Saturday, January 25, 2020

வானியுடனான எனது நட்பு


இரவு பத்து மணிக்கு மேல் எனக்கு யாராவது தொ(ல்)லை பேசினார்கள் என்றால் நிச்சயமாக அது எனது காஷ்மீர் நண்பர் ”வானி”யாகத் தான் இருக்கும்.(சந்தேகமாகப் பார்க்காதீங்க “பாய்“(Boy) நண்பர் தாங்க)
சிசிஆர்டி 2011 ல் கிடைத்த நல்லதொரு நண்பன். என்னை பெரிய புத்திசாலி நம்பி “போட்டித் தேர்வுக்கான கணிதம்” என்கிற தலைப்பில் என்னுடன் இணைந்து புத்தகம் எழுத வேண்டும் என்று திட்டம் எல்லாம் தீட்டினார். ஒரு முறை நாகாலாந்து ஆசிரியையுடன் இணைத்து கிண்டல் செய்த காரணத்தினால் ஒரு வாரம் பேசவில்லை. ஆனாலும் “I will take the books from your bag, you can’t stop me” என்று உரிமையோடு எனது பையில் இருந்து புத்தகங்களை எல்லாம் படிக்க எடுத்துக் கொள்வார்.
காஷ்மீர் நண்பர்கள் அனைவருமே ஐந்து வேளை தொழுகை செய்வார்கள். அதி தீவிர கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். ஒரு முறை கடவுளின் இருப்பு குறித்த ஒரு விவாதம் எனக்கும் அவருக்கும் காரசாரமாக நடந்தது. எங்கே “வெட்டுக் குத்து” ஆகிவிடுமோ என்று அனைத்து மாநில ஆசிரியர்களும் இரவு 1.00 மணி வரையில் இரண்டு பக்கமாக பிரிந்து பதட்டத்தோடு வேடிக்கை பார்த்தனர். இறுதியில் கை கொடுத்து விட்டு சிரித்துக் கொண்டே “உன்னை எல்லாம் திருத்தவே முடியாது” என்று கூறியபடி உறங்கச் சென்றார். அனைத்து நண்பர்களுமே “ப்ரதர்“ என்ற வார்த்தையால் தான் மற்ற மாநிலத்தவரை அழைப்பார்கள்.
“நீங்க ஏன் எப்ப பாத்தாலும் காஷ்மீரில் பிரச்சனை பண்றீங்க?“
“நீங்க பாகிஸ்தான தான் சப்போர்ட் பண்ணுவிங்களா?”
“தீவிரவாதிங்களுக்கு அடைக்கலம் கொடுப்பது தப்பில்லையா?”
     “இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்கும் போது நீங்க எந்த நாட்ட சப்போர்ட் பண்ணுவீங்க?”
     என்ற கேள்விகளை முதல் நாளே கேட்ட தமிழக நண்பர் ஒருவருக்கு அவர்கள் பதில் சொன்ன நேர்த்தியும் பக்குவமும் பார்த்து எனக்கு வியப்பு தான் ஏற்பட்டது. அந்த பதில்கள் குறித்து தனிபதிவே போடலாம்.
     அந்த கேள்விகள் அவர்கள் அடிக்கடி எதிர்கொண்டவைதான் என்பதால் அவர்கள் அந்த கேள்விகள் குறித்து அதிர்ச்சியெல்லாம் அடையவில்லை. நான் தான் பார்த்த முதல் நாளே பிரம்மாஸ்திரமா என்ற பதறிப் போனேன்.
     பயிற்சி முடிந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டாலும் மாதம் ஒருமுறையாவது வானியிடம் இருந்து அழைப்பு “அலோ ஸார்..” என்ற படி வந்து விடும். காஷ்மீர் 370 வது பிரிவு நீக்கம் யூனியன் பிரதேச அந்தஸ்து என்று பிரச்சனை தீவிரமடைந்த போது தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப் பட்டிருந்த காரணத்தினால் ஒரு இரண்டு மாதங்கள் பேசவில்லை. அந்த பிரச்சனை போய்க்கொண்டு இருந்த போது இந்த பிரச்சனைகள் காரணமாக எங்கள் நட்பு இருவருக்குமே பிரச்சனைக்கு உரியதாக மாறிவிடுமோ என்று சற்றே பதட்டம் அடைந்தேன்.
     தொலைபேசி இணைப்பு கொடுக்கப் பட்ட அன்று இரவே “அலோ ஸார்…” என்று சற்றும் உற்சாகம் குறையாத குரல் மீண்டும் கேட்டது.
     நேற்று இரவு ஒன்பது மணிக்கு வானியிடம் இருந்து அழைப்பு. “தொர்ர இங்கிலீஸ்லாம் பேசுது“ என்ற நொடித்துக் கொண்டு சென்றார் இல்லத்தரசி.
     “எங்களுக்கு புரோமோஷன் பேணல் நெட்ல விட்ருக்காங்க. அதுல என்னோட சீனியாரிட்டி நம்பர் பாத்து சொல்லுப்பா“
     அங்கே இணைய இணைப்பு இன்னும் வழங்கப் படவில்லை.
     வானியின் சூழல் அறிந்து உடனடியாக அவர் சொன்ன கல்வித்துறை இணையதளத்தில் குறிப்பிட்ட பாடத்திற்கான பேணலை பதிவிரக்கிவிட்டேன். பார்த்தால் அந்த லிஸ்ட்டில் 10 வானிகள் இருந்தனர்.
     “ஏப்பா, சாரிப்பா உன்னோட முழுப் பேர் சொல்லுப்பா”
     பிறகு பெயரைத்தேடினேன் 56 வது ரேங்கில் இருந்தது.
     “உன் ரேங்க் 56 ப்பா”
     “மொத்தம் எத்தன பேர் பேணல்ல இருக்காங்க”
     “அதப் பாக்கலையே இந்தா கட் பண்ணு பாத்துட்டு வரேன்”
பேணலில் உள்ள மொத்த எண்ணிக்கையை பாத்துட்டு திரும்ப போன் போட்டேன்.
     “எனக்கு ரிமார்க் காலத்தில் என்ன போட்ருக்கு?”
”யோவ், நான் உன் பேரு ரேங்க் பிறந்த தேதி அத தான்யா பாத்தேன்”
“ப்ளீஸ் அதையும் கொஞ்சம் பாருப்பா”
திரும்ப வந்து பார்த்தேன்.
“வெரிஃபைடுன்னு போட்டுருக்கு“
”எனக்கு முன்னாடி ரேங்க் காரனுக்கு (55க்கு) என்ன போட்ருக்கு?”
“இந்தாப்பா எல்லாத்தையும் முன்னாடியே சொல்ல மாட்டியா?”
பிறகு அதையும் பார்த்துட்டு பொதுவா நாம பேணல் பாக்கும் போது என்னவெல்லாம் பாப்போமோ எல்லாத்தையும் பாத்து வச்சிக்கிட்டேன்.
“அவருக்கு எலவேட்டட் போட்ருக்கு, ஆனா அவருக்கு மேல இருக்க ஆளுங்க ஒரு 5 பேருக்கு வெரிஃபைடு தான் போட்ருக்கு, மேலும் அந்த ஆள் சீனியரா இருக்கான், முதுகலை 2018 ல தான் முடிச்சிருக்கான், போதுமா” என்று கூறி மூச்சு வாங்கினேன்.
     எனக்க தலைமையாசிரியர் பேணல் வந்த அன்னைக்கு நான் எல்லாம் சுமார் இரண்டு மணி நேரம் அதை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தேன். யார் முன்னே யார் பின்னே எனக்கு முன்னாடி எத்தனை பேர் ரிட்டையர்டு ஆகி இருக்காங்க இப்படி டிசைன் டிசைனா சந்தேகம் வரும்.
     ஒரு சாதாரண வேலை காஷ்மீர் எல்லைக்குள் எப்படிப்பட்ட கஷ்டமான வேலை ஆகிவிட்டிருக்கிறது. அடுத்த மாநிலத்தில் நண்பர் இருப்பதால் இவர் ஓரளவு தெளிவாக பேணலை புரிந்து கொண்டார். அப்படி ஒரு தொடர்பு இல்லாதவர்கள் நிலை என்ன?
     2011 ல் அவர்கள் யாவரும் ஒருமித்த குரலில் “எங்கள் நாடு அருமையான இயற்கை வளங்கள் கொண்ட நாடு. மக்கள் பல வகை கைவினைப் பொருட்கள் செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். பிரச்சனை இல்லை என்றால் சுற்றுலாத்துறை மூலம் ஏராளமான வருவாய் வாய்ப்புகள் எல்லாம் உண்டு” என்று வேதனையோடு கூறுவார்கள்.
     அவர்களை நேரில் பார்த்து பழகிய பின்பு காஷ்மீர் குறித்த எனது புரிதலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது.
     அவர்களின் துயரங்கள் என்றைக்குத் தான் தீருமோ?


No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...