Thursday, March 7, 2019

மை அன்ஸ்கூலிங் இயர்



அது என்ன புதுசா ஒரு வார்த்தை “அன்ஸ்கூலிங்”?
வீடு பள்ளி பாடங்கள் என்கிற வட்டத்தில் இருந்து ஒரு தற்காலிக ஓய்வு எடுத்துக் கொள்ளும் ஒரு முறையைத் தான் “அன்ஸ்கூலிங்“ என்கிறார்கள்.
இது பற்றி யோசிக்கவோ தெரிந்து கொள்ளவோ சந்தர்ப்பம் இது நாள் வரை வாய்க்கவில்லை. இந்து தமிழ்திசை நாளிதழ் அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலையுடன் இணைந்த அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு 11 பள்ளிகளைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கனவு மெய்பட என்கிற நிகழ்வு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார்கள். அதில் இரண்டாம் நாள் நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு பேச்சாளராக கவிஞர் வெண்ணிலா அவர்களும் வெற்றிகரமான மாணவி என்கிற நிலையில் சாகரிகா என்கிற மாணவியும் பேசினார்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம், இந்த ”சாகரிகா” என்ற மாணவி பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பதினோறாம் வகுப்பில் எந்த குரூப் சேருவது என்று குழம்பி “சரி இந்த வருடம் நான் படிக்கவே இல்லை, ஓய்வெடுத்துக் கொள்கிறேன்” என்று பெற்றோரிடம் சொல்ல பெற்றோரும் சம்மதித்து இருக்கிறார்கள்.
சரி அந்த வருடம் ஒய்வில் அப்படி என்னதான் செய்து இருக்கிறார் அந்த மாணவி.
முதலில் பெற்றோருடம் இமய மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அடுத்து லே வுக்கு சுற்றுலா சென்ற குழுவினருடன் தனியாக சென்று வந்துள்ளார்.
அடுத்து எம்எல்எம் மூலமாக வீடு வீடாக சென்று அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்து இருக்கிறார்.
அடுத்து பிரபலங்களுடன் தனது அன்ஸ்கூலிங் இயர் பற்றி சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டு நேரம் பெற்று அவர்களை சந்தித்து இருக்கிறார். துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, கிரண்பேடி உள்ளிட்டோரை சந்தித்துள்ளார்.
ஒரு மூன்று நிறுவனங்களில் இன்டெர்ன்ஷிப் செய்துள்ளார். இந்த அனுபவங்களை எல்லாம் ஆவணப்படுத்தி யுடியுப் வீடியோ மற்றும் முகநூல் செய்தி என வெளியிட்டிருக்கிறார். அதோடல்லாமல் “MY UNSKOOLING YEARS” என்கிற தலைப்பில் புத்தகமும் எழுதி வெளியிட்டு இருக்கிறார். மேலும் தனது அன்ஸ்கூலிங் இயர்ஸ் பற்றி பல மேடைகளில் பேசிவருகிறார்.
சரி இப்போ இதே அன்ஸ்கூலிங் செய்த எனது முந்நாள் மாணவன் மருதமுத்து கதையை கேளுங்கள்.
மருதமுத்துவின் அன்ஸ்கூலிங் திட்டமிட்டு பெற்றோரின் சம்மதம் பெற்று நடந்த நிகழ்வு அல்ல. மாறாக ஏழ்மையால் உந்தப்பட்டு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று வேலை தேடி சென்னையை நோக்கி படையெடுத்த நிகழ்வாகும். சம்பவம் நடந்தபோது மருதமுத்து எட்டாம் வகுப்பு முடித்திருந்தான்.
கிடைத்த வேலையை செய்து கொண்டு கிடைத்த இடத்தில் தூங்கிக் கொண்டு காலத்தை கழிக்கிறான். வேலைபளுவின் அழுத்தம் தாங்க இயலவில்லை. படித்து அதைவைத்து வேறு ஏதாவது நல்ல வேலை தேடிக்கொள்ளலாம் என்று எண்ணுகிறான். ஆனால் படித்திருப்பதோ எட்டாம் வகுப்புதான். நண்பர்களின் ஆலோசனையின் பேரில் பிரைவேட்டாக பத்தாம் வகுப்பு எழுதி ஒரே முயற்சியில் அத்தனை பாடங்களிலும் தேறுகிறான்.
பதினோறாம் வகுப்பு பள்ளிக் கூடத்தில் பயில எண்ணுகிறான். அப்போதே அவனுக்கு வயது பதினேழு. ஆளும் சற்று கரடு முரடாக பெரிய ஆளாக தெரிவான்.
பள்ளியில் கணிதமும் ஒரு பாடமாக உள்ள தொழில் கல்வி பிரிவான பொது இயந்திரவியல் பிரிவை கேட்டு நிற்கிறான். ஆளையும் வயதையும் பார்த்து எப்படியாவது இவனை நமது வகுப்பில் சேரவிடக்கூடாது என நினைத்து கணிதப்பாடத்தில் இருந்த ஒரு கேள்வி கேட்டு நிராகரிக்க எண்ணினேன்.
”சார், நீங்க கேக்குற கேள்விலாம் எனக்கு தெரியாது, என்னை சேர்க்க கூடாதுன்னுட்டு கேக்குறீங்க” என்று அவஸ்தையுடன் சிரித்தான்.
“ஹைஸ்கூல் மேத்ஸ் மாதிரிலாம் இல்லப்பா, ஹையர் செகன்டரி மேத்ஸ் ரொம்ப கஷ்டம் அதனால நீ வேற ஏதாவது குருப் சேந்துக்கறது நல்லது”
”இல்ல சார், நீங்க எப்படி படிக்கறதுன்னு சொல்றீங்களோ அப்படியே படிக்கிறேன், நீங்க சொல்றத கேக்குறேன், என்னால ஒரு வம்பு வழக்கு ஸ்கூல்ல வராம நடந்துக்குறேன் சார்” என்று கரடு முரடான தோற்றத்துடன் அவன் காட்டிய பணிவு அவனை சேர்த்துக் கொள்ளாமல் இருக்க இயலாது என்கிற மனநிலைக்கு ஆளாக்கியது.
அவன் என்ன ப்ராமிஸ் பண்ணினானோ அதை செய்து காட்டினான். ஆம், அவன் தனது வகுப்பில் இரண்டாவது மதிப்பெண் எடுத்தான். ஆசிரியர் பேச்சுக்கு மறுபேச்சு இல்லாமல் நடந்து கொண்டான். என்னுடைய ஆலோசனையின் பேரில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்தும் செயல்வழி நிறைந்த பொறியியல் படிப்பான  B.VOC படிக்கிறான்.
இந்த இரண்டு பேரின் “அன்ஸ்கூலிங்“ பற்றித் தான் இந்த பதிவு.
சாகரிகாவின் தந்தை ஒரு பிஸினஸ் மேன், தாய் மெத்தப் படித்தவர். வீட்டில் ஆங்கிலத்திலேயே உரையாடும் தமிழ்க்குடும்பம் என நினைக்கிறேன். ஏனெனில் சாகரிகா தமிழில் பேச அவ்வளவு திணறினார்.
“அன்ஸ்கூலிங்“ போது அவர் செய்த ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னாலும் அவரது தந்தை மற்றும் தாயின் ஒத்துழைப்பு ஆலோசனை இருந்திருக்கிறது என்று அவரது தந்தை மற்றும் தாய் உரையாற்றியபோது அறிந்து கொள்ள முடிந்தது.
மேலும் அவர் பாடங்களை அவரது தந்தை முதலில் இணையம் யுடியுப் போன்ற ஊடகங்கள் வாயிலாக படித்து எளிமைப் படுத்தி சாகரிகாவுக்கு நடத்தியிருக்கிறார்.
அவர் வீட்டில் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் என்ன உண்ண வேண்டும் என்பதற்கும் அறிவியல் ரீதியாக பரீட்சித்துப் பார்த்து சரி என ஏற்கப்பட்ட சூத்திரங்களை பயன்படுத்துவதாக கூறினார்கள்.
“வருட வரும் பூங்காற்றினையும் சற்று வடிகட்டி அனுப்பி வைப்பேன்” என்று தான் பாடவில்லையே ஒழிய அவரது அறையின் வண்ணம் ஒலிக்கும் இசை உட்பட அவளது படிப்பின் கவனத்தை கலைக்காத வண்ணம் இருக்குமாறு பார்த்துக் கொள்வதாக கூறினார்.
மருதமுத்துவின் வீட்டுச்சூழல் படிக்க உகந்த தாக இல்லாமல் போனதாலேயே அவன் “அன்ஸ்கூலிங்“ போனான் என்பது தான் துயரம்.
மேலும் பதினோறாம் வகுப்பு படித்தபோது அவனுக்கு வீட்டில் சோறு போடக் கூட ஆள்கிடையாது. தானே வேலைக்குப் போய் சம்பாதித்து ஆக்கி உண்ணும் சூழல். அவனது குடும்பச் சூழல் கேட்டு எங்கள் வேதியியல் ஆசிரியர் கண்ணீரே வடித்து விட்டார். அப்புறம் பிற்படுத்தப் பட்டோர் விடுதி வார்டனிடம் பேசி அவனை தங்க வைத்து சாப்பாடு போட ஏற்பாடு செய்து கொடுத்தோம்.
சாகரிகா வின் அன் ஸ்கூலிங் அவருக்கு “நின்று நிதானித்து தனது பாதையை தெளிவாக தெரிவு செய்ய உதவியது“ என்றால் மருதமுத்து விற்கு “அன்ஸ்கூலிங்“ பீரியடானது தனது பாதையை செப்பனிட்டுக் கொள்ள உதவியது.
சாகரிகாவின் அன்ஸ்கூலிங் நன்கு திட்டமிட்ட பெற்றோரின் வழிகாட்டுதலின் பேரில் நடந்த ஒன்று. மருதமுத்துவின் அன்ஸ்கூலிங் விடலைப் பருவத்தில் வாழ்க்கையை தேடி அலைந்து முட்டி மோதி மறுபடி பள்ளியில் கொண்டு வந்து சேர்த்தது.
மொத்தத்தில் இருவருக்குமே “அன்ஸ்கூலிங்“ ஒரு அனுகூலமான முடிவையே தந்திருக்கிறது.
இதில் ஒரு ஆபத்தும் உள்ளது. எல்லோரும் இதை பரீட்சித்து பார்க்க முயல்வது நல்லதல்ல. ஏனென்றால் பெற்றோரின் சப்போர்ட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதில் விரும்பத்தக்க முடிவென்பது சம்மந்தப்பட்ட மாணவனின் மனப்பான்மையால் தான் கிடைக்கும

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...