Thursday, April 4, 2019

கோவணமும் களவாடப்பட்டது




“அவன் ஒரு பட்டு வேட்டி பற்றிய
கனாவில் இருந்த போது
கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது”
இந்தியாவின் சுதந்திரம் பற்றிய ஒரு புதுக்கவிஞனின் இந்த கவிதை கடந்த ஐந்து ஆண்டு கால மோடி ஆட்சிக்குத் தான் கன கச்சிதமாக பொருந்துகிறது.
மோடி அவர்கள் தனது டிரேட் மார்க் 56” இஞ்ச் மார்பைத் தட்டிக் கொண்டு உரத்துப் போட்ட முக்கியக் கூச்சல்களில் இன்றியமையாதது “மேக் இன் இண்டியா”. இதோட அர்த்தம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
ஏற்கனவே நல்ல சந்தை வாய்ப்புகளோட “மேக்கி கிட்டு” இருக்கிற பொதுத்துறை நிறுவனங்களை அழித்து ஒழித்து அந்த வேலையை நம்ம இந்திய தனியார் கார்ப்பரேட் கையில் அல்வாத் துண்டு போல ஒப்படைத்து “நீ நல்லா மேக்குடா கண்ணு” என்பது தான்.
இந்த கட்டுரையின் முக்கிய நோக்கம் “நாட்டை உலுக்கிய ரபேல் ஊழல்“ என்கிற புத்தகத்தில் படித்த தகவல்களை சுருக்கித் தருவது தான்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகம் தழுவிய இராணுவ தளவாட வணிகத்தின் மொத்த மதிப்பு 126 லட்சம் கோடி ரூபாய்.
ராணுவ தளவாட உலகச்சந்தையில் இந்தியா மிக முக்கிய இறக்குமதி நாடு ஆகும். அதனால நாம யார் வம்பு தும்புக்கும் போகவேண்டாம். வெள்ளைக் கொடி ஆட்டிக் கிட்டு புறா பறக்க விடுவோம் என்று பொசுக்குன்னு முடிவெடுத்துட்டேம்னு வைங்க ஏற்றுமதி நாடுகளுக்கு பெரிய நஷ்டம். அவன் வீட்டுல அடுப்பெரியனும்னா நாம இங்க சண்ட போட்டுக் கொண்டு சாகணும். இல்லன்னா அட்லீஸ்ட் டெய்லி ஒருத்தன ஒருத்தன் பாத்து மொறச்சிகிட்டாவது இருக்கணும்.
இந்த சூழல்லதான் இதுக்கு முன்னாடி இருந்த காங்கிரஸ் அரசாங்கம் “பொழச்சி போ நாங்க ஒரு 126 விமானம் வாங்கி போடுறோம், வந்து வரிசையில் நில்லுங்கடா“ அப்படின்னு சொல்லுச்சு.
அப்போ 1. ரஷ்யாவின் மிக் 35 2. சுவீடன் ஜாஸ் 39 3. ஃப்ரான்ஸ் ரஃபேல் 4. அமெரிக்கா ஃபால்கன் எஃப்-16 5. அமெரிக்கா போயிங் எஃப்ஏ -19 6. ஐந்து ஐரோப்பிய நாடுகளின் கம்பெனியான  EURO FIGHTER TYPHOON (பு ன் நெடில் பாமினி யுனிகோடில் வரமாட்டேங்குது )
இந்த ஆறுபேறும் வந்து கூப்பில் அமர்ந்தார்கள். ரஷ்யாவின் மிக் 35 இந்தியா கோரிய அனைத்து மேம்பட்ட வசதிகளையும் தர முன்வந்தும் நிராகரிக்கப்பட்டது.
கடைசியில் எல்லா பஞ்சாயத்தையும் பேசி முடிச்சா டி 20 மேட்ச் டையில் முடிஞ்சமாதிரி ரஃபேலும் டைஃபுனும் சமமாக வந்து நின்னாங்க.
அப்போது தான் சூப்பர் ஓவர் போட்.ட மாதிரி விலை குறித்து பேசப்பட்டது. அதுல ரஃபேல் ஜெயிச்சி விசில் போட்டு சந்தோசமா போச்சு. (அதுக்கப்புறம் டைஃபுன் 20 விழுக்காடு விலை குறைச்சு தர முன்வந்தது. ஆனா பஞ்சாயத்து முடிஞ்சு நாட்டாம சொம்புல வெத்தல பாக்கு எச்சிய துப்பியாச்சி. அதனால சம்பிரதாயப்படி  மேட்டர் ஓவர்)
சரி அந்த “டீல்“ என்ன?
அப்போ இந்தியாவுக்கு ஒற்றை எஞ்சின் பொருத்திய மேம்பட்ட வசதிகள் உடைய 126 போர் விமானங்கள் தேவைப்பட்டன. ரஃபேல் 18 விமானங்களை “சொய்ங்“னு பறந்து வந்து நிறுத்துவது. மீதி 108 இந்தியாவின் பொதுத்துறை விமான தயாரிப்பு நிறுவனமான HAL உடன் சேர்ந்து தயாரிப்பது. ஒரு விமானம் 400 ரூபாய் னு முடிவாகியிருந்தது( என்னாது 400 ரூபாயான்னு வாய பொளக்காதீங்க, 1000 த்தையும் லட்சத்தையும் நாம ஒரு ரூபாய்னு சொல்வதில்லையா அதுபோலத்தான். அது ஆக்சுவலி 400 கோடிப்பா )

2014ல் ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறின. நாம தமிழ் நாட்டில் பார்த்திருப்போம் இல்லையா. முந்திய ஆட்சி போட்ட ஒப்பந்தங்களை புதிய ஆட்சி நிராகரிக்கும். அப்போதானே புது ஆளுங்களும் கமிஷன் பார்க்க முடியும். அதே போல தான். பல லட்சம் கோடி புரளும் இராணுவ தளவாட வணிகத்தின் கமிஷன் ஒற்றை இலக்க விழுக்காடாக இருந்தாலும் பல ஆயிரம் கோடி தேறும். எனவே இராணுவத்துறை ஆட்சியாளர்களுக்கு அட்சய பாத்திரம்.
”ஃப்ரான்ஸ் நாட்டு டசால்ட் கம்பெனியுடனான ரஃபேல் கொள்முதல் ஒப்பந்தம் இரத்து. அதற்கு பதிலாக சுகோய் ரக விமானங்கள் வாங்கப்படும்” அப்படின்னு மோடி அரசின் அப்போதைய இராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் ரஃபேல் கம்பெனி காரன் வயித்தில் புளியை கரைக்கிறார்.
மார்ச் 2015ல் இந்தியா வந்த அந்த கம்பெனி ஓனர் “ என்னப்பா அநியாயம் பண்றீங்க ஏற்கனவே ஒப்பந்தம் பேச்சு வார்த்தை 95 விழுக்காடு முடிஞ்சு போச்சு” என்று கதறுகிறார்.
இந்திய இராணுவமும் சுகோய் விமானங்களைக் காட்டிலும் மேம்பட்ட தரம், காலதாமதம் இவற்றைக் காரணம் காட்டி “நாட்டாம தீர்ப்பை மாத்திச் சொல்லு” என்று ஒப்பந்த இரத்தை எதிர்த்தது.
“மோடி பேசி விலையை குறைப்பார்”
“மேக் இன் இந்தியா“ என்ற கர்ஜனையை ஊக்குவிக்கும் விதமாக எச்.ஏ.எல் நிறுவனத்திற்கு வாய்ப்பளிப்பார்”
என்றெல்லாம் வின்னர் பட கைபுள்ளையை ஊர் நம்புவது போல எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில் ஏப்ரல் 2015 ல் ஃப்ரான்ஸ் நாட்டிற்கு தனது கார்ப்பரேட் நண்பர் அம்பானியை அழைத்துக் கொண்டு சென்றார்.
போறதுக்கு முன்னாடி நம்மஆளு அம்பானி ஒரு வேலையை செய்தார். அது என்ன தெரியுமா ரிலயன்ஸ் டிஃபென்ஸ் அப்படிங்குற பேருல ஒரு கம்பெனி ஆரம்பிச்சது தான்.
நம்ம பிரதமர் மோடி அவர்கள் பிரான்ஸ் தேசத்தில் இருந்தே மீடியாவில் அறிவிக்கிறார். ( பயந்துடாதிங்க)
பறக்கும் நிலையில் 36 ரஃபேல் விமானங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். என்று அறிவிக்கிறார்.
July 2015 ல் பார்லிமெண்டில் மனோகர் பாரிக்கர்  126 விமானம் ரபேல் ஒப்பந்தம் இரத்து. மாறாக 36 விமானங்கள் வாங்கும் புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை துவக்கம். ஜனவரி 2016 ல் புரிந்துணர்வு ஒப்பந்தம், செப்டம்பர் 2016ல் 36 விமானங்களுக்கான இறுதி ஒப்பந்தம்.
2014ல் ஒரு விமானத்தின் விலை 428 கோடி 2016 ல் ஒரு விமானத்தின் விலை 1600 கோடி. விமானத்தின் எண்ணிக்கை தான் குறைவோ ஒழிய மொத்த செலவு அதே தான். ”126 ஓட விலையில் நீ 36 மட்டும் கொடு என் தெய்வமே” என்று கேட்ட டீலிங் பிடித்துப் போனதால் டசால்ட் கம்பெனி ஒப்புக் கொண்டது. அதோட மட்டும் இல்லை, விமான தயாரிப்பில் ஒரு திருகாணி கூட தயாரிக்காத புதிய கத்துக்குட்டியான ரிலையன்ஸ் டிபென்ஸ் உடன் இணைந்து தயாரிக்க ஒப்புக் கொண்டு டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட் என்கிற கம்பெனி ரிலையன்ஸ் 51 டசால்ட் 49 என்கிற விழுக்காட்டுப் பங்கீட்டில் உதயமானது.
இப்படியாக பொதுத்துறை நிறுவனமான HAL ஒட்டு மொத்த சீனிலிருந்து கழட்டி விடப்பட்டது. இதனால் விமான தயாரிப்பின் புதிய தொழில் நுட்பங்களை டசால்ட் இடம் இருந்து பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் பறிபோனது.
எல்லாம் சரிப்பா நமக்கு தேவை 126 விமானம், ஆனா தல 36 விமானம் வாங்கத் தான் ஒப்பந்தம் போட்டிருக்கு மீதி 90 விமானம் என்னாச்சு??
90 என்ன 110 ஆவே வாங்கிடுவோம். ஆனால் புதிய டெண்டர் விடுவோம். இப்போ கூப்பில் அமர்ந்திருக்கும் சுவீடனின் SAB கம்பெனி உள்ளது. அந்த கம்பெனியின் புதிய கூட்டாளி அதானி தயார் நிலையில் உள்ளார்.
ஆக “பாகிஸ்தான், போர் போர் தீவிரவாதி, பயங்கரவாதி” என்று மோடி வாயால வட சுட்டால் தான் இராணுவ கொள்முதலை அதிகரிக்கலாம். அப்போதான் ……
சரி நாம படுத்து உறங்கி “பட்டு வேட்டி” பற்றி கனவு காண்போம், ஆனாலும் கூட  கோவணம் பத்திரம்டா யப்பா!!.

No comments:

Post a Comment

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...