Sunday, June 15, 2025
கணக்கு ஏனப்பா இவ்வளவு கஷ்டமா இருக்கு?!
சமீபத்தில் கணித பாடத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒரு கலந்துரையாடல் நடத்தினோம்.
"எனக்கும் கணக்குக்கும் அப்போதிலிருந்தே ஆகாது ஆனாலும் என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்!!" இன்று கோவை சரளா நெஞ்சுக்கு புலம்பித் தள்ளி விட்டார்கள்.
அவர்களுடன் கலந்துரையாடலில் சில பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டார்கள். அனைவரும் எட்டாம் வகுப்பு படிப்பவர்கள் அவர்களிடம் விசாரித்த போது கணித பாடம் தான் எங்களுக்கு மெத்தப் பிடிக்கும் என்று குஷியாக கூறினார்கள்.
சின்ன வயதில் கணிதத்தோடு கட்டி புரண்டு கொண்டிருந்த இந்த பசங்களுக்கு என்னதான் ஆச்சு ?!பட்டப்படிப்புகளில் கணித பிரிவுகள் காற்று வாங்குகின்றனவே!!
பத்தாம் வகுப்பில் கணித பாடத்தில் எவ்வளவு சிரமப்பட்டு படித்து தேறி இருந்தாலும் மேல்நிலை வகுப்புகளில் கணித பாடம் உள்ள பிரிவைத் தான் பெரும்பான்மை மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள். ஏனென்றால் எல்லோருமே கல்லூரிகளில் கணிதத்தை ஒரு பாடமாக கொண்டிருக்கும் பிரிவை தேர்வு செய்தல் தங்களது வாழ்க்கைக்கு நலம் பயக்கும் என்று எண்ணுகிறார்கள்.
ஆனால் அதுவே கணிதப் பிரிவை பட்டப்படிப்பில் தேர்வு செய்வது என்றால் பின்னங்கால் பிடரியில் பட தெறித்து ஓடுகிறார்கள்!!
குழந்தைகளுக்கு சிறு பிராயத்தில் கணக்கோடு இருந்த இணக்கம் வளர்ந்த பிறகு பிணக்காக மாறியது எப்படி?!
தவறு எங்கே நடந்தது?!
"குற்றம் நடந்தது என்ன?" காண்போம் வாருங்கள்.
எட்டாம் வகுப்பு வரைக்கும் கணக்கில் இருக்கும் அனைத்து பாடப்பிரிவுகளும் வாழ்க்கையோடு இணைந்து வரும் அனைத்து கணக்குகளையும் நடைமுறை வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்க இயலும்.
கணித அடிப்படை செயல்பாடுகளில் சிரமம் உள்ளவருக்கு அதனை போக்க வேண்டியது அந்த காலகட்டத்தில் அத்தியாவசியமான ஒன்று. முழுக்கல் பின்னங்கள் மற்றும் தசம எண்கள் போன்ற அனைத்திலையும் மேற்காணும் 4 செயல்பாடுகளையும் ஐயம் திரிபுர கற்றுத் தர வேண்டியது அவசியம்.
அடுத்ததாக அடுக்குக்குறி சார்ந்த விஷயங்களை மிகவும் அடிப்படையில் இருந்து அடுக்குகள் உருவாகும் விதம் அடுக்குக்குறி எண்களை கையாளும் விதம் அடுக்குக்குறி எண்களிலும் இந்த அடிப்படை செயல்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அனைத்து விஷயங்களையும் கற்றுத் தர வேண்டும்.
அடுத்ததாக வடிவங்கள், புள்ளி, கோடு & முக்கோணம் என அடிப்படை வடிவங்களையும் கோணம் தொடர்பான விஷயங்களையும் படத்துடன் வாழ்வியல் நடைமுறைகளில் அவர்கள் காணும் பொருட்களின் வழியே பொருத்தி காண்பித்து கற்றுத் தர வேண்டியது அவசியம்.
நூறு விழுக்காடு தேர்ச்சி என்கிற எந்த நெருக்கடியும் இந்த காலகட்டத்தில் இருக்காது எனவே புத்தகத்தை கரைத்து மாணவர்கள் வாயை பிளந்து உள்ளே ஊற்றுகிறேன் என்று எந்தவிதமான விபரீத முயற்சிகளிலும் இறங்காமல் அடிப்படைகளை வலுப்படுத்துதல் ஒன்றையே முக்கிய கடமையாக கொண்டு செயலாற்ற வேண்டும்.
எட்டாம் வகுப்பு வரையில் இந்த விஷயங்களில் மிகுந்த கவனத்தையும் சிரத்தையையும் எந்த கணித ஆசிரியர் மேற்கொள்கிறாரோ அவர் வசம் இருக்கும் மாணவர்கள் கணிதத்தில் கெட்டிக்காரர்களாக வருவது நிச்சயம்.
ஆசிரியர்கள் எவ்வளவு கர்ம சிரத்தையோடு வேலை செய்தாலும் மாணவர்களை நட்போடும் அன்போடும் சகஜமாக மாணவர்களால் அணுகத்தக்க ஆசிரியராகவும் இருக்க வேண்டியது மிக அவசியம். அப்போதுதான் மேலே கூறிய கடமையை நிறைவேற்றுவதில் முழு வெற்றியை ஆசிரியரால் காண இயலும்.
சரி ஒன்பது பத்து வகுப்புகளுக்கு வருவோம்.
ஒன்பதாம் வகுப்பை பொறுத்தவரையில் எண்ணியலில் முறுட்டெண்கள் (surds like square root of two ) எனப்படும் விகிதமுறா எண்கள் அறிமுகம் ஆகின்றன. அடுக்குக்குறி சார்ந்த விஷயங்களை எட்டாம் வகுப்பில் சரியாக புரிந்து கொள்ளாத மாணவர்களுக்கு இந்த முறுட்டு எண்களை புரிந்து கொள்வது மிகுந்த சிரமம் அளிக்கும்.
அடுத்ததாக இயற்கணிதம் எனப்படும் அல்ஜீப்ரா இங்கே பாட புத்தகத்தில் மாறி மாறி நேரிய சமன்பாடு இரண்டு மாறிகளை கொண்ட நேரிய சமன்பாடுகளுக்கு தீர்வு காணுதல் போன்ற விஷயங்களில் உடனே குதித்து விடக்கூடாது.
மாறாக நடைமுறை வாழ்க்கை கணக்குகளை நேரிய சமன்பாடுகள் வடிவில் மாற்றி மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் அதன்பிறகு சமன்பாடுகளை கொண்டு கணித அடிப்படை செயல்பாடுகளை செய்யும் விஷயங்களை மெல்ல மெல்ல பிளஸ் மைனஸ் தவறுகள் நேரா வண்ணம் தெளிவுர செய்வதை கற்றுத்தர வேண்டியது அவசியம். இந்த அடிப்படை விஷயங்களில் பின் தங்கும் மாணவர்களுக்கு தான் அல்ஜீப்ரா எட்டிக்காயாய் கசக்க துவங்கிவிடும்.
சமன்பாடுகளைக் கொண்டு அடிப்படை செயல்பாடுகளை செய்ய எந்த சிரமமும் மாணவர்களுக்கு ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டோம் என்றால் அடுத்தடுத்த வகை கணக்குகள் இனிக்க துவங்கிவிடும்.
அடுத்ததாக மிக முக்கியமானவை வடிவங்கள். புள்ளிகள் கோடுகள் போட்டு துண்டுகள் கோட்டு கதிர்கள் அவை சந்திக்கும் இடத்தில் ஏற்படும் கோணங்கள் அதன் பிறகு முக்கோணங்கள் அவற்றின் வகைகள் இணை கோடுகள் அதன் குறுக்கே ஒரு கோடு கொண்டு வெட்டினால் கிடைக்கும் கோணங்களின் பண்புகள் என ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கும் ஒரு பகுதிதான் இது.
இந்த பகுதியில் ஒவ்வொரு பண்புக்கும் ஒவ்வொரு விதிக்கும் ஏராளமான கணக்குகளை, செயல்பாடுகளை படங்களோடு செய்து பழக்க வேண்டும். உதாரணமாக முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180 டிகிரி நாற்கரத்தின் எதிர் எதிர் கோணங்கள் 180 டிகிரி போன்ற பண்புகளுக்கெல்லாம் ஏராளமான கணக்குகளை படங்களை வைத்து உருவாக்கித் தர முடியும். அவற்றை சுவாரசியமாக மாணவர்கள் செய்து பழகி விட்டார்கள் என்றால் என்றுமே அந்த கணக்குகள் மறக்காது. பாடப்பகுதிகளை நடத்திக் கொண்டிருக்கும் காலங்களில் வகுப்பறையில் உள்ளே நுழைந்ததும் ஒரு படத்தை போட்டு ஒரு கணக்கை உருவாக்கி அவர்கள் வசம் ஒப்படைத்து விட்டால் வகுப்பறையில் துவக்கமே சுவாரசியமாக அமைந்துவிடும்.
நான் கரும்பலகையில் படத்தை வரைந்து கேள்விப் பந்துகளை மாணவர்களை நோக்கி விட்டெறிந்தால் அவர்கள் அதற்கான பதில்களை அள்ளி வீசுவார்கள் வகுப்பே சுவாரசியமாகிவிடும் சில மாணவர்கள் இடத்தில் அமரக்கூட மாட்டார்கள் போர்டை நோக்கி ஓடி வந்து படத்தை காட்டி காட்டி பதில் கூறுவார்கள்.
இதுபோன்ற ஒரு உற்சாகத்தை பற்ற வைத்து விட்டால் அறிமுறை வடிவியல் மாணவர்களுக்கு மிகவும் பிடித்த பாடம் ஆகிவிடும். அதன் பிறகு தேற்றமோ தேற்றத்தை கொண்டு தீர்க்க வேண்டிய கணக்குகளோ பெரிய விஷயமாக இருக்காது.
இந்த படங்களில் இருந்து தன் கோணங்களும் கோணவிகிதங்களும் கோணங்களைக் கொண்டு உயரங்களையும் நீளங்களையும் அளக்கும் சூட்சுமங்களும் உள்ளடங்கிய திரிகோணமிதி எனப்படும் trigonometry மாணவர்களுக்கு புலப்பட துவங்கும். இந்தத் துறை இல்லாமல் விண்வெளி துறையின் வளர்ச்சி இந்த அளவுக்கு சாத்தியப்பட்டிருக்குமா எனவே அறிவியல் துறை செல்வதற்கு தேவையான ராஜபாட்டையை உருவாக்கிக் கொண்டு முன்னே செல்வது கணிதம் அன்றி வேறு யார்?!
அதோடு மட்டுமல்ல இந்த படங்கள் வடிவங்களின் பண்புகள் வடிவங்களின் வகைகள் இவற்றை ஐயமின்றி கற்றுக் கொண்டார்கள் என்றால் வடிவங்களை கிராப் தளத்தில் உட்கார வைத்து (shapes in x,y coordinate ) படிக்கும் பகுமுறை வடிவியல் மாணவர்களுக்கு தெளிவாக புரியும்.
ஆகவே ஒன்பதாம் வகுப்பு வரை எந்த பரபரப்பும் இன்றி மிக நிதானமாக சுவாரசியமாக மாணவர்களோடு இணைந்து உயிரோட்டம் உள்ள வகுப்பறையை உருவாக்கி அங்கே இந்த கருத்துக்களை ஆணித்தரமாக மாணவர் மனதில் பதித்தோம் என்றால் அவர்கள் அடிப்படையில் வலுவானவர்கள் ஆகிவிடுவார்கள்.
இந்த அளவுக்கு அடிப்படை வலுவான மாணவர்களுக்கு மேல்நிலை கணிதங்கள் தெள்ளத் தெளிவாக விளங்கும். முக்கியமாக பதினோராம் வகுப்பில் உள்ள அடிப்படைகளை மாணவர்கள் அள்ளி விழுங்காமல் புரிந்து படித்தார்கள் என்றால் கல்லூரி கணிதங்கள் வசப்பட்டுவிடும்.
முக்கோணவியல் எனப்படும் trigonometry ல் நூற்றுக்கணக்கில் சூத்திரங்கள் இருப்பதாக மாணவர்கள் குறைபட்டு கொள்கிறர்கள். ஆனால் அவை அனைத்தின் தோற்றுவாயும் ஏதேனும் சில விதிகளில் இருந்து தான் உண்டாகும்.
அந்த அடிப்படையை புரிந்து கொண்டால் சூத்திரங்களை நூற்றுக்கணக்கில் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். சூத்திரங்கள் தேவைப்படும் இடங்களில் மறந்து போனால் கூட அந்த இடத்திலேயே பென்சிலால் போட்டு இழுத்தோம் என்றால் வரிசையாக அனைத்து சூத்திரங்களும் வந்து கொட்டும். வாய்ப்பாடு மறந்து போகும் இடங்களில் கூட்டி கூட்டி சொல்வது போல சூத்திரங்கள் மறந்து போகும் இடங்களில் அதனை உருவாக்கிக் கொள்ளும் வல்லமை மாணவர்களுக்கு வந்துவிட்டது என்றால் எந்த நிலையிலும் கணிதம் அவர்களுக்கு கற்கண்டு தான்!!
இவை குறித்து உரையாடுவதற்கு இன்னும் ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன். இது தொடர்பாக வேறு ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள் சொல்கிறேன்.
மு.ஜெயராஜ்,
தலைமை ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
நாகமங்கலம்,
அரியலூர் மாவட்டம்.
Saturday, June 14, 2025
Three Good movies!!
கடந்த வாரத்தில் பார்த்த மூன்று படங்கள்.
Four good days
படத்தில் துவக்கத்தில் ஒரு வயதான தம்பதிகள் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள். அப்போது கதவு தட்டப்படுகிறது திறந்து பார்த்தால் இந்த பாட்டியின் மகள் (தாத்தாவின் மகள் அல்ல) .
அவர் எவ்வளவு கெஞ்சி மன்றாடி கேட்டும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டு கதவை அடைத்து விடுவார்.
நள்ளிரவில் மீண்டும் எழுந்து பார்த்தால் அந்த பெண் வெளியிலேயே உட்கார்ந்திருப்பார் குளிரில் நடுங்கி கொண்டு.
இவளுக்கும் மனது கேட்காது ஆனாலும் கதவை திறந்து விட மாட்டார் திரும்ப அடுத்த நாள் காலையில் அவள் பிடிவாதமாக இருப்பதால் என்னவென்று கேட்கும் பொழுது "நான் இதற்கு மேல் ட்ரக் பயன்படுத்த மாட்டேன், என்னை De-addiction center இல் சேர்த்து விடுங்கள்" என்று கெஞ்சி கேட்பார்.
அங்கே இவளுக்கு மருத்துவம் பார்த்து நான்கு நாட்களுக்கு பிறகு drug one shot வழங்குவார்கள் அது வரை கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.
அந்த நான்கு நாட்களில் என்ன நடந்தது என்பதுதான் கதை.
மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் படத்தில் முக்கால்வாசி நேரத்தை அம்மாவும் பெண்ணும்தான் ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பார்கள் ஆனாலும் கூட சுவாரசியமாக கதை செல்லும்.
இந்த படத்தில் போதைக்கு அடிமையாகி இருப்பவரின் நிலைமையை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக காண்பித்து இருப்பார்கள் நமக்கு பார்க்கும் போதே மிகவும் அதிர்ச்சியாகவும் பதட்டமாகவும் இருக்கும்.
முக்கியமாக படத்தில் கதாநாயகியின் பற்கள் கண்றாவியாக இருக்கும் உண்மையிலேயே அந்த விஷயத்தில் அவர்கள் எப்படி மேக்கப் போட்டிருப்பார்கள் என்பதை யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். கதாநாயகி அம்மாவாக நடித்திருப்பவர் நடிப்பும் மிகப் பிரமாதமாக இருக்கும்.
படம் மெதுவாகத்தான் செல்லும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. Netflix movie
STRAW
தமிழில் "எவனோ ஒருவன்" என்று மாதவன் நடித்த படம் உண்டு. இந்த ஸ்ட்ரா படம் அது போன்ற ஒரு படம் தான்.
இதற்கு மேலும் ஓட முடியாது என்கிற அளவுக்கு வாழ்க்கை ஒருத்தனை துரத்தி துரத்தி அடிக்கும் போது அவன் எப்படி மாறுகிறான் என்பதுதான் அந்த படம்.
கதாநாயகி ஒரு சிங்கிள் பேரண்ட். காலையில் எழுந்தவுடன் உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு மருந்து வாங்க வேண்டும் அதற்கு காசு தேவை.
மதியம் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவுக்கு பணம் கொடுக்க வேண்டும் நேற்று பணம் கொடுக்கவில்லை என்று எல்லோர் முன்னிலையிலும் பள்ளியில் கேட்டிருப்பார்கள். குழந்தைக்கு மீண்டும் அவமானம் நேர்ந்து விடக்கூடாது.
வெளியே வந்தால் இன்றைக்கு மதியத்திற்குள் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்றால் மூட்டை முடிச்சுகளை தூக்கி வெளியே வீசி விடுவேன் என்று வீட்டுக்காரர் மிரட்டுகிறார்.
வேலைக்கு சென்றால் முதலாளியின் சிடுசிடுப்பு அதையும் மீறி அனுமதி பெற்று தனது வங்கி கணக்கில் இருக்கும் சொற்ப தொகையை அப்படியே எடுத்து குழந்தைக்கு கொடுத்து வந்துவிடலாம் என்று பர்மிஷனில் செல்கிறாள்.
அவசர அவசரமாக வங்கிக்கு சென்று பணம் கிடைக்காமல் குழந்தையின் பள்ளிக்கு செல்கிறாள் அங்கே இவள் சரியாக பராமரிக்கவில்லை என்று குழந்தையை காப்பகத்துக்கு அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். அவர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டு மீண்டும் தான் பணி செய்யும் மாலுக்கு அவசரமாக காரை ஓட்டி வருகிறார் அப்போது கார் மற்றொரு காரை இடித்து விடுகிறது.
அது ஒரு போலீஸ்காரருடைய கார். லைசென்ஸ் பார்த்தால் அது காலாவதியாகி இருக்கிறது அதை புதுப்பிக்க பணம் தேவை. போலீஸ்காரர் தான் இவளுடைய காரை நெட்டி தள்ளி பந்தாடியிருப்பார் ஆனாலும் கூட இவளை அபராதம் கட்டச் சொல்லி காரை பறிமுதல் செய்து கொண்டு சென்று விடுகிறார்கள்.
மீண்டும் மாலுக்கு வந்தால் பர்மிஷனர் சென்ற இவள் தாமதமாக வந்ததால் கோபத்தில் அந்த சிடுசிடு முதலாளி இவளை வேலையை விட்டு தூக்கி விடுகிறார்.
சரி சம்பளமாவது கொடுங்கள் என்று கேட்டால் அதை நான் தபாலில் அனுப்பி வைக்கிறேன் என்கிறார்.
அப்போது அங்கே இரண்டு பேர் வந்து திருட முனைகிறார்கள். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் துப்பாக்கி இவள் கைக்கு வந்து எதேச்சையாக வெடித்து முதலாளி இறந்து போகிறார்.
இவள் ரத்தக்கரை படித்த தனது சம்பள காசோலையை எடுத்துக்கொண்டு வங்கிக்கு ஓடுகிறாள்.
படத்தின் முதல் கால் மணி நேரத்திலேயே இவ்வளவு பரபரப்பும் கலவரமும் நடந்து முடிந்துவிடும்.
இதற்கு பிறகு இதற்கு மேல் பரபரப்பும் பதட்டமும் இருக்கும்.
அதை மிகவும் எமோஷனலாக திரைக்கதை அமைத்து கொண்டு சென்று இருப்பார்கள்.
நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும். அவ்வளவு உருக்கமான படம்.
கதாநாயகியாக நடித்தவர் பிரமாதமாக நடித்திருப்பார். படம் நெட்ஃபிளிக்ஸ் ல் உள்ளது.
லெவன்
பெயர் ஆங்கிலத்தில் இருந்தாலும் இது ஒரு தமிழ் படம்.
ஒரு சைக்கோ சீரியல் கில்லர் வகை படம்.
சென்னையில் தொடர்ந்து கடத்தப்பட்டு எரித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் நடக்கின்றன போலீசுக்கு உருப்படியாக ஒரு துப்பும் கிடைக்கவில்லை இந்த கேசை புலனாய்வு செய்யும் அதிகாரி விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார்.
அந்த இடத்திற்கு மற்றொரு காவல் அதிகாரி வருகிறார். அவர் கொலைகளை புலனாய்வு செய்து கொலையாளியை எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை.
ஆனால் கதைக்குள்ளும் திரைக்கதையிலும் அத்தனை சுவாரசியம்.
படத்தின் ஹீரோவாக வரும் காவல் அதிகாரி மருந்துக்கு கூட ஒரு ஃபிரேமிலும் சிரிக்க மாட்டார்.
கொலைகளுக்கான காரணங்களை விளக்கும் பிளாஷ் பேக் காட்சிகள் சற்று நீளமாகத் தான் இருந்தன. அதை தவிர்த்து பார்த்தால் படம் எந்த இடத்திலும் தேங்கி நிற்கவில்லை. மிகவும் விறுவிறுப்பாகவே சென்றது.
ஹீரோ அறிமுக காட்சியில் வரும் இரண்டு கேஸ்களும் சுவாரசியமாகவும் சண்டை காட்சிகள் மிரட்டலாகவும் இருந்தன.
முக்கியமாக பின்னணியில் ஒலித்த ஆங்கிலப் பாடல் மிகச் சிறப்பாக இருந்தது. படம் முழுவதுமே பின்னணி இசையை பிரமாதப்படுத்தி இருப்பார் இசையமைப்பாளர். படத்தில் பரபரப்புக்கு இதுவும் ஒரு காரணம்.
பெரிய படங்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்பு விளம்பர வெளிச்சம் காரணமாக இது போன்ற மின்மினி பூச்சிகள் கண்களுக்கு தெரியாமல் போய்விட்டன.
முக்கியமாக இந்த மாதிரி படங்களுக்கு அதிக தியேட்டர்களோ மாலைக் காட்சிகளோ அதிகம் ஒதுக்கப்படுவதில்லை.
இன்று இந்த படம் அரியலூர் சக்தி திரையரங்கில் வந்திருந்தது. நான் எதேச்சையாக அமேசான் பிரைமை திறந்து பார்த்தால் அங்கேயும் இருந்தது.
நானும் அமேசான் பிரைமில் தான் பார்த்தேன்.
Tuesday, May 27, 2025
From the Ashes -Saudi Arabian movie
From the Ashes -Saudi Arabian movie
கும்பகோணத்தில் நடந்த பள்ளி தீ விபத்தில் 90க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் வெளியேற வழி இன்றி தீயில் கருகி இறந்து போன விஷயத்தை நாம் மறக்க முடியாது.
அதுபோன்ற ஒரு தீ விபத்தை மையமாக கொண்டு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே நடைபெறும் பிரச்சனைகள் அந்த நாட்டின் கலாச்சார கெடுபிடிகள் குழந்தைகள் மீது பெற்றோர்கள் கல்வி சார்ந்து கொடுக்கும் அழுத்தங்கள் போன்ற பல விஷயங்களை பேசும் திரைப்படம் தான் இந்த From The Ashes.
Secondary school 2300 இதுதான் அந்தப் பள்ளியின் பெயர். அது பெண்கள் மட்டுமே படிக்கக்கூடிய ஒரு பள்ளி.
கைகள் உட்பட முழு உடலையும் மறைக்கும் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். மேலும் இதனை கண்காணிக்கவேறு கலாச்சார காவலர்கள் இருக்கிறார்கள். மாணவர்கள் அனைவரும் உள்ளே வந்த பிறகு வாட்ச் மேனால் பள்ளி வெளிப்புறமாக பூட்டப்படுகிறது.
பள்ளியில் படிப்பு நல்லொழுக்கம் இவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களை மாதா மாதம் ஹானர் செய்கிறார்கள். அந்த அடிப்படையில் மாணவி அம்ரீன் சையத் ஒவ்வொரு மாதமும் அந்த பெருமையை பெறுகிறார்.
அதே பள்ளியில் பள்ளி முதல்வரின் பெண் ராணா இரண்டாமிடத்தில் இருந்து வருகிறார். பள்ளி முதல்வருக்கு அது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. முதலிடத்தை பிடிப்பதற்கும் அம்ரின் போல சிறந்த மாணவி பட்டம் பெறுவதற்கும் ராணாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் .
மேலும் பள்ளியின் முதல்வர் தனது கணவருடன் விவாகரத்து வழக்கை நடத்திக் கொண்டு இருக்கிறார். குழந்தை ராணாவை தந்தை இடம் காண்பிக்கவே மாட்டேன் என்பதில் பிடிவாதமாகவும் இருக்கிறார்.
ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கும் குறும்பு கேங் போல இந்த பள்ளியிலும் மூன்று பேர் இருக்கிறார்கள் ஹேமா, மோனா மற்றும் மிஷல்.
பதின்பருவ குழந்தைகளுக்கு விதிக்கப்படும் அதீத கட்டுப்பாடு என்பது பிரஷர் குக்கர் போன்றது தான் சமயம் வாய்க்கும் போது வெடித்து வெளியேறிவிடும்.
தனிப்பட்ட முறையில் எனக்கு எப்போதுமே ஆண்கள் பள்ளி பெண்கள் பள்ளி என தனித்தனியே பள்ளிகளை நடத்துவதில் உடன்பாடு கிடையாது. அனைத்து பள்ளிகளுக்கு ஆண் பெண் இருவரும் படிக்கக்கூடிய இருபாலர் பள்ளிகளாக இருப்பது ஆரோக்கியமான இளைய சமுதாயத்துக்கு வழிவகுக்கும்.
சேர்ந்து படித்தாலே பேசினாலே இழுத்துக் கொண்டு ஓடி போய் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள் என்கிற அதீத கற்பனை காரணமாக நிறையபேர் சின்னத்தம்பி பட அண்ணன்மார்கள் போலவே அலைகிறார்கள்.
ஒரு சுரங்க பாதையில் அழைத்துச் செல்வது போல குழந்தைகளை கைப்பிடித்து வேற்று ஆண்களின் பார்வை படாத வண்ணம் சிறுவயதிலிருந்தே பெண்கள் பள்ளி பெண்கள் கல்லூரி என்று பார்த்து பார்த்து வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் வேலைக்கு செல்லும் போதோ அல்லது வேறு ஏதேனும் சூழலிலோ ஆண்களோடு கலந்து பேசும்போது அந்த உறவை எப்படி பேணுவது என்று அறியாமல் இருக்கிறார்கள்.
அவர்கள் பார்த்ததெல்லாம் அவர்களது அண்ணன்மார்கள் மாமன் மார்கள் என்ற நம்பகமான நெருங்கிய வட்ட ஆண்கள். எனவே வேற்று ஆண்கள் அவர்களை அணுகும் போது அவர்களைப் பற்றிய புரிதல் அவர்களுக்கு இருப்பதில்லை.
படத்தில் வரும் இந்த பள்ளியிலும் கட்டுப்பாடுகள் கட்டுக்கடங்காமல் விதிக்கப்படுகின்றன ஆனாலும் கூட அந்த குழந்தைகள் சிகரெட் பிடித்தல் உள்ளிட்ட ஏராளமான விதிமீறல்களை பள்ளி வளாகத்திலேயே செய்கிறார்கள்.
மாணவிகளிடமிருந்து சூயிங்கமோ அல்லது சிகிரட்டோ பறிமுதல் செய்யும் ஆசிரியர்கள் உடனடியாக மறைவிடம் ஏகி அதை துய்த்துப் பார்க்கத்தான் தலைபடுகிறார்கள்.
பள்ளியில் ஒரு குறிப்பிட்ட மாணவனை திரும்பத் திரும்ப முன்னிருத்துவது என்பது அவனுடைய வகுப்பில் அவனை தனிமைப்படுத்துவதற்கு ஒப்பாகும் என்பதை நான் பலமுறை கவனித்துள்ளேன். எனவே தேவைக்கு அதிகமாக ஒரு குறிப்பிட்ட மாணவர்களை அடிக்கடி முன்னிலைப்படுத்துதல் என்பது சரியாக இருக்காது.
ஆசிரியர்களை பாராட்டும் போது கூட எந்த ஒரு தனி ஆசிரியரின் சிறப்பான செயல்பாடுகளையும் உயர்த்தி பிடித்து பாராட்டுவது ஆசிரியர்களிடம் பிளவை ஏற்படுத்தக் கூடும் என்பதால் ஒட்டுமொத்தமாக பொதுப்படையாகவே பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
அடிக்கடி சிறந்த மாணவிக்கான விருது வாங்குவதாலும் அனைத்து செயல்பாடுகளிலும் முன்னிலை வகிப்பதாலும் இந்த படத்திலும் அப்படித்தான் அம்ரீன் சையது தனது வகுப்பில் பிற மாணவிகளின் பகையை சம்பாதித்துக் கொள்கிறாள்.
இந்தப் படத்தில் கவனித்த மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஆண்களின் படங்களை ஆல்பமாக ஒட்டி வைத்து இருக்கிறார் பள்ளியின் துப்புரவு தொழிலாளி. அவரிடம் காசு அல்லது பொருள் கொடுத்து அந்த படங்களை பார்ப்பதை மாணவிகள் பள்ளி நிர்வாகத்துக்கு தெரியாமல் செய்கிறார்கள். இந்த விஷயம் எனக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்தியது.
கதைக்கு வருவோம்: ஒரு நாள் அம்ரீன் தனது கணக்கு பாட புத்தகத்தை காணவில்லை என்று ஸ்டோர் ரூமில் இருந்து வேறு ஒரு பாட புத்தகம் எடுப்பதற்காக வருகிறாள். அப்போது கதவு வெளிப்புறமாக பூட்டப்படுகிறது. பதட்டத்தில் தடுமாறி விழுந்து மயக்கமாகி விடுகிறாள்.
அந்த சமயத்தில் பள்ளியில் தீ பற்றி பரவுகிறது. மாணவிகள் அனைவரும் வகுப்புகளில் இருந்து வெளியேறி மெயின் கேட் போகிறார்கள் அது வெளிப்புறமாக பூட்டப்பட்டிருக்கிறது.
துறையின் அனுமதியை பெற்று தீயணைப்பு துறைக்கும் ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்கிறார்கள். பள்ளிக் காவலாளி பள்ளியை பூட்டிவிட்டு எங்கேயோ சென்று விடுகிறார். தீயுடன் புகையும் ஏராளமாக பரவுவதால் மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
பள்ளியின் முதல்வர் தனது விவாகரத்து வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார். பள்ளியில் துணை முதல்வர் மாணவிகள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்ற படாதபாடு படுகிறார்.
வெளியே கதவும் பூட்டப்பட்டு இருப்பதால் கையறு நிலையில் நிற்கிறார். அது சமயம் மாடியில் கதவை திறந்து விடலாம் என்று போராடி சாவியை கண்டுபிடித்து எடுத்து மாடி கதவை திறந்து மேல் மடியில் இருந்த மாணவிகளை மொட்டை மாடிக்கு அனுப்பி காப்பாற்றி விட்டு மூச்சுத் திணறால் உயிர் துறக்கிறார். ஸ்டோர் ரூமில் பூட்டப்பட்டு கிடந்த அம்ரீனும் இறந்து போகிறாள்.
தீ விபத்துக்கு காரணமானவர் யார் அம்ரினை ஸ்டோர் ரூமில் பூட்டியது யார் என்கிற கேள்விகளோடு படம் பயணித்து அதிர்ச்சிகரமான திருப்பத்தில் முடிவடைகிறது.
இந்த படத்தில் தீ விபத்து காட்சிகளை மிகச் சிறப்பாக எடுத்து இருப்பார்கள் பார்க்கும் நமக்கே மூச்சு திணறல் ஏற்பட்டு விடும்.
மாணவிகள் தீ விபத்தில் இருந்து வெளியேறும் போது கூட அவர்களின் ஹிஜாப் மூடாமல் இருப்பது பற்றியே அங்கே இருக்கும் ஆண்கள் கவலைப்படுகிறார்கள். தீ காயத்தோடு அங்கங்கே அமர்ந்து அழுது கொண்டிருக்கும் மாணவிகள் அருகே அவர்களது தந்தையர் வந்து தனது தலையில் போர்த்தியிருக்கும் துணியை எடுத்து அந்த மாணவிகள் தலையில் போட்டு மூடுகிறார்கள்.
மத அடிப்படைவாதங்கள் என்பவை எவ்வளவு பிற்போக்குத்தனமானவை என்பதையும் பெண்கள் மீதான ஒடுக்கு முறையை மிகக் கடுமையாக கடைப்பிடிப்பதற்கு மத அடிப்படை வாதமே காரணம் என்பதையும் இந்த படத்தில் காணலாம்.
படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.
Wednesday, May 21, 2025
நானே “நானோ“-2 வரலாறு முக்கியம் அமைச்சரே!!
சென்ற அத்தியாயத்தில் நானோ டெக்னாலஜியின் சாத்தியங்கள், நானோ மீட்டர் என்றால் எவ்வளவு சைஸ் என்று ஓவர் பில்டப் கொடுத்து ஒரு ட்ரெய்லர் ஓட்டி மெயின் பிச்சர் வந்து கிட்டு இருக்குன்னு சொல்லியிருந்தேன்.
இந்த கட்டுரையின் நோக்கமானது அறிவியல் தொழில்நுட்பம் என்றாலே அலறி அடித்து ஓட்டம் பிடிப்பவர்களையும் துரத்திப் பிடித்து அவர்களும் கேட்கும் வண்ணம் இதனை வழங்குவது தான்.
ஆகையால் அதிக அளவில் ஆழ்ந்த அறிவியல் விஷயங்களை தவிர்த்து விடலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் இந்த அத்தியாயத்திற்கான சோர்ஸ் கன்டென்ட் படித்து விட்டு பிளந்த வாயை இன்னும் என்னால் மூட இயலவில்லை.
நானோ டெக்னாலஜியின் ஆரம்ப விதை பற்றியது இது. இந்த விதையை ஊன்றியவர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ரிச்சர்ட் பி.ஃபேயின்மான்.
விதையை ஊன்றியது 1959 டிசம்பர் மாதம்.
அமெரிக்காவில் இயற்பியல் விஞ்ஞானிகள் நிறைந்த அவை ஒன்றில் அவர் நிகழ்த்திய உரையில் அவர் அள்ளித் தெளித்த தகவல்கள் யாவும் பிரமிக்கத் தக்கவை. அவர் வாயில் இருந்து வந்த ஒரு வாக்கியத்தை வாங்கி வந்து ஆய்வு செய்து நாம் ஒரு பி.எச்டி பெற்று விடலாம். ஒரு பெரிய ஆய்வுக்கான சுரங்கத்தை திறந்து காண்பித்திருப்பார்.
”நான் ஈ” படத்தில் சமந்தா பாத்தீங்களா?
”ஆமாம் கொள்ளை அழகு”
”ஆமாம் நீங்க அழக மட்டும் தான் பாத்தீங்க, நான் அறிவியல் மனப்பான்மையோடு அவர் செய்யும் வேலையை பார்த்தேன்”
”என்ன வேலை செய்யுறாங்க?”
“பென்சில் முனையில் சிற்ப வேலை செய்வாங்க”
”இத நெறய பேரு செய்வாங்களே. செய்தித்தாளில் கூட பாத்துருக்கலாமே”
’நமக்கு சமந்தா செய்தது மட்டும் தான் மனசுல நிக்குது’
ஜோக்ஸ் அபார்ட். ஃபேயின்மான் அவர்களில் பேச்சின் தலைப்பு ”There is Plenty of Room at the Bottom”. (அங்கே அடியில் ஏராளமாக இடம் உள்ளது ம்ம்.. சரியா டிரான்ஸ்லேட் பண்ணிட்டேனா?)
அவர் ஏதோ லாட்ஜ் மாடியில் நின்று கொண்டு ரூம் கேட்டு வந்தவர்களுக்கு சொன்ன பதில் போல உள்ளதா? சரி போகப் போக பெயர்க் காரணம் புரியும்.
“என்சைக்ளோபீடியாவின் 24 பாகங்கள் அடங்கிய புத்தகத்தை (அப்போது அது தான் ஆகப் பெரிய புத்தகம், இப்போது சி.டி வடிவில் சுருங்கி விட்டது) ஒரு குண்டூசி முனையில் எழுதினால் என்ன?” என்று கேள்வி கேட்டு அரங்கத்தை வியப்பில் ஆழ்த்துகிறார்.
குண்டூசி முனை ஒரு இஞ்ச் ல் பதினாறில் ஒரு பாகம் அதனை 25000 மடங்கு உருப் பெருக்கினால் அதன் பரப்பு என்சைக்ளோபீடியாவின் ஒட்டு மொத்த புத்தகங்களின் பக்கங்களின் பரப்பளவுக்கு சமம் என்று கணக்கிட்டு சொல்கிறார்.
அடுத்து உலக நூலகங்களில் உள்ள புத்தகங்களை எல்லாம் கணக்கிட்டு அதனை எழுதுவதற்கு ஒரு சூத்திரம் சொல்கிறார். அணுக்களை கொண்டு எழுதலாம் என்கிறார்.
எனவே ”கீழே இடம் உள்ளது என்பது அல்ல ஏராளமான இடம்(plenty of Room) உள்ளது என்பதே அவர் கூறியது”
“ஏம்பா ’சொல்றது சுளுவு செய்யறது இன்னா கஸ்டம் தெரியுமா’ னு நம்ம பாரதியார் சொல்லிருக்காருப்பா”
“அது திருவள்ளுவர்ங்க”
அப்போது இருந்த அறிவியல் தொழில் நுட்பங்களை கொண்டு அவ்வாறு எழுதுவதும் சாத்தியம் படிப்பதும் சாத்தியம் என்று தொழில்நுட்ப ரீதியான விளக்கமும் அளித்துள்ளார்.
எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பை ரிவர்சில் மாற்றி பயன் படுத்தி எழுதலாம், அதே மைக்ராஸ்கோப் கொண்டு படிக்கலாம் என்கிறார்.
ஏற்கனவே பெரிதாக இருப்பதை கஷ்டப்பட்டு சுருக்குவானேன், அப்புறம் அதை கஷ்டப்பட்டு படிப்பானேன்? ( “நான் ஏன்டா நடு ராத்திரியில சுடுகாட்டுக்கு போவனும்” னு வடிவேல் கேட்டது போல் கேட்காதீர்கள்.)
இந்த மாதிரியான விசித்திர சிந்தனைதான் ஒரு புதிய அறிவியல் சாத்தியத்திற்கான கதவை திறந்து விட்டுள்ளது.
அடுத்து அப்போது புதிய கண்டுபிடிப்பாக இருந்த கணிப்பொறி பற்றியும் கூறத் தவறவில்லை.
”இப்போது கணினி இரண்டு அறைகளை அடைத்துக் கொண்டு ராட்சசன் போல படுத்துக் கிடக்கிறது. அதன் பாகங்களையும் இணைப்பு வொயர்களையும் 10 முதல் 100 அணுக்களின் அகலத்தில் செய்தால் அதன் அளவு மிகவும் சுருங்கி விடும்” என்கிறார். (இந்த விஷயம் இன்றளவும் கூட சாத்தியப் படவில்லை)
அதன் நினைவுத் திறனை ஒரு ”பிட்” ஐ 5 கன அணு அளவில் பதிவு செய்தால் குறுகிய இடத்தில் ஏராளமான தகவல்களை சேமிக்கலாம். (இதுவும் இன்றளவிலும் இந்த அளவு நுண்ணியதாக சாத்தியப் படவில்லை)
அவரின் கற்பனை நிஜத்திலிருந்து லட்சம் ஒளி ஆண்டு தொலைவில் இருந்தது. ஏனென்றால் அந்த காலத்தில் ஒரு ஃபிளாப்பி டிஸ்க்கையே (1.62 எம்.பி நினைவு திறன்) லாரியில் ஏற்றித் தான் கொண்டு வருவார்கள்.
”விக்கெட் கீப்பிங் க்ளவுஸ் போட்டுக் கொண்டு ஊசியில் நூல் கோர்க்க முடியுமா?” ஆனால் இதைவிடவும் பலநூறு மடங்கு கஷ்டமானது தான் அவர் கூறிய விஷயங்கள்.
அவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தக்க இயந்திரங்களின் போதாமை பற்றி மிகவும் கவலை கொள்கிறார். அப்போது இருந்த எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பின் துல்லியத் தன்மையை 100 மடங்கு மேம்படுத்த வேண்டியுள்ளது என்கிறார்.
அப்படி மேம்படுத்தினால் பல உயிரியல் சார்ந்த பல்வேறு ஆய்வுகளுக்கான வாசல்களை அது திறந்துவிடும் என்றும் கூறுகிறார்.
அடுத்ததாக இன்னுமொரு விபரீத ஆலோசனையையும் வழங்குகிறார். ”swallow the surgeon” என்கிறார்.
”ஆத்தாடி, ஒரு அறுவை சிகிச்சை நிபுணரை விழுங்குவதா?”
அதே தான் அறுவை சிகிச்சை செய்யும் வல்லமை படைத்த ஒரு நானோ ரோபாட்டை (சென்ற வாரம் சொன்ன நானோபாட்) விழுங்கி வைத்தோமானால் அது உள்ளே சென்று ”ஆபரேஷன்” செய்து முடித்து “மிஷன் அக்கம்ப்ளிஷ்டு” என்று மெசேஜ் தட்டிவிடும்.
மேலே தரப்பட்ட கருத்துக்கள் யாவுமே கடலில் மிதக்கும் பனிப்பாறையின் நுனி மட்டுமே (Tip of an Iceberg). அவரது உரையின் பி.டி.எஃப் வடிவத்தை இங்கே(க்ளிக்குக)இணைத்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் படித்துக் கொள்ளுங்கள்.
இன்னும் சுவாரசியமான நானோ டெக்னாலஜி விஷயங்களுடன் அடுத்த எபிசோடில் சந்திக்கலாம்.
Monday, May 19, 2025
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?!!
பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் குறித்த புள்ளி விவரங்கள் கணக்கெடுப்பு பணி முடிந்து ஆசிரியர்கள் அனைவரும் சென்று விட்டனர்.
நான் மிச்ச மீதி தபால் வேலைகளை முடித்துக் கொண்டு இருந்தபோது ஒரு பாட்டி வந்தார். வந்து அவரது இரண்டு பேரன்களின் (இரட்டையர்) மதிப்பெண்களை கேட்டார். மார்க் பற்றி பெரிய அளவில் அவருக்கு விவரம் தெரியாது என்றாலும் அவர்களது மார்க்கை (398&413)கூறி "உங்க பேர பசங்க நிறைய மார்க் வாங்கி இருக்காங்க, நல்லா படிச்சிருக்காங்க " என்று பாராட்டினேன்.
உடனே அவரது கண்ணில் கண்ணீர் வழிந்தது. கண்ணீரை துடைத்துக் கொண்டே "அப்பா இல்லாத பசங்க சார் அவங்க நல்லா படிச்சிக்கிட்டாங்கன்னா ரொம்ப சந்தோஷம்" என்றார்.
"கவலையே படாதீங்க பசங்க ஜோரா படிச்சி பெரிய வேலைக்கு போகப்போறாங்க பாருங்க" என்று நம்பிக்கையூட்டி அனுப்பி வைத்தேன்
பொது தேர்வுகளில் எடுக்கப்படும் 100% தேர்ச்சி மகிழ்ச்சியை தருவதைக் காட்டிலும் ஒருவரும் விடுபடாமல் அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுதச் செய்து அவரவர் திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களை பெற வைப்பது என்பதே அதிக மகிழ்ச்சியைத் தரும்.
2018 இல் நான் பதவி ஏற்ற காலத்தில் இருந்து இன்று வரை மிகவும் சவாலாக விளங்கிய செட் என்றால் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு எழுதிய மாணவர்கள்தான்.
அந்த வகுப்புக்கே நாங்கள் செல்ல மாட்டோம் என்று ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்பும் அளவுக்கு பெரிய அளவில் ரகளை செய்து விட்டார்கள்.
அடுத்த நாளில் பிரச்சனையின் மையப் புள்ளியாக இருந்த நான்கைந்து மாணவர்களை தனியே அழைத்து கண்டித்து அவர்களிடம் ஒரு மணி நேரம் அளவுக்கு பேசி, ஆசிரியர்கள் அனைவரிடமும் தாங்கள் செய்தது தவறு என்று வருத்தத்தை தெரிவிக்கச் செய்து அதன் பிறகு ஆசிரியர்கள் அனைவரும் "இந்த ஒரு முறை இவர்கள் அனைவரையும் மன்னித்து விடலாம் சார்" என்று கூறி அவர்களாகவே அந்த மாணவர்களை மீண்டும் வகுப்பில் அனுமதித்தார்கள்.
பத்தாம் வகுப்பு வந்த பிறகும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் அவர்கள் மீண்டும் ஏராளமான பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டும் பள்ளி பொருட்களை சேதம் செய்து கொண்டும் இருந்தனர்.
அதிலும் ஒரு மாணவனை 15 நாட்கள் சஸ்பென்ட் செய்து ஒரு பெரிய பிரச்சனையை தவிர்த்தோம்.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் மிகப்பெரிய புரிதலும் அன்பும் அதிகமாகும் வகுப்புகளில் அற்புதங்கள் நடக்கும். எல்லா மாணவர்களையும் எல்லா ஆசிரியர்களும் பெரும்பாலும் நேசித்தாலும் சில சமயங்களில் மிகப்பெரிய அளவுபாசப்பிணைப்பு
ஏற்படும் செட்டுகள் அமையும்.
அதுபோன்ற சமயங்களில் அவர்களின் கல்வி அடைவு மிகப்பெரிய உச்சத்தை தொடும். எனக்கு அது போல் இரண்டு மூன்று செட்டுகள் அமைந்தன.
இந்த மாணவர்கள் செய்த காரியங்களால் ஆசிரியர்கள் & மாணவர்கள் இடையிலான பிணைப்பு குறைந்து போனால் அது கல்வி அடைவுகளிலும் எதிரொலிக்குமே என்று மிகப்பெரிய வருத்தத்தோடு தான் இருந்தேன்.
ஆனால் அவ்வாறு நடைபெறாதவாறு ஆசிரியர் மாணவர் உறவு மிகச் சுமுகமான அளவில் இருக்குமாறு பராமரித்தது நிச்சயமாக எங்களுடைய ஆசிரிய பெருமக்கள் தான்.
தொடர்ந்து மாணவர்களின் சிறு சிறு முன்னேற்றங்களை உற்சாகப்படுத்தியும் அவர்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும் அவரவர் திறனுக்கு ஏற்றவாறு பெரிய வேலைகளை சிறுசிறு வேலைகளாக உடைத்து தருவது என்று பல விஷயங்களை தொடர்ந்து முயன்ற வண்ணம் இருந்தனர்.
ஒரு மாணவிக்கு அவ்வப்போது வலிப்பு வந்துவிடும் அதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களிடம் அந்த மாணவியை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் அவருக்கு பெரிய வேலைகள் எல்லாம் வழங்க வேண்டாம் படிப்பை விட அவரது உடல் நலன் ரொம்ப முக்கியம் என்று கூறியிருந்தேன். ஆனால் ஆசிரியர்கள் அவருக்கு தொடர்ந்து தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தி இரவு நேரத்தில் கூட அவரிடம் தொடர்ந்து பேசி வேலை கொடுத்து whatsapp மூலமாக வாங்கி மதிப்பீடு செய்து உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என்பதை கேள்விப்பட்ட போது உள்ளபடியே நான் கலங்கிப் போனேன்.
அதுபோல் வெளியூரில் இருந்து வந்து உறவினர் வீட்டில் தங்கி படிக்கும் மாணவர்கள் அவ்வப்போது ஊருக்கு சென்றால் திரும்பி வர முரண்டு பிடிப்பார்கள்.
ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவன் பத்தாம் வகுப்பில் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே பள்ளிக்கு வருவது மற்ற நாட்களில் அவனது தந்தை தரும் பேருந்து கட்டணத்தை எடுத்துக் கொண்டு எங்காவது ஊர் சுற்றிவிட்டு சாயங்காலம் வீட்டுக்கு சென்று விடுவது என்று இருந்தான்.
அவனை எத்தனை முறை அழைத்து பேசினாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அவனது தந்தையை அழைத்து அவரிடமும் பேசி பார்த்தோம் .அவனது தந்தையோ அவனை கண்டிக்கும் அளவுக்கு இல்லை.
அவன் செய்த தவறுகளில் உச்சத்திலும் உச்சமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில தமிழ் தேர்வுக்கு வரவே இல்லை. அதுபோல் தேர்வு இடைப்பட்ட நாட்களில் உள்ள பயிற்சி வகுப்புகளுக்கும் வரவில்லை. அனைத்து ஆசிரியர்கள் தொலைபேசி எண்களையும் பிளாக் லிஸ்டில் வைத்திருந்தான்.
ஆசிரியர்கள் அவனுக்கு வாட்ஸ் அப்பில் உருக்கமாக வாய்ஸ் நோட் அனுப்பியும் கூட அதை அவன் ஓபன் செய்து கேட்டிருந்தும் எந்த பதிலும் அளிக்கவில்லை.
அதன் பிறகு அவர்கள் ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களிடம் தொலைபேசி அவனது பெற்றோரையும் அவனையும் பள்ளிக்கு அழைத்து நீங்களே பேசி அவனை பரிச்சை எழுதும் அளவுக்கு சரி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
இந்த திட்டம் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியது. மீதி தேர்வுகள் அனைத்தையும் எழுதி 70 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவன் பயிற்சி வகுப்புகளுக்கு வரவில்லை என்றாலும் கூட தேர்வுக்கு வந்து காத்திருக்கும் நேரத்தில் கூட அவனை அழைத்து அவனிடம் பேசி உற்சாகப்படுத்தி தேர்ச்சி அடையும் அளவுக்கு அவன் இருக்கிறானா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்து திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க காலை மாலை மற்றும் சனிக்கிழமைகள் என அனைத்து நாட்களிலும் வேலைகளை பிரித்துக் கொண்டு செய்த ஆசிரியர்களை எண்ணி நான் வியப்படைந்தேன். நானே கூட சில சமயங்களில் "டீச்சர் இருந்த வாரம் ரெஸ்ட் எடுங்களேன்" என்று கூறியும் கூட அவர்கள் "வேண்டாம் சார் கொஞ்சம் வேலை இருக்கு" என்பார்கள்
உள்ளபடியே இந்த செட்டு மாணவர்கள் நினைத்து நான் பயந்தபடி இருந்தாலும் ஆசிரிய பெருமக்கள் அவர்களின் பேரன்பையும் பெருங்கருணையையும் காண்பித்து அவர்களை தங்கள் வழிககு கொண்டு வந்து 100 விழுக்காடு தேர்ச்சியை எட்ட வைத்தனர்.
ஆசிரியர்களின் தொடர் உழைப்புக்கு அங்கீகாரமாக பள்ளி சராசரி மதிப்பெண் 360 என்கிற உச்சத்தை இந்த ஆண்டு எட்டியது.
எங்கள் கிராம மக்கள் மத்தியில் எங்கள் பள்ளி மீது பேர் அபிமானம் இருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் எங்கள் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பெரும் உழைப்பு தான்!!
பத்தாம் வகுப்பு என்று இல்லாமல் மற்ற வகுப்புகளிலும் அடிப்படை திறன்கள், கையெழுத்து, கல்வி இணை செயல்பாடுகள் கலை இலக்கியம் விளையாட்டு என்று மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமையை வளர்க்க அவர்கள் காட்டும் ஆர்வமும் உழைப்பும் மிகப் பெரியது. அதுபோல ஒவ்வொரு ஆசிரியரும் அவர்களது வகுப்பில் உள்ள அனைத்து பெற்றோரிடமும் தொடர்ந்து நேரிலும் தொலைபேசியிலும் பேசி நட்புறவோடு சம்பந்தப்பட்ட மாணவனின் வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள்.
எங்கள் பள்ளி ஆசிரியர்களில் குழு புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றுவது "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்பது தான். அதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
Tuesday, April 29, 2025
முஜிகே!! பிலிப்பைன்ஸ் மொழித் திரைப்படம்
முஜிகே!!
பிலிப்பைன்ஸ் மொழித் (கொரியாவும் உண்டு) திரைப்படம்
முஜிகே என்றால் korean மொழியில் வானவில் என்று அர்த்தம்
பூவே பூச்சூடவா படத்தில் நதியா ஐந்து வயது குழந்தையாக இருந்தால் & பாட்டி சித்தியாக இருந்தால் எப்படி இருக்குமோ அதுதான் இந்தப் படம்!!
குழந்தை முஜிகே அவளது அம்மாவுடன் விளையாடிக் கொண்டிருப்பதில் படம் துவங்குகிறது.
பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை துருவித்துருவி விசாரித்துக் கொண்டே இருக்கிறாள் குழந்தை. ஏன் என்று பார்த்தால் "நீ சொர்க்கத்துக்கு போன பிறகு நான் பறந்து வந்து உன்னிடம் சேர்ந்து விடுவேன் அல்லவா?!" என்று கூறுகிறாள்.
அதற்கு பிறகு தான் தெரிகிறது தாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறாள்
அவளது தந்தை அவளது தாயை விட்டுவிட்டு போய்விட்டதாக தெரிகிறது. ஆனாலும் முஜிகேவின் அப்பா உன்னை பார்க்க நிச்சயமாக வருவார் என்று கூறிக் கொண்டே இருக்கிறார்.
அவள் மரண படுக்கையில் இருக்கும் போது அவளது தந்தை முஜிகேவை கொரியாவில் இருந்து பிலிப்பைன்ஸ்க்கு அழைத்து வந்து விடுகிறார்.
முஜிகேவின் சித்தி சன்னி (சன்ஷைன்) ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்கிறாள். குழந்தைகள் என்றாலே அவளுக்கு பிடிக்காது. மற்றபடி ஊரில் எல்லோரிடமும் மிகவும் பணிவாகவும் மரியாதையாகவும் பழகக்கூடிய பெண்ணாக இருப்பதால் அவளை எல்லோருக்கும் பிடிக்கிறது.
குழந்தையை பிடிக்காது என்று சொல்லும் சன்னியை நம்பி அவளது தந்தை முஜிகேவை வீட்டிற்கு அழைத்து வருகிறார். சன்னிக்கு அவளை பிடிக்கவே இல்லை.
முதலில் முஜிகேவும் சன்னியும் முட்டி மோதிக் கொண்டாலும் விரைவில் ஒருவரோடு ஒருவார் பிரிக்க முடியாத அளவு இணக்கம் கொள்கிறார்கள்.
சன்னியின் கோபத்துக்கான காரணம் காண்பிக்கப்படும் போது நெகிழ்ச்சி!!
இந்த தருணத்தில் சன்னி மிகவும் விரும்பும் அவளது இலட்சிய வேலைக்கான வாய்ப்பு அமைகிறது ஆனால் முஜிகேவைப் பிரிந்து வெளிநாடு செல்ல வேண்டும்.
முஜிகே மேல் கொண்ட பாசத்தால் அந்த வேலையை துறக்கிறாள் சன்னி.
வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் போது விஜி கேவின் தந்தை முஜிகேவை அழைத்துக் கொண்டு செல்ல கொரியாவில் இருந்து வக்கீலோடு வருகிறார். விபத்தில் சிக்கி இத்தனை நாள் நினைவில்லாமல் இருந்ததாக கூறி தனது குழந்தை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்கிறார்.
முஜிகே தந்தையோடு கொரியா சென்றாளா அல்லது சன்னியோடு பிலிப்பைன்ஸ் ல் தங்கி கொண்டாளா என்பதை படத்தை பார்க்கும்போது தெரிந்துகொள்ளுங்கள்.
மிகவும் எளிய கதையும் வலிய உணர்வுகளையும் கொண்ட படம்.
பிலிப்பைன்ஸ் ல் இருக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் அந்த குழந்தையின் மீது அன்பு பாராட்டுவது சிறப்பாக இருக்கிறது.
தாய்மை அடைந்தால் தான் 100% பெண் என்கிற பாக்கியராஜ் டெம்ப்ளேட் ரீலை இந்தப் படத்தில் பியூட்டி பார்லர் காட்சியில் வைத்திருக்கிறார் இயக்குநர்.
சித்தி சன்னியாக வரும் நடிகை நல்ல அழகு, சிறப்பாகவும் நடித்துள்ளார்.
முஜிகேவாக வரும் குழந்தையை எப்படி இவ்வளவு அட்டகாசமாக நடிக்க வைத்துள்ளனர் என ஆச்சரியமாக இருக்கிறது. முக்கியமாக சன்னி வெளிநாடு செல்வதாக கூறிக்கொண்டு அவளுக்கு சடை பின்னி விடும் காட்சியில் அந்த குழந்தையின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும்.
சண்டை சச்சரவு ரத்தம் துப்பாக்கி எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க நேர்மறை உணர்வுகளின் தொகுப்பாக படத்தை தந்துள்ளார் இயக்குனர்.
நெட்ஃபிளிக்ஸ் ல் உள்ளது பாருங்கள்!!
Friday, April 4, 2025
இனியாவது புரிந்து கொள்வோமா? தனி பெற்றோர் - குழந்தைகள் (கட்டுரைத் தொகுப்பு)
நூல்: இனியாவது புரிந்து கொள்வோமா?
தனி பெற்றோர் - குழந்தைகள் (கட்டுரைத் தொகுப்பு)
தொகுப்பு: இனியன்
சில ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாங்கள் அறிவுரை கூறி முடித்து சுவீட் காரம் எல்லாம் கொடுத்து முடித்தபிறகு மாணவர்கள் யாரையேனும் பேச வைக்கலாமே என்று எனது அவாவை தெரிவித்தேன்.
வகுப்பறையில் வாயடிக்கும் மாணவர்கள் எல்லாம் தெறித்து ஓடினார்கள். அப்போது தானாகவே பேச முன்வந்தார் “சுந்தரி“(இந்த பேரை சும்மா வச்சிக்குவோம்)
வணக்கம் எல்லாம் கூறி முறையாகவெல்லாம் பேசத் துவங்கவில்லை. அவர் சொல்லவேண்டும் என்று நினைத்த ஒன்றை சொல்வது மட்டுமே அவரது நோக்கம்.
“ஒரு நாள் இங்கிலீஷ் மிஸ்கிட்ட டவுட் கேட்டேன். அவங்க என் பக்கத்தில் அமர்ந்து எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. எங்கம்மா பக்கத்தில் உக்காந்து இருப்பது போல சந்தோசமா இருந்தது“ என்று கூறிவிட்டு கண்ணீரை சுண்டிவிட்டு உட்கார்ந்து கொண்டார்.
“டேய் ஜன்னலை சாத்துடா எவ்வளவு தூசி வருது பாரு” என்று மிரட்டலாக கூறி நாசூக்காக நானும் துடைத்துக் கொண்டேன்.
ஒரு வினாடியில் அத்தனை பேரையும் கலங்க வைத்து விட்டார்.
விஷயம் என்னவென்றால் அந்தப் பெண் சிறுவயதிலேயே தாயை இழந்தவர். தந்தையும் பாராமுகமாக இருப்பவர் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.
ஒரு சின்ன அக்கரை ஒரு அரவணைப்பு அந்தப் பெண்ணை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை எண்ணி வியந்து போனோம்.
ஒருமுறை உங்கள் படிப்புக்கு இடையூறாக இருக்கும் விஷயம் என்ன என்று எழுதித் தாருங்கள் என்று கேட்டபோது ஒரு மாணவி “இப்போ எனக்கு அப்பா இருந்தா எப்படி இருக்கும்“ என்று அடிக்கடி நினைப்பு வருகிறது என்று எழுதிக் கொடுத்து இருந்ததை வாசித்த போது மனது அவ்வளவு கனத்து போனது.
தம்பி இனியன் தொகுத்து வெளியிட்டு இருக்கும் “இனியாவது புரிந்து கொள்வோமா? தனிப் பெற்றோர் – குழந்தைகள் என்கிற நூலை வாசித்த போது தான் எனது பள்ளி அனுபவங்கள் நெஞ்சில் அலையடித்தன.
இந்த கட்டுரைத் தொகுப்பு அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும். முக்கியமாக ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் வாசித்தால் “தனிப்பெற்றோர்“ பற்றிய பெரிய புரிதல் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். கல்வி தளத்தில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு உள்ளது என்பதை தெளிவாக உணர்த்தும் நூல் இது.
திரைக்கலைஞர் ரோகிணி அவர்களின் நேர்த்தியான முன்னுரை மற்றும் முனைவர் ராம் மகாலிங்கம் அவர்களின் தனிப்பெற்றோர் குறித்த விரிவான பார்வை நமது சூழலுக்கும் அமெரிக்க சூழலுக்கும் இடையேயான பெரிய அளவிலான வேறுபாடுகளை உணர்த்தி கட்டுரைக்குள் செல்லும் ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகிறது.
ஃபர்ஸ்ட் பாலிலேயே சிக்ஸர் அடிப்பது போல முதல் கட்டுரையே வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் எழுதியது. கட்டுரையை சினிமா படங்களில் உள்ள தனிப்பெற்றோர் சூழலில் இருந்து துவங்கினாலும் “வாழ்க்கை ஒன்றும் சினிமா அல்லவே மூன்று மணி நேரங்களில் முடிந்துவிட“ என்று நடைமுறைகளை தனது பணி அனுபவங்கள் வாயிலாக கூறுகிறார்.
நமது சமூகத்தில் பிடிக்காத குடும்ப அமைப்பில் இருந்து வெளியேறி கண்ணியமாக வாழ்க்கையை அமைத்து கொள்ள மணவிலக்கு பெறுவது எவ்வளவு சிக்கலாக உள்ளது என்பதையும், தனிப்பெற்றோராக குழந்தை வளர்ப்பது வெவ்வேறு பொருளாதார சூழலில் இருப்போருக்கு இருக்கும் வெவ்வேறு சிக்கல்களையும் சிறப்பாக அலசி உள்ளார்.
அவ்வை சண்முகி படத்தையும் அதன் ஆங்கில மூலமான மிஸஸ் டவுட்ஃபயர் படத்தையும் இருவேறு கலாச்சார சூழலோடு ஒப்பிட்டு இருந்தது மிகவும் சிறப்பாக இருந்தது.
மனநல மருத்துவர் சிவபாலன் அவர்களது கட்டுரை இரண்டாவதாக வந்துள்ளது. பெற்றோர் என்ற வார்த்தைக்கு “பயாலஜிக்கல் கார்டியன்“ என்கிற சொல்லாடலை கண்டு வியந்து போனேன். தனிப்பெற்றோர் மற்றும் அவர்தம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்களை உளவியல் ரீதியாக அலசி உள்ளார்.
தனிப்பெற்றோர் எந்தெந்த விஷயங்களை எல்லாம் தாங்களே கற்பிதம் செய்து கொண்டு தேவையற்ற மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர் என்பதை சிறப்பாக எடுத்துக் காட்டி இருந்தார்.
அருள்மொழி அவர்களின் கட்டுரையை முதல் பாலில் சிக்ஸர் என்று சொல்லி இருந்தேன் அல்லவா. ஆனால் ஆசிரியர் சுடரொளி அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை வாசித்த போது லப்பர் பந்து அகிலா அடித்த சிக்ஸரை போல இருந்தது.
ஏனெனில் அவரும் ஆசிரியர் என்பதால் நேரடி கள அனுபவங்களைக் கொண்டு கட்டுரையை வடித்திருந்தார்.
துவக்கநிலை வகுப்பில் இருக்கும் தனிப்பெற்றோர் குழந்தைகளிடம் ”குடும்பம்“ என்கிற விஷயத்தை நடத்துவதில் கூட எத்தனை பெரிய சிக்கல் ஏற்படும் என்பதை அவர் விவரித்தபோது ஆச்சரியமாக இருந்தது.
ஆசிரியர் சுடரொளி அவர்களின் கட்டுரை அனைத்து ஆசிரியர்களாலும் வாசிக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் பிரச்சனையை தீர்க்க ஒரு ஆசிரியர் எந்த அளவுக்கு இறங்கி செயல்படமுடியும் என்பதை இவர் செயல்பாடுகள் உணர்த்துகின்றன.
நமது சமூகத்தில் கற்பு கலாச்சாரம் என்றெல்லாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிற்போக்குத் தனமான விஷயங்கள் எவ்வளவு பெரிய சமூக சிக்கல்களுக்கு காரணமாக இருக்கின்றன என்பதை ஆசிரியர் தமிழ் ஆசான் அவர்களின் கட்டுரையில் காணமுடிகிறது.
எங்கள் பள்ளியிலும் கூட ஒரு தனிப்பெற்றோர் குழந்தை 9 ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தபோது திருமண ஏற்பாடுகள் செய்தார்கள். அந்தப் பெண் ஒன்பதாம் வகுப்பு படித்தாலும் தகுந்த சீருடையுடன் ஐந்தாம் வகுப்பில் அமர வைத்தாலும் ஒரு வித்தியாசமும் தெரியாது. அவ்வளவு சிறு குழந்தை அவர்.
அவரது அம்மா மற்றும் உறவினரை அழைத்து “பேசி“ மனதை மாற்றினோம்.
பதின்பருவ குழந்தைகளின் தனிப்பெற்றோர் தாயாக இருக்கும் பட்சத்தில் அவர் மறுமணம் செய்து கொள்வதால் ஏற்படும் உளவியல் சிக்கல்களை மிகச் சிறப்பாக விவரித்துள்ளார்.
அது போன்ற மனச்சிக்கல்களை அந்த மாணவரிடம் தொடர்ந்து உரையாடுவதன் வாயிலாகத்தான் புரிய வைக்க முடியும் என்பதை உதாரணத்தோடு விளக்கி கூறி உள்ளார் ஆசிரியர் தமிழ் ஆசான்.
முனைவர் விசயலெட்சுமி அவர்களின் கட்டுரை தனிப்பெற்றோருக்கும் (தாயார்) அவர்தம் குழந்தைகளுக்கும் சமூகத்தில் ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து பேசுகிறது.
ஆசிரியர்கள் மாணவர்தம் உளச் சிக்கல்களை வந்து சொல்லும் அளக்கு ஒரு ஸ்பேஸ் ஏற்படுத்தி தரவேண்டும். முக்கியமாக தனிப்பெற்றோர் குழந்தைகள் தனக்கு நேர்ந்தவற்றை கூறுவதற்கு நம்பகமான தளம் ஆசிரியர்கள் என நம்பும் அளவுக்கு ஒரு கட்டமைப்பு பள்ளிகளில் அவசியம்.
நான் எவ்வளவு கண்டிப்பான ஆசிரியராக இருந்தாலும் மாணவர்கள் என்னிடம் பாடம் சாரா விஷயங்களை இயல்பாக பேச வாய்ப்பு வழங்குவேன்.
அது போல ஒரு முறை சாதாரணமாக பேசிய போது ஆலமரமாக வேர்விட்டிருந்த பெரிய பிரச்சனையை கண்டறிந்து வேரோடு களைந்தோம்.
தனியார் பள்ளிகள் மனநல ஆலோசகராக இருக்கும் கார்த்திக் அவர்களது கட்டுரை தனிப்பெற்றோர் கணவனை இழந்தவர் எனும்போது தாத்தா பாட்டி அல்லது சுற்றத்தார் தூண்டுதலின் பேரில் தாயின் ஒழுக்க நிலையை கண்காணிக்கும் பொறுப்பை அந்த குழந்தைகள் எடுத்துக் கொள்வது குறித்து பேசி உள்ளார்.
இது சார்ந்து நான் பள்ளிகளில் கண்ட வகையில் ஏராளமான மனக்குமுறல்கள் உண்டு. மகனின் கண்காணிப்பு தாளாமல் மாமியார் வீட்டில் இருந்து தாய்வீட்டுக்கு புலம் பெயர்ந்த தனிப்பெற்றோர் எல்லாம் உண்டு.
ந.சரவணன் அகதிகள் வாழ்வியலோடு தொடர்புடைய செயற்பாட்டாளர். அவர் தனது கட்டுரையில் அகதிகளில் 90 விழுக்காடு தனிப்பெற்றோர் தான் என்று கூறியுள்ளது அதிர்ச்சியாக இருந்தது. இது சார்ந்து அவர் மேலதிக தகவல்களோடு விவரித்தபோது ஒவ்வொரு விஷயமும் புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அகதிகள் வாழ்வியல் குறித்து புரிந்து கொள்ள இந்த கட்டுரை எனக்கு வாய்ப்பாக அமைந்தது.
அகதிகள் குறித்த எந்த விதமான சட்டநடைமுறைகளையும் உருவாக்காமல் ஒரு சிறு ஏற்பாட்டோடு அவர்களை பராமரிப்பது எவ்வளவு தூரம் மனிதநேயத்திற்கு எதிரானது என்பதை சரவணன் அவர்கள் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரை எழுதியுள்ள பழங்குடியின நலவாழ்வுச் செயல்பாட்டாளரான தனராஜ் அவர்கள் பழங்குடியினர் வாழ்வியல் குறித்து மிகச்சிறப்பாக கூறியுள்ளார். பளியர் சமூகத்தின் வாயிலாக தனிப்பெற்றோர் என்பதெல்லாம் இங்கே ஒரு விஷயமே கிடையாது. எது கிடைத்தாலும் எல்லோரும் பகிர்ந்து உண்போம் என்பதே அவர்களின் வாழ்வியல் முறையாக உள்ளது.
“அவள் என் தங்கச்சிதான் சார், அவளுக்கும் துணை வேணும்ல, என்ன பண்ண முடியும். என் கணவரோட தொடர்புல இருந்தா என்ன தப்பு அவ என்ன செய்வா?” இந்த வரிகளை படித்தபோது வியந்தே போனேன்.
நாம் செய்தித் தாள்களில் வாசிக்கும் பாதி குற்றச் செயல்பாடுகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் வேட்கையோடு தொடர்புடையவை தானே?!
இயல்பான பாலியல் வேட்கையை நாம் கற்பு கலாச்சாரம் என்றெல்லாம் புனிதப் படுத்தி வைத்திருப்பதால் எவ்வளவு சிக்கல்கள் தெரியுமா?
22 வயதில் ஒரு கைக் குழந்தையோடு கணவனை இழந்த ஒரு பெண் வாழ்நாள் முழுவதும் ஆண்துணை இன்றி மாமனார் மாமியாருக்கு சேவகம் செய்து அவர்களை சார்ந்து இருந்து குழந்தையை வளர்ப்பது எவ்வளவு மனித தன்மையற்ற செயல் என்பதை ஆடை வடிவமைப்பாளர் தாரணி அவர்களின் கட்டுரை கூறுகிறது.
கட்டுரையை தொகுத்தளித்திருக்கும் தம்பி இனியனுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனென்றால் எடுத்துக் கொண்ட பிரச்சனையின் அத்தனை பரிமாணங்களையும் அலசி ஆராயும் ஆளுமைகளை வைத்து இந்த கட்டுரைகளை பெற்று பதிப்பித்துள்ளது மிகப்பெரிய செயல்.
கல்வி தளத்தில் குழந்தைகளோடு அதிகம் புழங்கும் ஆசிரிய சமூதாயம் நிச்சயமாக வாசிக்க வேண்டிய நூல் இது. ஏனெனில் தனிப்பெற்றோர் குழந்தைகளின் தனிப்பட்ட பல உளச்சிக்கல்கள் குறித்து இந்த நூல் பேசி உள்ளது.
இந்த கட்டுரைகளில் உள்ள பிரச்சனைகளையும் தீர்வுகளையும் டெம்ப்ளேட்டாக வைத்துக் கொண்டு நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்த்து விட இயலாது மாறாக அந்த பிரச்சனைகள் பற்றிய அறிவையும் புரிதலையும் இந்த நூல் நிச்சயமாக வழங்கும்.
Subscribe to:
Posts (Atom)
புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை
புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை - மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த நூலை வெளியிட்ட அன...

-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...