Friday, November 24, 2023
சின்னத்திரைக்குள் வெள்ளித்திரை!! Memories of a 80's kid
சின்னத் திரை நினைவுகள்
அரசு உயர்நிலைப்பள்ளி, ஜெ.சுத்தமல்லி ஆறாம் வகுப்பு வகுப்பறை. அங்கே மூன்று மாணவர்கள். வாங்க, பக்கத்தில் போய் பார்க்கலாம்
“டேய், கேசவன் வந்துட்டான்டா, போய் கேளுடா!!”
“ஏய் இப்போவேவா? சார் பாத்தாரு கொன்னுடுவாரு!”
கேசவனின் தாத்தா, சனிக்கிழமை இறந்துவிட்டார். திங்கள் கிழமையான இன்று அவன் பள்ளிக்கு வந்து விட்டான். அவனிடம் இந்தப் பொடியன்கள் என்னத்த கேக்கப் போறானுங்க?
இதோ இண்டெர்வெல் பெல் அடிச்சாச்சு.
“டேய் கேசவா, நில்லுடா”
“என்னடா?“
“உங்க தாத்தா செத்துட்டாரு தானே?”
“ஆமாம்“
“அவரு கருமாதி என்னைக்கு?”
“அடுத்த ஞாயித்துக் கிழமை”
“அப்படின்னா, சனிக்கிழமை நைட்டு கல்லு படைப்பாங்க இல்ல, அப்போ வீடியோ போடுவீங்களா?” என்று தயங்கி தயங்கி கேட்டே விட்டான்.
“ஏய், எங்கப்பா கிட்ட கண்டீசனா சொல்லிட்டேன், - நீங்க கருமாதி படைங்க படைக்காட்டி போங்க, முறுக்கு அதிரசம் செய்ங்க செய்யாட்டி போங்க ஆனா எனக்கு கல்லுசாத்தி அன்னைக்கு நைட்டு நாலு புதுப்படம் போட்டே ஆகணும் ஆமா!!” என்று முகமெல்லாம் மலர பதில் சொன்னான். அந்த முகத்தில் தாத்தா செத்த துக்கம் அரை விழுக்காடு கூட இல்லை.
“டேய், கை கொடுடா, சூப்பர்டா”
“எங்கப்பா எம்ஜிஆர் ரசிகரு, ஆனா, இந்த எம்ஜிஆர் சிவாஜி படம்லாம் போட்டு ஏமாத்தினின்னா பாரு தொலைச்சிபுடுவேன். நாலு படமும் புதுப்படமா இருக்கணும் னு சொல்லிட்டேன் டா“
யாரு செத்தா எனக்கென்ன? கல்லுசாத்தி அன்னைக்கு வீடியோ போடுவாங்களா போடமாட்டாங்களா இது தான் இறந்த வீட்டு துக்கத்தைக் காட்டிலும் இளம் பிராய சிறுசுகளின் நெஞ்சைப் பிழியும் கவலை.
எல்லோருக்கும் வீடியோ போடுவாங்களோ போடமாட்டாங்களோன்னு கவலைன்னா எனக்கு மட்டும் வீடியோ போட்டாக்கூட எங்க வீட்டுல பர்மிசன் குடுப்பாங்களா குடுக்கமாட்டாங்களா என்கிற கவலை.
அந்த நாட்களில் ஊரில் எங்கே மரணம் நிகழ்ந்தாலும் எங்களுக்குள் எழும் கேள்விகள் இரண்டே இரண்டு தான். ஒன்று வயதான ஆளா? மற்றொன்று இழவு வீட்டுக் காரங்க வீடியோ போடும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் தானா? என்பது தான்.
எங்கள் ஊரில் அப்போது சாதிய வேறுபாடுகள் அதிகம் இருந்தது. ஆனாலும் கூட ஊர் மக்களை நாங்கள் இரண்டே பிரிவுகளில் அழகாக பிரித்து வைத்திருந்தோம். ஆமாம், ஒன்று கருமாதிக்கு வீடியோ போடும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் மற்றொன்று கருமாதிக்கு வீடியோ போடும் அளவுக்கு வசதி இல்லாதவர்கள்.
“டேய், அந்த தெருவுல ஒரு தாத்தா செத்துப் போய்ட்டாருடா. அவங்க வீடு அங்க…”
“அட்ரஸ் எல்லாம் சொல்லாத, வீடியோ போடுவாங்களா போட மாட்டாங்களா?” என்று முதல்வன் பட ரகுவரன் டெம்ப்ளேட்டை எண்பதுகளின் இறுதியிலேயே தொடங்கியவர்கள் நாங்களாக்கும்.
சில சமயங்களில் பெரிய இடைவெளி விழுந்து விடும். (எதற்கா? அதற்குத்தான்!!) அப்போதெல்லாம் சித்திரகுப்தன் கணக்காக நாங்கள் ஒரு சென்செஸ் எடுக்க ஆரம்பித்து விடுவோம். இந்த தாத்தா எப்போ மண்டைய போடுவாரு அந்த பாட்டி எப்போ பரலோகம் போகும் என்று நோட்டமிட்டபடி பள்ளிக்குச் செல்வோம்.
ஒரு முறை இது குறித்து ரொம்ப சின்சியராக எங்க சித்தப்பா வீட்டில் சொல்லிக் கொண்டு இருந்திருக்கிறேன். அதுவும் கைவசம் எத்தனை தாத்தா பாட்டி வீடியோ போடும் வீடுகளில் இறக்கும் தருவாயில் இருக்கிறார்கள் என்று ஒப்பித்து இருக்கிறேன். நான் கல்யாணமெல்லாம் பண்ணிய பிறகும் கூட அந்தக் கதையைச் சொல்லி என்னை ஓட்டு ஓட்டென்று ஓட்டுவார்கள்.
சில சமயங்களில் கெடுவாய்ப்பாக நல்ல வசதி படைத்தவர்கள் வீடியோ போடாமல் விட்டுவிடுவார்கள். அந்த வாரம் முழுவதும் அந்த வீட்டுக் காரங்களோட கஞ்சத்தனத்தை சொல்லி சொல்லி மாய்ந்து போவோம்.
அதுபோல, சில பேர் வீடுகளில் நான்கு படங்களுமே சிவாஜி எம்ஜிஆர் என்று போட்டு கடுப்பேத்துவார்கள். ஆனாலும் விடுவோமா? எட்டாம் வகுப்புக்கு போவதற்குள்ளாகவே “வசந்தமாளிகை“ படத்தை எட்டு தடவை பாத்த குரூப் நாங்க.
வசந்த மாளிகை, அடிமைப் பெண் மற்றும் ஆயிரத்தில் ஒருவனுக்கு அடுத்ததாக எங்க ஊரில் அதிக முறை போடப்பட்ட படம் ஒன்று உண்டென்றால் அது “கரகாட்டக்காரன்“ படம் தான்.
நாங்கள் எட்டாம் வகுப்பு படித்த போது ராமராஜன் ரசிகர் மன்றம் என்று தொடங்கி ராமராஜனுக்கு கடிதம் எழுதி போட்டோ அனுப்பச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்து அட்ரஸ் தேடிக்கொண்டு கொஞ்சம் பேர் அலைந்தார்கள். (அந்த குரூப்ல நான் இல்ல, வீட்டுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்!!)
ஆசை ஆசையாக வீடியோ பார்க்க கிளம்பி முதல் வரிசையில் பாய் துண்டு சகிதம் உட்கார்ந்து இடம் பிடிப்போர் இரண்டாம் படத்திற்கெல்லாம் கனவுலகில் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். மூன்றாம் படம் போடும் போது முக்கால் வாசி கூட்டம் தூங்கி இருக்கும். விடியற்காலை மூணு மணியில் இருந்து நான்கு மணி வாக்கில் நான்காவது படத்தை போடுவார்கள். அப்போது முதல் படத்திற்கு தூங்கிய கூட்டம் மெல்ல விழிப்படைவார்கள். மூன்று படத்தையும் கில்லி பிரகாஷ்ராஜ் போல கொட்ட கொட்ட முழித்து பார்த்தவர்கள் நான்காவது படத்திற்கு தலை சாய்ப்பார்கள். டெக்கு ஆபரேட்டர்கள் படத்தை போட்டு விட்டு தூங்க ஆரம்பித்து விடுவார்கள். ஆக, நான்கு படங்களையும் ஒரு வினாடி பாக்கி இல்லாமல் பார்த்து முடிக்கும் சாதனையாளர்கள் அவ்வளவு பெரிய கும்பலில் ஒன்று அல்லது இரண்டு பேர் தான் தேறுவார்கள். அதில் நான் அந்த ஒன்றாவது ஆள் என்பதை தன்னடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சில வசதி படைத்தவர்கள் வீடியோ போடும் போது இரண்டு டிவி பெட்டிகளை கொண்டு வந்து இரண்டு எதிரெதிர் பக்கங்களில் வைத்து ஆண்கள் பிரிவு பெண்கள் பிரிவு என்று வைத்து விடுவார்கள். அப்போதெல்லாம் சிறுவர்களான எங்களுக்கு குதூகலமாக இருக்கும். “ஏய், அவங்க வீட்டில் ரெண்டு வீடியோ போடுறாங்கடாவ்” என்போம். இதுமாதிரியான வாய்ப்புகளுக்காக காத்துக் கிடந்த இளையோர்கள் இந்த ரெண்டு வீடியோ சம்பவம் இளசுகளைப் பொறுத்தவரையில் எவ்வளவு பெரிய துன்பியல் நிகழ்வ என்பதை புரிந்து கொள்ளும் வயது எங்களுக்கு இல்லை அப்போது.
பிறகு ஒரு முறை எங்கள் ஊருக்கு ரெக்கார்டு டான்ஸ் ஆடும் குழுவினர் கேம்ப் போட்டு நிகழ்ச்சி நடத்தினார்கள். சுற்றிலும் துணி போட்டு மறைத்து உள்ளே டிக்கெட் வாங்கியவர்கள் மட்டும் அமர்ந்து பார்க்க வழிவகை செய்வார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வசூல் கிடைக்க வில்லை. அப்புறம் எடுத்தார்கள் அந்த பிரம்மாஸ்திரத்தை, ஆமாம், டி.வி டெக்கு வாடகைக்கு எடுத்து வந்து நல்ல நல்ல படங்களாக போட்டார்கள். எனக்கு வீட்டில் சும்மாவே அனுமதி கிடைக்காது, இதுல டிக்கெட்டுக்கு காசு கொடுத்து திலகமிட்டு அனுப்புவார்களா? ஆனாலும் எங்க அப்பாயி இடம் காசு வாங்கிக் கொண்டு ஒரு நாள் போனேன். இன்னமும் ஞாபகம் உள்ளது அன்றைக்கு “இது நம்ம ஆளு“ படம் போட்டார்கள். (காசு கொடுத்து இல்ல பாக்குறேன், அதான் ஆஆஆழமா மனசுல பதிய வச்சிக்கிட்டேன்.) அந்த வயதில் அந்த படத்தின் தலைப்பை பாக்கியராஜ் சோபனாவை காண்பித்து சொல்வதாகவே புரிந்து கொண்டேன். (அப்போது எனது வயது என்ன என்பதை யூகித்து இருப்பீர்கள்!!)
இந்த விஷயத்தை சொல்லவில்லை என்றால் இந்த வீடியோ கதை நிறைவாக இருக்காது. எங்கள் ஊரில் ஒரு மாமா சென்னையில் இருந்து வருவார். நாங்க சோனி மாமா என்று அன்போடு அழைப்போம். எங்கள் அன்புக்கு காரணம், சென்னையில் இருந்து சம்பாதித்துக் கொண்டு வரும் காசை வீட்டிற்கு தருவாரோ இல்லையோ, வீடியோ வாடகைக்கு தந்து விடுவார். ஆமாம், அவர் சென்னையில் இருந்து வந்தால் எங்களுக்கு குதூகலம் தான். அவரிடம் என்ன ஒரு சிக்கல் என்றால் நான்கு படங்களுமே எம்.ஜி.ஆர் படங்களாகத்தான் போடுவேன் என்று ஒத்தைக் காலில் நிற்பார். அப்புறம் வீடியோ வாடகைக்கு எடுக்க போகிற பசங்க ஏதேனும் ஒரு படத்தை கலப்படமாக கொண்டு வந்து விடுவார்கள். அந்த ஒரு படமும் கூட ராமராஜன் படமாகத்தான் இருக்கும். கல்லூரி நாட்களில் ராமராஜனை டவுசர் என்று ஓட்டும் போதெல்லாம் உள்ளுக்குள்ளே ரகசியமாக வருத்தப் பட்டுக் கொள்வேன். ஆமாம், ரசிகர் என்று சொன்னால் போச்சு அப்புறம் என்னை ரவுண்டு கட்டி ஓட்டுவார்களே!!
மெல்ல 1990ம் ஆணடில் சில வீடுகளில் கறுப்பு வெள்ளை சாலிடர் தொலைக்காட்சிப் பெட்டியும் சில வசதி படைத்தோர் வீடுகளில் ஒனிடா அல்லது பிபிஎல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் நுழைந்தது. எங்கள் பள்ளியில் கூட ஒரு கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அதில் விளையாட்டு ஆசிரியரின் ஆசீர்வாதத்தோடு கிரிக்கெட் மேட்ச் பார்க்கத் துவங்கினோம்.
எனது நண்பன் மணிகண்டனின் தந்தை ஆசிரியர். அவர்கள் வீட்டில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி உண்டு. ஞாயிற்றுக் கிழமைகளில் தூர்தர்ஷன் விளம்பரங்களுக்கு மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக படம் போடுவார்கள். அப்போது வாரம் தவறாமல் அவர்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியை வெளியே எடுத்து வைத்து அனைவரும் காணச் செய்வார். நண்பன் என்கிற உரிமையில் நானும் ஓரிரு முறை சென்று பார்த்துள்ளேன். (எங்களுக்கு டியுசன் கிளாஸ் அங்கேதான்)
1992 க்கு பிறகு லால்குடி விடுதி வாசம். மணக்கால் பஞ்சாயத்து தொலைக்காட்சி முன்னால் ஒட்டுமொத்த விடுதியுமே ஞாயிறு மாலை வேளைகளில் அமர்ந்து விடுவோம். பனிரெண்டாம் வகுப்பு படித்த போது லால்குடி பூங்காவனம் மற்றும் பூவாளூர் காவேரி தியேட்டரில் அட்டென்டண்ஸ் வைத்து படம் தவறாமல் கையெழுத்து போட்டு பார்த்த காலகட்டம். ஆகையால் இந்த டிவி முன்னால் காவல் காக்கும் பழக்கம் விட்டது. கிரிக்கெட் மேட்ச் நாட்களில் மட்டுமே பார்ப்போம்.
1994-97 தேசியக் கல்லூரி நாட்களுமே அவ்வண்ணமே கழிந்தது. சுப்பிரமணியபுரம் சபியா சங்கீத் என லோ பட்ஜட் தியேட்டர்களில் ஆரம்பித்து பாலக்கரை காவேரி என்று ஹை பட்ஜட் தியேட்டர் வரை திருச்சி மாநகரிலே ஒரு தியேட்டர் பாக்கி வைக்காமல் படம் பார்த்திருக்கிறோம்.
நான் முதுகலை கணிதம் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் தான் எங்க அப்பாயி இறந்து போனார்கள். ஆம், அவர்களின் கல்லு சாத்தி அன்றைக்கு எங்க வீட்டிலும் வீடியோ போட்டார்கள். ஆனால், நான் என்ன படங்கள் போட்டார்கள் என்று கூட எட்டிப் பார்க்கவில்லை.
பிறகு கலைஞர் வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சி காலத்திற்கு பிறகு இந்த சின்னத்திரையில் படம் பார்க்க அங்கே இங்கே என்று சிறார்கள் ஓடுவது வழக்கொழிந்து போனது. அத்தோடல்லாமல் கேபிள் டிவியும் கணக்கு வழக்கின்றி படங்களாக பேட்டுத்தள்ள ஆரம்பித்த பின்பு சுத்தமாக டி.வி டெக் வாடகைக்கு எடுத்து பார்க்கும் விஷயம் பி.சி.ஓ பூத்துகள் போல வழக்கொழிந்து போய்விட்டது.
அநேகமாக நாற்பது வயதைக் கடந்த அனைவருக்குள்ளும் இந்த டி.வி. டெக்கு கதைகள் நினைவுச் சாளரங்களில் ஏராளமாக இருக்கும். அவர்கள் பின்னூட்டத்தில் பகிர்ந்தால் பழங்கால நினைவுகளை சுகமாக அசை போட்ட திருப்தி எல்லோருக்கும் கிட்டும்.
Tuesday, November 14, 2023
குழந்தைகளின் ஆளுமையை காப்போம்
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் சூழல் அமைவதிலே!!
பெற்றோர் வளர்ப்பதில் 50 விழுக்காடு தாக்கம் இருந்தாலும் மீதமுள்ள 50 விழுக்காடு சமூக சூழல் வயதொத்த நண்பர்களின் அழுத்தம் (peer pressure) போன்ற காரணிகள் தாக்கத்தை செலுத்தும்.
80 களிலும் 90 களிலும் பதின் பருவத்தை கழித்தவர்கள் நல்வாய்ப்பினை பெற்றோர் எனலாம், ஏனெனில் அவர்களுக்கான சூழலியல் கவன சிதறல் காரணிகள் தற்போதைக் காட்டிலும் மிக மிக குறைவு தான்.
90களில் இருந்த பதின் பருவ மாணவர்களுக்கு பள்ளி பாடங்கள் நண்பர்களோடு விளையாடி ஊரை சுற்றி வருதல் இவை தவிர்த்த வேறு பொழுதுபோக்கு நிச்சயமாக இல்லை எனலாம் . இதைத் தாண்டியும் பொழுது போக்கு என்றால் நூலகம் சென்று நூல்களை எடுத்து வாசித்தல் வானொலியில் பாடல்கள் கேட்டல் என்கிற அளவில் தான் இருக்கும்.
ஆனால் தற்போது எதை எடுப்பது எதை விடுவது என்கிற பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பொழுது போக்குகள் மலிந்து கிடக்கின்றன. அவை எந்த அளவுக்கு ஆரோக்கியமானவையாக ஆளுமை வளர்ச்சிக்கு உகந்தவையாக இருக்கின்றன என்பது நிச்சயமாக கேள்விக்குறி தான்.
பதின் பருவ மாணவர்களின் உளவியல் சிக்கலுக்கு அவர்கள் 'தான் எப்படிப்பட்ட ஆளுமையாக வளர வேண்டும்?! நமக்கு என்னென்ன தெரிகிறது? எது நமக்கான இலக்கு? இதை செய்வது மகிழ்ச்சியாக உள்ளது ஆனால் எல்லோரும் தவறு என்கிறார்கள் இதை செய்யலாமா செய்யக்கூடாதா? எதைச் செய்தால் வயது ஒத்த நண்பர்களின் மத்தியில் கெத்தாக காண்பித்துக் கொள்ளலாம்?' என்பன போன்ற பல நுட்பமான காரணிகள் உண்டு.
பழக்கவழக்கங்களிலும் ஆளுமையிலும் தற்போதைய காலகட்டத்தில் சினிமாவின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது.
எங்கேயெல்லாம் செய்யலாமா செய்யக்கூடாதா என்கிற குழப்பம் மேலோங்கி இருக்கிறதோ அங்கெல்லாம் சினிமாக்கள் மிகச் சரியாக தவறான பாதையையே காட்டுகின்றன.
சினிமாக்களில் 90களில் தொடங்கி தற்போது வரை பல விஷயங்களில் "இது
அப்படி ஒன்றும் தவறு இல்லையே!" (normalizing) என்கிற ஒரு போக்கினை குழந்தைகள் மனதில் விதைத்து வருகின்றன அவற்றுள் சிலவற்றை கீழே பார்ப்போம்.
1. புகைப்பிடிப்பது- பழைய படங்களில் ஒருவரை கெட்டவராக காண்பிக்க அவர் சிகரெட் பிடிப்பதாக காண்பிப்பார்கள் ஆனால் தற்பொழுது கதாநாயகர்களே சிகரெட்டை ஸ்டைலின் அடையாளமாக காட்டுகிறார்கள்.
2. மது அருந்துதல்- பழைய படங்களிலும் சரி வீடுகளிலும் சரி மது அருந்துதலை அபாண்டமான குற்றம், மிகப்பெரிய தவறு என்பது போல காட்டுவார்கள் ஆனால் சமீபமாக "எப்போதாவது மது அருந்துதல் (occasional drinking) நண்பர்களோடு மது அருந்துதல்( social drinking) என்கிற போர்வையில் இவையெல்லாம் அப்படி என்று பெரிய தவறு இல்லை என்று ஆகி வருகின்றன முக்கியமாக ஹீரோ அவரது தம்பி தந்தை தாத்தா உள்ளிட்ட அனைவரும் சகஜமாக அருந்துகிறார்கள்.
3. பள்ளிப் பருவத்தில் இயல்பாக எழும் எதிர் பாலின ஈர்ப்பினை காதல் காவியம் புடலங்காய் என்று நீட்டி முழக்குதல் - அழகி ஆட்டோகிராப் தொடங்கி சமீபத்தில் வந்த 96 வரை எல்லாராலும் சிலாகிக்கப்பட்ட படங்கள் அனைத்துமே இந்த தவறினை செய்கின்றன. அதனால்தான் பதின் பருவத்தில் உள்ள ஆண்களும் சரி பெண்களும் சரி எதிர்பாலின ஈர்ப்பினை காதல் என்று தவறாக புரிந்து கொண்டு மனச்சிக்கலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
4. வன்முறை - எந்த ஒரு சிக்கலையும் எதிர்த்து நிற்றல் ஓடி ஒளிதல் ( Fight or flight response ) என்பதைத் தாண்டி பிரச்சனையை சரியாக புரிந்து கொண்டு அமைதியான முறையில் சுமுகமான தீர்வினை எட்டும் ஒரு பக்குவமான மனநிலை கோழைத்தனமாக பார்க்கப்படுகிறது. மேலும் வன்முறையைக் கையில் எடுத்தல் என்பது ஆண்மையின் பெருமை என்பது போல சினிமாக்களில் கட்டமைக்கிறார்கள். எனவே பதின் பருவத்தினர் முக்கியமாக ஆண்கள் சிறிய பிரச்சனைக்கு எல்லாம் வன்முறையில் இறங்கும் போக்கு அதிகமாக உள்ளது.
5. கெட்ட வார்த்தை பேசுதல்- குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை கேட்ட வார்த்தையை தான் பேசுகிறார்கள் என்று ஒரு சினிமாவில் வசனம் வந்தது நல்ல விஷயம் தான். ஆனால் சினிமாக்களில் தான் எந்தெந்த சூழலில் எந்த மாதிரியான கெட்ட வார்த்தைகளை எடுத்து வீச வேண்டும் என்பதை சொல்லித் தருகிறார்கள். எந்த ஒரு படத்தின் அறிமுகத்தையும் பரபரப்பான விஷயமாக்க கெட்டதாகவே இருந்தாலும் பரபரப்புக்காக கெட்ட வார்த்தை பேசும் காட்சியை டீசரில் வைக்கிறார்கள். ஆக வீர பராக்கிரமத்தோடு இருக்கும் கதாநாயகன் செய்யும் எதுவுமே குழந்தைகளை சட்டென்று ஈர்க்கும் அது போல தான் அவர்கள் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளும் பராக்கிரமத்தில் அடையாளமாக குழந்தைகளால் பாவிக்கப்படும்.
எனவேதான் சினிமாக்களில் இருப்பவர்கள் சற்று சமூகப் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். கோடிகளில் புரளும் கதாநாயகர்கள் தெருக்கோடியில் இருக்கும் சின்னஞ்சிறுவனை கூட மனதில் வைத்துக் கொண்டு நடிக்க வேண்டும்.
இது பற்றி கேள்வி எழுப்பும் போதெல்லாம் சினிமா இயக்குனர்கள் கூறுவது "நாங்கள் என்ன சமூகத்தில் இல்லாத விஷயத்தையா சொல்லிவிட்டோம் இவையெல்லாம் சமூகத்தில் இருப்பது தானே?!" என்று கூறுவார்கள். ஆனால் சமூகம் என்பது நல்லவை கெட்டவை இரண்டும் கலந்தது தானே!!
மிகுந்த ஒப்பனையுடன் கவர்ச்சிகரமாக நாம் கெட்டதை காண்பிக்கும் போது அது வெகு எளிதாக வளரிளம் பருவ குழந்தைகளை ஈர்த்து விடும்.
இறுதியாக ஒன்று முற்றிலுமாக சினிமாக்காரர்களை மட்டும் குறை சொல்லி விட முடியாது குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு நிச்சயமாக பெற்றோர்களின் பங்கு அவசியம் எனவே நல்ல விஷயங்களை பாராட்டவும் கெட்ட விஷயங்களுக்காக கண்டிக்கவும் ஒருபோதும் தயங்கி நிற்கலாகாது.
மிக சிக்கலான அதி முக்கியமான பருவத்தில் குழந்தைகள் நம் வசம் தான் உள்ளனர். எனவே மிக கவனமாக அவர்களது ஆளுமையை வளர்த்து எடுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரிய பெருமக்களுக்கும் உண்டு. நல்லவை எவை அல்லவை எவை என்கிற சரியான புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டும்.
சூழலியல் புறத்தாக்கம் எதுவாக இருப்பினும் அவற்றுக்கு எதிரான ஒரு கவசமாக இருந்து குழந்தைகளை பாதுகாத்து சரியாக வளர்த்து எடுக்க நிச்சயமாக ஒரு நல்ல ஆசிரியரால் இயலும். சமூக காரணிகள் பெற்றோர் வளர்ப்பு மற்றும் சூழலியல் தாக்கங்களை குறை கூறிக்கொண்டு ஆசிரியர்கள் வாளாவிருத்தலாகாது!!
இது போன்ற ஒரு ஆசிரியராக நாம் இருத்தல் தான் குழந்தைகள் தினத்தில் நாம் அவர்களுக்கு தரும் சிறந்த பரிசு!!
Thursday, November 9, 2023
கலாச்சார வேறுபாடுகளை மதிப்போமாக...!!
(ரொம்பவும் தேடாதீங்க, கருத்து கடைசியில் உள்ளது)
CCRT Hyderabad நினைவுகள்…
“ஷி இஸ்ஸ ஃபேண்டஸி… ன்னான னான ன்னான…
ஷி ஹேஸ்ஸ ஹார்மனி.. ன்னான னான ன்னான..
…..
…..
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளாம்….”
அவள் எங்களை கடந்து போகும் போதெல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் பாடல் டைரக்டர் கௌதம் மேனன் ஸ்டைலில் எங்கள் காதுகளில் ஒளிக்கும்.
தனது நாற்பதுகளில் இருந்த நண்பர் ஒருவரோ “அழகே அழகு தேவதை…“ என ஜேசுதாஸ் அவர்களின் துணைகொண்டு “ராஜப்பார்வை“ பார்த்தார்.
ஆனால் எல்லோரும் சாப்பாட்டு அறையில் அமர்ந்திருக்கையில்
“பார்த்த விழி பார்த்த படி பார்த்து இருக்க… காத்திருந்த காட்சி இங்கு காணக்கிடைக்க…“
என்று இரு கைகளிலும் வடையை வைத்துக் கொண்டு அதை உண்ண மறந்து அவளையே பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
என்றெல்லாம் ஒரு பெண்ணின் அழகு குறித்த வர்ணனை செய்வது ஒரு ஆசிரியருக்கு அழகல்ல என்பதால் அவர் ஒரு நாகாலந்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் என சுருக்கமாக கூறித் தொடங்குகிறேன்.
சிசிஆர்டி ன் ஆரம்ப நாட்களில் அனைத்து மாநில ஆசிரியர்களும் அவரின் தோற்றம் மற்றும் நேர்த்தியான நவீன உடை குறித்து சிலாகித்தபடி இருப்பார்கள். ஆனால் சாப்பிட வரும் போது மட்டும் ரங்கீலா பட ஊர்மிளா மாதிரியான சிக்கன உடையில் வருவார். பெண்களுக்கான கடுமையான உடைக்கட்டுப் பாட்டை வலியுருத்தும் காஷ்மீர் நண்பர்கள் அவரை உள்ளூர இரசித்தபடி திட்டித் தீர்ப்பார்கள்.
ஒரு நாள் வகுப்பு துவங்கியபின் வேக வேகமாக ஓடிவந்த அந்த ஆசிரியை எனது அருகே இருந்த காலி இருக்கையில் அமர்ந்து கொண்டார். எனது சக தமிழக ஆசிரிய நண்பர்கள் கிண்டல் கலந்த ஒரு பொறாமைப் பார்வை பார்த்தார்கள். நானோ நாகரிகம் கருதி நாற்காலியை நகர்த்தி இடைவெளியை அதிகரிப்பது போல பாவனை செய்தேன்.( நாற்காலி ஒரு இஞ்ச் கூட நகரவில்லை என பிறகு நண்பர்கள் கூறினார்கள்)
என்னைப் பார்த்து நட்பு ரீதியில் புன்னகைத்து விட்டு “அச்சு ஃப்ச்சம் ட்தமில்நட்து?“
எனக்கு ஒரு எழவும் புரியாததால் வகுப்பை கவனியுங்கள் என முன்னோக்கி கை காண்பித்து சமாளித்தேன்.
இருந்தாலும் என்ன சொன்னார் என மனதில் ஒவ்வொரு வார்த்தையாக கொண்டு வந்து அறுவை சிகிச்சை செய்து ஆழமாக சிந்தித்துக் கொண்டு இருந்தேன்.
ஒரு முப்பது நிமிடங்கள் கழித்து “யா அயாம் ஃப்ரம் டமில்நாடு“ என்றேன். நாகாலாந்து மக்கள் பேசும் ஆங்கிலம் கூட சீனமொழி மாதிரிதான் இருக்கும்.
வகுப்பு மிகவும் சுவாரசியமாக போய்க் கொண்டு இருந்ததால் வகுப்போடு
ஒன்றிவிட்டேன்(சத்தியமா!!) திடீரென்று அந்த ஆசிரியை ஒரு பொட்டலத்தை எடுத்து பிரித்து ரகசியமாக கையில் கொட்டிக் கொண்டார். வகுப்பை பார்த்துக் கொண்டே கையை பிசைந்து கொண்டு இருந்தார். பின் இடக்கையில் இருந்து கொஞ்சத்தை மட்டும் வலது கைக்கு மாற்றி எனது முகத்துக்கு நேராக நீட்டியபடி “ச்ச்சேக் ச்த்டிஸ்“ என்றார்.
“ஊவ்வ்வே…“ அடச்சே பான்பராக்.
அடுத்த நிமிடமே ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஜேசுதாஸ் அனைவரும் மூட்டை முடிச்சுக்களோடு வெளியேறி விட்டார்கள்.
நாகாலாந்து ஆசிரியர்கள் எட்டு பேருமே குட்கா போடுவார்கள். இடைவேளையின் போது அறைக்குச் செல்லும் போதெல்லாம் கொஞ்சம் “சரக்கும்“ போடுவார்கள். இது அங்கே உள்ள பரவலான பழக்கம் என பிறகு அறிந்து கொண்டேன்.
அவர்களின் பழக்கத்தில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும் அந்த குட்கா நாற்றம் ஒவ்வாமை என்பதால் அதன் பின் அந்த ஆசிரியையைக் கண்டாலே பின்னங்கால் பிடறியில் பட எதிர் முனைக்கு ஓடுவேன். மற்ற நாகாலாந்து ஆசிரியர்கள் யாரும் வகுப்பறையில் குட்கா வாடையோடு வளைய வருவதில்லை.
கருத்து:பழக்க வழக்கத்திலேயே இத்தனை வேறுபாடு இருக்கையில் ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்று கோஷமிட்டபடி எல்லோரையும் ஒரே கோணிப்பைக்குள் திணிக்க முயலுவது என்ன நியாயம். பன்முகக் கலாச்சாரத்தை சீரழிக்காமல் எல்லோரையும் அவரவர் பழக்க வழக்கங்களோடும் இந்தியர் என்ற உணர்வோடும் இருக்கச் செய்தாலே போதும். இல்லையெனில் உங்கள் கோணிப்பை அவிழ்த்து விட்ட நெல்லிக் காய் மூட்டையாகிவிடும்.
Wednesday, November 1, 2023
நந்தினி ஐஏஎஸ் 2.0 (climax changed)
தலைப்பு:“நந்தினி ஐஏஎஸ்“
ஆசிரியர்: மு ஜெயராஜ்,
தலைமை ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
நாகமங்கலம் ,
அரியலூர் மாவட்டம்.
“நந்தினி ஐ.ஏ.எஸ்” என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தை எடுத்து வந்து மேசையில் வைத்தார் தமிழாசிரியர் மணிகண்டன்.
“நம்ம ஸ்கூல்ல புதுசா சேந்த ஆறாம் வகுப்பு நந்நதினி எழுதிய புத்தகம் சார்”
சென்ற ஆண்டின் பழைய ரூல்டு நோட்டின் எழுதப்படாத பக்கங்களை கிழித்து எடுத்து நான்காக கத்தரித்து அவற்றை பிசிறு இன்றி நூலால் தைத்து குண்டு குண்டான கையெழுத்தில் எழுதப்பட்ட புத்தகம் அது.
பிறப்பு, தாய் தந்தையர் குறித்த குறிப்பு, சொந்த ஊர் குறித்த குறிப்பு பிறகு தனது லட்சியமான ஐ.ஏ.எஸ். அதற்கான காரணம் என அழகாக வரிசையாக விஷயங்களை அடுக்கி இருந்தாள் குட்டிப் பெண் நந்தினி.
தலைமையாசிரியர் வாயடைத்துப் போய் அவளைப் பார்த்து சிரித்தார். அவளோ வெட்கத்தில் “சார்“ என்றபடி சிரித்து நெளிந்தாள்.
“அப்பா என்னம்மா பண்றாரு?“
“அப்பா இல்லைங்க சார்"
“அம்மா”
“அம்மா கள வெட்டப் போவாங்க சார்“
“படிச்சி இருக்காங்களாம்மா”
“ அஞ்சாப்பு முடிய படிச்சி இருக்காங்க சார்“
“உனக்கு ஐ.ஏ.எஸ் பத்தி யாரும்மா சொன்னாங்க?”
“டி.வி நியுஸ்ல பாப்பேன் சார், அப்புறம் நம்ம மாவட்ட கலெக்டர் போன வருசம் நம்ம ஊருக்கு வந்து பேசினாங்கல்ல சார். அவங்கள போல நானும் கலெக்டர் ஆகணும்னு தோணுச்சி சார்“
சென்ற ஆண்டு பணியாற்றிய கலெக்டர் ரசியாபேகம் பணியாற்றிய ஓராண்டில் பல மாணவியருக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். அதன் ஒரு சாம்பிள் தான் இந்த நந்நதினியின் புத்தகம் என தலைமையாசிரியர் புரிந்து கொண்டார்.
”இந்தப் புத்தகத்தை நான் படிச்சிட்டு வச்சிக்கட்டுமா நந்தினி?“
“வச்சிக்கோங்க சார், நான் இன்னைக்கு நைட் வேற எழுதிக்கிறேன் சார்” என்றாள் பெருமை பொங்க.
அமுதவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு குடியரசு தினவிழாக் கொண்டாட்டங்கள் வழக்கத்தை விட சிறப்பாக இருந்ததன. வண்ண வண்ணமாய் கொடித் தோரணங்கள் கொடிமரத்தில் இருந்து நான்கு பக்கங்களும் இழுத்துக் கட்டப் பட்டிருந்தன. கொடி மரத்தின் கீழே வண்ணக் கோலப்பொடிகளால் அழகிய ரங்கோலி இடப்பட்டிருந்தது. மாணவர்களும் சீருடையில் தேசியக் கொடியைக் குத்தியிருந்தனர்.
“அடுத்ததாக ஆறாம் வகுப்பு மாணவி நந்தினி பரதநாட்டியம் ஆடுவார்” என்று அறிவியல் ஆசிரியை விஜி அறிவித்தார். நந்தினி, ஆடிய நாட்டியம் அழகியப் பூச்செண்டு அசைந்து ஆடியது போல இருந்தது.
வாய்க்குள் கல்கோனா மிட்டாயை அடக்கி வைத்துக் கொண்டு பேசுவது போல மழலையாய்ப் பேசுவாள் நந்தினி. அவளை பேசவைத்துக் கேட்பதற்காகவே சும்மாவே ஆசிரியர்கள் அவளிடம் ஏதாவது விசாரிப்பார்கள்.
அவளும் பட்டாம் பூச்சி சிறகசைப்பது போல கண்களை படபடவென்று அசைத்த வண்ணம் பேசுவாள். பேச்சினூடாக மூச்சுவாங்கிய படி பட பட வென்று பொறிந்து தள்ளுவாள். அவளுக்கு பேசவும் அலுக்காது ஆசிரியர்களுக்கு கேட்கவும் அலுக்காது.
நந்தினி எட்டாம் வகுப்பிற்கும் வந்துவிட்டாள். ஆனால் ஆறாம் வகுப்பில் பார்த்தது போன்ற அதே மழலை மாறா குரலும் முகமும். அந்த ஆண்டு பள்ளிக்கு ஆண்டாய்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வருவதாக இருந்தது. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமையாசிரியர் ஆசிரியர் கூட்டத்தை கூட்டினார்.
“நாம எவ்வளவு தான் வகுப்பறைக் கற்பித்தலில் நமது திறமையை காண்பித்தாலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் சொதப்பி விட்டோமானால் அனைத்தும் பாழ். அதனால் வழிபாட்டுக் கூட்டத்திலேயே சி.இ.ஓ வை அசத்தும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடத்திவிட வேண்டும்“ என்றார் தலைமையாசிரியர்.
“சார் இந்த முறை வழிபாட்டுக் கூட்டத்தை முழுவதும் ஆறாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு நடத்தி விடலாம் சார். அவர்கள் தவறு செய்தால் கூட அது ரசிக்கத் தக்க வகையில்தான் இருக்கும்.“ என்றார் கணித ஆசிரியர் சரவணன்.
“சார் திருக்குறள் மட்டும் எட்டாம் வகுப்பு நந்தினியே சொல்லட்டும் சார். அவளும் ஆறாவது மாதிரியே தான் இருப்பா, மேலும் அவளோட மழலைக் குரலில் திருக்குறள் கேட்க நன்றாக இருக்கும்” என்றார் அறிவியல் ஆசிரியை விஜி.
ஆண்டாய்வு அன்றைக்கு காலை எட்டு முப்பதுக்கெல்லாம் அனைவரும் வந்து விட்டார்கள். ஒரு பக்கம் காலை வழிபாட்டுக் கூட்டம் நடத்தும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ரிகர்சல் நடந்து கொண்டு இருந்தது. ஆசிரியர்கள் அனைவரும் சுருட்டிய சார்ட் பேப்பரை கையோடு எடுத்துக் கொண்டு இங்கும் அங்கும் திரிந்தார்கள்.
“நந்தினி என்னம்மா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு இருக்கே” கணித ஆசிரியர் சரவணன்.
“சார், இங்கப் பாருங்க சார் ரிகர்சல் ரிகர்சல்னு சொல்லி அதே திருக்குறளை பத்து தடவை சொல்ல வச்சிட்டாங்க சார்” என்று அழகாக அலுத்துக் கொண்டாள்.
அமுதவயல் பள்ளியில் மட்டும் வழிபாட்டுக் கூட்டத்தில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்தில் வரும் “வாழ்த்துதுமே“ஐந்து முறை ஒலிக்கும். ஆம், பசங்க ஒன்ன புடி என்ன புடி என்று இழுத்து முழக்கி கொத்து பரோட்டா போட்டு விடுவார்கள். ஆனால் ஆண்டாய்வின் போது எல்லோரும் நூல் பிடித்தாற் போல் சரியாக பாடி முடித்துவிட்டனர்.
’அப்பாடா, ஒரு கண்டத்த கிராஸ் பண்ணியாச்சு’ என்று தலைமையாசிரியரும் உடற்கல்வி ஆசிரியரும் பெருமூச்சு விட்டனர்.
நந்தினி திருக்குறளுக்கு அழைக்கப் பட்டாள். வந்தவள் ஒரே தாவாக மைக்கை இழுத்து தனது உயரத்திற்கு அட்ஜஸ்ட் செய்தாள். பிறகு மைக்கின் தலையில் ரெண்டு தட்டு தட்டி ஒர்க் பண்ணுதா என்று சோதனை செய்தாள். அவளின் இந்த செயலை சிஇஓ புன் சிரிப்போடு ரசித்துக் கொண்டு இருந்தார்.
“நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு“
என்று தலையை ஆட்டி ஆட்டி குறளையும் பொருளையும் அழகான மழலைக் குரலில் பேசி முடித்தாள். சி.இ.ஓ அவளின் கன்னத்தை தட்டி தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பேனாவை பரிசளித்தார்.
காலை வழிபாட்டு கூட்டம் சிறப்பாக முடிந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி.
முதன்மை கல்வி அலுவலர் மாலை பின்னூட்டம் வழங்கும் கூட்டத்தில் வழிபாட்டுக் கூட்டம் நடத்தப்பட்ட விதத்தையும், பள்ளியையும், ஆசிரியர்களையும் வெகுவாகப் பாராட்டிச் சென்றார். அந்த பாராட்டிற்கு நந்நதினியும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.
நந்தினி பத்தாம் வகுப்பிற்கும் வந்து விட்டாள். சற்று வளர்ந்திருந்தாள். ஆனால் அதே பட்டாம் பூச்சி படபடப்புடனான கண்கள், கல்கோனா மிட்டாய் அடக்கிய மழலைப் பேச்சு மட்டும் அவளை விட்டு நீங்க வில்லை.
மதிய உணவு முடித்து வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட வந்த ஆசிரியர்களை அப்படியே நிறுத்தி ஒரு கூட்டத்தை நடத்தினார் தலைமையாசிரியர்.
“சார் அடுத்த வாரம் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சிடுங்க. கடையில காசு கொடுத்து வாங்கி ரெடிமேட் எக்சிபிட் எதுவும் இருக்க கூடாது. முழுக்க முழுக்க நாமே செய்ததாக இருக்க வேண்டும். எக்சிபிட் எப்படி இருந்தாலும் அத ப்ரசெண்ட் பண்ற விதத்தில் தான் பரிசு வாங்க முடியும். அதனால நல்லா ப்ரசெண்ட் பண்ணக் கூடிய பசங்கள பாத்து தேர்வு செய்யுங்க“
“சார் நான் மேத்ஸ் சார்பா ஒரு காட்சி வைக்கிறேன் சார்.“ இது கணித ஆசிரியர் சரவணன்.
“வெரி குட் எல்லா வருசமும் கணக்குல எக்சிபிட் குறைவாத்தான் வருது சிறப்பா பண்ணுங்க நிச்சயம் பரிசோட வரலாம்”
“சார் நான் குளோபல் வார்மிங் பற்றி ஒரு ஐடியா இருக்கு அத டெவலப் பண்ணிடறேன் சார்” இது அறிவியல் ஆசிரியை விஜி.
அடுத்த நாள் அறிவியல் கண்காட்சி. கண்காட்சிக்கு தேர்வு செய்யப் பட்ட மாணவர்களை தலைமையாசிரியர் அழைத்து அவர்களை விளக்கச் சொல்லி ஒரு முறை கேட்டு திருப்தி அடைந்தார். உங்கள் யூகம் சரிதான். அறிவியலுக்கு நந்நதினி தான் செல்கிறாள்.
“விஜி மிஸ், குளோபல் வார்மிங் பற்றிய கண்காட்சியில் வெறும் விழிப்புணர்வு கருத்து மட்டும் தான் இருக்கு. அதனால நந்தினிக்கு எதாவது வித்தியாசமா காஸ்ட்யும் போட்டு விட்டு அந்த கருத்துக்களை சொல்ல வச்சா நல்லா இருக்கும்“
“நல்ல ஐடியா சார், நிச்சயமா நல்லா இருக்கும் சார்”
நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவங்குவதாக இருந்தது. பணி நிமித்தம் வர இயலாமையால் சி.இ.ஓ திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் மாலை பரிசளிப்பிற்கு வருவதாக உறுதியளித்திருந்தார்.
நந்தினி குறி சொல்லும் பெண் போல வேடமிட்டு வந்திருந்தாள். புருவத்திற்கு மையிட்டு மேலாக சுற்றிலும் வண்ணப் பொட்டுகள், கோணலான குதிரை வால், அதற்கு மேலே மல்லிகை கனகாம்பரம் பூ, நேர்த்தியாக கட்டிய புடவை, கக்கத்தில் ஒரு கூடை அப்புறம் கையில் குறி சொல்லுபவர்கள் வைத்திருக்கும் சிறு கோல் என்று குறி சொல்லும் பெண்ணாகவே மாறி இருந்தாள்.
பூமிப் பந்தின் அருகே நின்று “நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது, ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா" என்று தொடங்கி சுற்றுச் சூழல் மாசுபாடு விளைவு மற்றும் தவிர்க்க யோசனைகள் என அனைத்தையும் அழகாக ஜக்கம்மா பாஷையில் கூறி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினாள்.
அவளிடம் குறி கேட்பதற்கென்றே அமுதவயல் பள்ளி அரங்கில் மட்டும் கூட்டம் அலை மோதியது. நந்தினியும் சற்றும் உற்சாகம் குறையாமல் சிரித்த முகத்தோடு அனைவருக்கும் குறி சொல்லி அனுப்பினாள்.
மாலை பரிசளிப்பு விழாவுக்கு கலெக்டர் வந்திருந்தார். பரிசு அறிவிக்கப் பட்டது. நந்தினிக்கு சுற்றுச் சூழல் பிரிவில் முதல் பரிசு கிடைத்தது. அப்போது தலைமையாசிரியர் கலெக்டர் அருகே சென்று ஏதோ கூறினார். அதற்கு சிரித்துக் கொண்டே ஒப்புக் கொண்டார்.
பரிசு வாங்க நந்தினியோடு, விஜி மிஸ் மற்றும் தலைமையாசிரியரும் மேடைக்கு வந்தனர். அப்போது கலெக்டர் மைக்கில் “தற்போது பரிசு பெறுபவர் நந்தினி ஐ.ஏ.எஸ்” என்று புன்னகைத்தபடி கூறி கோப்பையோடு தலைமையாசிரியரால் அழகுற பைண்ட் செய்யப் பட்டிருந்த அவளது புத்தகத்தையும் வழங்கினார். இந்த ஆனந்த பேரதிர்ச்சியால் நந்தினி அழுதுகொண்டே தனது புத்தகத்தை வாஞ்சையோடு தடவினாள்.
அடுத்த மாதம் இன்னுமோர் அதிர்ச்சி காத்திருந்தது. நந்தினி 10 நாட்களாக பள்ளிக்கு வரவே இல்லை.
அப்புறம் கூப்பிட்டு அனுப்பிய பிறகு வந்திருந்தாள். பழைய சிரிப்பு, உற்சாகம் எதுவும் இல்லை. கண்களில் படபடக்கும் பட்டாம்பூச்சியும் காணவில்லை.
“என்னம்மா ஆளே வித்தியாசமா இருக்கே, என்னாச்சு?” என்று தலைமையாசிரியர் பரிவோடு விசாரித்தார்.
“ஒண்ணுமில்ல சார்“ என்று முடித்துக் கொண்டாள் நந்தினி.
“முன்னெல்லாம் சாப்டியாம்மான்னு கேட்டாளே மூச்சு வாங்க முக்கா மணிநேரம் பேசுவ இப்போ இவ்வளவு சுருக்கமா பேசுற.
“மாமா வந்துருக்காங்க சார்”
“பாக்க சின்னப் பையனா இருக்காரு இவருதான் உங்க மாமாவா?“
“ஆமா சார்“
"சரி, நாளையிலிருந்து பள்ளிக்கூடம் வந்துடனும் சரியா?"
" இல்ல சார் நான் படிக்கல நான் டிசி வாங்கிக்கிறேன்"
"நீ கொஞ்சம் வெயிட் பண்ணு நான் அப்புறம் பேசுறேன்"
தலைமை ஆசிரியர் அலுவலக உதவியாளரை அழைத்து விஜி மிஸ்ஸை அழைத்து வரக் கூறினார்.
“விஜி மிஸ் என்னாச்சு? ஏன் அழுதுகிட்டே வரீங்க?“
“சார்…“
“நிதானமா சொல்லுங்கம்மா, என்னாச்சு?”
“சார் நந்தினிக்கு அவங்க பேரண்ட்ஸ் மே மாசம் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்களாம் சார்”
“என்னது, கல்யாணமா?"
“கூட வந்தப் பையன் தான் மாப்பிள்ளையாம் சார். ஏதோ சொத்து பிரியக் கூடாதுன்னு சொந்தத்துல கல்யாணம் செஞ்சி வைக்கப் போறாங்களாம் சார் அப்பா இல்லாத குழந்தை வேற"
“என்னம்மா சொல்றீங்க?”
“ஆமாம் சார், அவ மாமாவ அனுப்பிட்டு இவ்வளவு நேரம் என்னைக் கட்டிக்கிட்டு அழுதுட்டு போறா சார். இத உங்கக் கிட்ட கொடுக்க சொன்னா சார்”
வெள்ளை பேப்பர் போட்டு பேக் செய்யப் பட்டிருந்த பார்சலை பிரித்த போது “நந்தினி ஐ.ஏ.எஸ்“ புத்தகம் எல்லோரையும் பார்த்து ஏளனமாக சிரித்தது.
"ஆமாம், என்றைக்கு கல்யாணம்?"
" நாளை காலை வீட்டிலேயே பண்றாங்களாம்"
"15 வயது குழந்தைக்கு திருமணம் செய்து வைக்க என்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள் கைது செய்த பட்டனர் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது" என்கிற செய்தி அடுத்த நாள் காலை நாளிதழில் பளிச்சிட்டது.
'யாரு 1098க்கு போன் பண்ணி கல்யாணத்தை நிறுத்தி இருப்பாங்க'
இதற்கிடையில் 1098 கட்டுப்பாட்டு அறையில் "எப்பா நேற்று இந்த அமுதவயல் கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரே கல்யாணத்தை நிறுத்த சொல்லி 50 பேருக்கு மேல போன் பண்ணிட்டாங்கப்பா"
குறிப்பு: குழந்தை திருமணம் குறித்து தெரியவந்தால் 1098 க்கு போன் பண்ணி புகார் அளிக்கலாம்
Subscribe to:
Posts (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...