2020 ம் ஆண்டு உலகம் முழுவதையும் முடக்கிப் போட்ட
ஆண்டு என்றாலும் ஒரே ஆறுதல் கிடைத்த கேப்பில் ஏராளமாக வாசிக்க முடிந்தது. புத்தகங்கள்
இல்லை என்றால் இந்த முடக்க ஆண்டு நமது சிந்தனையையும் முடக்கிப் போட்டிருக்கும். வழக்கமாக
நூலகப் புத்தகங்களும் புத்தக கண்காட்சிகளில் வாங்கும் புத்தகங்களும் வாசிப்பேன். இந்த
ஆண்டு ”கிண்டில் ஆப்” ஐ முழுமையாக பயன் படுத்தினேன்.
வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுவில் புத்தக
வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல விஷயங்களை முன்னெடுப்பார்கள். ஆனால் நானோ ஒரு பார்வையாளனாக
நல்ல நல்ல புத்தக அறிமுகங்களை உள்வாங்கி பட்டியல் தயாரித்துக் கொண்டு இருப்பேன். இந்த ஆண்டு வாசிப்பு பெருவோட்டம் (Reading
Marathon) என்கிற தலைப்பில் வருடம் முழுவதும் வாசிக்கத் தக்க வகையிலான ஒரு ஏற்பாட்டினை
செய்திருந்தார்கள். வருட துவக்கத்திலேயே எத்தனை நூல்களை வாசிக்கப் போகிறீர்கள் என்று
குறிப்பிட்டு துவங்க வேண்டும். பேசிக்கலி நான் ரொம்ப சோம்பேறி ஆதலால் ஒரு ஐம்பது நூல்களை
இலக்காக வைத்துக் கொண்டு துவங்கினேன்.
இந்த ஆண்டில் வாசித்த முதல் புத்தகம் “மென் காற்றில்
விளை சுகமே”. இறையன்பு அவர்கள் எழுதியது. தலைமைப் பண்பு பயிற்சிக்காக இறையன்பு அவர்கள்
இயக்குனராக இருக்கும் அண்ணா மேலாண்மை மையத்திற்கு சென்றிருந்தேன். அவரது வகுப்பில்
அவ்வளவு புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களை மேற்கோல் காட்டினார். சென்னையில் இருந்து
திரும்பிய வேகத்தில் நூலகம் சென்று இந்த நூலை எடுத்து வாசித்தேன். நல்ல கட்டுரைகள்
உள்ள சிறிய நூல்.
அடுத்து ச.மாடசாமி அவர்கள் (அறிவொளி இயக்கத்தில்
முக்கிய பங்காற்றியவர்) எழுதிய ”எனது சிவப்பு பால்பாய்ண்ட் பேனா” வகுப்பறை பயிற்றுவித்தல்
குறித்த எனது பார்வையை பெரிய அளவில் மாற்றியமைத்த நூல். இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு
வழங்கிய “நிஷ்த்தா“ பயிற்சியில் கருத்தாளராக சென்ற போது வகுப்பெடுக்க எனக்கு பெரிதும்
இந்த நூல் உதவியது.
அடுத்த நூலும் கல்வி சார்ந்து ச.மாடசாமி அவர்கள்
எழுதிய “அன்பென்பது தந்திரமல்ல” என்ற கட்டுரை தொகுப்பு தான். அனைத்து ஆசிரியப் பெருமக்களும்
வாசிக்க வேண்டிய நூல். தெருவிளக்கும் மரத்தடியும், குழந்தைகளின் நூறு மொழிகள் மற்றம்
போயிட்டு வாங்க சார் போன்ற நூல்களும் இந்த ஆண்டு வாசித்து பதிவுகள் எழுதினேன்.
நான்காவதாக ”ஆழமான கேள்விகளும் அறிவார்ந்த பதில்களும்”
சக்கரநாற்காலியில் இருந்து அண்டம் அளந்த ஸ்டீஃபன் வில்லியம் ஹாக்கிங் அவர்கள் உலகை
உளுக்கும் பத்து கேள்விகளுக்கு விடை கூறும் வகையில் எழுதிய நூல். கடவுள் நம்பிக்கை
என்கிற ஃபர்னிச்சரை அதலசிதலையாக்கி இருப்பார்.
கம்யுனல் ஜி.ஓ என்கிற வகுப்புரிமை போராட்டம் நூல்
பேராசிரியர் அன்பழகன் அவர்கள் எழுதிய நூல். இடஒதுக்கீட்டைப் பற்றிய சரியான பார்வை ஏற்பட
அனைத்து இளைஞர்களும் வாசிக்க வேண்டிய நூல்.
எங்கள் அரியலூர் மாவட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர்
சிவசங்கர் ஒரு அருமையான எழுத்தாளர். கிண்டில் போட்டிக்காக “தோழர் சோழன்“ என்றொரு நாவல்
தமிழர் விடுதலைப் படை, பொன்பரப்பி வங்கிக் கொள்ளை, மருதையாற்றுப் பால ரயில் குண்டு
வெடிப்பு மற்றும் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் போன்ற அண்மை கால வரலாற்றினை
நாவல் போக்கில் சுவாரசியமாக கூறியிருப்பார். மேலும் முனைவர் அ.ஆறுமுகம் அவர்கள் எழுதிய
“தமிழக வரலாற்றில் அரியலூர் மாவட்டம்“ என்கிற ஆய்வு நூல் அரியலூர் மாவட்டத்தின் வரலாற்றைப்
பற்றி தெளிவாக அறிய உதவியது.
பாலின சமத்துவம் என்பது சமூக நீதியின் ஒரு அங்கம்
எனவே எப்போதும் அதுகுறித்த கட்டுரைகளை வாசிப்பது எனக்கு பிடிக்கும். இந்த ஆண்டில் தான்
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள்“ வாசித்து வியந்தேன். விகடன்
பதிப்பக வெளியீடான “ஆண்பால் பெண்பால் அன்பால்” என்ற தலைப்பில் பாலின சமத்துவம் குறித்த
பிரபலங்களின் பார்வையை கட்டுரையாக வடித்து தொகுத்திருந்தார்கள். நல்ல சுவாரசியமான தொகுப்பு.
பா.ராகவன் தினகரனில் தொடராக எழுதிய ”மகளிர் மட்டும்“ என்ற கட்டுரைத் தொகுப்பையும் வாசித்தேன்.
கு.சின்னப்ப பாரதி என்கிற கம்யுனிஸ்ட் எழுத்தாளரை
எனது கொல்லி மலை பள்ளி நாட்களிலேயே அறிவேன். அவருக்கு சொந்தமாக “பாரதி காடு“ என்கிற
தோட்டம் அங்கே உண்டு. அவரது எழுத்தை நான் வாசித்ததே கிடையாது. எனவே நூலகத்தில் “சர்க்கரை“
என்கிற தலைப்பில் சர்க்கரை ஆலைத் தொழிலாளிகள் சுரண்டலுக்கு உள்ளாதல் போராடுதல் முதலாளிகள்
அவர்களை ஒடுக்க முயலுதல் குறித்து எழுதிய நாவலை வாசித்தேன்.
மதுரையை கதைக்களமாக வைத்து பத்திரிக்கயாளர் “அர்ஷியா“
அவர்கள் எழுதிய “ஏழரைப் பங்காளி வகையறா” என்கிற நாவல் மதுரையில் இருந்த ஒரு வாழ்ந்து
கெட்ட இஸ்லாமிய குடும்பத்தின் துயரத்தை கண்முன் நிறுத்தியது. மதுரையில் இருக்கும் இஸ்லாமிய
சின்னங்கள் குறித்து “மாபர்“ என்கிற தலைப்பில்
யாசின் எழுதிய நூலை கிண்டிலில் வாசித்தேன்.
வெங்கட் நாகராஜ் என்பவர் டெல்லியில் தங்கி பணிபுரிந்து
வருபவர். சனி,ஞாயிறு என்றால் நண்பர்களுடன் ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறார். அவரின்
பயண அனுபவங்களை அருமையான புகைப்படங்களுடன் கிண்டில் நூல்களாக மாற்றி விடுகிறார். அவரது
“கடைசி கிராமம்“ வாசித்த பின்பு அடுத்த சுற்றுலா இமய மலை தான் என்று சங்கல்பம் செய்து
கொண்டேன். அவரது இன்ன பிற பயணக் கட்டுரை நூல்கள் அனைத்துமே வாசித்து விட்டாலும் பதிவு
செய்யவில்லை. இமாலய ரைடு என்கிற தலைப்பில் கணேசன் என்பவர் சாரு மற்றும் சிலருடன் இமய
மலையில் பைக் சாகச பயணம் மேற்கொண்டது குறித்து எழுதிய நூலும் வாசித்தேன். சென்னையில்
இருந்து மாருதி எர்டிகாவில் ”கர்துங்லா பாஸ்“ வரை சென்று வந்த குடும்பத்தினர் எழுதிய
பயணக்கட்டுரையும் சுவாரசியம்.
இந்த ஆண்டில் வாசித்த ஆகப் பெரிய நூல் “ஓநாய்
குலச் சின்னம்“ தான். மங்கோலிய மேய்ச்சல் நிலக் காடுகள் மற்றும் ஓநாய் பற்றிய ஒரு அருமையான
சூழலியல் நாவல். கிண்டிலில் நல்வாய்ப்பாக இலவசமாக வெளியிடப் பட்ட போது பதிவிறக்கிக்
கொண்டேன். அப்புறம் “ஜாக் லண்டன்“ எழுதிய Call of the wild என்கிற நூலின் மொழிபெயர்ப்பான
“கானகத்தின் குரல்” பனிச்சறுக்கு வண்டி இழுக்கும் ஓநாய்களைப் பற்றி அவற்றின் பார்வையிலேயே
எழுதப் பட்ட உலகப் புகழ் பெற்ற நாவல் வாசித்து மகிழ்ந்தேன்.
ஆண்டன் செக்காவ் “பச்சோந்தி“ என்கிற சிறுகதை வாயிலாக
பள்ளி நாட்களிலேயே பரிச்சயம். எனவே கிண்டிலில் ஆண்டன் செக்காவ் சிறுகதைகள் வாசித்து
மகிழ்ந்தேன். எளிய இனிய ஆழமான கதைகள். அப்படியே அதே ரஷிய எழுத்தாளர் ஒருவர் குறுநாவல்களுக்கு
பெயர் போனவர். சிங்கிஸ் ஐத்மாத்தவ். அவரின் முதல் ஆசிரியர் குறுநாவலும் வாசித்தேன்.
ஜப்பானில் சூழலியல் விவசாயப் புரட்சி செய்த மாசானபு
அவர்கள் எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி விவசாயம் குறித்த மாற்று சிந்தனையை வழங்கியது.
அப்புறம் மற்றொரு சுயமுன்னேற்ற மொழிபெயர்ப்பு உலகப் புகழ் வாய்ந்த “என்னுடைய ச்சீஸை
நகர்த்தியது யார்?” கார்ப்பரேட் உலக மாற்றங்களுக்கு ஏற்ப ஊழியர்களின எண்ணத்தில் நிலையாமையை
சகஜமாக்கும் வகை புத்தகம் என்றே இதனை பதிவு செய்தேன். மற்றுமொரு மொழி பெயர்ப்பு நாவல்
ஸ்டெஃபான் ஸ்வைக் எழுதியது. “யாரோ ஒருத்தியின் கடிதம்”. இந்த நாவலை அடிப்படையாக வைத்து
தங்கர் பச்சான் “தென்றல்“ என்று ஒரு படமே எடுத்துள்ளார்.
எனது நட்பு வட்டத்தில் இருக்கும் ஒரு ஆசிரிய நண்பர்
தனது முதல் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வாயிலாக பதிப்பித்து இருந்தார். “சிலேட்டுக்
குச்சி“. படித்த மற்றும் போதித்த வகுப்பறைகள் வாயிலாக பல விஷயங்களை பேசும் ஒரு சுவாரசியமான
நூல். சிரிக்கவும் சிந்திக்கவும் கண்களை நனைக்கவும் கூட பல உண்மைச் செய்திகள் உண்டு.
அடுத்து எனது முகநூல் நண்பர் வழக்கறிஞர் “பாவெல் சக்தி“ எழுதிய “நகர்துஞ்சும்
நல்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த 8 தஸ்தாவேஜூக்கள்“ என்ற அருமையான
சிறுகதை தொகுப்பு வாசித்து வியந்தேன். அவர் தனது தொழில் நிமித்தம் கண்ட கேட்ட விஷயங்களில்
இருந்து பல சரடுகளை எடுத்து அழகாக சிறுகதைகளாக வார்த்துள்ளார். அருமையான மொழி மற்றும்
இலக்கிய வளம் உள்ள இளம் வழக்கறிஞர் அவர். உயர் நீதி மன்ற நீதிபதியில் இருந்து இந்து
தமிழ் நூல் அரங்கம் உட்பட பல உயர் அங்கீகாரங்களை பெற்ற நூல் அது.
எங்கள் அரியலூர் கவிஞர் தோழர் மௌனன் யாத்ரிகா
அவர்களின் “அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது” என்கிற அற்புதமான கவிதைத் தொகுப்பு
வாசித்து முடித்தேன். இந்த மாதத்தில் அவரது மற்றொரு வேட்டை கவிதை தொகுப்பான “வேட்டுவம்
நூறு“ நம்மை வேட்டை வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் அற்புதப் படைப்பு. எந்த நாட்டுக்கும்
பொருந்தும் பொதுவான வேட்டை நுணுக்கங்களை சூழலியல் சமநிலை குறித்த அக்கரையோடு அணுகும்
கவிதைகள். ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால் நிச்சயமாக பெரிய அளவில் பேசப்படும்
என்பதில் ஐயமில்லை. அத்தோடு மட்டுமின்றி இன்னுமொரு அருமையான எழுத்தாளரும் எங்கள் மாவட்டமான
அரியலூரில் உண்டு. அவர் “பாப்லோ“ அறிவுக்குயில். அரியலூர் ஸ்லாங்கை துள்ளியமாக தனது
கதைகளில் கையாளுவார். அவரது “கிளுக்கி“ சிறுகதை தொகுப்பு அற்புதமான எளிய மக்களின் வாழ்க்கையை
பேசும் படைப்பு.
முகில் அவர்களின் சிரிக்கச் சிரிக்க சரித்திரம்,
செங்கிஸ்கான், மற்றும் பயணச்சரித்திரம் வாசித்து முடித்தேன். இன்னும் உணவுச் சரித்திரம்
1 மற்றும் 2 திறந்திடு சீசேம் காத்திருக்கின்றன. சுவாரசியமான நடையில் எழுதும் இளம்
எழுத்தாளர்.
கி.ரா வின் படைப்புகள் பெரும்பாலும் வாசித்து
விட்டேன். விட்ட குறை தொட்ட குறையாக “அந்தமான் நாயக்கர்“ நூலகத்தில் கிடைத்து வாசித்தேன்.
அப்புறம் இதுவரை பதிப்பில் வராத ருசியான கதைகளை யும் வாங்கி வாசித்தேன்.
வேல ராம்மூர்த்தி அவர்களின் “குற்றப் பரம்பரை“
நாவலை ஒரே மூச்சில் வாசித்து மூர்ச்சையானேன். நல்ல திரைக்கதை போல சுவாரசியமாக எழுதியுள்ளார்.
ஈ.கோலை என்கிற புனைப்பெயரில் எழுதும் தண்டபாணி
தென்றல் என்கிற முகநூல் நண்பர் எழுதிய அறிவியல் கட்டுரைத் தொகுப்பான ஜீன் திருத்தம்
அருமையான அறிவியல் கட்டுரை நூல். எளிமையான நடையில் சிக்கலான அறிவியலை எழுதியுள்ளார்.
கிண்டில் விற்பனையில் சக்கை போடு போடுகிறது.
ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர் தனது 60 களின்
பொறியியல் கல்லூரி கால கல்லூரி, அரசியல், பொதுவுடைமை சித்தாந்தம், தொழிற்சாலை, வேலை
நிறுத்தம் என்று பல விஷயங்களை தொட்டு எழுதிய “விடியலை நோக்கி முடிவற்றப் பயணம்“ என்கிற
நூல் நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது.
முதன் முதலாக பாமரனின் எழுத்துக்களை நூலாக வாசிக்கும்
வாய்ப்பு அமைந்தது. குமுதம் வார இதழில் வந்த டுபாக்கூர் பக்கங்கள் மின் நூலாக கிண்டிலில்
வாசிக்க கிடைத்தது. அவரது எள்ளல் நடையில் வரும் மனிதம் போற்றும் எழுத்துக்கள் நம்மை
கீழே வைக்காமல் வாசிக்கத் தூண்டுபவை.
இந்த ஆண்டு சில நூல்கள் பாதியில் நிற்கின்றன.
அதில் முக்கியமான ஒன்று சேப்பியன்ஸ். ஆமாம் அந்த சுவாரசியமான நூல் எனது மொபைல் பழுதாகி
மாற்றப் பட்ட பரபரப்பில் இடைவெளி விழுந்து விட்டது. பிறகு அதனை தொடரவே இல்லை. 70 விழுக்காடு
முடித்துள்ளேன்.
அப்புறம் இந்த “ரசவாதி“ முடித்து விட்டேன் ஆனால்
பதிவு எழுதவில்லை. எழுதணும்.
அப்புறம் இன்னும் சில நூல்கள் வாசித்து முடித்தாலும்
என்னை கவரவில்லை எனில் அதனை எழுதுவது இல்லை என்கிற கொள்கைப் படி எழுதப்படாமல் விடுபட்டது.
இந்த ஆண்டின் வாசிப்பில் என்னை மிகவும் கவர்ந்த
நாவல் என்றால் அது “ஓநாய் குலச் சின்னம்“ தான். கிட்டத்தட்ட இரண்டு வார காலம் வைத்து
வைத்து வாசித்தேன். மங்கோலியாவின் மேய்ச்சல் நிலப் பகுதியில் ஆடுகளுடன் கிடையில் வசித்தது
போன்ற ஒரு அனுபவம்.
கட்டுரையில் எல்லாமே சிறப்பானவையாக இருந்தாலும்
எனக்கு பல புதிய பார்வைகளை ஏற்படுத்திய பேராசிரியர் அன்பழகனின் “கம்யுனல் ஜி.ஓ வகுப்புரிமைப்
போராட்டம்” மற்றும் ச.மாடசாமி அவர்களின் “என் சிவப்பு பால்பாய்ண்ட் பேனா” என்னை வெகுவாக
கவர்ந்தவை.
சிறுகதைகளில் குழப்பமே இல்லை பாவெல் சக்தியின்
“செங்கோட்டு யானைகள்….” தொகுப்பு தான்.
கவிதையில் மௌனன் யாத்ரிகா எழுதிய வேட்டுவம் நூறு.
இதனை கவிதை வடிவ “ஓநாய்குலச் சின்னம்“ என்று கூட கூறலாம்.