Thursday, February 27, 2020

தெருவிளக்கும் மரத்தடியும்


தெருவிளக்கும் மரத்தடியும்

ச.மாடசாமி அவர்கள் புதிய தலைமுறை கல்வி இதழில் எழுதிய தொடரின் நூல் வடிவமே இந்த புத்தகம்.
தொடர்ச்சியாக நான்கு வாரங்கள் வியாழக்கிழமைகளில் நிஷ்த்தா பயிற்சியில் கருத்தாளராக ஆசிரியர்கள் மத்தியில் பேசவேண்டியிருந்தது. அந்த தருணத்தில் வாசித்த இந்த புத்தகம் பயிற்சி வகுப்பை பயனுள்ள வகையில் சுவைபட நடத்திச் செல்ல எனக்கு பேருதவி புரிந்தது.
இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளுமே ஆசிரியர்களுக்கு பெரிய விழிப்புணர்வை தரவல்லவை. வகுப்பறை ஒழுங்கு ஆசிரியர் செயல்பாடு என நமக்கு நாமே வகுத்து வைத்திருக்கும் பல கற்பிதங்களை அடித்து நொறுக்குகிறார்.
பி.எட் பட்ட படிப்பில் மைக்ரோ டீச்சிங், மேக்ரோ டீச்சிங், சைக்காலஜி மற்றும் எஜுகேஷன் டெக்னாலஜி ன்னு நிறய படிக்கிறோம். ப்ராக்டிகல் கூட உண்டு. ஆனால் நூலாசிரியர் போன்று கல்வி புலத்தில் இயங்கி வரும் ஆளுமைகளை கொண்டு சில கூட்டங்களோ பயிலரங்கங்களோ நடத்தினால் நிச்சயமாக ஆசிரிய மாணவர்களின் Teaching Attitude ல் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர இயலும்.
”வாயையும் மனத்தையும் திறக்கும் வாசல்” என்கிற கட்டுரையில் ஐம்பத்தி ஓராவது ராட்சதப் பூச்சி என்கிற கதையை கூறி மாணவர்களிடம் விவாதித்த விதம் பற்றி அழகாக கூறியுள்ளார்.
“இன்னும் ஒரு படி இறங்குங்க“ என்ற கட்டுரையில் “ஏண்டா எரும மாதிரி நிக்கிற“- உவமை “ஏ எரும இங்க வாடா“- உருவகம் என்று தடாலடியாக இறங்கி அடித்திருப்பார். ஆங்கில இலக்கணம் போதித்த காலத்தில் நான் இந்த மாதிரி பல முறை இறங்கியதுண்டு. மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் நோக்கோடு எவ்வளவு படிகள் வேண்டுமானாலும் இறங்கலாம் என கூறியிருப்பார்.
தரம் என்ற முழக்கத்தை பின்தொடர்ந்து, விலக்குவதும் பிரிப்பதுமான நடவடிக்கைகள் கட்டாயம் இருக்கின்றன. குழுவாக பிரிப்பதற்கும் குழுவிற்குள் வரவிடாமல் விலக்குவதற்கும் ஆளுக்கொரு அளவுகோல் கையில் இருக்கிறது. என்று தொடங்கும்  கட்டுரையில் Inclusive Education குறித்து டோடோ சேன் என்கிற ஜப்பானிய கதை மூலமாக ஆழமாக விளக்குகிறார். நிச்சயமாக இவையெல்லாம் இளம் ஆசிரியர்களை சென்று அடைய வேண்டிய தகவல்கள்.
இன்றைய வகுப்பறைகள் பெரும்பாலானவற்றில் என்ன நடக்கிறது. நன்றாக படிக்கும் மாணவர்களை “ஆகா ஓகோ“ என்று புகழ்வது. படிப்பு என்கிற ஒற்றை அளவு கோலை வைத்தே எல்லா விஷயங்களையும் அனுகுவது அங்கீகரிப்பது என்று போய்க் கொண்டு இருக்கிறது. எல்லா மாணவர்களையும் அவர்களின் ஏதேனும் ஒரு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பேற்படுத்தி பாராட்டிப் பாருங்கள். ஆசிரியர்களின் பாராட்டு என்பது மாணவர்களுக்கு மிகச்சிறந்த ஊக்க மருந்து.
மொத்தத்தில் வகுப்பறைகள் மாணவர்களுக்கான வெளி அங்கே அவர்களை ஆன மட்டும் கொண்டாடிக் களியுங்கள் என்பது தான் ச.மாடசாமி அவர்களின் இந்த புத்தகத்தில் கிடைத்த கருத்துப் புதையல்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...