Tuesday, May 31, 2022

பாம்பாயணம்

 பாம்பாயணம்



டிவி யில் நீயா படத்தில் இருந்து “ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா, ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா…” என்ற பாடலுக்கு ஸ்ரீபிரியா வளைந்து நெளிந்து பாம்பு போல ஆடியபடி சக பாம்பு காதலனை குஷியோடு அழைத்தார். இந்த பாடல் பார்த்து பாம்புகள் பரவசம் அடைவதில்லை. ஆனால் இமைக்கா விழிகளில் நீர் வடிய இந்த பாடல்களை நம்ம பசங்க பார்த்து பரவசம் அடைகின்றனர். 

சரி, விஷயத்திற்கு வருவோம். இச்சாதிரி நாகப் பாம்புகள் நூறு ஆண்டுகள் தங்களது விஷத்தை விரயம் செய்யாமல் காத்துவந்தால் (என்னப்பா இது சிவராஜ் சித்த வைத்தியசாலை வைத்தியர் மாதிரி பேசுறீங்க) அது மாணிக்க கல்லாக மாறும். அந்த கல்லை கக்கி வைத்து விட்டு அந்த வெளிச்சத்தில் அது இரை தேடும் அல்லது இணையோடு கூடும் என்று கலர் கலரா ரீல் விட்ருக்காங்க.

என்னப்பா, இல்லங்குறியா?

அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. பாம்பின் விஷத்தில் வெவ்வேறு வகை புரோட்டீன்களும் என்சைம்களும் இன்னபிற மினரல்களும் உள்ளன. அவை எப்போதும் திரண்டு நாகரத்தினமாக மாறி ஜொலிக்காது என்ற வருத்தமான உண்மையை ஏற்கத்தான் வேண்டும்.

பாம்போட விஷம் கொல்லுமா கொல்லாதா?

சில கடுமையான விஷப் பாம்புகள் (இந்திய வகை பாம்புகளில் 10 விழுக்காடுதான் மரணத்தை ஏற்படுத்தவல்ல விஷத்தன்மை வாய்ந்தவை மற்றவை எல்லாம் ரொம்ப சாது தான்) இரண்டு வகைகளில் மரணத்தை ஏற்படுத்துகின்றன.

முதல் வகை ரத்த நாளங்களில் கசிவு ஏற்படுத்தி கொல்லுதல். ஆமாம், இந்த வகை விஷம் ரத்த நாளங்களில் உள்ளே நுழைந்தவுடன் ரத்தங்களை சிறு சிறு கட்டிகளாக உறையச் செய்துவிடும். இதனால் ரத்த நாளங்களில் துவாரங்கள் விழுந்து ரத்தக் கசிவு ஏற்பட்டுவிடும். அப்புறம் என்ன ரத்த ஓட்டம் இல்லன்னா மர்கயா தான்.

இரண்டாம் வகை நரம்பு மண்டலங்களை பாதிப்பது. ஆமாம் இந்த வகை மூளையில் இருந்து படிப்படியாக கீழே இறங்கும். மூளையில் இருந்து தசைகளுக்கு கிடைக்கும் சமிக்கைகளை (signals) இடைமறித்து தடுத்து விடும். எனவே தசைகள் விரைத்துக் கொள்ளும். அப்படியே கீழே இறங்குகையில் உதரவிதானம் சுருங்கி விரிவது நின்று விரைத்து விடும். (பத்தாவது பயாலஜி புக்ல படிச்சிருக்கலாம், உதர விதானம் இறங்கி ஏறுவதால் தான் நுரையீரல் சுருங்கி விரிந்து சுவாசித்தல் சாத்தியமாகிறது) ஆக, நுரையீரல் செயலிழக்கும். அப்புறம் என்ன இறுதி நித்திரை தான்.

நாங்கதான் வெள்ளி செவ்வாயில் பாம்புக்கு பாலும் முட்டையும் வைப்போம் இல்ல, நாகராஜா எங்கள ஒண்ணும் செய்யாது!!

ஐயாம் வெரி சாரி கைஸ். நீங்க நினைப்பது போல பாம்பு உறிஞ்சி குடிக்கும் வகையில் வாயின் அமைப்பு கிடையாது. ’இரண்டாக பிளந்து கிடக்கும் நாக்கு என்னதான் செய்யுது’ ன்னு கேட்டா அது நாக்கே இல்லப்பு வெறும் ஆன்டெனா. 

அப்புறம் எதுக்கு பல்லு? இரையை கவ்வி உடலை முன்னிழுத்து குடலுக்குள் அனுப்பி விடும் பிறகு ஜீரண மண்டலம் ஜெலுசில் இன்றி வேலையை கனக்கச்சிதமா முடிச்சிடும். சாப்டது தேனா வேப்பங்காயா என்றெல்லாம் தெரியாது. “வேம்பின் பைங்காய் என் தோழி தரினே…“ என்கிற குறுந்தொகைப் பாடல் எல்லாம் பாம்புகளிடம் வேலைக்காகாது.

பாம்பு பாம்பாட்டி மகுடி ஊதும் போது அதுக்கு ஏற்றாற் போல் ஆடும் தானே? இதை நீங்க மறுக்க முடியாது.

ஒன்ஸ் எகெய்ன் சாரி பாஸ், பாம்புகளுக்கு காது என்கிற ஒன்றே கிடையாது. அதற்கு உடலே காது போல செயல்படும். மொழி படத்தில் ஸ்பீக்கர் அதிரும் அதிர்வை விரல்களால் ஜோதிகா உணர்வார் அல்லவா. அது போல தரையில் ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டு தான் செயல்படும். பாம்பாட்டி மகுடியை ஊதும் போது கால்களை அசைக்கும் அதிர்வுக்கு பாம்பு ரியாக்ட் பண்ணி இருக்கலாம்.

இரண்டு தலை பாம்பு?

தலையும் வாலும் ஒண்ணு போல உள்ள பாம்புகள் உள்ளன. மற்றபடி இரண்டு தலைகள் எல்லாம் கிடையாது.

உடனடியா இருபது பேருக்கு ஷேர் பண்ணினா நல்லது நடக்கும் னுட்டு நான் வாட்சாப்பில் ஷேர் செய்த ஐந்து தலை நாகம் கூட வா பொய்?

அந்த படத்தை உங்களையே முட்டாளாக்கும் விதமாக வரைந்த ஓவியரை அல்லது கிராஃபிக் டிசைனரை நான் மனமாற பாராட்டுகிறேன்.  ஒட்டிப் பிறக்கும் இரட்டையர் போன்று கருவில் ஏற்பட்ட கோலாறு காரணமாக ஏதேனும் இரண்டு தலைகள் கூட சாத்தியமாகலாம் ஆனால் ஐந்து தலை சத்தியமா சாத்தியமில்லை.

பாம்பை அடிச்சி பாதியில விட்டோம்னா வந்து பழி வாங்கும் தெரியுமா? அடிச்ச இடத்தை அதோட ஜோடி வந்து பார்க்கும்.

அடேங்கப்பா, ஆதார் கார்ட போட்டோ எடுத்துக் கிட்டு வீடு தேடி வரும் என்று கூட சொல்லுங்களேன். பாம்பு தனது இணையை கவர வெளிப்படுத்தும் ஒரு வகை ஹார்மோன் வாசனை அந்த இடத்தில் வெளிப்பட்டிருந்தால் வேண்டுமானால் வர வாய்ப்பு உண்டு மற்றபடி பழிவாங்க விலாசம் தேடி வராது பயப்படாதீங்க.

சாரைப் பாம்பும் நல்ல பாம்பும் ”பிணையல்” போடுமா?

அதுங்க ரெண்டும் எல்லை தகராறு காரணமாக சண்டை வேண்டுமானால் போட்டிருக்கும் பிணையல் (புணர்வதற்கு) போட வாய்ப்பில்லை. கோழி வாத்தை புணரும் என்று நீங்க நம்புவதற்கு தயார் என்றால் இதையும் நம்பிக்கோங்க.

சாரைப் பாம்பு கண்ணைப் பார்த்து கொத்தும், வாலில் விஷம் இருக்கும். வாலால் அடிச்சா போச்சு அவ்ளோ தான்!!

அது முற்றிலும் விஷம் இல்லாத பாம்பு பாஸ். எலிகளைப் பிடித்து பயிர்களைக் காப்பதால் அது விவசாயிகளின் நண்பன் என்பார்கள். 

பச்சைப் பாம்பு கண்களைப் பார்த்து கொத்துமாமே!!

பச்சை பாம்பின் கூர்முனை உள்ளபடியே மிகவும் மென்மையானது. அதனால் அப்படி குத்திக் கிழித்து விடாது.

பாம்பும் கீரியும் சண்டை போடும். கீரியை பாம்பு கடித்தால் சாகாது தானே?!

பாம்பின் விஷத்தை பாம்பின் ரத்தத்தில்  நேரடியாக செலுத்தினால் அந்த பாம்பு இறந்து போகும் என்பது திண்ணம். அப்படி இருக்கும் போது கீரியை பாம்பு கடித்தால் இறக்காதா என்ன?

கவலைப் படாதீங்க இந்த பாம்பு பல்லு பிடுங்குனது தான்!!

ஆமாம், நல்லப் பாம்பின் விஷப் பல்லை வேண்டுமானால் பிடுங்கலாம். ஆனால் கட்டு விரியன், கண்ணாடி விரியன் சுருட்டை போன்ற பாம்புகளின் விஷப் பல்லை பிடுங்கினால் அவை இறந்து போகும். ஆக்சுவலா பாம்புகளின் விஷப் பல்லின் மேலே விஷம் ஒரு பை போன்ற அமைப்பில்  இருக்கும். அந்த பல்லின் முனையில் உள்ள துவாரத்தின் வழியாக அதிக அழுத்த த்தில் இஞ்செக்ஷன் போடுவது போல தோலை துளைத்து ரத்தத்தில் ஏற்றிவிடும்.

இந்தியாவில் 270 வகை பாம்புகள் உண்டு அவற்றில் ஒரு 27 வகை மட்டுமே விஷத்தன்மை வாய்ந்தவை. அதுவே தமிழகத்தில் உள்ள 206 வகைகளில் நல்ல பாம்பு, சுருட்டை, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் கடல் பாம்புகளில் சில வகை மட்டுமே விஷம் உடையவை.

நல்ல பாம்பின் விஷம் தான் நரம்பு மண்டலத்தை பாதிப்படையும் வகை விஷம். விரியன் வகை பாம்புகளின் விஷம் ரத்த ஓட்ட மண்டலத்தை பாதிக்கும். 

இரண்டு வகை விஷங்களுமே ஜீரண மண்டலத்தை பாதிக்காது. ஒரு டம்ளர் கடுமையான விஷத்தை அப்படியே அருந்தினால் கூட எதுவும் ஆகாது என்கிறார்கள். என்ன ஒன்று உங்க ஜீரண மண்டலத்தில் எந்த ஒரு இடத்திலும் சிறு கீரல் கூட இருக்கக்கூடாது ஜாக்கிரதை.

அதனால் பச்சிலைத் தரேன் விளக்குமாற்றால் மந்திரிக்கிறேன் என்று எவராது குணப்படுத்தினேன் என்று கூறினால் நிச்சயமாக அது உண்மையல்ல. இருட்டில் விட்ட அம்பு எதேச்சையாக இலக்கை தைத்தது போல ஏதேனும் 90 விழுக்காடு விஷம் இல்லா பாம்பு கடித்து பிழைத்திருக்கலாம்.

மற்றபடி விஷப் பாம்பு கடிக்கு விஷமுறிவு மருந்து மட்டுமே ஒரே தீர்வு. பயமும் பதட்டமும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். விஷத்தின் வேலை துரிதமாகிவிடும். எனவே பதட்டம் இன்றி எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவமனை சென்று விடவேண்டும்.

இது போல இன்னும் ஏராளமான கட்டவிழ்த்துவிடப் பட்ட புரளிகள் பாம்புகளைப் பற்றி உண்டு. எதையும் தேடித் துருவி உண்மையைக் கண்டறிவோம். 

உள்ளபடியே பாம்பு கூச்ச சுபாவம் உள்ள பிராணி. ஆட்கள் வருவதை தரை அதிர்வுகள் மூலமாக உணரும் பட்சத்தில் விரைந்து அவ்விடத்தில் இருந்து வெளியேறவே விரும்பும். சில அசந்தர்ப்ப வேளைகளில் அதனை மிதித்தோம் என்றாலோ அல்லது அதற்கு ஊறு விளைவிக்கும் வகையில் நாம் அசைவோமானால் அவை நம்மை கடிக்கும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் 90 விழுக்காடு பாம்புகள் விஷம் இல்லாதவை. ஆனாலும் பாம்புகள் கடித்துவிட்டு ஆட்டோகிராஃப் எதுவும் போட்டுக் கொடுத்துவிட்டுச் செல்லாது எனவே எந்த பாம்பு கடித்தாலும் மருத்துவமனை சென்று ”உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே” என்பதை உறுதி செய்து கொள்வது புத்திசாலித்தனம்.

முக்கியமாக பாம்புகளை கண்ட உடனே அதை அடித்து வீழ்த்த வேண்டும் என்று நினைக்காதீர்கள். விரட்டி விடுங்கள் போதும்.

(தலைப்பு Gomathisankar Gosar அவர்கள் ஒரு கமெண்டில் போட்ட வார்த்தை. பொருத்தமாக இருந்ததால் எடுத்தாண்டு கொண்டேன் நன்றி சார்.)


No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...