Tuesday, April 30, 2019

100க்கு 100 தேர்ச்சி அல்ல எங்கள் முயற்சி

காலையில் ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு, " சார், நான் கமலோட (பெயர் மாற்றப் பட்டுள்ளது)அம்மா பேசறேன் சார்"
"எந்த கமல் அம்மா?!"
" பத்தாம் வகுப்பு கமல்"
"ஓ, உங்க பையன்தான் பாஸாயிட்டானே ம்மா!"
"ரொம்ப நன்றி சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியிலை,
ரொம்ப ரொம்ப நன்றி சார்" என உடைந்து அழுதார்.

யார் இந்த கமல்?!
தாத்தா வீட்டில் தங்கி படிப்பவன், வயதான தாத்தாவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஊர் சுற்றினான்.
ஆசிரியர்களோ விட்டேனா பார் என அவன் வீட்டில் போய் அமர்ந்து விட்டார்கள்.
அவனோட அம்மாவுக்கும் தொலை'பேசி' வரச்செய்து கொத்தாக தூக்கிக் கொண்டு வந்தனர்.
அவனோட அம்மாவுக்கும் அவனுக்கும் அறிவுரை கூறி திரும்பவும் பள்ளிக்கு வரச்செய்தோம்.
தேர்வுக்கு 10 நாள் இருக்கும் போது மீண்டும் வம்பு பண்ணி ஓடிவிட்டான். பள்ளிக்கு வரவே மாட்டேன் என்று சத்தியம் செய்கிறான்.
இருக்கும் ஒரே வாய்ப்பாக அவன் அம்மாவுக்கு விஷயத்தை எடுத்து சொல்லி 'இனிமே வந்தா கூட பாஸ்பண்ண வச்சிடுவோம் ' என்று உறுதியளித்தனர் தம் முயற்சியில் சற்றும் தளராத எங்கள் ஆசிரியர்கள்.
ஆனாலும் நம்பிக்கையின்றியே என்னிடம் விஷயத்தை கூறினார்கள்.

அடுத்தநாள் "மஃப்டியில்" சோல்டர் பேகோடு ஃபேர்வெல் பார்ட்டிக்கு காலையிலேயே வந்து விட்டான்.
இந்த மாதிரி பல "உள்ளே வெளியே" போராட்டத்தோடு அவனோடு மல்லுக் கட்டி அவனை கடை தேற்றி விட்டார்கள் எமது ஆசிரியர்கள்.

தேர்வு முடிவுகள் வந்த அன்று காலை ரொம்ப பிசியாக பல போன்கால்களுக்கு பதில் கூறிக் கொண்டு இருந்த போது ஒரு அம்மா வந்து கை கூப்பியபடி நின்றார்.
"என்னம்மா?!"
"என் பொண்ணு பாஸ் பண்ணிட்டாளா சாரு?!"
"பேர் என்னங்கம்மா?!"
"---"
" ஓ நல்லாவே பாஸ பண்ணிடுச்சிம்மா, 320 மார்க்"
சில நிமிட நேரம் தேம்பி தேம்பி அழுதார்
"ரொம்ப நன்றி சாமிவுளா" என்று கரம் கூப்பினார்.
"நான் இங்க துப்புரவு தொழிலாளியா இருக்குறேன் சாமி, நான் படிக்கல என் பொண்ணு படிச்சிக்கிட்டா" என்று தழுதழுத்தபடி கூறினார்
"பொண்ண  மேல படிக்க வைங்க, பொண்ணுங்களுக்கு நகை நட்டை விட படிப்புதான் பெரிய சொத்து"
"கடன  ஒடன வாங்கியாவுது படிக்க வச்சிடுறேன் சாமி" என்று கூறிச் சென்றார்.

"பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல?!"
இப்படியும் ஒரு பெண் மாலதி (பெயர் மாற்றப் பட்டுள்ளது)
ரொம்ப ட்ரிக்கா கட் அடிப்பார். நீண்ட நாள் வரலேன்னா தானே பெயரை நீக்குவாங்க, வாரத்தில் ரெண்டு நாள் உள்ளே மூன்று நாள் வெளியே.
ஆசிரியர்களும் மாலதி வீட்டுக்கு நடையாய் நடந்து சலித்து விட்டார்கள்.
மாலதியின் அம்மா, அப்பா, அக்கா, அப்பாயி, அம்மாயி, அத்தை என எல்லோரும் வாரா வாரம் வந்து பரிந்து பேசி உள்ளே அனுப்புவார்கள். எல்லாம் இரண்டு நாள் தான், அடுத்த வாரம் திரும்பவும் முருங்கை மரம் ஏறிவிடுவாள்.
அவுங்க வீட்டு ரேஷன் கார்டுல தான் பெயர் இல்லையே ஒழிய அவுங்க குடும்ப உறுப்பினர் போல ஆகிவிட்டேன்.
கடைசியாக பரிட்சைக்கு இடைப்பட்ட நாட்கள் பயிற்சிக்கும் வரவில்லை.
ஆசிரியப் பெருமக்களின் பகீரத பிரயத்தனத்திற்கு பயனில்லாமல் போயிற்று.
ஆம், இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தாள்.
நூறு சத தேர்ச்சியை எதிர் நோக்கி மாலதிகளை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் எம் பள்ளியில் இல்லை.
சற்று அசட்டையாக இருந்திருந்தால் மாலதியே இடை நின்றிருப்பார்.
ஆனால் தேர்வு எழுதியதால் 3 பாடங்களில் தேறினார். நிச்சயமாக உடனடித் துணைத் தேர்வில் தேறி விடுவார்.
தலைமையாசிரியராக முதலாம் ஆண்டில் 100 விழுக்காடு பெற முடியாமல் போனாலும் அனைத்து குழந்தைகளையும் அரவணைத்து விடா முயற்சியோடு பணியாற்றிய ஆசிரியர் குழுவோடு இணைந்து அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய திருப்தியே பல விருதுகளுக்கு இணையானது.

2 comments:

  1. சூப்பர் சார் உண்மையை உள்ளபடியே இருக்கும் நடந்த சம்பவங்களை அப்படியே நேர்ல கொண்டு வந்த மாதிரி இருந்துச்சு மீண்டும் படிக்க வேண்டும் இரண்டாவதாகத் திரும்பவும் படிச்சிருக்கேன் மிகவும் அருமை

    ReplyDelete

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...