Tuesday, July 9, 2024
கதவுகள் திறந்தே இருக்கட்டுமே!!
கதவுகள் திறந்தே இருக்கட்டுமே!!
எனது மகன் அருணும் அவனது நண்பன் ஒருவனும் இயற்பியல் சம்பந்தமாக உரையாடிக் கொண்டிருந்தனர் அவனது நண்பன் கணிதம் இல்லாத அறிவியல் பாடப்பிரிவில் படிப்பவர்.
"டேய் அருண் இந்த ஸ்டெப் எங்கேருந்துடா குதிச்சிது?"
"டேய் அது பைனாமியல் தியரம் டா?!"
" எது பைனமியலா?!"
" ஆமாண்டா அது 11-ம் வகுப்பு கணக்கு பாடத்தில் வரும்"
இதுக்கே இப்படி என்றால் Integral symbol எல்லாம் வரும் இடங்களில் 'என்னது கொட கம்பியை போட்டு வச்சிருக்காங்க?' என்றெல்லவா கேட்பான்
மேல்நிலை வகுப்புகளில் ஃபர்ஸ்ட் குருப் செகண்ட் குருப் என்றெல்லாம் பாடவாரியாக பிரிவுகள் உண்டு. தேர்வு நோக்கங்களுக்காக குருப் கோட் எண்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டிருக்கும். அந்த எண்கள் தான் தமிழகம் முழுவதும் யுனிக்காக இருக்கும். மற்றபடி குருப்புகளின் பெயர்கள் பள்ளிக்கு பள்ளி வேறுபட்டு இருக்கும்.
மொழிப்பாடங்களோடு சேர்த்து இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் என்கிற பிரிவு தான் காலங்காலமாக முதல் குருப் என்று அழைக்கப் பட்டு வந்தது. 90 களின் துவக்கத்தில் கணினிப் பிரிவு என்ற ஒன்று அறிமுகம் ஆகிய போது இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் என்று மற்றுமொரு ஃபர்ஸ்ட் குருப் உதயமானது.
இவையன்றி Pure Science Group என்ற ஒன்று இருக்கும். அங்கே இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்கள் இருக்கும். அதாவது உயிரியல் பாடம் சற்று பல்க்காக தனித்தனியாக இருக்கும் அவ்வளவு தான்.
”எனக்கு கணக்குன்னா தாங்க பயம் மற்றபடி எனக்கும் கனிணி அறிவியல் பிடிக்கும்” என்று கூறும் பசங்களுக்காக கணக்கு இல்லாத கனிணி அறிவியல் பிரிவொன்றும் உதயமானது. அதாவது அவர்களுக்கு இயற்பியல் வேதியியல், கணினி அறிவியல் மற்றும் உயிரியல் பாடங்கள் இருக்கும்.
பிரச்சனை என்னவென்றால் இயற்பிலிலும் சரி வேதியியலிலும் சரி ஏராளமான மேல்நிலை கணித கருத்துக்கள் அந்த பாடங்களை தூணாக இருந்து தாங்கி நிற்கும். மேல்நிலைக் கணிதம் பயிலாத மாணவர்கள் அதை அப்படியே விழுங்கித் தொலைக்க வேண்டியதுதான். ஒரு ஆனியனும் புரியாது.
அறிவியலின் ராணி கணிதம் என்பார்கள். கணித அறிவு இல்லாத ஒருவர் இயற்பியலையோ வேதியியலையோ ஆழமாக புரிந்து கொள்ள இயலாது. அதுவும் போக கணிதப் பாடம் இல்லாமல் கணினி அறிவியல் பாடத்தை 11 & 12 வகுப்புகளில் படிக்கலாம் ஆனால் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் சேர முடியாது. ஏனெனில் அங்கே அவர்களுக்கு கணிதப் பாடம் துணைப்பாடமாக வரும். கட்டாயமாக 3 பேப்பர்கள் கணிதம் உண்டு. கணித அடிப்படை அறிவு இல்லாத ஒருவர் கணினி நிரல்கள் எழுதுவதில் விற்பனர் ஆகமுடியுமா.
இந்த Pure science படிக்கும் மாணவர்கள் அறிவியலை Impure ஆகத்தானே படிக்கிறார்கள். கணிதம் இல்லாமல் அவர்களுக்கு இயற்பியலோ அல்லது வேதியியலோ தெளிவாக புரியுமா. மேலும் அவர்களால் கல்லூரியில் இளங்கலையில் இயற்பியலையோ அல்லது வேதியியலையோ எடுத்து படிக்க இயலுமா?
அதோடு மட்டுமல்லாமல் கணிதம் இல்லாத அறிவியல் பிரிவு மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்டை எழுத வேண்டிய சூழல் உள்ளது. சென்ற ஆண்டு நீட் தேர்வு வினாத்தாளில் இயற்பியலில் உள்ள 50 ல் 38 வினாக்கள் கணிதக் கருத்துகளை ஒட்டியே இருந்தன.
உயிரியல் பாடங்களை படித்து பி.எட் படித்து தேறியவர்கள் ஆசிரியப் பணிக்கான TET தேர்வினை எழுத வேண்டும். அவர்கள் கணிதப் பாடத்தை உள்ளடக்கிய TET தேர்வினைத் தான் எழுத வேண்டும். உயிரியல் பாடங்கள் படித்த பி.எட் பட்டதாரிகளுக்கு TET ல் கணிப் பாட வினாக்கள் சிம்ம சொப்பனமாக இருப்பதாகக் கூறக் கேட்டிருக்கிறேன்.
நான் கணிதப் பாடம் தான் உசத்தி எல்லோரும் கணிதப் பாடத்தை படித்தே ஆகவேண்டும் என்று கூறவில்லை. அதே வேளையில் அறிவியல் பாடங்கள் படிப்போர் மட்டுமாவது கணிதப் பாடத்தை உள்ளடங்கிய குருப் எடுத்து படிப்பது பல வகைகளில் அவர்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது.
முக்கியமாக நான் இந்த கட்டுரையை எழுத நேர்ந்த காரணம் இனிமேல் தான் வருகிறது.
எங்கள் பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலிடம் பெற்ற மாணவி அவர். தமிழகத்தில் முதலில் 11 மாவட்டங்களில் மட்டும் பைலட் ப்ராஜக்ட்டாக சிறப்பு மாதிரி பள்ளிகள் துவங்கப் பட்டபோது அரியலூரிலும் வந்தது. அந்த பள்ளியின் வசதி வாய்ப்புகள் பற்றி அறிந்த காரணத்தினால் அந்த மாணவிக்கு அங்கே இடம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி இருந்தேன்.
அந்தப் மாணவியின் தந்தையும் ஆர்வமாக இருந்தார். ஆகஸ்ட் மாத வாக்கில் அந்த மாணவிக்கு இடம் கிடைத்து இருப்பதாக மெயில் வந்தது. உடனடியாக அழைத்து தகவல் கூறினேன். அவர் பயின்று வந்த பள்ளியில் இருந்து இங்கே வந்து சேர வேண்டும்.
அடுத்த நாள் அவர் தந்தைக்கு பேசினேன். “சார் அங்க கணக்கு இல்லாத பயாலஜி குருப் தான் சார் இருக்கு. ஒரு வேளை மெடிக்கல் இல்லன்னா இஞ்சினியரிங்கோ அல்லது இயற்பியல் வேதியியல் பாடங்களையோ படிக்க முடியாது, அதனால வேண்டாம் என்று வந்து விட்டோம் சார்” என்றார்
இந்த ஆண்டும் ஒரு மாணவிக்கு இடம் கிடைத்தது. அவர் மருத்துவம் படிப்பதையே இலக்காக கொண்டு படிப்பவர். ஆனால் அவருக்கு உயிரியல் இல்லாத கணிதப் பிரிவுதான் கிடைத்தது. இரண்டு வார காத்திருப்புக்குப் பிறகு யாரோ ஒரு உயிரியல் பிரிவு மாணவி டிசி வாங்கியதால் இவருக்கு கிடைத்தது. கணிதம் மற்றும் உயிரியல் பிரிவு இருந்தால் அலைக்கழிப்பு இன்றி சேர்ந்திருப்பார்.
இன்று வரையில் சிறப்பு மாதிரிப் பள்ளிகளில் இருக்கும் நிலை இதுதான். அங்கே NEET க்கான பிள்ளைகள் தனியே மற்றும் IIT-JEE மற்றும் இதர பொறியியல் சார்ந்த படிப்புகள் தனியே என பிரித்து பயிற்றுவிக்கிறார்கள். முன்னவர்கள் இயற்பியல் வேதியியலோடு, உயிரியல் மற்றும் கணினி படிக்கிறார்கள். பின்னவர்கள் உயிரியலுக்குப் பதிலாக கணிதம் படிக்கிறார்கள்.
எல்லோரும் கணிதம் மற்றும் உயிரியல் பிரிவு படிக்கட்டும், சிறப்பு வகுப்புகள் மற்றும் இணைய வழி கோச்சிங் மட்டும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப NEET OR IIT-JEE ல் சேர்ந்து படிக்கட்டுமே.
மாவட்டம் முழுவதிலும் இருந்து படிப்பில் கெட்டிக்கார குழந்தைகளைத் தான் தேர்வு செய்து சிறப்பு மாதிரிப் பள்ளிகளில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். நீட் எழுதும் குழந்தைகள் கூடுதலாக கணிதப் பாடத்தை பயில்வதால் என்ன ஆகிவிடப் போகிறது. மேலும் சேரும் அனைத்து குழந்தைகளையும் பனிரெண்டாம் வகுப்பு முடிந்த உடன் நீட்டில் அரசுக் கல்லூரி கிடைக்கும் அளவுக்கு மதிப்பெண் பெற வைத்து விடமுடியுமா. 90 விழுக்காட்டுக்கு மேல் Repeaters தான் அரசுக் கல்லூரிகளையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டையும் பிடிக்கிறார்கள்.
மெடிக்கல் இல்லன்னா இஞ்சினியரிங் என்பதே பெரும்பாலான பெற்றோரின் சிந்தனைப் போக்காக இருக்கிறது. மெடிக்கல் கிடைக்காத நிலையில் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் அந்த குழந்தைகள் இஞ்சினியரிங் படிக்க எண்ணினால் அதற்கு வாய்ப்பு இல்லையே.
நீட் தேர்வு வினாக்களிலேயே இயற்பியலில் கேட்கப்படும் வினாக்களில் பெரும்பகுதி கணக்கை அடிப்படையாக கொண்டவை என்பதால் மேல்நிலையில் கணக்கை கூடுதலாக படிப்பதால் என்ன நட்டமாகிவிடப் போகிறது.
அரசுப் பள்ளியோ, சிறப்பு மாதிரிப் பள்ளியோ பனிரெண்டாம் வகுப்பு முடிந்த கையோடு மாணவனை வெளியே அனுப்பி விடப் போகிறோம். அவன் ஒரு வேளை Repeater ஆக NEET தேர்வு எழுத எண்ணினாலும் அது அவனது சொந்தப் பொறுப்பில் தான்.
அரசுப் பள்ளியில் பயின்ற மாணவன் ஆனாலும் கூட 7.5% ஒதுக்கீட்டை பெற Repeater ஆக கோச்சிங் சேர்ந்து தேர்வு எழுதினால் தான் இடம் உண்டு. ஆகவே தனியார் கோச்சிங் செல்ல வசதி வாய்ப்பு உள்ள அரசுப் பள்ளி மாணவன்தான் NEET மூலமாக மெடிக்கல் சீட் பெறமுடியும் என்பது தான் நிதர்சனம்.
அப்படி இருக்கும் போது மாவட்டத்திலேயே சிறப்பிடம் பெற்ற குழந்தைகளை பொறுக்கி எடுத்து கோச்சிங் கொடுத்து மெடிக்கல் இல்லை என்றால் இஞ்சினியரிங் என்கிற வாய்ப்பினை ஏன் அடைக்க வேண்டும்.
இறுதியாக கணக்கு இல்லாத அறிவியல் குருப் என்பது சுத்த மோசடியான விஷயம். அறிவியல் என்பது கணக்கோடு இணைந்தே பயணிக்க வேண்டிய ஒன்று.
பள்ளிகளில் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் திறந்தே இருக்க வேண்டுமானால் கணிதப் பாடம் அவசியம் வேண்டும்.
அவர்களுக்கான அனைத்து கதவுகளும் திறந்தே இருக்கட்டுமே!!
கீழே படத்தில் இருப்பது 12 ஆம் வகுப்பு இயற்பியல் புத்தகம் பாருங்கள் எவ்வளவு கணக்குகள் இருக்கின்றன என்று நிச்சயமாக இந்த விஷயங்கள் கணிதம் சாராத அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு புரியாது
Subscribe to:
Post Comments (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...
No comments:
Post a Comment