புத்தகம் : அன்பென்பது
ஒரு தந்திரம் அல்ல
ஆசிரியர் : ச.மாடசாமி
பாரதி புத்தகாலயம்
ச.மாடசாமி
அவர்கள் பல்வேறு இதழ்களில் எழுதிய தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பு தான் அன்பென்பது
ஒரு தந்திரம் அல்ல என்ற இந்த புத்தகம்.
இப்போதெல்லாம்
சமூக ஊடகங்களில் வெகுசீக்கிரம் கவனம் பெறுவதும் பரப்ப படுவதும் வெறுப்பு சார்ந்த நிகழ்வுகள்
தான். இனம், மதம், வட்டாரம், நாடு போன்ற பல்வேறு வரையறைகளுக்குள் வருவோர் எல்லாம் ஒன்றாய்
கூடி மற்றவருக்கு எதிராக வெறுப்பை உமிழ்வது, கும்பலாகத் தாக்குவது என்று வெறுப்பு அழிக்க
இயலா விருட்சமென வளர்ந்து வருகிறது.
இதில் பல்வேறு விசித்திரமான கூடல் மற்றும் பிரிதல்
எல்லாம் நடந்தேறும். உதாரணமாக இந்துக்களாக ஒன்று கூடி ஒரு விஷயத்தை எதிர்த்து முடித்து
உறங்கி கண் விழித்தால் சாதி சார்ந்த டிரெண்டிங் போய்க்கொண்டு இருக்கும். உடனே பழைய
இணைப்பை உதறித் தள்ளி விட்டு சாதிகளாக பிரிந்து அடித்துக் கொள்ளவேண்டியுள்ளது. அதுவே
”ஏ பாகிஸ்தான் ஹே ஹமாரா எதிரி ஹே“ என எதையாவது திசைதிருப்ப தூண்டிவிடப் படும் போதெல்லாம்
திரும்பவும் ஒன்றாக கூடி புதிய எதிரிக்கு எதிராக பொங்கல் வைக்க வேண்டும்.
இப்படியாக சோஷியல் மீடியாக்கள் புண்ணியத்திலும்
நான்காம் தூண் ஆதரவிலும் சமூகத்தில் வெறுப்பு நாள்தோறும் வளர்ந்து வருவதைக் காண்கிறோம்.
அணுகுண்டுக்கு எதிராக காகித கொக்கு செய்த ஜப்பான்
சிறுமியைப் போல நாம் வெறுப்பை வேரறுக்க அன்பைத் தான் முன்னிருத்த வேண்டும். நிபந்தனையற்ற
அன்பு, எல்லைகள் பாரா அன்பு.
இந்த அன்பெனும் விதையை எங்கே விதைப்பது?
வேறெங்கே பள்ளிகளில் தான்?
கள்ளம் கபடம் இல்லா பிஞ்சு மனங்களில் அன்பினை
விதைத்து பாருங்கள். அது நிச்சயம் வெறுப்பெனும் விருட்சத்தை வேரறுக்கும்.
உள்நோக்கம்
கொண்ட தந்திரமான அன்பு, சமூக வலைதளங்களில் தம்மை நல்லவனாக நிலைநிறுத்திக் கொள்ள கையாளும்
போலி அன்பு இவற்றையெல்லாம் நுணுக்கமாக பேசியிருக்கிறார். “The Cat came Back” என்கிற
பழங்கால வாய்வழிப் பாடலின் கதை வழியே கள்ளமில்லா அன்பு ஒன்றே வலிமையானது என கூறுகிறார்.
அப்பாவியா? முட்டாளா? என்ற அத்தியாயத்தில் தங்கப்பன்
கழுதை வாங்கிய கதை வழியாக அப்பாவித்தனமானது முட்டாள் தனமாக போதிக்கப் படுவதன் அவலத்தை
கூறுகிறார்.
“பாரதியார் எட்டயபுரத்தில் பிறந்தார்” என்ற தகவலை
பரிமாறிவிட்டு மாணவர்கள் மத்தியில் “பாரதியார் எங்கு பிறந்தார்?“ “எட்டயபுரத்தில் பிறந்தவர்
யார்?“ என்றெல்லாம் கேட்பது வழக்கமான வகுப்பறை. வழக்கமான ஆசிரியர். மாறாக மாணவன் தகவல்களை
திரட்டி வந்து ஆசிரியர் முன்னிலையில் மாணவர்கள் விவாதிப்பதன் மூலமாக ஏராளமாக கற்க இயலும்
என்ற கருத்தை “தலைகீழ் வகுப்பறை”(FLIPPED CLASSROOM) என்ற கட்டுரையில் கூறுகிறார்.
வரலாறு திரிக்கப்பட்டு பரப்ப படுவதால் சமூகத்தில்
எத்தகைய பெரும் கேடு ஏற்படுகிறது என்பதை சிவாஜி குறித்த கட்டுரையில் கூறுகிறார்.
மேலும் புதியக் கல்விக் கொள்கை, எழுத்தாளர் சுஜாதாவின்
தந்திர மொழி போன்ற பல விஷயங்களைப் பேசும் கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த நூல்.
No comments:
Post a Comment