Tuesday, June 11, 2024

சில படங்கள் சில பார்வைகள்!!

ஆட்டோகிராப் படம் ரசிக்கத்தக்க வகையில் சேரன் எடுத்திருந்தார். எனக்கு அந்த படம் சார்ந்து இரண்டு கருத்துகள் இருந்தன.
1. பள்ளிப் பருவத்தில் குழந்தைளுக்கு இடையே இருக்கும் எதிர் பாலின ஈர்ப்பினை காதல் என்பதுபோல Glorify செய்திருப்பார். இது மாதிரி படங்கள் பதின் பருவத்தினர் மனதில் நஞ்சை விதைப்பவை. 2. சேரன் இடத்தில் சுகன்யா இருந்து கொண்டு "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..." என பாடியிருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறேன். ஏன் சேரனுக்கு இருந்தது போல சுகன்யாவுக்கும் பருவத்திற்கொரு ஈர்ப்பு இருந்திருக்க கூடாதா?! இரண்டாவது பாய்ண்ட்டை படமாக எடுக்க வாய்ப்பே இல்லை என நண்பர்களோடு விவாதித்து இருக்கிறோம். இங்கே பையன்கள் சரக்கடிப்பதை சாதாரணமாக கடந்து போகும் சமூகம் அதே தவறை பெண்கள் செய்யும்போது வானமே இடிந்து தலைமேல் விழுந்தது போல அதிர்ந்து போகிறார்கள். தவறுகள் செய்வதில் கூட இங்கே பாலினபாகுபாடு நிலவுகிறது. பிரணய விலாசம் என்றொரு மலையாளப் படம். (ஆமாங்க, ஒரு மலையாளியைவிட அதிக மலையாளப் படங்கள் பார்க்கிறேன் போல!! Thanks to OTT) நான் சொன்னது போல ரிவர்ஸ் கியர் ஆட்டோகிராப். நாயகனின் தாய் இறந்து போகிறார். அவருடைய பெட்டியை திறந்தால் அவரது டைரி கிடைக்கிறது. அதில் அவனது தாயார் திருமணத்திற்கு முன்பு ஒருவரை உயிராக நேசித்திருக்கிறார் என்று அறிகிறார்கள். நாயகனின் தந்தை முதலில் அதிர்ந்து கோபம் கொள்கிறார். ஆனால் நாயகன் அவரைத் தேற்றுகிறான். இருவரும் பிறகு தாயாரின் முன்னாள் காதலனைத் தேடி செல்கிறார்கள். இதில்கூட அந்த அம்மா உயிரோடு இருந்து இந்த விசயம் வெளிப்பட்டு இருந்தால் கதை மாறியிருக்கும். ஆனால் சேட்டன்கள் இந்தப் படத்தை அழகிய கவிதைபோல தீட்டியிருந்தனர். பூக்காலம் என்று மற்றொரு மலையாளப்படம். (சொன்னேன்ல 😀) இந்தப் படம் ஒரு பெண்ணின் திருமணம் தாண்டிய உறவினை பேசுகிறது. ஆனால் செம்ம காமடி மற்றும் ஃபீல்குட் படமாக கொடுத்திருந்தார்கள். என்னது, திருமணம் தாண்டிய உறவு உங்களுக்கு காமடியா?! ஆமாம், கணவன் மனைவி இருவரும் நூறு வயதை நெருங்கும் சமயம்தான் இந்த விசயம் கணவனுக்கு தெரிய வருகிறது. ஆனால் 'சம்பவம்' நடந்தது சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன். அன்பான தம்பதிகள் அழகான பிள்ளைகள், பேரழகான பேரக்குழந்தைகள் மற்று கொள்ளுப் பேரன்கள் என மகிழ்வுடனும் குதூகலத்துடனும் செல்லும் குடும்பத்தில் மேலே சொன்ன விசயம் தெரிய வரும்போது கிழவன் என்னதான் "அவளை டைவர்ஸ் பண்ணப்போறேன்" என சீரியசாக சீறினாலும் அவர்தம் பிள்ளைகளோ பேரக்குழந்தைகளோ காமடியாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அந்தப் பெரியவரைப் பொறுத்தவரையில் அது breach of mutual trust என்கிற கோணத்தில் விவகரத்தாகி பிரிந்து மன்னித்து இணைகிறார்கள். காதல் திருமணமோ அல்லது பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணமோ பரஸ்பர நம்பிக்கை என்பது இல்லை என்றால் உடைந்தே போகும் என்பதை அழகாக பேசும் படம். ஒருவருக்கொருவர் செல்போனை மாற்றினாலே உறவு முறிந்துபோகும் என்று பேசும் லவ்டுடே படம் பார்த்தபோது சிரிப்பாகத்தான் வந்தது. ஒருவர் அறியாமல் மற்றொருவர் டன் கணக்கில் ரகசியங்களை பேணும் ஒரு உறவில் நட்புக்கே சாத்தியமில்லாத போது காதல் எங்கே வருகிறது. காதல் என்பது பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கை அல்லவா?! மேற்கூறிய இதே நேர்க்கோட்டில் மற்றொரு சிறு படத்தையும் பார்த்தேன். "மாடர்ன் லவ் சென்னை" என்கிற ஆன்தாலஜியில் பாரதிராஜா இயக்கி இருந்த "பறவைக் கூட்டில் வாழும் மான்கள்" இந்தப் படம் கணவன் திருமணம் தாண்டிய உறவில் இருக்கிறான். கணவன் மனைவி மற்றும் கணவனின் காதலி மூவரும் பரஸ்பரம் பேசி குழந்தைகள் மனம் நோகாமல் கணவனை காதலியோடு சேர்த்து வைத்துவிட்டு சுதந்திர மனுஷியாக வெளியேறும் நாயகி. என்னது பாலுமகேந்திரா வாடை வருகிறதே என்று பார்த்தால் "நண்பன் பாலுமகேந்திரா வுக்கு நன்றி" என்று படத்தை முடித்திருப்பார். நமது சமூகத்தில் திருமணம் என்கிற அமைப்பு ஆணை வானளாவிய அதிகாரத்தோடும் சுதந்திரத்தோடும் அதேவேளை பெண்ணை வீட்டுக்குள் மட்டுமே வைத்திருந்த வரை நம்மாளுவ நினைத்த இடத்தில் எல்லாம் கோவணத்தை அவிழ்த்தனர். தற்போதைய காலகட்டத்தில் இருவரும் சுயசார்போடும் சுயமரியாதையுடனும் யோசிக்கவும் வாழவும் செய்கிறார்கள். அதனால் லவ்&பிரேக்கப் போல திருமணமும் முறிவும் ஆகிவிட்டது. கெட்டிபட்டுப்போன பாலின சமத்துவம் இல்லாத திருமணம் என்கிற அமைப்பு ஏற்படுத்தும் சமூக நிர்ப்பந்தங்கள் திருமணம் தாண்டிய உறவுகளை விபரீதமானதாக ஆக்கிவிடுகிறது. சிறிது காலத்தில் தற்போதைய நிலையில் உள்ள திருமணம் என்கிற அமைப்பு முற்றிலும் வேறுவகையில் மீளுருவாக்கம் செய்யப்படலாம். "நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டு வருகிறேன் இருவரும் ஊதி ஊதி திண்போம்" என்கிற கதையெல்லாம் இனி வேலைக்காகாது என்றே தோன்றுகிறது. ஆகவே எந்த நிலை உறவு ஆயினும் எந்த காலகட்டம் ஆயினும் பரஸ்பர அன்பு மற்றும் நம்பிக்கை இல்லாவிட்டால் தகர்ந்தே போகும்

No comments:

Post a Comment

அணுக்கரு உலை - அமைப்பு

அணு உலைகளில் அப்படி என்னதான் இருக்கிறது?! " டேய் அருண், ஏற்கனவே நாம அணு உலைகள் பற்றி பேசினோம் இல்லையா?!" "ஆமாம்பா, அணு உலை...