எனக்கு
நினைவு தெரிந்த நாளில் இருந்து அப்பா ஒரே சைக்கிள் தான் வைத்திருந்தார். ஆனால் அது
பார்ப்பதற்கு புத்தம் புதிதாகவே எப்போதும் காட்சியளிக்கும். ஹேண்ட் பார் கவர், கம்பி
கவர், மட்கார்ட் கவர், சீட் கவர் பின்புறம் தொங்கும் மாடல் என ஜிலு ஜிலு கண்கவர் வண்ணத்தில்
காட்சியளிக்கும்.
தான்
எண்ணை தேய்த்து குளிக்கிறாரோ இல்லையோ சைக்கிள் வாராவாரம் எண்ணைக் குளியல் போட்டுவிடும்.
வீட்டில் ஓய்வாக இருக்கும் நாளில் ஆற அமர உட்கார்ந்து ஒரு தியானம் போன்ற அமைதியான மனநிலையில்
எந்த அவசரமும் காட்டாமல் சைக்கிளை சுத்தம் செய்வார். கை நுழையாத இடங்களைக் கூட துணியை
திரி போல சுருட்டி உள்ளே நுழைத்து குழந்தையின் காது குடும்பியை எடுக்கும் லாவகத்துடன்
அழுக்கு நீக்குவார்.
வீலை
வேகமாக சுழலவிட்டு அதன் ஓரத்தில் துணியை வைத்தால் அத்தனை புழுதியும் துணிக்கு இடம்
பெயரும். அந்த நாட்களில் சைக்கிள் சுத்தம் செய்வதை பார்ப்பது எனக்கு பிடித்தமான வேடிக்கை.
அப்புறம்
எண்ணைக் குளியல். சைக்கிளுக்கென்று பிரத்தியேகமான ஒரு மூக்கு நீண்ட எண்ணை டப்பா ஒன்று
இருக்கும். அதில் தேங்காய் எண்ணையை நிரப்பி அடிப்புறத்தில் உள்ள தகரத்தை டப் டப் என்று
அடித்தால் எண்ணை சொட்டும். அதிகம் உராய்வை சந்திக்கும் இடங்களில் எண்ணை இடுவார். எண்ணை
விட்ட பின்பு அந்த பாகத்தை மற்றும் சுழல விட்டு அதன் உராய்வு இல்லாத சத்தம் கேட்டு
திருப்தி அடைந்த பின்பு தான் அடுத்த பகுதி செல்வார். முக்கியமாக பெடலில் எண்ணை விட்டு
அதனை வேகமாக சுழல விடுவார்.
அப்புறம்
செயினின் ஒவ்வொரு கண்ணியிலும் ஒரு சொட்டு எண்ணை விடுவார். வழிகின்ற எண்ணையை துணியால்
வழித்து எடுத்து வைத்திருப்பார். இறுதியாக எவர் சில்வர் போல மினுங்கும் இடங்களில் அந்த
எண்ணை தோய்ந்த துணியால் துடைத்த பின்பு சூரிய ஒளி பட்டு சைக்கிள் பளிச் என்று மின்னும்.
இவ்வளவும்
செய்தபின்பு சைக்கிள் பெடலைக் கொண்டு சுழற்றிப் பார்ப்பார். சைக்கிள் வீல் எந்த சத்தமும்
செய்யாமல் அழகாய் சுழலும். திருப்தி புன்னகையோடு செல்வார்.
எனக்கெல்லாம்
சைக்கிளை எடுத்தாலே வேகமாக செல்லவே தோன்றும் மெதுவாக பெடல் போட்ட நினைவு இல்லை. ஒரு
வயலின் வித்வான் எந்த சிரத்தையும் காட்டாமல் இசையில் லயித்தபடி இசைப்பார் அல்லவா அது
போலத்தான் அப்பா சைக்கிள் மிதிப்பார். எந்த சிரத்தையும் இல்லாமல் கால் வைப்பார் அது
பாட்டுக்கு அனிச்சையாக கீழே செல்லும் ஒரு கால் மேலே வரும். சைக்கிள் மிக மெதுவாகத்தான்
ஓட்டுவார்.
அப்பா
சைக்கிளை யாருக்கும் இரவல் கொடுத்ததாக நினைவு இல்லை. அப்பா சைக்கிளை பராமரிக்கும் ஈடுபாட்டைப்
பார்த்து யாரும் சைக்கிளை ஓசி கேட்கவே பயப்படுவார்கள்.
அடுத்தது
அப்பா சைக்கிள் மணியோசை. மாலை வேளைகளில் தெருவில் விளையாடிக்கொண்டு இருப்பேன். அந்த
பெல் சத்தம் கேட்டவுடன் பின்னங்கால் பிடரியில் பட தெறித்து ஓடிவிடுவேன். இத்தனைக்கும்
எங்க அப்பா என்னை அடித்ததே இல்லை. ஆனாலும் ரொம்ப பயப்படுவேன். திட்டுதல் மிரட்டல் அதட்டல்
எல்லாவற்றுக்கும் வார்த்தைகளை விரயம் செய்யாமல் ஒற்றைப் பார்வைதான் பதில்.
அப்பாவோடு
சைக்கிளில் அமர்ந்து தா.பழூர் மருத்துவமனை சென்றிருக்கிறேன். கோரைக்குழியில் இருந்த
எங்கள் வயலுக்கு சென்றிருக்கிறேன். சைக்கிள் கேரியரில் மெத்தென்று துண்டு பரப்பி அமரச்
செய்வார். வயல் நாத்துவிடும் சமயத்தில் சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்லும் போது அழைத்துச்
செல்வார். அப்போது கம்பியில் அமர்ந்து கொண்டு சென்றிருக்கிறேன். மிக மெதுவாகத்தான்
ஓட்டுவார்.
அப்பா
சைக்கிள் பராமரிக்கும் விதத்தை பார்க்கும்
போதெல்லாம் அப்பாவுக்கு சைக்கிள் பெரிதா நான் பெரிதா என்று லேசாக பொறாமை எட்டிப் பார்க்கும்.
நான் தான் பெரிது என்பதை ஒரு முறை கண்டு கொண்டேன்.
சைக்கிள்
ஓட்டப் பழகும் போது அவர் சொல்லிக் கொடுத்த பால பாடம் “விழுற மாதிரி இருந்தால் சைக்கிளை
கீழே போட்டுவிடு” என்பது தான். அந்தப் பாடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டதால் தான்
சைக்கிள் பலமுறை காயம் பட்ட போதிலும் நான் காயம் படாமல் சைக்கிள் கற்றுக் கொண்டேன்.
அப்பாவின்
சைக்கிள் எனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசானாகவும் இருந்துள்ளது. ஆமாம், “ஏசி டைனமோ
வேலை செய்யும் விதத்தை படத்துடன் விவரி” என்பது அறிவியலில் ஒரு அரை நூற்றாண்டு காலமாக
முக்கியமான கேள்வியாகும். அந்த கேள்வி படித்த பின்பு அப்பா சைக்கிள் டைனமோவை அப்பா
ஊருக்குப் போயிருந்த ஒரு நாளில் கழற்றி பார்த்து காந்தபுலம் மின்சுற்று, நழுவு வளையங்கள்
என எல்லாவற்றையும் பாடத்தோடு பொருத்திப் பார்த்து புரிந்து கொண்டேன்.
பிரபஞ்சன்
அவர்கள் எழுதிய “சைக்கிள்“ சிறுகதை படித்தபோது எனது அப்பாவின் சைக்கிளும் அதனூடான அனைத்து
விஷயங்களும் ஞாபகத்திற்கு வந்தன.
அப்பாவின் சைக்கிள் அறிவியல் கற்றுகொள்ள உங்களுக்கு உதவியிருக்கு. Super. என து அப்பாவிடமும் ஒரு பெரிய சைக்கிள், CD 100 Hero Honda இன்று ம் உள்ளது. எனது ஊரில் ஒரேஒரு வண்டி. யார் எதை கேட்டாலும் இல்லை என்று சொல் லாமல் கொடுப்பார. Hero Honda வேணும் அவசரமாக வெளியே செல்ல என்று எனது மாமன்களே கெஞ்சுவாரகள கொடுக்க மாட்டார். அந்த பெரிய சைக்கிளில் தான் எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லி கொடுத்தார்.
ReplyDelete