Sunday, April 28, 2019

கருந்துளை என்னும் பெருந்துளை – 2








 முன்குறிப்பு
முதல் பகுதியில் கருந்துளை என்பது என்ன என்கிற புரிதலை ஏற்படுத்துவதில் ஓரளவு வெற்றி கண்டள்ளதாக எண்ணுகிறேன். கருந்துளை பற்றி என் பையன் அருண் இடம் அவ்வப்போது அளவளாவியது உண்டு. எனவே இந்த பகுதியை எனக்கும் அவனுக்குமான ஒரு கற்பனை உரையாடலாக வழங்கலாம் என்றுள்ளேன்.
ஞாயிறு மதியம் ஃபுல் கட்டு கட்டி விட்டு உறங்க எத்தனித்த நேரம் கெடுவாய்ப்பாக அருண் கண்ணில் தி இந்து வில் வந்த கருந்துளையின் புகைப்படம் பட்டுத் தொலைத்து விட்டது. அப்புறம் என்ன என் தூக்கம் தொலைந்தது தான் மிச்சம்.
“அப்பா, இந்த கருந்துளையை முதல்ல யாருப்பா கண்டு புடிச்சாங்க?”
“நியுட்டன் முதன் முதல்ல ஈர்ப்பு விதியை கண்டு பிடிச்சது தான் முதல்ல நடந்தது, அதுக்கப்புறம் அதில தொடங்கி சங்கிலித் தொடர் மாதிரி ஒவ்வொரு நிகழ்வா நடந்து இப்போ கருந்துளையை போட்டோ புடிச்சதுல வந்து நிக்கிறோம், போதுமா ? எனக்கு தூக்கம் வருது நீ போய் படு”
“அப்பா, இத மட்டும் சொல்லுப்பா, நியுட்டனுக்கு அப்புறம் யாரெல்லாம் கருந்துளையை பற்றி ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்சாங்க?”
”நியுட்டன் இறப்பதற்கு மூன்று ஆண்டுகள் இருக்கும் போது பிறந்த ஒருவர் தான் ஆங்கிலேய விஞ்ஞானி ஜான் மிஷல்(இவர் ஒரு சர்ச் ஃபாதர்), இவர் தான் கருந்துளை என்ற ஒன்று இருக்கிறது என்கிற கருத்தை முன் வைத்தார். ஆனால் அதற்கு அவர் வைத்த பெயர் “இருள் நட்சத்திரம்“ (Dark Star)”

“இருள் நட்சத்திரம் அவருக்கு மட்டும் எப்படிப்பா தெரிஞ்சுது?”
”டேய், முதல்ல அந்த விஞ்ஞானி பெரிய கில்லாடிடா, பூமியோட எடைய கண்டுபிடிக்க ஒரு மிஷின கண்டு பிடிச்சவரு, செயற்கை காந்தம் தயாரிக்கும் வழிமுறையை முதலில் சொன்னவர்”
“அதெல்லாம் சரிப்பா, டார்க் ஸ்டார் இருக்குன்னு எப்படி சொன்னார்?”
“உனக்கு கோள்களின் விடுபடு திசை வேகம் (Escape velocity) பற்றி தெரியும் இல்லையா?“
     “ஆமாம்பா, சூரியனில் இருந்து ஒரு பொருள் எஸ்கேப் ஆகணும்னா ஒரு விநாடிக்கு 618 கிமீ ஸ்பீட்ல  போகணும்னு சொன்னீங்களே”
“வெரிகுட், அதையே நம்ம மிஷல் கொஞ்சம் டெவலப் பண்ணினார்.”
“எப்படிப்பா?”
”ஒரு நட்சத்திரத்தின் விடுபடு திசைவேகம் ஒளியின் திசைவேகத்தை விஞ்சி இருக்குமானால் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பில் இருந்து ஒளி கூட தப்ப இயலாது அந்த மாதிரி ஒரு நட்சத்திரம தான் டார்க் ஸ்டார் அப்படின்னு சொன்னார்”
“அந்த மாதிரி ஸ்டார் இருக்குமாப்பா?”
“ஏன் இல்லாம, ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 3 லட்சம் கிமீ, நம்ம சூரியனோட விடுபடு திசைவேகம் 618 கிமீ”
“சரி அதனால”
“உத்தேசமா சொன்னா சூரியன போல 500 மடங்கு பெரிய நட்சத்திரத்தோட விடுபடு திசைவேகம் 3 லட்சத்தை தாண்டும் (500X618=309000) அந்த ஒரு நட்சத்திரம் ஒளிய கூட வெளிய விடாம இருக்கறதால அது ஒளிராது எனவே ’டார்க் ஸ்டார்’ உண்டு என்கிற முடிவுக்கு வந்துட்டார்”
“அப்புறம் யாருப்பா இந்த விஷயத்தை இன்னும் தெளிவா கண்டுபிடிச்சாங்க?”
“மிஷல் கண்டு பிடிச்ச ஒரு பத்தாண்டுக்கு பின்னால் கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் “சகலகலா வல்லவரான “லாப்லாஸ்” ம் இதே விஷயத்தை முன்னிருத்தினாரு”

“அப்புறம்பா?”
“அப்புறம் என்ன 18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகள்ல நடந்த இந்த விஷயங்கள மேல கொண்டு போற அளவில் நம்ம ஆராய்ச்சிகள் அந்த காலகட்டத்தில் முன்னேறாத காரணத்தால மேற்கொண்டு எந்த கருத்தும் யாரும் கூறாம கிடப்பில் போட்டுட்டாங்க”
“யாருமே கண்டுகலயா?”
“ஆமா, அப்புறம் 20ம் நூற்றாண்டு இயற்பியல் துறையையே புரட்டிப் போடும் 4 முக்கியக் கட்டுரைகளை வெளியிட்டார் நம்ம ஹீரோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்”
”ஐன்ஸ்டீன் எந்த நாடுப்பா?”

“ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்து ஸ்விட்சர்லாந்துல வளர்ந்து, ஹிட்லரோட யூதவெறிக்கு தப்பி அமெரிக்காவில் குடியேறியவருதான் நம்ம ஹீரோ ஐன்ஸ்டீன்”
“அவரோட சார்பியல் கோட்பாடு(Theory of Relativity) நியுட்டனின் ஈர்ப்பு விதியை வேற விதமா நிறுவியது“
“சார்பியல் கோட்பாடுன்னா என்னப்பா?”
” அதெல்லாம் உனக்கு இப்போ புரியாது, கருந்துளைக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் எடுத்துக்குவோம். அவர் தான் ஸ்பேஸ்ல இருக்கிற முப்பறிமாணங்களில் நான்காவது பறிமாணமாக நேரத்தை கொண்டு வந்தார்“
”கோள்களின் நிறைகள் சமதளமாக இருக்கும் நேர வரைபடத்தில் ஒரு வளைவை ஏற்படுத்துகின்றன என்றார். அதாவது நேர்க்கோட்டில் போகும் காலமானது கோள்களின் நிறைக்கேற்ப வளைகின்றன”

”புரியலப்பா”
“இன்டெர்ஸ்டெல்லார் படம் பார்த்தியா இல்லையா?“
“ஆமாம்பா, ஹீரோ 40 வயசிலேயே இருப்பான் ஆனா அவன் பொண்ணு 108 வயசாயிடுவாளே”
“அதே தான், ஹீரோ போகிற அந்த கோளில் ஒரு மணிநேரம் பூமியில் 20 ஆண்டுகள், அதாவது அந்த கோள் நேரத்தை அதிகமாக வளைத்து விடுகிறது“
“சரி கருந்துளைக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்?”
”நட்சத்திரம் எவ்வளவு அதிக நிறையுள்ளதாக உள்ளதோ அந்த அளவுக்கு காலத்தை வளைக்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும் நிறையை அந்த நட்சத்திரம் எட்டும் போது காலம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடுகிறது. அந்த எல்லை நிறையில் தான் நேரத்தின் கடைசி எல்லைக் கோடு முடிகிறது. அதன் பிறகு காலம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடும்”
“என்னது காலம் இல்லாமல் போய்விடுமா?”
”ஆமாம் அதனால் தான் கருந்துளையானது “நிகழ்வு எல்லை“ (EVENT HORIZON) என்று ஐன்ஸ்டீனால் அழைக்கப் பட்டது”

“அப்பா, அப்புறம்,,,,”
”இன்னைக்கு இது போதும், இதுவே தலைசுத்துற மாதிரிதான் இருக்கும், மீதிய அப்புறம் பாப்போம். இந்திய விஞ்ஞானி ஒருத்தர் கூட கருந்துளை ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல்லை நட்டு வச்சுட்டு போயிருக்காரு அவர பத்தி அடுத்த பகுதியில் பார்ப்போம்”


No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...