Monday, November 30, 2020

தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம்

 

புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம்


ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம்

பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி

நூலாசிரியர் பணிநிறைவு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். தமிழ்த்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். நிறைய நூல்கள் எழுதியுள்ளார். முனைவர் பட்ட ஆய்வுக்காக வழிகாட்டுதலின் போது அரியலூர் பற்றிய தகவல் சேகரிப்பு செய்து பிறகு அந்த தகவல்களை கண்ணியம் என்கிற இதழில் வெளியிட்டுள்ளார். அதுவே பிறகு நூலாக சொந்தமாக பதிப்பித்து இருக்கிறார். ஆசிரியரது ஊர் அரியலூர் மாவட்டத்தில் பழம் பெருமைப் பெற்ற திருமழப்பாடி.

நான் கல்லூரி படிக்க துவங்கிய காலத்தில் எனது ஊர் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. அப்புறம் படிப்பை முடித்த போது அப்படியே நகர்ந்து போய் பெரம்பலூர் மாவட்டமானது. பிறகு நான் வேலைக்கு வந்த போது அரியலூர் மாவட்டம் என்று அறிவிக்கப்பட்டு அப்புறம் சிங்கத்தலைவியால் திரும்பவும் பெரம்பலூரோடு இணைக்கப் பட்டது. அப்புறம் ஒரு வழியாக 2007 ல் மறுபடியும் கலைஞர் ஆட்சியில் அரியலூர் மாவட்டமாக தனிக்குடித்தனம் வந்து பால்காய்ச்சி பனங்கல்கண்டு போட்டு குடித்துவிட்டோம்.

அரியலூர் மாவட்டத்தைப் பற்றிய மற்ற மாவட்ட மக்களின் பொதுவான அபிப்பிராயம் அவ்வளவு ஆரோக்கியமாக இருக்காது. ஆனால் உண்மை அவ்வாறு அல்ல. நல்ல பசுமையான மாவட்டம். ஏராளமான வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்யும் மாவட்டம். அப்புறம் பெரிய பெரிய சிமெண்ட் ஃபேக்டரிகள் சூழ்ந்த மாவட்டம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். சரி போகட்டும் விடுங்க, எங்க மாவட்டத்தின் தொன்மையான சிறப்புகள் என்னவென்று எங்க மாவட்டத்து மக்களுக்கே முக்காவாசி பேருக்கு தெரியாது. எனக்கே இந்த நூல் படித்த பிறகு தான் பல விஷயங்கள் தெளிவாச்சு.

     குறிச்சி என்று முடியும் ஊர்கள் குறிஞ்சி நிலத்தை குறிப்பவை என்றும் குறிஞ்சியின் வலித்தல் விகாரமே குறிச்சி என்கிறார் ஆசிரியர். அப்படியே ஒரு லிஸ்ட்டே போடுகிறார் பாருங்கள், அட,அட!! இவ்வளவு குறிஞ்சி நிலப் பகுதிகள் நம்ம ஊருல இருந்துச்சா என்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தேன். ஆமாம், நான் வேலை பார்த்த கீழக்காவட்டாங்குறிச்சி உள்ளிட்ட விழுப்பணங்குறிச்சி, அரண்மனைக்குறிச்சி, முனியன்குறிச்சி, காடுவெட்டாங்குறிச்சி,இடையக்குறிச்சி, துளாரங்குறிச்சி என்று நீளும் பட்டியல் மிகப் பெரியது.

முல்லை நிலப் பகுதி என்பது காடும் காடு சார்ந்த இடமும் அல்லவா?!. காடு எனவும் பட்டி எனவும் முடியும் ஊர்கள் யாவும் இந்த முல்லை நில வகைப்பாட்டில் அடங்கும். இந்த லிஸ்ட்லயும் ஏராளமான ஊர்கள் எங்கள் மாவட்டத்தில் உண்டு. அதே போல முல்லை நிலத்துடன் தொடர்புடைய சொல் தான் “பட்டி“(கேரளா வில் கூறும் பட்டி அல்ல) ஆமாம், ஆடு மாடுகளை அடைக்கும் இடம். அப்போ பட்டி எனப்படுபவையும் இந்த முல்லை நில வகைப்பாட்டில் வந்து விடும். எருதுக்காரன் பட்டி, மைக்கேல்பட்டி, வடக்குப் பட்டி என்று பல ஊர்கள் இந்த வகையிலும் அடங்கும். இதேபோல குளம், குழி, பள்ளம் என்பன தண்ணீர் தேங்கும் இடங்கள் அல்லவா. அந்த விகுதியுடனும் ஊர்கள் உண்டு. கரடிகுளம், புளியங்குழி, ஆலம்பள்ளம் என்று வகைக்கு பத்து ஊர்கள் இங்கே உண்டு. அப்புறம் மேட்டுப் பாங்கான நிலங்கள் மேடு என்று அழைக்கப் படும் அல்லவா. செங்கமேடு, கரைமேடு தழுதாழை மேடு(இது நான் வேலை பார்த்த உட்கோட்டை அருகே உள்ளது) என்று பல மேடுகளும் உண்டு.

மக்கள் சேர்ந்து வாழும் இடம் “சேரி“ ஆகும். (அப்போ “அது“ இல்லையா? என்று நீங்கள் விழிப்பது போல நானும் விழித்தேன்.) பாருங்க “பார்ப்பனச் சேரி“ என்று கூட இங்கே ஊர் உண்டு. இப்போது இந்தப் பெயர் பார்ப்பதற்கு “முரண்தொடை“ போலத் தோன்றுகிறது தானே?!

ஊர்பெயர்களுக்குப் பின்னே இவ்வளவு பெரிய ஆராய்ச்சி உள்ளதா என்று ஆசிரியர் என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டார் பாருங்கள்!!

குன்னம் பகுதியில் (பெரம்பலூர் மாவட்டம்) கிடைத்த உருண்டையான பெரிய பொருளை டைனோசர் முட்டை என்று நெட்டிசன்கள் கலாய்த்து டிரெண்டிங் பண்ணியதை மறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் உள்ளபடியே எங்கள் மாவட்டம் ”நிலவியலாளர்களின் மெக்கா” என்று அழைக்கப் படுகிறது தெரியுமா?

ஆமாம், ஃபாசில் எனப்படும் கற்படியுருவங்கள் வழியே கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்கள் இங்கே புதைந்து கிடக்கின்றன. 75 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் கூட காட்சி படுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. மேலும் இந்த மாதிரி புதை படிமங்களை காட்சிப்படுத்தியிருக்கும் ஒரு அருங்காட்சியகம் கூட இங்கே உண்டு.

அரியலூருக்கு ரயில் எந்த ஆண்டு வந்தது தெரியுமா? எனக்கும் இந்தப் புத்தகத்தின் வாயிலாகத்தான் தெரிய வந்தது. திருச்சி – விழுப்புரம் ரயில் பாதை 1929 ம் ஆண்டில் திறக்கப் பட்டது. அப்போதுதான் வழியில் இருக்கும் ஊரான அரியலூருக்கும் ரயில் நிலையம் வந்துள்ளது. தற்போது இது சென்னை – மதுரை பாதையில் முக்கிய நிறுத்தமாக உள்ளது.

அரியலூர் பெயர்க்காரணம். சங்க காலத்தில் மழநாட்டுப் பகுதியாக அறியப்பட்ட பகுதி இதுவாகும். மழவர் சேர மரபினர் ஆவர். அரிசில் கிழார் சேர மரபினரையே பாடி இருப்பதால் அரிசிலூர் என்று இருந்த பெயரே அரியலூர் என்று வழங்கி வரலாம் என்பது நூலாசிரியரின் வாதம் ஆகும். இதற்கு மற்றொரு வாதமும் உண்டு. அரி + இல் + ஊர் அதாகப்பட்டது அரியாகிய திருமால் உறையும் ஊர் அரியலூர் என்று பேராசிரியர் நடன காசிநாதன் என்ற அறிஞர் கூறியிருக்கிறார்.

அப்படியே நூலாசிரியர் தனது ஊரான திருமழப்பாடிக்கும் இந்த மழநாட்டைச் சார்ந்த மழபாடி என்று பெயர்க்காரணம் கூறியுள்ளார்.

கி.பி 907 முதல் கி.பி 953 வரை ஆட்சி புரிந்த பராந்தகன் மனைவியருள் ஒருத்தி பழுவேட்டரையன் மகள் ஆவாள். பழுவேட்டரையரின் ஊர் தான் பழுவூர். (அதாவது கீழப்பழூர் மேலப் பழூர் இரண்டும் இந்த மாவட்டத்தில் உண்டு) அது போல கண்டராதித்தன் பெயரில் கண்டிராதீர்த்தம் என்கிற ஊரும் இங்கே உள்ளது.

அப்புறம் நம்ம ராஜராஜச்சோழன் காலம் கி.பி.985 முதல் 1014 வரை. இதில் 1012ல் ராஜேந்திரச் சோழனுக்கு இளவரசன் பட்டம் கட்டி கங்கை கொண்டசோழபுரத்தை தலைமையாகக் கொண்டு ஆட்சி நடத்த வைத்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் பெரிய வணிக நகரமாக அந்த காலத்தில் இருந்த பகுதி தான் தற்போது உள்ள செட்டித் திருக்கோணம் மற்றும் பெரியத் திருக்கோணம் (எங்க அம்மாவின் ஊர்) என்கிறார் ஆசிரியர். மருதையாற்றங்கரையில் இருந்த மதுராந்தகபுரம் என்கிற ஊர் தான் இவை என்று செட்டித்திருக்கோணம் கோயிலில் இருக்கும் கல்வெட்டை ஆதாரமாகக்காட்டி கூறுகிறார்.

சோழ அரசர்களின் வரலாற்றை கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் அலசுகிறார். அப்படியே எங்க ஊரான சுத்தமல்லி பற்றியும் உள்ளது.

“சுங்கம் தவிர்த்த சோழனை கொஞ்சம் கர்வம் தவிர்க்கச் சொல்“ என்று கமல் வீர ஆவேசமாக தசாவதாரம் படத்தில் முழங்கியது குலோத்துங்கனைப் பார்த்து தான். அவனின் பல மனைவியருள் ஒருத்தியின் பெண்மக்களில் ஒருத்தி பெயர் ”சுத்தமல்லி” ஆழ்வாராம். இப்போ தெரியுதா எங்க ஊரின் வரலாறு?

அப்புறம் அரியலூரோடு சோழர்களின் தொடர்பை கூறிய ஆசிரியர் ராஜராஜனில் துவங்கி அதன் பின்னர் வந்தவர்கள் அனைவரும் (இறுதியாக இருந்த அரியலூர் மற்றும் உடையார்பாளையும் ஜமீன்கள் உட்பட) பார்ப்பன அடிமைகளாக இருந்ததை ஆதாரங்களோடு புலப்படுத்துகிறார்.

கி.பி.1177ல் குலோத்துங்கச் சோழ சதுர்வேதி மங்கலசபையார் ஏற்படுத்திய தீர்மான நகல் ஒன்றை ஆதாரத்தோடு நமக்கு பகிர்ந்துள்ளார் நூலாசிரியர். அந்த தீர்மானங்கள் வருமாறு

அந்தணர்கள் ஏர்பிடித்து நிலங்களை உழுதல் கூடாது

பணிமக்களாக இருந்தோர் வேள், அரசு போன்ற பட்டங்களை பெறுதல் கூடாது.

தொழிலாளர்களின் நன்மை தீமைக்கு பேரிகைகள் (அதாங்க மோளம்) கொட்டுதல் கூடாது.

அவர்கள் தங்களுக்கென்று அடிமைகளை வைத்துக் கொள்ளக் கூடாது.

சிறுவிளக்குகளும் பானைகளும் செய்து விற்கும் குயவர்கள் ஒரு மேலாடை அணிந்து கொள்ளலாம்.

அடுத்து இன்னொரு அநியாயத்தை கேளுங்கள்.

”கங்கை கொண்ட சோழன் ஆட்சியில் பார்ப்பனருக்குரிய ஊரில் பிறவகுப்பாரின் நிலங்கள் விற்கப்பட வேண்டும் என்ற உத்தரவு செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள வெளிச்சேரியிலிருந்து பிற வகுப்பினரின் நிலங்கள் அந்த ஊரில் உள்ள கோயிலுக்கு விற்கப்பட்ட செய்தியை கல்வெட்டு கூறுகிறது” என்கிறார் ஆசிரியர்.

அடுத்து மற்றொரு விஷயம். சாத்திரங்களில் வல்ல பார்ப்பனர்கள் கூறும் நீதிப்படியே தீர்ப்பு கூறும் வழக்கமும் இருந்திருக்கிறது. கம்மாளர்கள் அரசனிடம் பார்ப்பனர்களைப் போல உரிமையை வலியுறுத்திக் கேட்டபோது கம்மாளர் பூணூல் அணிந்து கொள்ளலாம் என்கிற சலுகை வழங்கப் பட்டிருக்கிறது. உய்யக் கொண்டான் திருமலைக் கல்வெட்டு ஆதாரம்.

1330 முதல் 1378 வரை மகமதியர்கள் ஆட்சி நடைபெற்றுள்ளது. அதன் அடையாளமாக அரியலூர் மாவட்டத்தில் அலிநகரம் (இப்போ அல்லிநகரம்), உசேன் நகரம் (உசனாவரம்) அமீனாபாத், கயர்லாபாத், உசேனாபாத் என்றெல்லாம் ஊர்ப் பெயர்களில் ஆதாரங்கள் தேங்கியிருக்கின்றன.

அரியலூரையும் உடையார்பாளையத்தையும் சற்றேரக்குறைய 500 ஆண்டுகாலம் முறையே மழவராயர் மற்றும் உடையார் ஆட்சி செய்துள்ளனர். அதாவது விஜயநகர அரசர்கள், தில்லி சுல்தான்கள், நவாபுகள்,நாயக்கர்கள் இறுதியாக கிழக்கிந்தியக் கம்பெனி என எல்லோருக்கும் பாரபட்சம் இன்றி கப்பம் கட்டியபடி பொட்டாட்டம் ஆண்டு வந்துள்ளார்கள்.

அப்புறம் எங்கள் மாவட்டத்தில் மற்றொரு ஆன்மீக சுற்றுலாத்தளம் ஏலாக்குறிச்சி மாதாக் கோயில். வீரமாமுனிவர் கட்டிய பேராலயம். ரங்கப்ப மழவராயர் என்பவரே 1734 ல் வீரமாமுனிவருக்கு ஆலயம் கட்டி இறைத் தொண்டு புரிய 63 குழி நிலம் வழங்கியுள்ளார். சமயத்தைப் பரப்புவதற்கு தமிழைக் கற்ற அவர் தமிழின் இனிமை மற்றும் இலக்கியத் தொன்மையில் மனமயங்கி தேம்பாவணி படைத்துள்ளார். அப்புறம் தொன்னூல் விளக்கம் என்று “குட்டித் தொல்காப்பியம்“ படைத்துள்ளார். தமிழின் முதல் அகராதியான சதுரகராதியை படைத்தவர் தமிழரல்லாத ஒருவர்தான் என்று நாம் தமிழர் தம்பிகள் செவிகளில் விழும் படி அரியலூர் மாவட்டத்தில் இருந்து கூறிக்கொள்கிறேன்.

உடையார்பாளையம் நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம் ஆகும். “சின்னநல்லப்ப காலாட்கள் தோழ உடையார்“ என்பார் தனது அண்ணன் கொலையுண்ட காரணத்தால் இடம்பெயர்ந்து இங்கே வந்து தனது நகரை நிர்மானித்து அமர்ந்து ஆட்சி புரிந்துள்ளார். நான் உடையார்பாளையத்தில் வேலை பார்த்த போது வியந்த விஷயம், அங்கே ஒவ்வொரு தெருவும் சாதிப் பெயரால் வழங்கப் படும். இன்று வரையிலும் அந்த தெருவில் அந்த சாதியினரே இருக்கின்றார்கள். தங்கம் மற்றும் செம்பு நாணயம் அச்சிட்டுள்ளார்கள். இன்னமும் அந்த நாணய சாலை கோட்டையினுள் இருக்கிறதாம். 1801 க்கு பிறகு கிழக்கிந்தியக் கம்பெனியார் தலையீட்டால் நாணய அச்சடிப்பு நிறுத்தப் பட்டுள்ளது.

உடையார்பாளையம் உடையார்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள நூலில் இருந்து ஒரு வாக்கியம் மட்டும் சொல்கிறேன். “நல்லப்ப உடையாருக்கு எட்டு மனைவிகளும், ஐம்பத்திரண்டு தாசிகளும் முப்பது பிள்ளைகளும் இருந்தனர்“ (90“s kids க்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துகிறேன்)

ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுகாரர்களுக்கும் ஆதிக்கப் போட்டி நடந்த போது ஆங்கிலேயர் பிரெஞ்சுகாரர்கள் இருவருக்கும் கப்பம் செலுத்தி தங்கள் ஆட்சிக்கு பங்கம் வராமல் “டீல்“ செய்திருக்கிறார்கள் உடையார்பாளைய ஆட்சிக் காரர்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் இந்த ஜமீன்கள் மத்தியில் பார்ப்பனிய மேலாதிக்கம் கொடிகட்டி பறந்துள்ளது. உதாரணம் பாருங்கள்.

“கும்பகோணம் சங்கராச்சாரியார் மடத்திற்கு தேவமங்கலம் என்ற ஊரைச் சார்ந்த நாற்பது காணி நிலத்தைக் கொடை வழங்கினார்“

“வடமொழியும் வேதமும் கற்றுத்தர ஒரு பள்ளியை நிறுவினர்“

“கும்பகோணத்தில் வடமொழி வேதம் பயிலும் மாணவருக்கு ஆண்டுக்கு ஐம்பது உரூபா உதவித் தொகை வழங்கியுள்ளார்“

“திருச்சி தேசிய உயர்நிலைப்பள்ளிக்கு கட்டடம் கட்ட மூவாயிரத்து ஐநூறு நன்கொடை அளித்துள்ளார். (தேசியக் கல்லூரி குழுமம் இந்திராக காந்திக் கல்லூரி குழுமங்களின் முன்னோடி தான் தேசிய உயர்நிலைப் பள்ளி. முழுக்க முழுக்க பார்ப்பனியர்களின் கல்வி நிலையங்கள்)

இந்த மாவட்டங்களில் இதரப் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்களில் 1950களில் ஏராளமான ஆசிரியர்கள் இருந்ததற்கு ஒரு அரியவகை காரணத்தை ஆசிரியர் அழகாக புலப்படுத்தி உள்ளார். (ரொம்ப லென்த்தா போவதால் வேண்டாம்)

இறுதியில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மிகப் பெரும் ஆளுமைகள் குறித்த கட்டுரைகளை சேர்த்துள்ளார். அப்புறம் இங்கே நடந்த வங்கி கொள்ளை, ரயில் வெடிப்பு, மற்றும் வெள்ளத்தில் ரயில் கவிழ்ந்த சம்பவங்கள் என முக்கிய நிகழ்வுகளையும் பதிவு செய்யத் தவற வில்லை.

அரியலூர் என்றில்லை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதுபோல ஒரு ஆவணப் பதிவு போன்ற ஒரு நூல் எழுதப் பட வேண்டும்.

இந்த நூலின் ஒவ்வொரு எழுத்தும் ஆதாரங்களைக் கொண்டே நெசவு செய்யப் பட்டுள்ளது. எவ்வளவு கல்வெட்டுகள், இலக்கியங்கள், செப்பேடுகள், அரசு ஆவணங்கள், ஆளுமைகள் என நூலாசிரியர் திரட்டி எழுதி இருப்பது வியப்பைத் தருகிறது. குறைந்தபட்சம் அரியலூரைச் சார்ந்தவர்களாவது படிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.

பாவேந்தர் பதிப்பகம் என்கிற பெயரில் அவரே பதிப்பித்து இருப்பதால் நூல் நூலாசிரியரிடமே கிடைக்கும்.

 

 

 

Tuesday, November 24, 2020

சின்னத்திரையில் வெள்ளித் திரை- நினைவுகள்

 

சின்னத்திரையில் வெள்ளித் திரை- நினைவுகள்



     அரசு உயர்நிலைப்பள்ளி, ஜெ.சுத்தமல்லி ஆறாம் வகுப்பு வகுப்பறை. அங்கே மூன்று மாணவர்கள். வாங்க, பக்கத்தில் போய் பார்க்கலாம்

“டேய், கேசவன் வந்துட்டான்டா, போய் கேளுடா!!”

“ஏய் இப்போவேவா? சார் பாத்தாரு கொன்னுடுவாரு!”

கேசவனின் தாத்தா, சனிக்கிழமை இறந்துவிட்டார். திங்கள் கிழமையான இன்று அவன் பள்ளிக்கு வந்து விட்டான். அவனிடம் இந்தப் பொடியன்கள் என்னத்த கேக்கப் போறானுங்க?

இதோ இண்டெர்வெல் பெல் அடிச்சாச்சு.

“டேய் கேசவா, நில்லுடா”

“என்னடா?“

“உங்க தாத்தா செத்துட்டாரு தானே?”

“ஆமாம்“

“அவரு கருமாதி என்னைக்கு?”

“அடுத்த ஞாயித்துக் கிழமை”

“அப்படின்னா, சனிக்கிழமை நைட்டு கல்லு படைப்பாங்க இல்ல, அப்போ வீடியோ போடுவீங்களா?” என்று தயங்கி தயங்கி கேட்டே விட்டான்.

“ஏய், எங்கப்பா கிட்ட கண்டீசனா சொல்லிட்டேன், - நீங்க கருமாதி படைங்க படைக்காட்டி போங்க, முறுக்கு அதிரசம் செய்ங்க செய்யாட்டி போங்க ஆனா எனக்கு கல்லுசாத்தி அன்னைக்கு நைட்டு நாலு புதுப்படம் போட்டே ஆகணும் ஆமா!!” என்று முகமெல்லாம் மலர பதில் சொன்னான். அந்த முகத்தில் தாத்தா செத்த துக்கம் அரை விழுக்காடு கூட இல்லை.

“டேய், கை கொடுடா, சூப்பர்டா”

“எங்கப்பா எம்ஜிஆர் ரசிகரு, ஆனா, இந்த எம்ஜிஆர் சிவாஜி படம்லாம் போட்டு ஏமாத்தினான்னா பாரு தொலைச்சிபுடுவேன். நாலு படமும் புதுப்படமா இருக்கணும் னு சொல்லிட்டேன் டா“

யாரு செத்தா எனக்கென்ன? கல்லுசாத்தி அன்னைக்கு வீடியோ போடுவாங்களா போடமாட்டாங்களா இது தான் இறந்த வீட்டு துக்கத்தைக் காட்டிலும் இளம் பிராய சிறுசுகளின் நெஞ்சைப் பிழியும் கவலை.

எல்லோருக்கும் வீடியோ போடுவாங்களோ போடமாட்டாங்களோன்னு கவலைன்னா எனக்கு மட்டும் வீடியோ போட்டாக்கூட எங்க வீட்டுல பர்மிசன் குடுப்பாங்களா குடுக்கமாட்டாங்களா என்கிற கவலை எனக்கு.

     அந்த நாட்களில் ஊரில் எங்கே மரணம் நிகழ்ந்தாலும் எங்களுக்குள் எழும் கேள்விகள் இரண்டே இரண்டு தான். ஒன்று வயதான ஆளா? மற்றொன்று இழவு வீட்டுக் காரங்க வீடியோ போடும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் தானா? என்பது தான்.

    

     எங்கள் ஊரில் அப்போது சாதிய வேறுபாடுகள் அதிகம் இருந்தது. ஆனாலும் கூட ஊர் மக்களை நாங்கள் இரண்டே பிரிவுகளில் அழகாக பிரித்து வைத்திருந்தோம். ஆமாம், ஒன்று கருமாதிக்கு வீடியோ போடும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் மற்றொன்று கருமாதிக்கு வீடியோ போடும் அளவுக்கு வசதி இல்லாதவர்கள்.

“டேய், அந்த தெருவுல ஒரு தாத்தா செத்துப் போய்ட்டாருடா. அவங்க வீடு அங்க…”

     “அட்ரஸ் எல்லாம் சொல்லாத, வீடியோ போடுவாங்களா போட மாட்டாங்களா?” என்று முதல்வன் பட ரகுவரன் டெம்ப்ளேட்டை எண்பதுகளின் இறுதியிலேயே தொடங்கியவர்கள் நாங்களாக்கும்

     சில சமயங்களில் பெரிய இடைவெளி விழுந்து விடும். (எதற்கா? அதற்குத்தான்!!) அப்போதெல்லாம் சித்திரகுப்தன் கணக்காக நாங்கள் ஒரு சென்செஸ் எடுக்க ஆரம்பித்து விடுவோம். இந்த தாத்தா எப்போ மண்டைய போடுவாரு அந்த பாட்டி எப்போ பரலோகம் போகும் என்று நோட்டமிட்டபடி பள்ளிக்குச் செல்வோம்.

     ஒரு முறை இது குறித்து ரொம்ப சின்சியராக எங்க சித்தப்பா வீட்டில் சொல்லிக் கொண்டு இருந்திருக்கிறேன். அதுவும் கைவசம் எத்தனை தாத்தா பாட்டி வீடியோ போடும் வீடுகளில் இறக்கும் தருவாயில் இருக்கிறார்கள் என்று ஒப்பித்து இருக்கிறேன். நான் கல்யாணமெல்லாம் பண்ணிய பிறகும் கூட அந்தக் கதையைச் சொல்லி என்னை ஓட்டு ஓட்டென்று ஓட்டுவார்கள்.

     சில சமயங்களில் கெடுவாய்ப்பாக நல்ல வசதி படைத்தவர்கள் வீடியோ போடாமல் விட்டுவிடுவார்கள். அந்த வாரம் முழுவதும் அந்த வீட்டுக் காரங்களோட கஞ்சத்தனத்தை சொல்லி சொல்லி மாய்ந்து போவோம்.

     அதுபோல, சில பேர் வீடுகளில் நான்கு படங்களுமே சிவாஜி எம்ஜிஆர் என்று போட்டு கடுப்பேத்துவார்கள். ஆனாலும் விடுவோமா? எட்டாம் வகுப்புக்கு போவதற்குள்ளாகவே “வசந்தமாளிகை“ படத்தை எட்டு தடவை பாத்த குரூப் நாங்க.

வசந்த மாளிகை, அடிமைப் பெண் மற்றும் ஆயிரத்தில் ஒருவனுக்கு அடுத்ததாக எங்க ஊரில் அதிக முறை போடப்பட்ட படம் ஒன்று உண்டென்றால் அது “கரகாட்டக்காரன்“ படம் தான்.

     நாங்கள் எட்டாம் வகுப்பு படித்த போது ராமராஜன் ரசிகர் மன்றம் என்று தொடங்கி ராமராஜனுக்கு கடிதம் எழுதி போட்டோ அனுப்பச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்து அட்ரஸ் தேடிக்கொண்டு அலைவார்கள்.

     ஆசை ஆசையாக வீடியோ பார்க்க கிளம்பி முதல் வரிசையில் பாய் துண்டு சகிதம் உட்கார்ந்து இடம் பிடிப்போர் இரண்டாம் படத்திற்கெல்லாம் கனவுலகில் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். மூன்றாம் படம் போடும் போது முக்கால் வாசி கூட்டம் தூங்கி இருக்கும். விடியற்காலை மூணு மணியில் இருந்து நான்கு மணி வாக்கில் நான்காவது படத்தை போடுவார்கள். அப்போது முதல் படத்திற்கு தூங்கிய கூட்டம் மெல்ல விழிப்படைவார்கள். மூன்று படத்தையும் கில்லி பிரகாஷ்ராஜ் போல கொட்ட கொட்ட முழித்து பார்த்தவர்கள் நான்காவது படத்திற்கு தலை சாய்ப்பார்கள். டெக்கு ஆபரேட்டர்கள் படத்தை போட்டு விட்டு தூங்க ஆரம்பித்து விடுவார்கள். ஆக, நான்கு படங்களையும் ஒரு வினாடி பாக்கி இல்லாமல் பார்த்து முடிக்கும் சாதனையாளர்கள் அவ்வளவு பெரிய கும்பலில் ஒன்று அல்லது இரண்டு பேர் தான் தேறுவார்கள். அதில் நான் அந்த ஒன்றாவது ஆள் என்பதை தன்னடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

     சில வசதி படைத்தவர்கள் வீடியோ போடும் போது இரண்டு டிவி பெட்டிகளை கொண்டு வந்து இரண்டு எதிரெதிர் பக்கங்களில் வைத்து ஆண்கள் பிரிவு பெண்கள் பிரிவு என்று வைத்து விடுவார்கள். அப்போதெல்லாம் சிறுவர்களான எங்களுக்கு குதூகலமாக இருக்கும். “ஏய், அவங்க வீட்டில் ரெண்டு வீடியோ போடுறாங்கடாவ்” என்போம். இதுமாதிரியான வாய்ப்புகளுக்காக காத்துக் கிடந்த இளையோர்கள் இந்த ரெண்டு வீடியோ வீடுகளை எவ்வளவு தூரம் சபிப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளும் வயது எங்களுக்கு இல்லை அப்போது.

     பிறகு ஒரு முறை எங்கள் ஊருக்கு ரெக்கார்டு டான்ஸ் ஆடும் குழுவினர் கேம்ப் போட்டு நிகழ்ச்சி நடத்தினார்கள். சுற்றிலும் துணி போட்டு மறைத்து உள்ளே டிக்கெட் வாங்கியவர்கள் மட்டும் அமர்ந்து பார்க்க வழிவகை செய்வார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வசூல் கிடைக்க வில்லை. அப்புறம் எடுத்தார்கள் அந்த பிரம்மாஸ்திரத்தை, ஆமாம், டி.வி டெக்கு வாடகைக்கு எடுத்து வந்து நல்ல நல்ல படங்களாக போட்டார்கள். எனக்கு வீட்டில் சும்மாவே அனுமதி கிடைக்காது, இதுல டிக்கெட்டுக்கு காசு கொடுத்து திலகமிட்டு அனுப்புவார்களா? ஆனாலும் எங்க அப்பாயி இடம் காசு வாங்கிக் கொண்டு ஒரு நாள் போனேன். இன்னமும் ஞாபகம் உள்ளது அன்றைக்கு “இது நம்ம ஆளு“ படம் போட்டார்கள். (காசு கொடுத்து இல்ல பாக்குறேன், அதான் ஆஆஆழமா மனசுல பதிய வச்சிக்கிட்டேன்.) அந்த வயதில் அந்த படத்தின் தலைப்பை பாக்கியராஜ் சோபனாவை காண்பித்து சொல்வதாகவே புரிந்து கொண்டேன். (அப்போது எனது வயது என்ன என்பதை யூகித்து இருப்பீர்கள்!!)

     இந்த விஷயத்தை சொல்லவில்லை என்றால் இந்த வீடியோ கதை நிறைவாக இருக்காது. எங்கள் ஊரில் ஒரு மாமா சென்னையில் இருந்து வருவார். நாங்க சோனி மாமா என்று அன்போடு அழைப்போம். எங்கள் அன்புக்கு காரணம், சென்னையில் இருந்து சம்பாதித்துக் கொண்டு வரும் காசை வீட்டிற்கு தருவாரோ இல்லையோ, வீடியோ வாடகைக்கு தந்து விடுவார். ஆமாம், அவர் சென்னையில் இருந்து வந்தால் எங்களுக்கு குதூகலம் தான். அவரிடம் என்ன ஒரு சிக்கல் என்றால் நான்கு படங்களுமே எம்.ஜி.ஆர் படங்களாகத்தான் போடுவேன் என்று ஒத்தைக் காலில் நிற்பார். அப்புறம் வீடியோ வாடகைக்கு எடுக்க போகிற பசங்க ஏதேனும் ஒரு படத்தை கலப்படமாக கொண்டு வந்து விடுவார்கள். அந்த ஒரு படமும் கூட ராமராஜன் படமாகத்தான் இருக்கும். கல்லூரி நாட்களில் ராமராஜனை டவுசர் என்று ஓட்டும் போதெல்லாம் உள்ளுக்குள்ளே ரகசியமாக வருத்தப் பட்டுக் கொள்வேன். ஆமாம், ரசிகர் என்று சொன்னால் போச்சு அப்புறம் என்னை ரவுண்டு கட்டி ஓட்டுவார்களே!!

         மெல்ல 1990ம் ஆணடில் சில வீடுகளில் கறுப்பு வெள்ளை சாலிடர் தொலைக்காட்சிப் பெட்டியும் சில வசதி படைத்தோர் வீடுகளில் ஒனிடா அல்லது பிபிஎல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும்  நுழைந்தது. எங்கள் பள்ளியில் கூட ஒரு கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அதில் விளையாட்டு ஆசிரியரின் ஆசீர்வாதத்தோடு கிரிக்கெட் மேட்ச் பார்க்கத் துவங்கினோம்.

     எனது நண்பன் மணிகண்டனின் தந்தை ஆசிரியர். அவர்கள் வீட்டில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி உண்டு. ஞாயிற்றுக் கிழமைகளில் தூர்தர்ஷன் விளம்பரங்களுக்கு மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக படம் போடுவார்கள். அப்போது வாரம் தவறாமல் அவர்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியை வெளியே எடுத்து வைத்து அனைவரும் காணச் செய்வார். நண்பன் என்கிற உரிமையில் நானும் ஓரிரு முறை சென்று பார்த்துள்ளேன். (எங்களுக்கு டியுசன் கிளாஸ் அங்கேதான்)

     1992 க்கு பிறகு லால்குடி விடுதி வாசம். மணக்கால் பஞ்சாயத்து தொலைக்காட்சி முன்னால் ஒட்டுமொத்த விடுதியுமே ஞாயிறு மாலை வேளைகளில் அமர்ந்து விடுவோம். பனிரெண்டாம் வகுப்பு படித்த போது லால்குடி பூங்காவனம் மற்றும் பூவாளூர் காவேரி தியேட்டரில் அட்டென்டண்ஸ் வைத்து படம் தவறாமல் கையெழுத்து போட்டு பார்த்த காலகட்டம். ஆகையால் இந்த டிவி முன்னால் காவல் காக்கும் பழக்கம் விட்டது. கிரிக்கெட் மேட்ச் நாட்களில் மட்டுமே பார்ப்போம்.

     1994-97 தேசியக் கல்லூரி நாட்களுமே அவ்வண்ணமே கழிந்தது. சுப்பிரமணியபுரம் சபியா சங்கீத் என லோ பட்ஜட் தியேட்டர்களில் ஆரம்பித்து பாலக்கரை காவேரி என்று ஹை பட்ஜட் தியேட்டர் வரை திருச்சி மாநகரிலே ஒரு தியேட்டர் பாக்கி வைக்காமல் படம் பார்த்திருக்கிறோம்.

     நான் முதுகலை கணிதம் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் தான் எங்க அப்பாயி இறந்து போனார்கள். ஆம், அவர்களின் கல்லு சாத்தி அன்றைக்கு எங்க வீட்டிலும் வீடியோ போட்டார்கள். ஆனால், நான் என்ன படங்கள் போட்டார்கள் என்று கூட எட்டிப் பார்க்கவில்லை.

    பிறகு கலைஞர் வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சி காலத்திற்கு பிறகு இந்த சின்னத்திரையில் படம் பார்க்க அங்கே இங்கே என்று சிறார்கள் ஓடுவது வழக்கொழிந்து போனது. அத்தோடல்லாமல் கேபிள் டிவியும் கணக்கு வழக்கின்றி படங்களாக பேட்டுத்தள்ள ஆரம்பித்த பின்பு சுத்தமாக டி.வி டெக் வாடகைக்கு எடுத்து பார்க்கும் விஷயம் பி.சி.ஓ பூத்துகள் போல வழக்கொழிந்து போய்விட்டது

     அநேகமாக நாற்பது வயதைக் கடந்த அனைவருக்குள்ளும் இந்த டி.வி. டெக்கு கதைகள் நினைவுச் சாளரங்களில் ஏராளமாக இருக்கும். அவர்கள் பின்னூட்டத்தில் பகிர்ந்தால் பழங்கால நினைவுகளை சுகமாக அசை போட்ட திருப்தி எல்லோருக்கும் கிட்டும்.

Sunday, November 15, 2020

புத்தகம் – நகர்துஞ்சும் நல்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த எட்டு தஸ்தாவேஜ்கள்

 

புத்தகம் – நகர்துஞ்சும் நல்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த எட்டு தஸ்தாவேஜ்கள்



வகைமை – சிறுகதைத் தொகுப்பு (ஆக்சுவலா ஒவ்வொன்றும் நெடுங்கதை அல்லது குறுநாவல்)

ஆசிரியர் – பாவெல் சக்தி

பாவெல் சக்தி அவர்கள் ஒரு இளம் வழக்கறிஞர். அவரது பெயரின் முன்னொட்டு “பாவெல்“ மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலின் நாயகன் பெயர். இதில் இருந்தே அவரைப் பற்றி ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடியும்.

பின் நவீனத்துவமும் அடையாள அரசியலும் மற்றும் என்ஜிஓ க்கள் ஓர் ஏகாதிபத்திய அபாயம் என்ற இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட நிலையில் இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.

ஆழ்ந்த செவ்வியல் தன்மையுடனான ஆனால் வெகு சுவாரசியமான நடையில் எழுதப்பட்ட எட்டு நெடுங்கதைகளையும் சட்டென்று நுணிப்புல் மேய்வது போல படித்துவிட்டு வைத்துவிட இயலாது. ஒரு நல்ல இசையை கண்களை மூடிக்கொண்டு ஒரு தவம் போல கேட்டு மகிழ்வோம் அல்லவா அது போல ஒவ்வொரு கதையையும் ஆழ்ந்து வாசிக்க வேண்டி இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு கதை என்று அவ்வப்போது வாசித்து இன்று தான் முடித்தேன்.

சிறுகதையின் தலைப்பு நிச்சயமாக தனித்துவம் வாய்ந்த ஒன்றுதான். இவ்வளவு நீளமான கோனார் நோட்ஸ் உதவியுடன் மட்டுமே புரிந்து கொள்ள இயலும் குறுந்தொகைப் பாடல் வரி போன்ற ஒரு தலைப்பு. நானே ஒரு நான்கு கதைகள் படித்த பின்புதான் இந்த தலைப்பு எனக்கு மனப்பாடம் ஆனது. ஆனாலும் கூட தட்டச்சு செய்த பின்பு புத்தகத்தை எடுத்து தலைப்பை சரிபார்த்துக் கொண்டேன்.

“செங்கோட்டு யானைகள்” – ரத்தம் தோய்ந்த தந்தங்களைக் கொண்ட போர்க்கள யானைகள் – பகலில் போர்க்களமாக காட்சி தரும் கோர்ட் கட்டிடங்கள்

நகர்துஞ்சும் நல்யாமத்தில் – ஊர் உறங்கும் இரவு வேளையில்

இரவு வேளையில் அந்தக் கோர்ட் கட்டிடங்கள் அங்கே பகலில் நடந்த வழக்குகள் பற்றி சிந்திப்பது போல அர்த்தம் தரவல்ல ஒரு அழகிய கற்பனையைக் கொண்ட தலைப்பு.

புத்தகத்தில் எட்டு நெடுங்கதைகளும் அங்கே கோர்ட்டில் நடந்தேறிய வழக்குகளைப் பற்றியது தான்.

முதலாவது கதை பட்டாளத்தார் வழக்கு பற்றியது. என்ன வழக்கு? இருக்கும் வீட்டைப் பிடிங்கிக் கொண்டு பட்டாளத்தாரையும் அவரது மனைவியையும் துரத்தியடித்து விடுகிறான் மகன். மகனுடன் நல்லுறவில் இருந்த வேளையில் அவனுக்கு சொத்தை எழுதி வைத்திருக்கிறார் பட்டாளத்தார். மனைவிக்கு கேன்சர் வைத்தியம் பார்க்க சொத்து பத்திரத்தை வைத்து கடன் வாங்கி செலவழித்து விடுகிறார். நோயுற்ற மனைவியோடு வீடு திரும்பும் வேளையில் பிள்ளைக்கு விஷயம் தெரிந்து வீட்டை விட்டு துரத்தியடித்து விடுகிறான். அவன் மீது வழக்கு தொடுக்கிறார் பட்டாளத்தார். சிவில் வழக்குகள் சட்டென்று முடியக்கூடியதா என்ன?

கதை பட்டாளத்தார் இறந்து கிடக்கும் நிலையில் துவங்கி பின்னோக்கி செல்கிறது. கதைகளில் பல இடங்களில் கண்களில் களுக் கென்று நீர்க் கோர்த்துக் கொண்டது. பிள்ளைகளை நம்பலாம் ஆனால் பிற்கால பாதுகாப்புக்கு கைவசம் ஏதாவது வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பாதுகாப்பு உணர்வு படிக்கும் அனைவருக்கும் ஏற்படும் என்பது திண்ணம்.

இரண்டாவது கதை “விஜயன் பகை பாவம் அச்சம் பழியென நான்கும்” என்கிற கதை.

நண்பனின் மனைவியை ஆசைநாயகி ஆக்கிக் கொள்ள  நண்பனை போட்டுத்தள்ளிவிடும் ஒருத்தனின் வழக்கு. கணவன் கொலையுண்ட பின்பு அவளும் தற்கொலை செய்து கொள்கிறாள்.

இந்த நெடுங்கதை நண்பனை கொலை செய்யும் முன் அதன் பின் ஒருவனின் எண்ண ஓட்டத்தையும் உளவியலையும் அழகாக எழுத்தில் வார்த்துள்ளார் பாவெல்.

“யாம்பில மக்கா இப்படி செஞ்ச? ஒனக்கும் எம் பொண்டாட்டிக்கும் தொடர்பு இருக்குன்னு தெரிஞ்சும் ஒனகிட்ட எதாவது கேட்ருக்கனாடே? இப்ப கூட அவள நீ வச்சிக்கோ. எங்கேயாவது போய்றன்….“ என்று அவன் கெஞ்சும் அந்த இடம் எனது இரவுத் தூக்கத்தை காவு வாங்கியது.

அமீரின் நாட்குறிப்பு கொலைகளத்து மாலை  கதை ஒரு ஆக்சிடெண்ட் கேஸ் ல் இழப்பீடு பெற்றுத் தர வேண்டிய வழக்கில் தொடங்கும் கதை அந்த ஆக்சிடெண்ட் ஆன பையனின் சூழல் அவனது காதலி அவனது குடும்ப நிலை என பல கோணங்களில் அலசுகிறது. நாம் நாள் தோறும் சாலைகளில் விபத்துகளை பார்த்து இதுவும் இன்னொன்று தானே என்று கடந்து போய்விடுகிறோம். இந்தக் கதையை வாசித்த பின்பு நமது மனம் அவர்களுக்கா இனியேனும் கசிந்து உருகும். இதில் கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் ஆகியவை இலக்கியத் தரத்துடன் பதிவு செய்யப் பட்டுள்ளது. “இந்தப் பாதங்கள் மண்மீது நடக்க வேண்டியவை அல்ல மலர்களின் மீது” ஆமாம், கதையில் வரும் காதலில் இதயம் படத்தின் தாக்கம் அதிகம் உள்ளது.

”பொச்சுக்கிளி -இன்முகம் காணும் அளவு” இந்தக் கதை ஒரு கூட்டுக்கதை எனலாம். கோபல்ல கிராமம் நாவலில் கி.ரா அவர்கள் அந்த கிராமத்தில் உள்ள நபர்களில் விசித்திரமான பட்டப் பெயர்களின் பெயர்க்காரணங்களைக் கூற இரண்டு அத்தியாயங்களை ஒதுக்கி இருப்பார். அது போல அடை மொழியோடு வலம் வரும் பெட்டி கேஸ் ஆட்களின் அடைமொழிகளை ஆர்வம் தாங்காத நீதிபதிக்கு ஒரு கான்ஸ்டபிள் சொல்வது போல அமைந்திருக்கும். முக்கியமா அந்த “சாம்பார் வாளி“ கதையை படித்த பின்பு தனியாக ஒரு ஐந்து நிமிடம் சிரித்தேன்.

“மூன்று பெண்கள்- செய்தக்க செய்யாமை யானும் கெடும்” மாமியார், மருமகள் மற்றும் பேத்தி தான் அந்த மூன்று பெண்கள். அவர்களின் பார்வையில் ஒரு டைவர்ஸ் கேஸ் தற்கொலை கேஸாக மாறிவிடுமோ என்று அஞ்சும் வேளையில் அதிர்ச்சிகரமான திருப்பமாக அது கோர்ட்ரூம் கொலை கேஸாக மாறிவிடுகிறது.

“நிழல் தன்னை அடி விட்டு நீங்காது” இந்த வழக்கு சாலையில் வழி மறிக்கும் போலீஸ் நிறுத்தாமல் போன வண்டியை வெறிகொண்டு உதைக்கப் போய் வண்டியில் அமர்ந்திருந்த சிறுகுழந்தை விபத்துக்குள்ளாகிறது. அதற்காக பழிவாங்கும் தந்தை கொலை செய்வதற்கு பதிலாக ஊனத்தை ஏற்படுத்தவல்ல ஒரு விபத்தை திட்டமிட்டு அரங்கேற்றுவதாக கூறப்பட்டுள்ளது. விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஒருவனின் மனவோட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கதையில் குழந்தை கேட்கும் கேள்விகள் சுவாரசியம் கலந்த அழகு.

“சோபியா-மறத்தலை விடக் கொடிது வேறில்லை“

திருமணம் செய்துகொண்ட மனைவியை பலாத்காரம் செய்வதால் வந்த டைவர்ஸ் கேஸ் ஒன்றைப் பேசி முடித்து அதன் பிறகு ஒரு பிரபலமான மூன்று கொலை வழக்கில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான வேலைக்காரப் பெண்ணின் பரிதாப நிலை பற்றி பேசுகிறது. வெகுஜன ஈர்ப்புக்கு உள்ளான நிர்பயா வழக்கையும் அரசால் அலட்சியமாக கையாளப்பட்ட ஆசிஃபா வழக்கையும் “இந்த மாதிரி கேஸ பெரிசு படுத்துவதால் நாட்டோட டூரிஸம் பாதிக்கும்“ என்று பேசிய அருண்ஜேட்லி என உருக்கமான பல விஷயங்களை பேசி நமது மனதை கனமாக்கும் கதை

“நான்கு பேர் இரண்டு சம்பவங்கள்“ இந்தக் கதை சற்று நையாண்டித் தொனியில் எழுதப்பட்டுள்ளது. “போர் வரட்டும்“ என ரஜினி போல தள்ளாத வயது வரை “புரட்சி வரட்டும்“ எனக் காத்திருக்கும் கம்யுனிஸ்ட்டுகளை நையாண்டி செய்துள்ளார். பணமதிப்பிழப்பால் புஸ்வானம் ஆகிப்போன ஒரு கடத்தல் வழக்கு பற்றிய நகைச்சுவை நடையிலான கதை இது.

“நாரோயில்“ காரவங்களோட முகநூல் சகவாசம் மற்றும் பாபநாசம் படம் எல்லாம் பார்த்ததால் பாவெல் உடைய “நாரோயில்“ மணம் கமழும் அழகான உரையாடல்களை ரசிக்க முடிந்தது. அதற்காக டிஷ்னரியெல்லாம் வேண்டியதில்லை. போகப் போக உங்களுக்கே புரிந்து விடும்.

சற்றேரக் குறைய 400 பக்கங்களை எட்டும் புத்தகம் ஆனாலும் கூட சுவாரசியமாக ஆரம்பித்து முடிந்தது

வாய்ப்புள்ள நண்பர்கள் வாங்கி வாசியுங்கள். எதிர் வெளியீடாக வந்துள்ளது. கிண்டிலில் இல்லை என்பதையும் கூறிவிடுகிறேன்.

 

Tuesday, November 10, 2020

டாக்டர் ஆகணும்னா நீ படி மேன் ஓய் மீ?!!

 *டாக்டராகணும்னா நீ படி மேன் ஒய் மீ?!!*



இந்த நீட் எக்சாமை ஒரு ஸ்டாண்டர்ட் மாடல் என எண்ணிக் கொண்டு நாம் மேல்நிலை மாணவர்களுக்கு சிலபஸ் உள்ளிட்ட பல பஸ்ஸையும் மாற்றித் தொலைத்து விட்டோம். நீட் ஜேஈஈ எல்லா எக்சாமுக்கும் உள்ள சிலபஸ்க்கு ஏற்ற வகையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து இந்தியாவிலேயே ஏன் உலக அளவிலேயே ”வெயிட்” டான சிலபஸ் எங்களது தான் என்று இறுமாப்போடு மார்தட்டிக் கொள்ளலாம். சிலபஸ் மாறி இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டிலேயும் அடியெடுத்து வைத்துவிட்டோம். இந்த புதிய சிலபஸ் ஏற்படுத்திய விளைவுகள் என்ன என்று சற்று அலசிப் பார்த்து காயப் போடுவோமா? 


1. சிலபஸ் மாறிய பின்பு புத்தகங்களின் கனம் தாங்காமல் அறிவியல் பாடப் பிரிவுகள் காத்து வாங்குகின்றன.


2. 100 விழுக்காடு தேர்ச்சிக்காக நடத்துவதா அல்லது சிலபஸ் இல் உள்ள அனைத்து விஷயங்களையும் மாணவர்கள் மகிழ்வுடன் கற்றுக் கொள்ள வழிவகை செய்வதா என்கிற குழப்பம் முன்பெல்லாம் இருக்கும். ஆனால் இப்போது குழப்பத்திற்கெல்லாம் வேலையே இல்லை. ஏன்னா தற்போதைய கனமான சிலபஸ்ல இருக்கும் பாடங்களில் ஜீன் முதல் நவம்பர் வரையிலான ஐந்து மாதங்களில் ( என்னது ஆறு மாதமா? காலாண்டு பரிட்சை லீவு எல்லாத்தையும் எந்தக் கணக்கில் வைப்பதாம்?) பாதி கிணறு தாண்டினாலே சாதனை தான்.


3. நான் முன்பு முதுகலை ஆசிரியராக வேலை பார்த்த பள்ளியில் பழைய சிலபஸ் இருந்த போது அறிவியல் பிரிவில் 38 மாணவர்களும் கலைப் பிரிவில் 12 மாணவர்களும் இருந்தனர். புதிய பாடத்திட்டம் அறிமுகமான இரண்டாம் ஆண்டில் கலைப் பிரிவில் 38 மாணவர்களும் அறிவில் பிரிவில் 12 மாணவர்களும் படித்து வருகிறார்கள். அப்போ புதிய சிலபஸ் ஐ சந்தித்த முதலாம் ஆண்டு மாணவர்கள் கதி? அவர்களில் பாதிபேர் பதினோறாம் வகுப்பு முடித்தவுடனே (அதாவது வருடம் மட்டுமே) சுவரேறிக் குதித்து ஐடிஐ பாலிடெக்னிக் என்று பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிட்டனர்.


4. எத்தனை பேர் நீட் பாஸ் பண்ணினார்கள்? எங்கள் மாவட்டத்தில் இந்த ஆண்டு 12 பேர் பாஸ் பண்ணி இருக்கிறார்கள். ஆசிரியரால் நடத்தி முடிக்க இயலாத, மாணவர்களால் ஒரே வருடத்தில் தாங்களாகவே படித்து முடிக்க இயலாத கனம் சிலபஸ் அவர்களால் நன்கு படித்து வந்த மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதைத் தவிர வேறு எதையும் இந்த புதிய சிலபஸ் செய்ய வில்லை என்பது தான் பெரும்பாலான அரசுப் பள்ளி நடைமுறை நிதர்சனம்.


2001 ம் ஆண்டு நான் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்த போது இருந்த பனிரெண்டாம் வகுப்பு கணிதப் பாடப் புத்தகம் இன்னும் நினைவில் உள்ளது. ஒரு கட்டை புத்தகம் மற்றும் ஒரு மெலிதான புத்தகம் என இரண்டு பகுதிகள் இருக்கும். அதுவும் பதினைந்த செமீ உயரமே இருக்கும்.


உள்ளடக்கத்தை பொருத்தவரை எல்லாவற்றையும் போட்டு திணித்திருக்க மாட்டார்கள். ஒரு கருத்து, ஒரு திறன் அது சார்ந்த ஐந்து விதமான கணக்குகள் எடுத்துக்காட்டில் இருக்கும் அதையொட்டி ஒரு இருபது கணக்குகள் பயிற்சியில் இருக்கும். எனவே எடுத்துக் காட்டை குறு குறுவென ஒரு ஐந்து நிமிடம் பார்த்தால் போதும் பயிற்சிக் கணக்கை மாணவர்கள் தாங்களாகவே போட்டுவிட முடியும்.  சிலபஸ் மாறிய போது கெடு வாய்ப்பாக இந்த முறை மாறிவிட்டது. ஆமாம் அப்போது வந்த புதிய கணக்கு புத்தகங்களில் ஏராளமான கருத்துகளும் திறன்களும் இருக்கும். எடுத்துக்காட்டில் பத்துவிதமான கணக்குகள் இருக்கும். பயிற்சியில் வேறுவிதமாக ஒரு இருபது கணக்குகள் இருக்கும். ஆக முப்பது கணக்கையும் ஆசிரியரால் மட்டுமே அனைத்து மாணவர்களுக்கும் கற்றுத்தர இயலும். (விதிவிலக்காக சில மீத்திற மாணர்வகள் கொஞ்சம் கணக்குகளை தாங்களாகவே முயன்று போடுவார்கள்)


இப்போது உள்ள கணக்குகளை வீட்டில் செய்து பார்க்காமல் ஆசிரியர்களால் கூட போட இயலாது எனும் வகையில் தான் சிலபஸ் வடிவமைக்கப் பட்டுள்ளது. பயிற்சியின் போது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த தலைப்புகள் எல்லாம் பள்ளி அளவில் உள்ளது என்று பெருமை வேறு.


நீட் மற்றும் ஜேஈஈ போன்ற பரிட்சைகள் தரத்துக்கான அளவுகோல் என்பதை விட பெருவாரியான ஏழை மாணவர்களை விலக்கி வைப்பதற்கும் தனியார் பயிற்சி மையங்கள் என்கிற ஒரு பெரு வணிக கால்வாயை திறந்து விடுவதற்குமான சாதனம் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. ஆனாலும் கூட அந்த பரிட்சை தவிர்க்க முடியாத ஒன்றாக திணிக்கப் பட்டிருக்கிறது. அதன் பொருட்டு சிலபஸ் ஐ மாற்றியதன் மூலம் மறைமுகமாக ஏற்றுக் கொண்டு விட்டோம் என எண்ணுகிறேன். வருடத்திற்கு ஆறு லட்சம் மாணவர்கள் பரிட்சை எழுதுகிறார்கள் என்றால் மேற்காணும் ஒசத்தியான படிப்புக்கான தேர்வு எழுதுவோர் 25 விழுக்காட்டினர் என்றாலே அதிகம். மீதுமுள்ள 75 விழுக்காட்டினரின் மீது அந்த தேர்வினை காரணம் காட்டி இந்த கனமான சிலபஸ் திணிக்கப் படுகிறது.


பொதுவான சிலபஸ் ஒன்றை தயார் செய்து அனைவருக்கும் கொடுத்துவிட்டு வேண்டுமானால் அனைத்து அறிவியல் பிரிவு பாடங்களுக்கும் நீட் மற்றும் ஜேஈஈ சிலபஸ்ஸை ஒட்டி ஒரு துணைப்பாட நூலை தயார் செய்து வழங்கிவிடலாம். அந்த பரிட்சைக்கு தயார் ஆவோர் மட்டும் அதை படித்துக் கொள்ளட்டுமே.


கல்லூரிகளில் இயற்பியல் வேதியியல் பாடப் பிரிவுகளில் சேர உள்ள மாணவர்களுக்கு இவ்வளவு ஆழமான விஷயங்கள் தேவையில்லை. நீங்கள் காட்டி பயமுறுத்தும் ஆழத்தால் ஏராளமானோர் கலைப் பிரிவில் கரை ஒதுங்குகிறார்கள். கிராமபுர ஏழை மாணவர்களை அறிவியல் புலத்தில் இருந்து விலக்கி வைப்பதை கச்சிதமாக தற்போதைய புதிய அறிவியல் பிரிவு புத்தகங்கள் செய்கின்றன என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.


மீண்டும் ஒருமுறை தலைப்பை படியுங்கள், அவர்களின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலிப்பது தான் இந்த கட்டுரையின் தலைப்பு.

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...