Tuesday, February 4, 2020

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்

#Reading_Marathon_2020_50
#4/50


புத்தகம்:ஆழமான கேள்விகளும் அறிவார்ந்த பதில்களும்.(Brief Answers to Big Questions)
ஆசிரியர்: ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் – ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்

        உலகில் என்னை மிகவும் வியப்படைய வைக்கும் மனிதர்களில் முக்கியமான ஒருவர் ஹாக்கிங்ஸ். ஏனென்றால் 21 வயதில் தசை அழற்சி (Scelerosis)
நோயால் பாதிக்கப் பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்டு இன்னும் ஐந்து
ஆண்டுகாலம் தான் பையன் உயிருடன் இருப்பான் என்று மருத்துவர்களால் நாள்
குறிக்கப் பட்டவர். ஆனால் அவர் மருத்துவர்களின் கணிப்பை பொய்யாக்கி 76
ஆண்டுகள் உயிருடன் இருந்ததோடு அல்லாமல் பிரபஞ்ச அறிவியலில் வியத்தகு பல
சாதனைகளை படைத்தவர். 2018 மார்ச் 14 ம் நாள் தான் இறந்தார்.
        அதிகம் விற்பனையான இவரது நூலான “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” (A Brief History of Time) நேரத்தின் துவக்கம் மற்றும் இறுதி குறித்து அறிவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து ஒரு எளிய மனிதனுக்கும் கோட்பாட்டு இயற்பியல் முக்கியமாக பிரபஞ்ச அறிவியல் மீது ஆர்வம் வரக் காரணமாக இருந்தது. “கடினமான கோட்பாடுகள் என்று அறிவியலில் எதுவும் இல்லை. ஆனால் எளிமையாக அவற்றை எடுத்தியம்பும் ஆட்கள் தான் பற்றாக்குறையாக உள்ளது”
என்று சொல்வார்கள். ஹாக்கிங்ஸ் அவர்கள் எதையும் எளிமையான உதாரணங்களுடன் புரியும் வண்ணம் கூறுவதில் வல்லவர்.
        தற்போது விஷயத்திற்கு வருவோம். ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்.
இந்த புத்தகத்தில் நாம் எப்போதுமே அறிவியல் அறிஞர்களிடம் கேட்டு தெளிவு
பெற எண்ணும் ஆழமான கேள்விகளுக்கு அறிவார்ந்த பதில்களை அழகாக
வழங்கியுள்ளார் ஹாக்கிங்ஸ் அவர்கள்.
        “கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா?” என்ற கேள்விதான் முதலாவது. அதற்கான
பதிலாக என்ன கூறியுள்ளார்?
 உங்களுக்கு கடவுள் ஒருவர் இன்றியமையாதது எனக் கருதினால் அறிவியல்
விதிகளை வேண்டுமானால் கடவுள் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னைப்
பொருத்தவரை கடவுள் இல்லை என்று கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் நடு
மண்டையில் சுத்தியலால் அடித்தமாதிரி பதில் சொல்லிவிட்டார். அறிவியல்
ரீதியான ஆதாரங்களோடும் அழகான வாதங்களோடும்.
        பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது?
        அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா?
        வருங்காலத்தை நம்மால் கணிக்க இயலுமா?
        கருந்துளைக்குள் என்ன இருக்கிறது?
        காலப் பயணம் சாத்தியமா?
        வருங்காலத்தில் நாம் இந்தப் புவியில் உயிர் பிழைத்திருப்போமா?
        விண்வெளியை நாம் காலனிப் படுத்த வேண்டுமா?
        செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?
        வருங்காலத்தை நாம் எவ்வாறு வடிவமைப்பது?
இந்த அனைத்து கேள்விகளுக்கும் நேர்மையான அறிவார்ந்த விளக்கங்களை வழங்கியுள்ளார்.
        மேலும் எந்த இடத்திலும் அறிவியல் அழிவுக்கும் காரணமாக இருக்கிறது என்கிற
குறையை அவர் கூறவில்லை. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்னும் செயற்கை
நுண்ணறிவு குறித்த எதிர்மறை எண்ணங்கள் எனக்கு உண்டு. ஆனால் அவரோ அதன்
நேர்மறை விளைவுகளை பற்றியே அதிகம் சிலாகிக்கிறார். அதற்கு காரணம்
முற்றிலும் உடலியக்க செயல்பாடுகள் முடங்கிய அவரை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பேசவும் பல அறிவியல் கட்டுரைகள் எழுதவும் சாத்தியமாக்கிய துறை குறித்த நன்றியுணர்வு தான்.

-

No comments:

Post a Comment

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...