Monday, July 1, 2024
கறிவிருந்து!!
"அகிலா கறி எடுக்கட்டுமா உனக்கு சுவரொட்டி வாங்கிட்டு வரேன்"
"ஞாயிற்றுக்கிழமை ஒரு பங்க்ஷன் திருச்சியில் இருக்கு அங்க மத்தியானம் நான் வெஜ்தான் கண்டிப்பா போடுவாங்க ஞாயிற்றுக்கிழமை ஃபங்ஷன் வேற!!"
நம்முடைய தொடர் டயட்டை கரெக்டா ஃபாலோ பண்ணனும் என்கிற எண்ணத்தில் இரண்டு நாட்கள் முன்பில் இருந்தே ஞாயிற்றுக்கிழமை கறி விருந்துக்கு தயாராகிக் கொண்டிருந்தேன்.
சனிக்கிழமை வேறு விஷயமாக தஞ்சாவூர் சென்றபோது வசந்த பவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை!!
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டேன். அன்றைக்கு ஞாயித்துக் கிழமைன்னு கூட பாக்கலையே!!
கொஞ்சம் கம்மியான சொந்தம் தான், வழக்கமாக ஒரு ஆள் போனா கூட போதும் தான். ஆனா இந்த ஃபங்ஷன் க்கு குடும்பத்தோடு தான் போவது என்று மூன்று காலில் நின்றோம். அதாவது மூவருமே ஒற்றைக் காலில் நின்றோம்.
"ஏங்க, நான் மட்டும் அக்கா கூட போயிட்டு வந்துடறேன், நீங்களும் அருணும் வீட்டிலேயே இருங்க!!" என்று ஒரு திடீர் குண்டை வீசினார்.
"ச்சேச்சே அப்படி செய்யறது மரியாத இல்ல, நம்மள மதிச்சி கூப்டாங்க, குடும்பத்தோட வாங்கன்னு வேற சொல்லி இருக்காங்க" அவ்வ்... எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு.
காலை பத்து மணிக்கு ஒன் டு ஒன் பஸ், 200% உறுதியாக அகிலாவால் கிளம்ப முடியாது. அடுத்ததாக உள்ள பேருந்தை பிடித்தோம். 1-1 ஐ விட்டாலும் 1-5 ஐ பிடித்தோம்.
திருச்சியில் எந்த இடம் என்பதை தெள்ளத் தெளிவாக மனதில் பதிய வைத்துக் கொண்டு மேப்பில் பத்துமுறை சரி பார்த்துக் கொண்டேன்.
"அகிலா, எங்க வந்துட்டு இருக்க?!" அகிலா அக்காவிடம் இருந்து போன்.
"ஏன் பந்தி முடிய போவுதா?! என்று பதட்டமானேன்.
"உங்களுக்கு வழி தெரியுமான்னு கேட்டாங்க!!"
"அகிலா, எங்க ஊரு சுத்தமல்லியை விட எனக்கு திருச்சியைத்தான் நல்லாத் தெரியும் நீ கவலைப் படாதே!!"
மண்டபத்தில் இருந்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டு இருந்தது.
மடமடவென்று வேகமாக கிரவுண்ட் ஃபுளோர் உள்ளே நுழையப் போனேன்.
"ஏங்க மேலப் போயி மேடைல மொய் கொடுத்துவிட்டு வந்துடுவோம்"
"சாப்டு தெம்பா மேல போலாமே!!" என்றதற்கு அகிலா கோபப் பார்வை வீசினார் அந்தப் பார்வையின் அர்த்தம் "அலையாதீங்க".
லேசாக ஒருக்களித்து திறந்திருந்த கதவின் வழியே வரிசையாக பரப்பி வைத்த பீடா "சீக்கிரம் வாங்க பாஸ்" என்று கண் சிமிட்டியது.
"மாப்ள, சாப்டு வந்துடுங்க தீர்ந்துடப் போவுது" என மாமா கேட்ட மாத்திரத்தில் திகீர் என்றது.
போன உடனே மேடையேறி மொய் கொடுத்தோம். அடுத்த நொடியே கீழே நோக்கி பாயும் தோட்டாவாக மாறிய என்னை மீண்டும் தடுத்து நிறுத்தி, "ஏங்க, அக்காவ விசாரிச்சிட்டு போவோம் வாங்க" என்று முகமே மறந்து போன முன்னூறு கிமீ தூரத்து சொந்தம் ஒருவரை நோக்கி அழைத்துச் சென்றார் எனது மனைவி.
அடுத்து ஒரு அண்ணன் அதற்கடுத்து சில அடையாளம் தெரியாத பந்தங்கள்.
"தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தவணை முறையில் மரணம் நிகழும்" என்ற பாடலின் பொருள் விளங்கிய தருணம்.
ஒரு வழியாக கீழ்தளத்தில் இருந்த சாப்பாட்டுக் கூடத்தை அடைந்தோம்.
போகும்போதே இலைகளை ஸ்கேன் செய்தபடி சென்றேன்.
மட்டன் சுக்கா, சிக்கன் 65, மட்டன் பிரியாணி இத்யாதிகள் கண்களை குளிரச் செய்தன.
அமர்ந்த உடனே "இது வெஜிட்டேரியன் வரிசை இல்லையே" என அருகில் இருந்த வயதான நபரிடம் வினவினேன். அவர் "என்னது வெஜிடேரியன் வரிசையா?!" வித்தியாசமாக நோக்கினார்
அப்போது தான் அந்த பெருத்த ஏமாற்றமான துன்பியல் சம்பவம் நடந்தது.
ஆக்சுவலாக அங்கே வெஜிடேரியன் விருந்து மட்டுமே ஏற்பாடு ஆகியிருந்தது.
நான் கண்டதாக மேலே கூறியவை யாவும் தோற்றப்பிழையே!!(optical illusion)
சேனைக்கிழங்கை பொறியல், காலிஃபிளவர் 65 மற்றும் மஷ்ரூம் பிரியாணி இவை தான் எனக்கு அப்படி காட்சியளித்தன.
"என்னங்க, வெஜ்ஜூ" என்று அகிலா ஜ் ல் கொடுத்த அழுத்தம் தாளாமல் அந்த இடத்தில் பூமி அரையடி அழுந்தியது.
"நீயும் அப்படித்தானே நெனச்ச?! அப்போ நான் நெனச்சது ஒன்னும் தப்பில்லையே" என்ற விவேக் டெம்ப்ளேட் தான் ஞாபகம் வந்தது.
போட்டது வெஜ் பிரியாணி & மீல்ஸ் அதுக்கு பீடா ஒன்னுதான் கொறைச்சல் என்று ஐஸ் கிரீமில் கரையைக் கடந்தோம்.
"அவன் ஒரு
பட்டு வேட்டி பற்றிய
கனாவில் இருந்த பொழுது
கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது!!" அட, இந்த கவிதை எல்லா இடங்களிலும் சிக்குன்னு பொருந்திப் போவுதே!!
Subscribe to:
Post Comments (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...
No comments:
Post a Comment