Friday, May 6, 2022

கொரானாவை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் ஹீலர்கள்

 மீள்பதிவு


கொரானாவை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் ஹீலர்கள்!!


 // பொறுப்புத் துறப்பு – ஹோமியோபதி சித்தா போன்ற மருத்துவ முறைகளின் பால் எனக்கு பெரிய அளவில் நம்பிக்கையும் மரியாதையும் உள்ளது. ஆனால் எல்லாவிதமான வியாதிகளுக்கும் அங்கே மருந்து உண்டு என்று நம்பி அலோபதியை புறந்தள்ளுவது நல்லதல்ல. 

சில உடல் சார்ந்த அவசரகால உயிர்காக்கும் சிகிச்சை முறைகள் என்று வந்தால் நாம் அலோபதியைத் தானே நாட வேண்டும். கழுத்து அறுபட்டு ரத்தம் ஊற்றிக் கொண்டு இருக்கும் ஒருவருக்கு கசாயத்த பிழிந்து கொண்டு வருவது பொருத்தமான வைத்திய முறையா?

எனவே சில சிற்சிறு உடல் உபாதைகளுக்கு இங்கேயும் மற்றவற்றுக்கு அங்கேயும் என்று வைத்துக் கொள்வதில் தவறில்லை.  ஆனால் இந்தக் கட்டுரையில் நான் கூற வருவது ஏடாகூட ஸ்டேட்மெண்ட்களால் தெறிக்க விடும் ஹீலர்கள் பற்றி//

 எனது உறவினர் ஒருவர் பார்வைக் குறைபாட்டிற்காக கண்ணாடி  அணிந்திருந்தார். எங்கோ திருநெல்வேலிப் பக்கம் ஒரு வைத்தியர் ஒரு பல் பொடி கொடுக்கிறார் பார்வைக் குறைபாடு உடனே நீங்கி விடுகிறது என்ற கூறி அழைத்துச் சென்று பல்பொடி வாங்கி பல் தேய்த்த மாத்திரத்தில் அவரது கண்ணாடியை வாங்கி கீழே போட்டு உடைத்து விட்டார் அழைத்துச் சென்றவர். சமீபத்தில் பார்த்த போது புதிய கண்ணாடி அணிந்திருந்தார்.

 2000 த்தின் ஆரம்ப காலத்தில் எனது உறவினர் தனது நீண்டகால முழங்கால் வலிக்காக செய்தித்தாள் விளம்பர பிரபல பரம்பரை வைத்தியரிடம் சென்றார். ஆயிரத்து எட்டு கேள்விகள் கேட்டு நம்புகிறது போல பேசி பெரிய அளவில் நம்பிக்கை ஏற்படுத்தி மருந்துகள் கொடுத்து அப்போதே 2000 தீட்டியிருக்கிறார். புதிய மருத்துவம் தரும் நம்பிக்கை உளவியல் கொஞ்சநாள் சிறு ஆசுவாசத்தை தந்திருக்கிறது. அடுத்த முறையும் சென்றார். அதற்கடுத்த முறை செல்லவில்லை. ஒவ்வொரு மாதமும் 2000 கொடுத்தும் உபாதையில் பெரிய மாற்றம் இல்லை.

உடல் சார்ந்த சில பிரச்சனைகளில் நீண்ட கால மருந்துகள் சாப்பிட வேண்டிய தேவை உள்ளது. உதாரணமாக சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், இதய நோயாளிகள், அலர்ஜி மற்றும் வயது முதிர்ந்தோர் சந்திக்கும் பல பிரச்சனைகள் இவை அனைத்துக்குமே அலோபதியில் தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வர வேண்டிய தேவை உள்ளது. நீண்டகாலம் மருந்து சாப்பிட்டு உளவியல் ரீதியாக சலிப்படைந்து இருக்கும் எவருக்குமே ஒரு சுலபமான மாற்று இருந்தால் “லபக்“ என்று பிடித்துக் கொள்ள தயாராகவே இருப்பார்கள். இவர்கள் தான் இப்போது பெரிதாக தலையெடுத்திருக்கும் ஹீலர்களின் இலக்கு.

 “எனக்குத் தெரிந்த ஒரு ஹீலர் இருக்கார், சுகர் பேஷண்ட் வந்த உடனே கால்கிலோ சுவீட் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்து தான் ட்ரீட்மெண்டே ஆரம்பிப்பார்”

 “சுகர் எல்லாம் ஒரு வியாதியே கிடையாதுங்க!!” என்று அதிரடிப்பார் அந்த ஹீலர்.

 மேலே சொல்லுப்படும் செவி வழிச் செய்தி மார்க்கெட்டிங் அடுத்து ஹீலரே கூறுவது உங்களுக்கான பாசவலை போன்று தெரியும் மோசவலை.

 துவக்கத்தில் குணமாவது போல இருந்தாலும் நாளாக நாளாக ஒரு மாற்றமும் தெரியாது. அதற்குள்ளாக ஐந்து கிலோ தார் உருண்டையை விழுங்கித் தொலைத்திருப்போம். எப்போதுமே ஏமாந்த கதையை வெளியே சொல்ல எவருடைய ஈகோவும் முன்வருவதில்லை. ஆகவே யார் விசாரித்தாலும் பரவாயில்லைப்பா என்று கூறிக் கொண்டு கமுக்கமாக அலோபதிக்கு திரும்பியிருப்பார்கள்.

 கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மாற்று மருத்துவர்களின் பால் எனக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. அவர்களில் ஏராளமானோர் கிராஸ் பிளாட்ஃபாரம் ரிசர்ச் மூலம் மாற்று மருத்துவத்தை நம்பிக்கை தரும் பாதைகளில் இட்டுச் செல்கிறார்கள் என்பதை மறுக்க இயலாது. 

ஆனால் இந்த ஹீலர் எனக் கூறிக் கொள்பவர்கள் ஏதாவது டப்பா கோர்சை முடித்து பெயருக்கு பின்னால் எம்.டி என்றெல்லாம் போட்டுக் கொள்கிறார்கள்.

எனக்கு தெரிந்த ஆசிரியர் நண்பர் ஒருவர் எம்.டி அக்குப்பஞ்சர் முடித்துள்ளார். யாராவது தலை வலிக்கிறது என்றால் கூட சில ஊசிகளை அங்கங்கே குத்தி வைத்து எதாவது மாற்றம் தெரிகிறதா என்று ஆர்வத்தோடு விசாரிப்பார். அப்போதைக்கு அந்த இடத்தை விட்டு தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் சரியாகிவிட்டது என்று பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிவருவோர் ஏராளம்.

”சுகர் எல்லாம் வியாதியே கிடையாதுங்க. எதை வேண்டுமோ சாப்பிடுங்க. அட கொழுப்பெல்லாம் ஒன்றும் இல்லைங்க. அந்த டாக்டருங்க அப்படித்தான் சொல்லி காச கறப்பாங்க. நீங்க சாப்பிடுங்க”என்று வாஞ்சையாக சொல்லும் சக சீனியர் எம்.டியும் கூட அதே பள்ளியில் இருந்தார். அவர் இப்போது கொரோனா எல்லாம் ஒன்றும் இல்லைங்க என்று அனைவரின் மாஸ்க்கையும் கழட்டச் சொல்லி வருவதாக கேள்வி.

இப்போ பாய்ண்ட்டுக்கு வருவோம், இந்த ஹீலர் பாஸ்கர் தெரியுமா??

மருத்துவத்தில் சொல்லப்படும் அனைத்து விஷயங்களையும் ஏடாகூடமாக மறுத்து பேசுவது இவரது வாடிக்கை.

உலகமே கொரோனாவால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பில் இருந்து தப்பிக்க சிலிண்டர் மூலமாக ஆக்சிஜன் ஏற்றி நோயாளிகளை காப்பாற்ற படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது. அகில  உலக ஆக்சிஜன் பிரச்சனைக்கு அசால்டாக ஒரு தீர்வினை சொல்கிறார் ஹீலர் பாஸ்கர்.

“ரூமு மூடியிருக்கு, ஏசியில் ஆக்சிஜன் வராது மாஸ்க் போட்டு மூக்க மூடியாச்சு, அப்புறம் எப்படிங்க ஆக்சிஜன் கிடைக்கும். கொஞ்சமாவது அறிவக் கொண்டு யோசிங்க. மாஸ்க்க கழட்டி வீசிட்டு டேபிள் ஃபேன் அல்லது குட்டி மேக்கப் ஃபேன மூக்கு பக்கத்துல வச்சிப் பாருங்க ஆக்சிஜன் அளவு கூடலன்னா அப்புறம் ஏன்னு கேளுங்க”

மக்களே ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனை பிரித்து ரத்தத்தில் ஏற்றி உடல்முழுவதும் அனுப்ப வேண்டிய நுரையீரலின் வேலை கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே அதிக அழுத்தத்தில் பிராண வாயுவை நுரையீரலுக்குள் செலுத்துகிறார்கள். 

அடுத்து ரத்த தானம் செய்வது ரத்தம் பெறுபவருக்கு வேண்டுமானால் அனுகூலமாக இருக்கலாம் ஆனால் கொடுப்பவருக்கு அது கெடுதல் என்று ஒரே போடாக போடுகிறார். இந்த ஆள் பேசுவதைக் கேட்டால் குருதிக் கொடையாளர்களிடம் பெறும் ரத்தத்தை அப்படியே வைத்திருந்து தேவையுள்ளோருக்கு ஏற்றுவதாக எண்ணிக் கொண்டுள்ளார் என தெரிகிறது. நானும் கூட இளம்பிராயத்தில் சினிமாக்கள் பார்த்து குழாயின் ஒரு முனையை கொடையாளரிடமும் மறுமுனையை பெறுபவரிடமும் சொறுகி ரத்தம் ஏற்றி விடுவார்கள் என நம்பியிருக்கிறேன்.

அப்புறம் சுகப் பிரசவ உடற்பயிற்சி, வாழை இலைக் குளியல் என்று ஏகப் பட்ட ஐட்டம் வைத்திருக்கிறார் அவரது முகநூல் பக்கத்தில். எதையும் உரத்த குரலில் அடித்துப் பேசி ஒப்புக் கொள்ளச் செய்யும் பல நண்பர்களை நான் பார்த்துள்ளேன். இவர் அந்த ரகம். அந்த பேச்சைக் கொண்டே கல்யாண மண்டபங்களில் பயிலரங்குகள் நடத்தி நன்றாக கல்லாக் கட்டியும் வருகிறார்.

இவரது நன்றாக மாவு போல மென்று சாப்பிடும் முறையான சர்வரோக நிவாரணியை பெரிதாக நம்பிய எனது நண்பர் ஒருவர் அதான் மென்று சாப்பிடுகிறோமே எதற்கு இந்த சுகர் மாத்திரை என்று தூக்கி கிடாசிவிட்டார். அப்புறம் ஏடாகூடமாகிப் போய் இன்சுலின் மாத்திரையில் இருந்து இன்சுலின் ஊசிக்கு புரமோட் ஆகியுள்ளார்.

ஆங்கில மருத்துவம் வணிகமயம் ஆகிவிட்ட காரணத்தினால் பேராசை காரணமாக தேவையற்ற சோதனைகள் மருந்துகள் பரிந்துரை என்று பல தவறுகள் நடக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக அதை ஒரேயடியாக தலைமுழுகிவிட்டு ஹீலர்களிடமும் இரண்டுமாத எம்.டி மருத்துவர்களிடமும் சரணாகதி அடைவது பேராபத்தாய் முடியும்.

ஹீலரின் ஆக்சிஜன் வீடியோ பார்த்து தம்கட்டி இதை டைப் பண்ணும் இந்த வேளையில் கண்ணில் பட்டு தொலைத்த செய்தி 

“காயத்திரி மந்திரம் கொரானாவை குணப்படுத்துகிறதா?” என்கிற ஆராய்ச்சிக்கு மத்திய அரசு பதினைந்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு.

”டேய் காயத்திரிக்கும் ஹீலருக்கும் கல்யாணம் பண்ணி வைங்கடா கொரோனா மூன்றாவது அலை என்ன முந்நூறாவது அலை கூட வரும்”  இவனுங்களுக்கு மத்தியில உசரோட இருக்கறதே பெரிய சாதனைதான் போல!!

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...