில்லன் மற்றும் அவன் ஆட்களை குடும்பத்துடன் சேர்ந்துகொண்டு காலி செய்வது இறுதியாக சர்வதேச போதைக் கடத்தல் மன்னன் “எஸ்கோபர்” ரேஞ்சுக்கு திட்டம் போட்டு பெரிய வில்லனை மாட்டிவிட்டு போலீசுக்கும் தண்ணி காட்டி விட்டு கடைசியாக கோலமாவு பிசினஸ் ல் இறங்குவது என கலக்கி இருக்கிறார்.
அந்த நோய்வாய்ப்பட்ட தாய் வேறு யார் சரண்யா அவர்கள்தான். இடைவேளை வரை இரங்கத்தக்க தோற்றத்துடன்  வருகிறார். இடைவேளைக்கு பிறகு அவரை பார்த்தாலே சிரிப்பு வருமளவு நடிப்பு பின்னியிருக்கிறார்.
நயன்தாராவின் தங்கையை ஒருதலையாக காதலிப்பவராக நடித்திருப்பவர் நகைச்சுவைக்கு வலு சேர்த்திருக்கிறார். “ஜேஜே” படத்தில் வரும் ”நீ இல்லன்னா நான் செத்துருவேன் ஜமுனா” என்று பிதற்றும் இளைஞனை ஒத்த கதாபாத்திரம். அவர் வந்தாலே சிரிப்புதான். “Smuggling for Buvi”  என்று ஒரு வாட்சப் குருப் ஆரம்பித்து ஒரு ஓட்டை டெம்போவுக்குள் அடைந்திருக்கும் நான்கு பேருக்குள் மெசேஜ் அனுப்புவது செம்ம காமெடி.
யோகி பாபுவுக்கு நயன்தாராவை ஒருதலையாக விரும்பும் மளிகை கடை சேகர் கதாபாத்திரம். ஆண்டவன் கட்டளைக்கு பிறகு அவரது நடிப்பில் நிறைய படங்கள் வருகிறது. ஆனால் பெரும்பாலான படங்களில் அவரது தோற்றத்தை பகடி செய்வது நகைச்சுவையாக காட்டப் படுகிறது. இது தவறான செயல்.      தோற்றம் சார்ந்த இறுமாப்பு அல்லது தாழ்வு மனப்பான்மை சமூகத்தில் ஆழமாக பதிய இதுவும் ஒரு காரணமாக அமையலாம். இந்த படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரமும் தோற்றத்தை கேலி செய்து காமெடி உருவாக்கவே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. “உம் மூஞ்சி மேல என் பீச்சாங்கைய வெக்க” என்று சென்னை பேச்சு வழக்கில் கூறுவது போல யோகி பாபு வின் மூஞ்சி மேல நயன்தாரா பீச்சாங்கால வைக்கிறார். இந்த காட்சி தேவையற்ற திணிப்பு. அந்த காட்சியை பார்க்கும் போது கோபமாகவும் அருவெறுப்பாகவும் இருந்தது.
மற்றபடி படம் நல்ல பொழுதுபோக்க படம்.

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...