வேலையில்லாமல் வீட்டில் பாதுகாப்புக் காரணங்களுக்காக
முடங்கியிருந்த வேளைகளில் அமேசான் ப்ரைம் வீடியோ அப்ளிகேஷன் துணைகொண்டு சில படங்கள்
பார்த்து பொழுது போக்கினேன். சப்டைட்டில் துணை இருப்பதால் மொழி எல்லைகள் கடந்து படங்கள்
பார்க்க முடிவது மிகப்பெரிய வாய்ப்பு.
கே.வி.ஆனந்த் இயக்கிய முதல் படத்தில் நுனி நாக்கு
ஆங்கிலத்தில் பேசியபடி வரும் கொடிய வில்லனாக முதன் முதலில் பிரித்விராஜ் ஐ பார்த்தேன்.
அதன் பிறகு நினைத்தாலே இனிக்கும், மொழி போன்ற படங்களில் பார்த்திருக்கிறேன்.
அதிகார பலம் மிக்க ஒருவரும் நேர்மையும் நெஞ்சுரமும்
நிறைந்த சாதாரண ஒரு சுயமரியாதை மிக்க ஒரு அரசு ஊழியருக்கும் ஏற்படும் ஒரு உரசல் எந்த
எல்லை வரை செல்லும் என்கிற சரடை எடுத்து திரைக்கதை அமைத்து சமைத்த அருமையான மலையாள
திரைப்படங்களே தலைப்பில் நான் கூறியவை.
டிரைவிங் லைசன்ஸ்- ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர்
பிருத்வி. ஒரு படத்தின் க்ளைமாக்ஸ் படமாக்கி விட்டு தனது மனைவியின் ஆப்பரேஷனுக்காக
வெளிநாடு செல்ல வேண்டிய நியாயமான நெருக்கடி. ஆனால் படமாக்க வேண்டிய லொகேஷனில் அனுமதி
வாங்க நடிகரின் டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் தேவை என்கிறார்கள். ஆனால் டிரைவிங் லைசன்ஸ்
எங்கேயோ தொலைந்து விட்டது. ஒரு டூப்ளிகேட் லைசன்ஸ் அப்ளை செய்து வாங்க வேண்டும். அதற்கு
ஒரு தரமாவது நேரில் செல்ல வேண்டும். வந்து செல்வது ரகசியமாக வைக்கப் பட வேண்டும் என்று
தனது உதவயாளரிடம் கறாராக சொல்கிறார்.
மோட்டார் வெஹிக்கிள் இன்ஸ்பெக்டர், பிருத்வியின்
அதிதீவிர ரசிகர். அந்த நடிகரின் கட் அவுட்டை தனது கட்டிலுக்கு அருகிலேயே வைத்து ஆராதிக்கும்
நடிகரின் தீவிர விசிறி. மேற்படி நடிகரின் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டதால் டூப்ளிகேட்
வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி
அவரை நேரில் வரவழைத்து பையனுடன் ஒரு செல்ஃபி எடுத்து பீற்றிக் கொள்ள திட்டமிடுகிறார்.
அடுத்த நாள் நடிகர் வருகிறார். அப்பனும் பிள்ளையும் ஆர்வத்தோடு பரிசு பொக்கே என ரெடி
செய்து காத்திருக்கிறார்கள்.
ஆர்.டி.ஓ ஆபீஸ் வாசலில் காரை தானே ஓட்டியபடி வந்து
இறங்குகிறார் நடிகர். இறங்கிய உடனே நிருபர்கள் சூழ்ந்து கொண்டு இப்போது தான் டிரைவிங்
லைசன்ஸ் வாங்குறீங்களா? அப்புறம் எப்படி கார் ஓட்டுறீங்க? ஒரு பொறுப்பான நடிகர் சட்டத்தை
மீறலாமா? என கேப் விடாமல் கேள்விகள் கேட்டு திணற அடிக்கிறார்கள்.
தலை வெடிக்கும் கோபத்தோடு ஓடி வந்து ஆர்.டி.ஓ
அலுவலகத்தில் வந்து தாழிட்டுக் கொண்டு யார் மீடியாவுக்கு சொன்னது என கொந்தளிக்கிறார்.
நேரம் காலம் தெரியாமல் மோட்டார் வெஹிக்கில் இன்ஸ்பெக்டர் மகன் பொக்கே வை நீட்ட வாங்கி
விசிறி அடிக்கிறார். மகன் கோழிக்குஞ்சு போல பயந்து போய் தனது அப்பாவின் பின்னால் ஒளிகிறான்.
ரசிகராக இருந்த MVI பரம எதிரி போல ஆகிறார். அதன்
பின்னர் லைசன்ஸ் வாங்க ஏகப்பட்ட கெடுபிடிகளை கறாராக கடைபிடிக்கும் MVI க்கும் நடிகருக்கும்
மான பரபரப்பான தருணங்கள் படத்தை ஒரு திரில்லர் ரேஞ்சுக்கு கொண்டு செல்கிறது.
அய்யப்பனும்
கோஷியும்- அய்யப்பன் மிக நேர்மையான நெஞ்சுறுதி கொண்ட சுயமரியாதை மிக்க எஸ்.ஐ. கோஷி
பணக்காரர், ரிட்டையர்டு மிலிட்டரி. ஒரு நாள் மது தடைசெய்யப்பட்ட வனப்பகுதியில் அய்யப்பனும்
அவர்களின் போலிஸ் சிப்பந்திகளும் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சரி
முடித்து விட்டு கிளம்பளாம் எனும் போது கோஷியின் வண்டி வருகிறது. டிரைவர் வண்டி ஓட்டுகிறார்.
கோஷி பின் சீட்டில் மது போதையில் கதவில் சாய்ந்து நல்ல உறக்கத்தில் வருகிறார். சோதனை
செய்கிறபோது கதவை திறக்கையில் பொத்தென்று வெளியே வந்து விழுந்து தூக்கம் கலைகிறார்.
அதன் பின்னர் கோபம் தலைக்கேறி சிறுத்தையாய் சீறுகிறார். அவரின் வண்டியில் இருந்த மது
பாட்டில்கள் எடுத்து சீல் வைக்கப் படுகின்றன. அவர்மேல் வழக்க போடப்படுகிறது. ஸ்டேஷன்
கொண்டு வந்த பின்பு தான் தெறிகிறது அவர் பெரிய இடத்தின் தொடர்புகள் உள்ள பெரிய குடும்பத்து
ஆள் என்பது.
அதன்
பின்பு மேலதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அவரை சமாதானப் படுத்தும் விதமாக சீல் வைத்த
பாட்டில் ஒன்றை பிரித்து மது ஊற்றிக் கொடுத்தபடி அய்யப்பன் பேசுகிறார். சீல் பிரித்தது
மது வை ஊற்றி விட்டு மீதம் காலி இடத்தில் தண்ணீர் ஊற்றி ஈடு செய்வது வரை கோஷி தனது
செல்போன் கேமராவில் படமாக்கி விட்டு சிறைக்கு செல்கிறார்.
அய்யப்பனுக்கு வேலை போகிறது. இருவருக்குமான உரசலில்
கோஷி தனது தரப்பை சரிசெய்து பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணினாலும் அவரது
கட்டுப்பாடு இன்றியே பிரச்சனை முற்றிக் கொண்டே செல்கிறது.
சற்றேறக் குறைய 3 மணி நேர படம். நல்ல பரபரப்புடன்
செல்கிறது. நல்ல கிராமிய மெட்டில் அமைந்த மூன்று பாடல்கள் மனதை ஈர்க்கின்றன. படத்தின்
பின்னணி இசை அமர்க்களம்.
ஒரு நடிகர் ஒரே கதையில் இரண்டு முறை நடிக்க மிகுந்த
தைரியம் வேண்டும். இரண்டு படங்களுமே ஒரே கதையம்சம் கொண்டவை தான் என்றாலும் இரண்டும்
படமாக்கப் பட்ட சூழல் வரிசையாக முளைவிடும் சிக்கல்கள் எல்லாம் நன்றாகத்தான் உள்ளன.
இருவருக்கிடையே உள்ள ஈகோ சார்ந்த் பல பிரச்சனைகளை நாம் நமது அலுவலகங்களிலோ அல்லது உறவினர்கள்
மத்தியிலோ பார்த்திருப்போம். படத்தின் திரைக்கதை அந்த இருவரின் பிரச்சனை முளைவிடுவது,
வளர்வது மற்றும் முற்றுவது என்று பரபரப்பாக செல்கிறது.
No comments:
Post a Comment